×

மீண்டும் தேனிசைத் தென்றல் தேவா!

அடிக்கடி மாறும் கல்வித் திட்டங்களால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நான் இப்போது இயக்கியுள்ள ‘ஸ்கூல் கேம்பஸ்’ படத்தின் மையக் கரு’’ என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் ஆர்.ஜே.ராம் நாராயணா. இவர் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்.

முதல் படம்னா ஆக்‌ஷன், லவ் படம் பண்ணுவாங்க... நீங்க ஸ்கூல் சப்ஜெக்ட்டைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

கமர்ஷியல் படம் எடுத்துதான் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றில்லை. கருத்துப் படத்திலும் அதை சாதிக்கலாம். ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு ஆகிய இரண்டு பாடத்திட்டங்களுக்குமிடையே இருக்கும் முரண்பாட்டை களைய வேண்டும் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் மெசேஜ். ஸ்டேட் போர்டோ, சென்ட்ரல் போர்டோ... ஆக மொத்தத்தில் கல்வி நல்லா இருக்கணும் என்பதைத்தான் படத்தில் ஹைலைட் பண்ணி சொல்லியுள்ளோம்.

ஸ்கூல் லைஃப் என்றால் காதல் கண்டிப்பாக இருக்கும். நாங்கள் அந்த ஏரியாவைத் தொடாமல் கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இயல்பாகவே ஸ்கூல் லைஃப் ஜாலியும் கேலியுமா இருக்கும். அந்த இயல்பான என்டர்டெயின்மென்ட் இதில் இருக்கும்.ஆனால் எந்த இடத்திலும் கதைக்குத் தேவையில்லாத காட்சிகள் இருக்காது. எல்லாக் காட்சிகளும் கதையோடு தொடர்புள்ளதாக இருக்கும். கண்டிப்பா ஃபேமிலியா வந்து என்ஜாய் பண்ணுவதற்கான அனைத்து அம்சங்களும் படத்துல இருக்கும்.

என்ன சொல்கிறார் உங்க ஹீரோ ராஜ்கமல்?

நான் இயக்குநரானதே ராஜ்கமலுக்காகத்தான் என்று சொல்லணும். ராஜ்கமல் என்னுடைய பல ஆண்டுக் கால நண்பர். நான் பல வருடங்களாக ஈவன்ட்மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறேன். என்னுடைய ஷோக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். இப்படி ஏதோ ஒரு வகையில் ராஜ்கமலின் பங்களிப்பு என்னுடைய ஷோவில் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது.

சண்டிக்குதிரை, ‘மேல்நாட்டு மருமகன்’ உட்பட அவருடைய சமீபத்திய படங்களைப் பார்த்தேன். திறமையான நடிகர். ஆனால் அவருக்கான திருப்புமுனை இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் ஓரளவுக்கு ராஜ்கமல் கேரியரில் கவனிக்கத்தக்க படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘ஸ்கூல் கேம்பஸ்’ கதைக்கு ராஜ்கமல்தான் முதலும் கடைசியுமான சாய்ஸாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். டெய்லர்மேட் ரோல் என்கிற மாதிரி ராஜ்கமல் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருந்தார். ஸ்கூல் மாணவன் வேடத்துக்காக பத்து, பதினைந்து கிலோ உடல் எடையைக் குறைத்தார். இந்தப் படத்துக்காக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று நல்ல டீம் அமைத்துக் கொடுத்தார். நடிப்பைப் பொறுத்தவரை நான் நினைத்ததைவிட சிறப்பாகப் பண்ணினார்.

மற்ற நடிகர்கள்?

நாகேஷ் சார் பேரன் கஜேஷ் நாகேஷ் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறார். நாயகிகளாக காயத்ரி, கீர்த்தி நடிக்கிறார்கள். இவர்களோடு சுரேந்தர், தேவ் முகேஷ், சஞ்சய் என்று 12 புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.டெல்லி கணேஷ், மதன்பாப் ஸ்கூல் பிரின்ஸ்பாலாக நடிக்கிறார்கள். இவர்களுடைய போர்ஷன்கள் கலாட்டாவாக வந்திருக்கு. ஸ்கூல் நிர்வாகி வேடத்தில் நான் பண்ணியிருக்கிறேன். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பை ஐ.ஐ.டி கேம்பஸில் நடத்தினோம். அங்கு படப்பிடிப்பு நடத்துவது கடினம். சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினோம். ‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு நாங்கள்தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.

இசை?

இது அனிரூத் சீசன் என்றாலும் சீனியர்களை குறைத்து மதிப்பிடமுடியாது. கானா பாடல்களுக்கு தேவா சார்தான் தாய். இன்னிக்கும் விஜய் சார் படத்தில் அவரை பாட வைக்கிறார்கள். நான் ரஜினி சார் ரசிகன். அந்த வகையில் தலைவரோட ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ படங்களுக்கு தேவா சார்தான் இசையமைத்திருந்தார். என்னுடைய சில ஈவன்ட்டுக்கு தேவா சார் வந்திருக்கிறார். இதெல்லாம்தான் இந்தப் படத்துக்கு தேவா  சார் வருவதற்கு காரணமாக அமைந்தது. தேவா சாரைப் பெருமைப்படுத்தும்விதமாக அவருடைய பிறந்த நாள் அன்று ஆடியோ வெளியீடு நடத்தினோம்.

கதை அவருக்கு பிடித்திருந்ததால் அதிக மெனக்கெடலோடு மியூசிக் பண்ணினார். நான்கு பாடல்கள். அவருடைய மூவாயிரமாவது  பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பது எங்களுக்குக் கிடைத்த பெருமை. ‘தா தை... தக்க தை’ என்ற கதக் பாடல் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்விதமாக இருக்கும்.‘ஏஜ்… ஏஜ்…’ என்ற கானா பாடல் டிபிகல் தேவா சார் ஸ்டைலில் இருக்கும்.

பி.சுசீலா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை பூவை செங்குட்டுவன், கபிலன் எழுதியுள்ளார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘கிருமி’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒர்க் பண்ணியவர் என்பதால் அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவியாக இருந்தது. ஒரே சமயத்தில் தயாரிப்பு, டைரக்‌ஷன் என்று பொறுப்புகள் கூடுதலாக  இருந்தாலும் எதுவும் கஷ்டமாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய அசோசியேட் கீர்த்திவாசன்.

உங்க பின்னணியைப் பற்றி சொல்லுங்களேன்?


நானும் ஸ்கூல் லைஃப்ல பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதை நீங்கள் படத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் உயர் பதவியில் இருந்ததால் இந்தியா முழுவதும் சுற்றி வந்த அனுபவம் எனக்கு இருக்கு. ஒரு கட்டத்தில் மாற்றம் தேவை என்பதற்காக ஈவன்ட் மேனேஜ்மென்ட் பண்ண ஆரம்பித்தேன்.

சமீபத்தில் கூட ‘புட் ஃபார் ஆல்’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். இந்தத் திட்டத்தின் நோக்கம் எல்லோருக்கும் உணவு தர வேண்டும் என்பதுதான். ராஜ் கமல் போன்ற நல்ல உள்ளங்களாலும் ஆர்வத்தாலும் படம் நல்லா வந்திருக்கு. இந்தப் படம் இந்தியக் கல்வியில் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் படமாக இருக்கும்.

Tags : Dee ,Deva ,
× RELATED நடிகர் பிரபுதேவா ரகசிய திருமணம்