×

செல்வத்தைப் பெறுவதற்கு இதுதான் வழி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒவ்வொருவரும் செல்வந்தராக நினைக்கிறோம். மனிதர்களாக பிறந்தவர்களுக்கு இந்த எண்ணம் இயல்பானது. நியாயமானது. எப்படியாவது செல்வத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதன் நோக்கம்அதுதான்.

ஏன் செல்வம் சேருகிறது?

ஆனால், அடிப்படையில் ஒருவனிடம் ஏன் செல்வம் சேருகிறது? ஏன் சேர்வதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். செல்வம் என்பது ஒருவனுடைய வாழ்நாளில் பல விதத்தில்கிடைக்கும். ஒன்று, பிறக்கும் போதே அவன் செல்வந்தனாகப் பிறப்பான். சிலருக்கு எந்த முயற்சியும் இல்லாமல் அதிஷ்டமாக செல்வம் கிடைக்கும். ஆனால், இது எல்லோருக்குமான நிலை அல்ல. ஆயிரத்தில் ஒருவர்தான் பிறக்கும்போதே செல்வந்தர்களாக பிறப்பார்கள். கோடியில் ஒருவருக்குத்தான் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த காலத்தில், புதையல் கிடைத்தது என்று சொல்லுவார்கள். இந்த காலத்தில் லாட்டரி முதலிய திடீர் யோகம் கிடைக்கலாம் அல்லது உறவினர்கள் பெரும் சொத்து எதிர்பாராத விதமாகக்  கிடைக்கலாம். ஆனால், இவைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

இரண்டாவதாக, செல்வம் ஒருவருடைய முயற்சியினால் கிடைக்கிறது. எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும் தங்கள் முயற்சி மற்றும் பல்வேறு திட்டங்களோடு செய்யும் தளராத பெரும் உழைப்பினாலும் பெரிய அளவு செல்வத்தை சேர்த்து விடுபவர்கள் உண்டு. ஒருவரிடத்திலேயே செல்வம் பிறக்கும் போதே பிதுரார்ஜிதமாக இருந்தாலும் அல்லது முயற்சியினால் சேர்த்தாலும், அது தொடர்ந்து அவரிடத்தில் இருக்கவேண்டும் என்று சொன்னால், அந்த செல்வத்தை முறையாக நிர்வாகம் செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும். இதை ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் என்று சொல்லி வைத்தார்கள். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் செல்வம் சேருவதில்லை. ஊழ்வினைகூட காரணமாக இருக்கும்.

திருவள்ளுவர் இரண்டு விஷயங்களைச் சொல்லுகின்றார். செல்வம் சேராமல் இருப்பதற்கு ஒருவனுடைய ஊழ்வினைகூட காரணமாக இருக்கும். அது அவருடைய எல்லா முயற்சிகளை பலன் தராது தடுக்கும் என்று சொல்கிறார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும். (குறள் 380)


இதன் பொருள்: ஊழை விட மிக வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன,
ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும்,
அங்கும்தானே முன் வந்து நிற்கும்.
இந்த வினை மூன்று வகைப்படும்.

1. பிராரப்த கர்மா/ நுகர்வினை
2. சஞ்சித கர்மா/ தொல்வினை
3. ஆகாமிய கர்மா/ வரும்வினை
பிராரப்த கர்மா/ நுகர்வினை

இது `பிராரப்த கர்மம்’ என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்பு களிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் கருமம் அல்லது வினைப்பயன் என்பர். இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. அதை கொடுத்து அனுப்பும் பெருமாளுக்கு, ஆண்டளக்கும் ஐயன் என்று பெயர். கும்பகோணம் பக்கத்திலே திரு ஆதனூர் என்னும் தளத்திலே படியை தலையில் வைத்து கொண்டு அளந்து கொடுத்துவிட்டு சயனித்திருக்கிறார்.

சஞ்சித கர்மா/ தொல்வினை

ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக, இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டைதான் தொல்வினை எனப்படும். காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்த ஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது, இத்தொல் வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. “பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்” என்பது திருப்பாணாழ்வார் பாசுரம்

ஆகாமிய கர்மா/ வரும்வினை

வரும் வினை முழுவதும் நம் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். இதை வைத்து கொண்டு வெல்ல முயற்சி செய்யலாம். அதனால்தான் திருவள்ளுவர் வேறு ஒன்றையும் சொல்கிறார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

(அதிகாரம்: ஆள்வினையுடைமை, குறள் எண்:616)

இதிலே திரு என்பது செல்வத்தைக் குறிக்கும். `திருவினை ஆக்கும்’ என்ற தொடர்க்குச் செல்வத்தை உண்டாக்கும்,

செல்வம் தரும்,
செல்வத்தை உளதாக்கும்,
செல்வத்தினை வளர்க்கும்,
செல்வத்தைப் பெருகச் செய்யும்,
செல்வநிலையை உண்டாக்கும்,
செல்வத்தினை மேன்மேல் பெருக்கும்,
செல்வம் அதிகமாகும்,
பலவகைச் செல்வங்களையும் தரும்,
செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்


என உரையாளர்கள் பொருள் கூறினர்.

தடைகளை உடைத்தால் வழி பிறக்கும்

விதியும், மதியும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நல்வினை இருந்து முயற்சி எடுக்கும் பொழுது அவரிடத்தில் பெரும் செல்வம் சேர்ந்துவிடும். தீவினை இருந்து முயற்சி எடுக்கும் பொழுது செல்வம் சேர்ப்பதில் தடை இருக்குமே தவிர, செல்வம் சேராமல் போய்விடாது. அதனால்தான், திருவள்ளுவர் முயற்சி திருவினை ஆக்கும் என்ற உறுதியை உடன்பாட்டில் கூறி `முயற்சி இன்மை புகுத்திவிடும்’ என்றும் முயற்சி இல்லாவிட்டால், வளம் எல்லாம் வறண்டு வறுமை அடையச் செய்யும் என்றும் சொன்னார்.

முயற்சியின்போது வரும் தடைகளை நாம் ஊன்றி கவனித்து, பிராத்தனையாலோ, பிராயச்சித்தத்தினாலோ, மன உறுதியினாலோ, தக்கவர் துணை கொண்டோ விலக்கி விட்டு பிறகு, தொடர்ந்து முயற்சி செய்தால் அந்த முயற்சி பலிக்கும்.

ஜாதகம் உதவுகிறது

பொதுவாக நம்முடைய முயற்சியும், செல்வ நிலையும் எந்த அளவில் பயன் தரும் என்பதை ஊன்றி கவனிப்பதற்கு நம்முடைய ஜாதகம் உதவுகிறது. முதலில் ஒருவருடைய ஜாதகம் செல்வத்தைப் பற்றி எப்படித் தெரிவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், ஒற்றை படை ராசிகளான ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ராசிகள் அக உணர்வுகள் அல்லது அக நலன்கள் பற்றியும், 2,4,6,8,10,12 ஆகிய ராசிகள் ஒருவருடைய பொருள் நலன்களைப் பற்றியும் சொல்லுகிறது. ஒருவருடைய செல்வநிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அவருடைய இரண்டாம் இடத்தைப் பார்க்க வேண்டும். இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த ஸ்தானம் வலுவாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்டத்தினாலும், முயற்சியினாலும் செல்வம் கிடைத்துவிடும். அதைப் போலவே, நான்காம் இடம் என்பது ஒருவருடைய வாகனம், சொத்து முதலியவற்றைக் குறிக்கக் கூடிய இடம். இந்த 4-ஆம் இடத்துக்கு லாபஸ்தானமாகத்தான், இரண்டாம் இடம் அமைகிறது.

அதைப்போல ஆறாம் இடம் என்பது முயற்சி, உழைப்பைக் குறிக்கிறது. அந்த இடம் வலுவாக இருந்தால், ஏதேனும் ஒரு வேலையை அவன் செய்து கொண்டே இருப்பான்.
அங்கு, வேலை செய்து பணம் சம்பாதித்தால்தான் அவனுக்குச் செல்வம் சேரும். இந்த 6-ஆம் இடத்துக்கு லாப ஸ்தானமாக, 4-ஆம் இடமும், யோகஸ்தானமாக 2-ஆம் இடமும் இருப்பதை கவனிக்க வேண்டும். ஒருவருடைய திடீர் அதிர்ஷ்டத்தை குறிப்பது 8-ஆம் இடம். ஒருவருடைய கௌரவத்தையும், வேலையையும் தொழில் நிலைமையையும் குறிப்பது 10-ஆம் இடம். ஒருவருடைய இரண்டாவது தொழிலையும், நிரந்தர சொத்துக்களையும் குறிப்பது 12-ஆம் இடம். இரண்டாமிடத்தில் உள்ள பணம் எப்படி முதலீடு செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பதுதான், 12-வது இடம். குறிப்பாக, 2-ஆம் இடம், 4-ஆம் இடம் மிக வலிமையானதாக இருந்தால், அவர் பிறக்கும்போது செல்வந்தராக இல்லாவிட்டாலும், மிக விரைவாக செல்வந்தராக ஆகிவிடுவார்.

சுக்கிரனும் குருவும்


இது தவிர ஒருவருடைய செல்வ நாயகர்களாக, சுக்கிரனையும் குருவையும் குறிப்பார்கள். குரு, மஞ்சள் நிறமான பொன்னுக்கு அதிபதி. நிரந்தர பணத்துக்கு அதிபதி. சுக்கிரன் வெள்ளிக்கும் சொந்த கையிருப்புக்கும் அதிபதி. எனவே, சுபகிரகங்களான சுக்கிரனும், குருவும் நல்ல நிலையில், ஒருவருடைய ஜாதகத்தில் அமர்ந்துவிட்டால், அவர்கள் இயல்பாகவே செல்வந்தர்களாக இருப்பார்கள்.

இதுதவிர, கர்மகாரகன் மற்றும் தொழில் காரகனான சனி, ஒருவருடைய ஜாதகத்தில் சுபத்துவமாக அமர்ந்து, சுபர்களின் பார்வையைப் பெற்றுவிட்டால், அவர்கள் கடுமையான உழைப்பின் மூலமாக மிகப்பெரிய வருவாயை ஈட்டி விடுவார்கள். இது ஒருவருடைய ஜாதகத்தைப் பொறுத்தது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. அவர்களுக்கு சரியான காலத்தில் தனபாவங்கள் தொடர்புடைய தசாபுக்திகள் நடைபெறவேண்டும். கோள்சாரம் வலுவாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காத நிலைதான் ஏற்படும். காலத்துக்கு தகுந்த முயற்சி முக்கியம்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

(அதிகாரம்: காலமறிதல், குறள் எண்:484)

பொருள்: செய்யவேண்டிய காலம் அறிந்து, ஏற்ற இடத்திலே செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும். இவைகள் ஜாதக ரீதியான விஷயங்கள். ஒருவருடைய முயற்சி சரியாக இல்லாமல் இருப்பதும், காலத்துக்கு தகுதி இல்லாதபடி இருப்பதும், கவனம் இல்லாமல் இருப்பதும்  போன்றவை, ஜாதகத்தின் தசாபுக்திகள் காட்டிவிடும். இந்த பலவீனங்களை தெரிந்துகொண்டு, அதை பலமாக மாற்றுபவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள். முயற்சி செய்தால் செல்வம் கிடைக்கும் என்பது உண்மைதான். சிலருக்கு முயற்சி செய்யும்மனநிலையே இருக்காது. அப்படி முயற்சி செய்தாலும், அது முறையற்ற முயற்சிகளாக, பயிற்சி அற்ற முயற்சிகளாக இருக்கும்.

தங்களுக்கு நன்கு தெரிந்த அனுபவமிக்க ஒரு வேலையைச் செய்யாது, அனுபவம்இல்லாத ஒரு வேலையில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு, காலத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள் அல்லது அவர்களுக்கு சரியான வழிகாட்டல் இருக்காது. இவர்கள் ஜாதக ரீதியாகவோ, மனரீதியாகவோ உள்ள குறைகளைத் திருத்திக்கொண்டு சரியான வழிகாட்டுதலோடு தங்களுடைய முயற்சிகளை முன்னெடுத்தால், நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள்.

இன்னும் ஒரு விஷயமும் இதில் உண்டு. எதையும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு குறிப்பிட்ட யோக தசை புக்தி நடைபெறுகின்ற பொழுது, அவர்கள் முயற்சிகள் பலித்து, செல்வம் சேர்த்துவிடும். ஆனால், அடுத்து வருகின்ற தசாபுத்திகள் சாதகமாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டால், அந்த செல்வத்தை முறையாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பயன்படும். ஆனால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு செலவு செய்வார்கள். அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, பழைய நிலைக்கே சென்று விடுவார்கள். இதை பல நபரின் வாழ்க்கையில் நாம் பார்த்திருக்கலாம்.

இதை வள்ளுவப்பெருந்தகை மிக அருமையாக கூறுகிறார்;

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

(அதிகாரம்: வலியறிதல், குறள் எண்: 479)

மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை முறையாக சேமித்து வைத்துக் கொண்டால், அந்த தண்ணீர் கோடை காலத்தில் உதவும். வருமானம் வருகின்ற காலத்தில், அந்த வருமானத்தை நல்ல முறையில் சேமித்து வைத்துக் கொண்டால், அந்த செல்வம் நமக்கு வருமானம் இல்லாத காலத்தில் உதவும்.

செல்வத்தின் பயன்

இன்னொரு விஷயமும் உண்டு. அதை பல பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். செல்வத்தை முயற்சி செய்து, நாம் அடைந்து விடலாம். அதற்கான யுத்திகள் பல உண்டு. அதில் வெற்றி பெற்றவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், செல்வத்தை முறையாகச் செலவு செய்யக்கூடிய முறை பல பேருக்கு தெரியாது. செல்வத்தின் பயன், அதை வைத்துக்கொண்டு புண்ணியங்களாக மாற்றிக் கொள்வதே ஆகும். அதாவது, இம்மையில் நாம் சம்பாதித்த செல்வத்தை, மறுமை நலன்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும். அதற்கான முதலீடுகளும் செய்ய வேண்டும். அதுதான் தர்மம் என்று சொன்னார்கள்.

அதாவது, நீங்கும் செல்வத்தை வைத்துக்கொண்டு தர்ம புண்ணிய காரியங்களின் மூலம், நீங்காத செல்வத்தை தரவேண்டும். செல்வத்தை சேர்ப்பதற்கும், சேர்த்த செல்வத்தை முறையாக தங்கச் செய்வதற்கும், கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், செல்வமாகிய மகாலட்சுமி நம்மை தேடி வருவதற்கும், பல பரிகாரங்கள் ஆன்மிக ரீதியாகச்  சொல்லப்பட்டிருக்கின்றன.

பரிகாரங்கள்


அதில் ஒன்றுதான் தீபாவளியில், செய்யப்படும் ``லட்சுமி குபேர பூஜை’’ என்பது. இது தவிர எளிய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நல்ல தூய்மையான மணமிக்க சாம்பிராணிப் புகையை வீடு முழுக்க போடுவது என்பது தரித்திரத்தை போக்கி, அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும். அப்படிப்பட்ட இடத்தில் மகாலட்சுமி வந்து குடியேறுவாள் என்பது அனுபவ உண்மை.சில குறிப்பிட்ட மந்திரங்களை விடாமல் சொல்வதன் மூலமாகவும், பூஜைகள் செய்வதன் மூலமாகவும் செல்வம் சேரும்.

1. ஸ்ரீஸ்துதி
2. ருண விமோசன ஸ்தோத்திரம்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.   
 
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.    
        
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்    
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.   
        
நீறு பூசினீர், ஏற தேறினீர்    
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.    
        
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்    
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.    
        
பிணிகொள் சடையினீர், மணிகொள்
மிடறினீர்    
அணிகொள் மிழலையீர், பணிகொண்
டருளுமே.    
        
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்    
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.   
        
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்    
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.  
        
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்    
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.   
        
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்    
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.    
        
காழி மாநகர், வாழி சம்பந்தன்    
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.  


கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஸ்தோத்திரங்களை மாலை திருவிளக்கு ஏற்றிச் சொல்வதன் மூலமாக வறுமை அகலும்.மந்திரங்களும், பூஜைகளும் செல்வத்தைக் கொடுக்குமா? என்கின்ற ஒரு கேள்வி இப்பொழுது வரும்? மந்திரங்களும் பூஜைகளும் ஒருவனுக்குச் செல்வத்தைக் கொண்டு வந்து கொடுக்குமா என்று. ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பூஜையை முடித்துவிட்டால் உடனடியாக அந்த இடத்தில் ரொக்கமாகவோ காசோலையாகவோ பணம் வந்து சேர்ந்துவிடாது.

பின் எப்படி பணம் வரும் என்று கேட்கலாம்? இப்படிப்பட்ட பூஜை முறைகள், நம்முடைய மன ஆற்றலை அதிகரிக்கும். மனதில் உள்ள எதிர்மறை சிந்தனை களையும், கவலைகளையும், சஞ்சலங்களையும் போக்கும். திடமான முயற்சியை உண்டாக்கும்.

புதுமையான சூழல்களையும், நண்பர்களையும் பெற்று தரும். செல்வம் கரையும் வழிகள் அடைபடும். மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். அதனால், முயற்சிகள் சிறக்கும். இந்த மனநிலையை உண்டாக்கி, ஒருவனை, “தெய்வபலம் இருக்கிறது. கவலைப்படாதே. உன்னுடைய முயற்சி வெற்றி பெறும்” என்று உற்சாகமாகச் செயல்பட செய்வதுதான் பூஜையின் நோக்கம். நல்ல சூழ்நிலையை நமக்கு அந்த பூஜை அமைத்து தரும் என்பதுதான் பலன்.

தொகுப்பு: கோகுலகிருஷ்ணா

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!