×

ஐப்பசி மாதத்தின் தெய்வீகச் சிறப்புகளும், உங்களது ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஜோதிடக் கலையிலும், இதிகாசப் புராணங்களிலும், நான்மறைகளிலும், “ஆத்ம காரகர்” என்றும், “பித்ருகாரகர்” எனவும், “நவகிரகங்களுக்கும் நாயகர்” எனவும் போற்றப் படும் சூரியன், கன்னி ராசியை விட்டு, அவரது நீச்ச ராசியும், சுக்கிரனின் ஆட்சிவீடாகவும் திகழும் துலாம் ராசியைக் கடக்கும் ஒருமாதக் காலத்தையே “ஐப்பசி மாதம்” எனவும் “துலாம் மாதம்” எனவும் போற்றிப் பூஜிக்கின்றோம்! சூரியனின் உச்ச ராசியான மேஷ ராசியிலிருந்து, 7வது வீடான துலாம், சூரியனின் நீச்ச வீடாகும். வேதகால மகரிஷிகளின் முதன்மையானவரும் புகழ்வாய்ந்தவருமான காஸ்யப மகரிஷியின் புதல்வர்தான் சூரியன்.

நான்கு வேதங்களின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்துள்ள சூரியனிடமிருந்துதான் மகரிஷி, யாக்ஞவல்கியர், சுக்கில யஜுர் வேதத்தை, அரும்பாடுபட்டுக் கற்று, உலகிற்கு அளித்தார். மறைந்த நமது முன்னோர்களுக்கு, நமது நன்றிக் காணிக்கையைச் செலுத்தும் வண்ணம் செய்யும் அமாவாசை தர்ப்பணங்கள், ஆண்டுதோறும் செய்யும் திதி-
பூஜைகள் சூரிய - சந்திர கிரகண காலங்களில் செய்யும் தர்ப்பணங்கள், புண்ணிய நதிகளில் நீராடும்போது விடும் ஜல அர்க்கியங்கள் ஆகியவற்றை நம் மூதாதையர்கள் எந்த உலகில் இருந்தாலும், எத்தகைய மறுபிறவிகள் எடுத்திருந்தாலும், அவர்களிடம் மிகச் சரியாகக் கொண்டு சேர்ப்பது, “ஆதித்யன்” எனப் போற்றப்படும் சூரியனே!

துலாம்-காவேரி மாதம்!

தமிழக மக்களின் தாயனைய புண்ணிய நதி, பொன்னி நதி எனப் பூஜிக்கப்படுவது காவிரி நதி. மகரிஷி அகத்தியர் பரம கருணையுடன் தமிழ் மக்களுக்கு அளித்த ஒப்புயர்வற்ற பொக்கிஷம் காவிரி.”கங்கையிற்றின் புனிதம் ஆய காவிரி....” என ஆழ்வார்களால், தங்கள் திவ்ய பிரபந்தப் பாடல்களில் போற்றி வணங்கப்படும் காவிரியில், ஐப்பசி மாதம் தினமும், பரம பக்தியுடன் மக்கள் நீராடுவது “துலா ஸ்நானம்” எனும் தெய்வீகப் புகழ்பெற்றது. சகல பாபங்களையும் போக்கி, முக்தியை நமக்கு எளிதில் பெற்றுத் தரும் மாதம் இந்த துலாம் மாதம். அன்னை காவிரியின் பிறப்பிடம் குடகு நாட்டில் திகழும் “தலைக் காவிரி” எனும்இயற்கை அழகு கொஞ்சும் சிற்றூராகும்!

புண்ணிய காவிரியின் தெய்வீகச் சக்தியினால், அதன் கரையில் ஏராளமான திருத்தலங்கள் தெய்வீகப் பட்டொளி வீசிப் பிரகாசிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற திருவரங்கம் திருக்கோயில், அன்னை அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கும் திருவானைக்காவல், கும்பகோணம் ஸ்ரீஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீகோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீஆராவமுதன், மகான் ஸ்ரீவிஜயேந்திர தீர்த்தர் பிருந்தாவனம், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கம் என கூறிக்கொண்டே போகலாம். பொன்னியின் புகழ் கேட்டு, வெளிமாநிலங்களிலிருந்த ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் போன்ற அவதார புருஷர்கள், காவிரி நதிக் கரையில் விளங்கும் ஊர்களில் வசித்து, பக்தி நெறியை உபதேசித்து வந்தனர்.

தன் குழந்தைகள் பசியறியாது வளர வேண்டும்; வாழ வேண்டும் என்ற தாயன்புடன், காவிரி, தஞ்சை மாநிலத்தை, Rice bowl of the South” என வெளிநாட்டவர் போற்றும் வகையில் வளமாக்கி, அருள்புரிந்து வருகிறாள். சங்க காலத்திலிருந்தே தமிழகத்தின் தலைநகராக செல்வச் செழிப்புடனும், பெருமையுடனும் விளங்கிய பூம்புகாரின் புகழை விவரிக்கும் சிலப்பதிகாரத்திலும் காவிரியின் தனிச் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. துலா மாதத்தின் (ஐப்பசி) பெருமை, காவிரி நதியுடன் இணைந்துள்ளதேயாகும்.

ராஜராஜ சோழ மன்னனின் ஆட்சி காலத்தில் கிரீஸ், பாலஸ்தீனம், ரோம், பாரஸீகம் ஆகிய நாடுகளுடன் தமிழகத்தின் வர்த்தகத் தொடர்பு அதன் உச்ச நிலையை அடைந்திருந்ததை இந்தியச் சரித்திரம் சான்று கூறுகிறது. துலா மாதத்தில் தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியம், கடல்கடந்து செய்து வரும் வணிகத்தின் மூலம் செல்வம் சேர்த்தல் ஆகியவற்றிற்காக உபவாசம், விரதம் (துலாக் காவிரி விரதம்) கடைப்பிடித்து வந்ததும், ஐப்பசி மாதத்தின்  தெய்வீக உயர்வை அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய ஆன்மிகப் பெருமைபெற்ற ஐப்பசி மாதத்தில் வரும் பல புண்ணிய தினங்களைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்வது அவசியமல்லவா? அவற்றைப் பார்ப்போம்!

ஐப்பசி 1, (18-10-2022) துலாம் காவிரி புண்ணிய ஸ்நானம் ஆரம்பம்:


தினமும் அதிகாலையில் எழுந்திருந்து, காவிரி நதிதீரத்திற்குச் சென்று, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் (மறைந்த அவரவரது முன்னோர்களையும்) காவிரி, கங்கை, யமுனை போன்ற அனைத்து புண்ணிய நதிகளையும் மனத்தால் வணங்கி, முடிந்தால், ஒரு பெரியவரைக் கொண்டு, “சங்கல்ப ஸ்நானம்” செய்துகொண்டு, நீராடுவது நாம் அறிந்தோ, அறியாமலோ எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும், அவையனைத்தும் நிவர்த்தியாகும். காவிரி நதி இல்லாத ஊர்களில் உள்ளவர்கள், அந்தந்த ஊர்களில் உள்ள நதிகளிலோ அல்லது ஊர்க் கோயிலில் உள்ள புஷ்கரணியிலேயோ (திருக்குளம்) காவிரி நதியை மனத்தில் தியானம் செய்துகொண்டு நீராடலாம்.

நீராடிய பின்பு, அவரவர் குல வழக்கப்படி திருநீறு, திருநாமம் அணிந்துகொண்டு, பித்ரு பூஜைகளைச் செய்ய வேண்டும். தாய் - தந்தையர் காலஞ்சென்ற திதி தினத்தன்று பிண்டம் வைத்துப் பூஜிப்பது மிகவும் விசேஷம். இதன் பலன் அளவற்றது. பித்ரு பூஜை முடிந்த பிறகு, அவரவர்கள் சக்திக்கு ஏற்ப, ஏழைகளுக்கு, சிறு பணம் அல்லது காலணி, குடை, வஸ்திரம், அன்னதானமாகக் கொடுக்கலாம். பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் தன் பசியை எடுத்துக்கூறிப் பேச இயலாத ஜீவன்களுக்கும் உணவளிக்கும் புண்ணியம், பல பிறவிகளுக்கு, நமக்குத் துணைநிற்கும். இதனால் பித்ருக்கள் (மறைந்த நம் முன்னோர்கள்) மனம் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். அவர்களது ஆசியின் சக்தியே நம் துன்பங்களை அடியோடு போக்கிவிடும்.

ஐப்பசி 5 (22-10-2022) யம தீபம், சனிப்பிரதோஷம்:

நமது துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து, மகிழ்ச்சியும், மனநிறைவும், உடல்நலனும் கொண்டு குடும்ப வாழ்க்கை அமைய, வௌ்ளியிலோ அல்லது வெண்கலத்திலோ சிறு நெய்தீபம் ஏற்றி அதனை சிறு காணிக்கையுடன் வேதம் படித்தவர்களுக்கு அல்லது ஏழை, முதியோருக்கு தானமாகக் கொடுத்து, வணங்குவது மகத்தான புண்ணிய பலனைத் தரும். அதேபோல், மாலையில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி, பெரியவர்களுக்கு தானமாகக் கொடுப்பது, தன்னிகரற்ற சனிப் பரிகார பலனைத் தரும். வசதியிருப்பின், வஸ்திரம் கொடுக்கலாம்.

ஐப்பசி 6 (23-10-2022) ஸ்ரீதன்வந்த்ரி ஜெயந்தி:

ஆயுர்வேதம், மருத்துவம், அறுவை சிகிச்சை, மூலிகைகள் ஆகியவற்றிற்கு அதிபதியாக, பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீதன்வந்த்ரி பகவானாக அவதரித்த புண்ணிய தினம். உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அனைவருமே வியாதியில்லாத வரம் வேண்டி பூஜிக்க வேண்டிய புண்ணிய நாள்.

ஐப்பசி 6 (23-10-2022) இன்று இரவு நரக சதுர்த்தசி ஸ்நானம்.

பின்னிரவு 3 மணிக்கு மேல் 4.15க்குள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, மானஸ ஸரோவரம் போன்ற புனித தீர்த்தங்களையும் மனத்தால் நமஸ்கரித்து, ஸ்நானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன் கிட்டும். அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை இன்று அவீர்பவிக்கின்றாள்.

ஐப்பசி 7 (24-10-2022) தீபாவளிப் பண்டிகை, லட்சுமி குபேர பூஜை:  

தீபாவளிப் பண்டிகையை, புத்தாடைகள் அணிந்து கொண்டாடி, அஷ்ட ஐஸ்வர்யத்தையும் பெற்று மகிழ ஸ்ரீமகாலட்சுமியையும் ஸ்ரீகுபேரனையும் பூஜிக்கின்றோம். நரகாசுரன் என்ற அசுரன் வேண்டியபடி கொண்டாடப்படும் “தீபஒளி” திருநாள், பாரத புண்ணிய பூமியின் தேசிய திருநாளுமாகும். உலகளாவிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது இன்று! மற்றோர் பெருமையும் தீபாவளித் திருநாளுக்கு உண்டு! அன்றுதான், தனது நீண்ட 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக்கொண்டு, ஸ்ரீராமபிரான், அயோத்தி மாநகருக்குத் திரும்பிய தினம் அது.

ஐப்பசி 8 (25-10-2022) சூரிய கிரகணம் - அமாவாசை. (விவரங்கள் உள்ளே)
ஐப்பசி 13 (30-10-2022) கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம்:

அம்பிகை பராசக்தியிடம் வேல் பெற்று ஸ்ரீமுருகப் பெருமான் சூரனை வதம் செய்து, உலகை உய்வித்த புண்ணிய தினம். திருச்செந்தூர், சிக்கில் ஆகிய அனைத்து ஸ்ரீகுமரப் பெருமானின் திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறும்போது, அழகன் முருகனின் திருக் கன்னங்களில் வியர்வை பெருக்கெடுப்பதை தற்காலத்திலும் காணலாம்.

ஐப்பசி 19 (05-11-2022) சனிப் பிரதோஷம்:

இன்று மாலை சனி பகவானை தரிசிப்பது, ஜென்மச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, அஷ்டமச் சனி 7½ சனி ஆகிய அனைத்து சனி தோஷங்களையும் போக்கும்.

2. யாக்ஞவல்கிய ஜெயந்தி:

சூரிய பகவானிடமிருந்து அரும்பாடுபட்டு, சுக்கில யஜுர் வேதத்தை உலகிற்கு அளித்த மகரிஷி யாக்ஞவல்கியர் அவதார தினம்.

Tags : Aipasi ,
× RELATED ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்!