×

குலசுந்தரி நித்யா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குலசுந்தரி என்றால் குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு, தாமரைப் பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும், திருவாபரணங்கள் துலங்க வலது கரங்களில் மாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம் போன்றவற்றை ஏந்தியும், இடது கரங்களில் புத்தகம், தாமரை, எழுத்தாணி, மாலை, சங்கு, வரமளிக்கும் முத்திரை தரித்தும் தரிசனம் தருபவள். வலது கரம் அபூர்வமான வியாக்யான முத்திரை தரித்துள்ளாள்.

தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இந்த அம்பிகையைச் சுற்றியிருந்து, அவள் புகழ் பாடிய வண்ணம்  உள்ளனர். யட்சர்களும், அசுரர்களும் கூட இந்த அம்பிகையின் அருள் வேண்டி நிற்கின்றனர். சந்திரனின் வடிவமாய் பிரகாசிப்பவள். பக்தர்களை தன் குழந்தைகளாக நினைத்து அருள்பவள். நல்லோர்களைக் காத்து தீயவர்களை அழிக்கும் பேரரசி. திரிபுரமாலினி. நிலையற்றுத் திரியும் மனதை அடக்கி நிலைப்படுத்துபவள். ஆனந்த ரூபிணி. அவளைப் பணிபவர்களுக்கு துன்பங்கள் தூசு போலாகும்.

இந்த அன்னையை காதலோடு கசிந்து உள்ளம் பாகாய் உருக, கண்களில் நீர் பெருக, தன்னை மறந்து கருணையே வடிவாய் கருத்தில் வைத்தோர்க்கு முடியாது என்ற செயலும் உண்டோ? இன்பமான அமைதி தரும் அம்பிகையைப் பணிவோம். அதிக வரம் பெறுவோம். உபாசிப்பவர் தம் குலம் காக்கும் அன்னை இவள். தேவியின் திருவடித் தாமரையை தாமரைமலர் தாங்குகிறது. வழிபடு பலன்இந்த அன்னையின் அபூர்வ அருளால், உபாசனைபுரிபவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்து சேர்க்கையும் கிட்டும்.

குலசுந்தரி காயத்ரி

ஓம் குலசுந்தர்யை
வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
லூம் ஐம் க்லீம் ஸௌ லூம் குலசுந்தர்யை நம:

வழிபட வேண்டிய திதிகள்

சுக்ல பட்ச நவமி/ கிருஷ்ண பட்ச ஸப்தமி

(நவமி திதி ரூப குலசுந்தர்யை நம:)

நைவேத்யம்

நெல் பொரி.

பூஜைக்கான புஷ்பங்கள்

செந்தாமரை.

திதி தான பலன்

இந்த அன்னைக்கு நெற்பொரியை நிவேதித்து தானம் அளித்தால்,இவ்வுலக சுகங்கள் விருத்தியாகும்.

தொகுப்பு: ஜெயலட்சுமி

Tags : Kulasundari ,
× RELATED குலசுந்தரி நித்யா