×

வில்லனை ஹீரோவாக்கி வழிபடும் சகுனி ஆலயம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மகாபாரதத்தின் முக்கியப் பாத்திரங்களில், முக்கியமானவராக திகழ்பவர் சகுனி. இவரே பாரதத்தின் பல்வேறு செயல்களுக்கும், மூலகாரணமாக விளங்கினார் என்பதை பாரதம் உணர்த்துகிறது. பொதுவாக, சூழ்ச்சி செய்பவர்களையும், தீங்கிழைப்பவர்களையும் சகுனி என்று அழைப்பது வழக்கம். ஆனால், சகுனியைத் தெய்வமாகப்போற்றி அவனுக்கு ஆலயம் அமைத்து, வழிபடும் செய்தியும், அது கேரள மாநிலத்தில் அமைந்துள்ளதும் வியப்பான தகவல்தானே!

சகுனி, சிறந்த சிவ பக்தன். ஆனால், மகாபாரதத்தின் வில்லன் எனும் கடுமையான எதிர்மறைப் பாத்திரமாக விளங்கியவன். காந்தாரம் என்ற இன்றைய காந்தகாரின் ஆப்கானிஸ்தான் பகுதியை ஆட்சி செய்த இளவரசன் சகுனி. காந்தார மன்னன் சுபலனின் மகன். காந்தாரியின் சகோதரன். துரியோதனின் மைத்துனன். பீஷ்மரால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்கில், கெளரவர்களுடன் உறவாடி, குரு வம்சத்தைப் பழி தீர்த்தவன். முடிவில், சகாதேவனால் கொல்லப்பட்டவன்.

பவித்ரேஸ்வரம்

நாடு முழுவதும் பயணம் செய்த கெளரவர்கள், இத்தலத்தில் பாண்டவர்களைத் தாக்கும் நோக்கில் கெளரவர்கள் தங்கள் ஆயுதங்களை இத்தலத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படு கிறது. ஆயுதங்களைப் பங்கிட்டுக்கொண்டதால், பகுத்தீஸ்வரம் என அழைக்கப்பட்டது. பிறகு இப்பெயர் மருவி, இன்று பவித்ரேஸ்வரம் என்று வழங்கப்படுகின்றது.

சகுனி ஆலயம்


பவித்ரேஸ்வரத்தின் எல்லையில், மாயங்கோடு மாலன்சாவரு மலநடா சகுனி என்ற கோயில் உள்ளது. இத்தலத்தின் பிரதான தெய்வமாகவும், நடுநாயகனாகவும் வீற்றிருப்பவர், சகுனி ஆவார். சகுனி, தான் செய்த பாவங்களுக்காக வருந்தி இங்குள்ள மகாதேவரிடம் தவம்புரிந்து, சிவபெருமான் அருள்பெற்று மோட்சம் அடைந்ததாகத் தலவரலாறு குறிப்பிடுகின்றது. சகுனி தவமிருந்து மோட்சம் பெற்ற இடமே, தற்போது கோயிலாக அமைந்துள்ளது. (மகாபாரதம் கூறும் வரலாற்றின்படி, சகுனி சகாதேவனால் கொல்லப்பட்டதாக கூறுவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.) இக்கோயிலில், உபதெய்வங்களாக, கிரந்த மூர்த்தி, புவனேஸ்வரி தேவி, நாகராஜன் ஆகியோர் சிலாவடிவங்கள் அமைந்துள்ளன.

கூரையும், கதவுகளும் இல்லாத ஆலயம்


சகுனி ஆலயம் ஊரின் எல்லையில், திறந்தவெளியில் சுற்றுச்சுவரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூரையும் இல்லை, கதவுகளும் இல்லை. வானம் பார்த்த கோயிலாக உள்ளதால், எப்போதும் எவரும் எளிதில் தரிசிக்கும் வகையில் ஆலயம் அமைந்துள்ளது. மூலவராக சகுனி காட்சி தர, அவர் அருகே கதாயுதம் வைக்கப்பட்டுள்ளது. எதிரில் உள்ள கருங்கல் பீடத்தில் பக்தர்களின் படையல்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கீழ்ப்புறத்தில் மலையம்மும்மா, மலையப்புப்பா ஆலயம் மற்றும் மலநாடா பிணியாளி ஆலயமும் அமைந்துள்ளன.

சூழ்ச்சி, தீங்குகளை வென்றிட

சிவபக்தனான சகுனி எதிரிகளை சூழ்ச்சி செய்தும், தீங்கிழைத்தும் வெற்றிக்கு விடாமுயற்சி செய்தவன் என்பதும் அறிந்ததே. சகுனி காலத்தில் வாழ்ந்த சில சமூக மக்கள், சகுனியை வழிபட்டதற்குக் காரணம் அவர் நல்லவர், இருந்தாலும் சூழ்நிலையால் அவர் தவறிழைத்தார் என்ற அசையாத நம்பிக்கையில் அவரை வணங்கினர். ஆனால், இன்று இங்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு மற்றவர்களின் சூழ்ச்சிகளாலும், தீவினைகளாலும் தாங்கள் பாதிக்காமல் இருக்க, சகுனியின் ஆசிகள் நமக்கு உதவும் என்ற நம்பிக்கையில், சகுனி ஆலயத்தை நாடிவருகின்றனர்.
சகுனிக்குப் பொங்கல் வைத்தும், பூ, பழம், தேங்காய் உடைத்து, கள், பட்டுத்துணி முதலியவற்றைப் படைத்து, அர்ச்சனைகள் செய்தும் வழிபடுகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு மற்றவர்களால் தீங்கு நேராமல் நன்மையே நடக்கும் என்று நம்புகின்றனர்.

விழாக்கள்


ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங் களில் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், கொட்டாரக்கரா வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் பவித்ரேஸ்வரம்.திருவனந்தபுரத்தில் இருந்து 64 கி.மீ., தொலைவிலும், கொல்லத்தில் இருந்து 42 கி.மீ. கொட்டாரக்கராவில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இதே  மாவட்டத்தில் பவித்ரேஸ்வரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் போருவழி என்ற தலத்தில் துரியோதனின் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில், பழம்பெரும் மகாதேவர் ஆலயம், கொட்டாரம்காவு தேவி ஆலயம், அறப்புரா மலநாடா மலையம்மும்மா, மலையப்புப்பா ஆலயம் மற்றும் மலநாடா பிணியாளி ஆலயமும் அமைந்துள்ளன.கேரள மாநிலத்தில் பயணம் செய்வோரில், கொல்லம் செல்லும் வாய்ப்புள்ளவர்கள் ஒரே மாவட்டத்தில் அமைந்துள்ள மாமன் சகுனி கோயிலையும், மைத்துனன் துரியோதனன் கோயிலையும் தரிசித்து வியக்கலாம்.

தொகுப்பு : பனையபுரம் அதியமான்

Tags : Sakuni ,
× RELATED கட்சி மீது விசுவாசம் இல்லாதவர்...