×

இந்த வார விசேஷங்கள்

8-10-2022 - சனி நரசிம்ம சதுர்த்தசி

இன்று, சனிக்கிழமை- நரசிம்ம சதுர்த்தசி. வளர்பிறை சதுர்த்தசி திதி, நரசிம்மருக்கு உரியது. இந்தத் திதியில்தான் அசுரன் இரணியனை அழித்து உலகில் பக்தியின் சிறப்பினை நிலைநாட்டுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு. வளர்பிறை சதுர்த்தசி திதியில் விரதமிருந்து நரசிம்மரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். ‘‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை” என்று சொல்வார்கள். உடனடியாக நம்முடைய கோரிக்கைகளை
நிறைவேற்றி வைப்பவர் நரசிம்மமூர்த்தி.

எந்தை தந்தை தந்தை
தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழாவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே
   
நரசிம்ம அவதாரத்தைப் போற்றி வணங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் பெரியாழ்வார். நரசிம்மருக்கு சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் மற்றும் பானகம் போன்ற நிவேதனங்களை செய்யலாம். ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைப்பதற்கு நரசிம்ம சதுர்த்தசி விரதம் உதவும்.
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

ஓம் நமோ நரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
 
8-10-2022 - சனி நடராஜருக்கு அபிஷேகம்

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், நட்சத்திர நாட்கள் மூன்று, திதிநாட்கள் மூன்று. அதில் புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தசியன்று எல்லாக் கோயில்களிலும் உள்ள நடராஜர் மூர்த்திக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்.

நடராஜ ஸ்தலமான சிதம்பரத்தில் இந்த அபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். ஆனந்தத்தாண்டவமாடும் நடராஜ மூர்த்தியின் அபிஷேகத்தைத் தரிசித்து, பரமானந்தத்தை அடையலாம். தூக்கிய திருவடியைச் சரணடைய நம்மைத் தாக்கும் வினைகளெல்லாம் பறந்தோடும்.

9-10-2022 - ஞாயிறு கௌமதி ஜாகர விரதம்

கௌமதி ஜாகர விரதம் இன்று. இரவு முழுவதும் கண்விழித்து லட்சுமி பூஜை செய்ய, வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும். மகாலட்சுமிக்கான பல்வேறு விரதங்களில் ஒன்று இந்த விரதம். இன்று பௌர்ணமியாக இருப்பதால், பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், கிரிவலம் வருபவர்கள், இரவு இந்த விரதத்தையும் இணைத்து இருக்கலாம். இந்த விரதத்தை முறையாக பூர்த்தி செய்பவர்களைத் தேடி வரும் மகாலட்சுமி, சகல ஐஸ்வரியங்களையும் வழங்கி அருள்புரிவாள். வறுமைத் துன்பத்தை விரட்டும் விரதம் இது.

11-10-2022 - செவ்வாய்  பௌமாஸ்வினி

வானியல் விசேஷங்கள் சில உண்டு. சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் புனித தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட  புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பயன் கிடைக்கும். அந்த வகையில், ஒரு சிறப்பு தினம்தான் பௌமாஸ்வினி.

பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய்க் கிரகத்துக்கு பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது.

அம்பாளின் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். வருடத்துக்கு சில நாட்களே இந்த அமைப்பு வரும். அன்று கோயிலில் அர்ச்சனை அபிஷேகம், வீட்டில் ஹோமம் போன்றவைகளை செய்யலாம்.
பௌமாஸ்வினி நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். அன்று வடகிழக்கு மூலையில், பலகையில் கோலமிட்டு, அதன்மேல் தீபம் ஏற்றி, ஒன்பது முறை ``துர்கா சப்த ஸ்லோகி’’ பாராயணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பாராயணம் முடியும்போது, ஒரு பிரதட்சண நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படியாக ஒன்பதுமுறை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் மகாவிஷ்ணுவான யோக நரசிம்மரை பூஜித்து, நரசிம்ம ஸ்தோத்திரங்களை உச்சாடனம் செய்தால் வீரம் தோன்றும், சரீர பலம் கூடும், மனோபலம் ஏற்படும், சத்ரு பயம் நீங்கும்.

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நட்சத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

என்ற ஸ்தோத்திரத்தை 9 முறை சொல்லவும்.

11-10-2022 - செவ்வாய்  அசூன்ய சயன விரதம்

வித்தியாசமான இந்த விரதம் பற்றிய குறிப்பு பத்ம புராணத்தில் வருகிறது. தம்பதிகள் ஒற்றுமைக்கும், தீர்க்க ஆயுளுக்கும், நிம்மதிக்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும். `அசூன்யம்’ என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். `சயனம்’ என்றால் படுக்கையில் படுத்தல்.

இந்த விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில், திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை சாலச் சிறந்தது. மாலை பூஜையறையில், விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு - மஹாலஷ்மி படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

இப்பூஜையை தம்பதிகளாக செய்வது உத்தமம். ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில், கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் தகுதி உடையோருக்குப் போர்வையுடன் கூடிய படுக்கை தானம் செய்ய வேண்டும்.

அசூன்ய சயன விரதத்தை நிறைவு செய்வதற்கு உரிய தலங்கள், கரூரில் அபய ரெங்கநாதர் ஆலயம், திருத்தங்கல் ரெங்கநாத மூர்த்தி திருக்கோயில், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளம் ஊரில் உள்ள பழமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில் போன்றவையாம்.

12-10-2022 - புதன் சந்திரோதய கௌரி விரதம்

கௌரி விரதங்கள் என்பவை, பராசக்தியை கௌரி என்ற வடிவில் விரதமிருந்து பூஜிப்பதாகும். பல்வேறு விரதநூல்களில் இந்த கௌரி விரத முறை, பலன் காணப்படுகிறது. சந்திர உதய காலமான இரவுநேரத்தில் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு கலசத்தில் தேங்காய், மா விலை வைத்து அலங்கரித்து, அதிலே அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாளின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி தூப தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து, இந்த விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
 
அல்லது மாலை அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம். கௌரியின் பெயரில் பல்வேறு விரத தினங்கள் ஒரு வருடம் முழுக்க கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு கௌரி விரதத்தின் பலனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சந்திரோதய கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம். இதன் மூலமாக சுபகாரியத் தடைகள், குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கும். மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் அகலும். வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆயுள் வளரும்.

13-10-2022 - வியாழன் கிருத்திகை மற்றும் சதுர்த்தி

சூரியனுக்குரிய கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் திருநட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. கார்த்திகை  மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள் அறிவு, செல்வம், ஆயுள், மனைவி, மக்கள் ஆகிய சகல பேறுகளையும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். நட்சத்திரத்தைப் போலவே திதியும் முக்கியம்.

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி, அடுத்த பௌர்ணமியில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும்.  

ஒரு முழுச்சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்கும். ஒரு திதி 12 பாகை. சதுர்த்தித்திதி நான்காவது திதியும் 19 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 36 பாகையில் இருந்து 48 பாகை ஆகும்.

சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகரை வழிபடலாம். சதுர்த்தி விரதம் இருந்து பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும்.

14-10-2022 - வெள்ளி  திருநாளைப்போவார் குருபூஜை

திருநாளைப் போவார் நாயனார் என்று சொன்னால் வெகுஜனங்களுக்குப் புரியாது. நந்தனார் என்று சொன்னால் புரியும். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். தமிழ் நாட்டில், கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூரில், வாழ்ந்தவர்களின் தலைவராக நந்தனார் இருந்தார்.

சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவர். அவன் திருவடி நினைவின்றி மறந்தும் மற்றைய நினைவுகொள்ளாதவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். சிவ அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார்.

சிவன் மீது கொண்ட பேரன்புப் பெருக்கால் தன்னை மறந்து ஆடுவார். பாடுவார். அவர் ஊருக்கு அருகே திருப்புன்கூர் என்ற சிவத்தலம் உண்டு. அங்கு சென்று வழிபட விரும்பினார். வாயிலினின்று இசைபாடி நின்றார். பெருமானை கண் குளிரக் காணும் ஆசை பெருகியது. நந்தி மறைத்தது.

பெருமான் நந்தியை விலகுமாறு செய்து, நேரே தரிசனம் அளித்தார். திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டுபுரிந்து வந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அன்றிரவு கண்துயிலாது கழித்தார். விடிந்ததும் தில்லையம் பதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து போவாது தவித்தார்.

மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே, “நாளைபோவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு நாள் கழிதல் பொறாதவராய் ஒரு நாள் தில்லைத்திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று, அங்கு எழும் வேள்விப் புகையைக் கண்டார்.

வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில், எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார்.

இவ்வாறு இரவு பகல் தில்லையை வீதிவலம் வந்தவர், ஏக்கத்துடன் துயில் கொண்டார். நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத் திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தப்பெருமான், ‘என்று வந்தாய்?’ என்னும் புன்முறுவல் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லை வாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார்.

அந்நிலையில், தில்லை வாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப் போவாரை அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினர். தெய்வமறை முனிவர்களும் தெந்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள்.

நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். நந்தனார் சரித்திரத்தை தமிழிசைக்காவியமாக இசைப் பாடல்கள் கொண்டு விளக்கும் தொகுப்பாக கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றினார்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?