×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

475. தனேஸ்வராய நமஹ (Dhaneshwaraaya namaha)

(திருநாமங்கள் 471 முதல் 482 வரை - தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)

கண்ணபிரானின் பால்ய சினேகிதரான குசேலர் மிகவும் வறுமையில் வாடிவந்தார். அவரது மனைவியின் ஆலோசனையின் பேரில், நான்கு கைப்பிடி அவலை எடுத்துக் கொண்டு, தன் இளமைக்காலத்து நண்பன், கண்ணனைச் சந்திப்பதற்காகத் துவாரகைக்குச் சென்றார் குசேலர்.துவாரகையிலே பிரம்மாண்டமான அரண்மனையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணன், குசேலரைக் கண்டதும் எழுந்து வந்து அவரை வரவேற்றான். தான் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் குசேலரை அமர்த்தினான். அதுவரை தனக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த ருக்மிணியிடம் குசேலருக்குச் சாமரம் வீசுமாறு கூறினான். அவளும் அவ்வாறே செய்தாள்.

பின், குசேலரின் பாதங்களுக்குப் பூஜை செய்து அவரது திருவடி நீரைத் தன் தலை மீதும், ருக்மிணியின் தலைமீதும் தெளித்துக்கொண்டான் கண்ணன். மேற்கொண்டு குசேலரைக் குசலம் விசாரித்த கண்ணன், “எனக்காக என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்று குசேலரைப் பார்த்துக் கேட்டான். கண்ணனின் பிரம்மாண்ட அரண்மனை, அங்கே அவன் அனுபவித்து வரும் ராஜபோகங்கள், அவனது ஆடை அலங்காரங்கள் போன்றவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன குசேலர், நாம் வெறும் அவல் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், அது கண்ணனின் பெருமைக்கு இழுக்காக இருக்குமோ என்று கருதி ஏதும் பேசாமலேயே இருந்துவிட்டார்.

ஆனால், கண்ணன் குசேலரோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவரது மேலாடைக்குள்ளே ஒளித்து வைத்திருந்த அவல் மூட்டையைப் பார்த்துவிட்டான். அதென்ன மூட்டை என்று கேட்டபடி அதை உருவிப் பிரித்துப் பார்த்தான். நான்கு பிடி அவல் அதில் இருந்தது.

முதல் பிடி அவலை எடுத்து கண்ணன் தனது வாயில் போட்டுக் கொண்டான். அடுத்த பிடி அவலை ருக்மிணிக்கு அளித்தான். தொடர்ந்து இன்னொரு பிடி அவலைத் தன் வாயில் கண்ணன் போட முற்படுகையில், ருக்மிணி கண்ணனைத் தடுத்து, “சுவாமி! நீங்கள் குசேலருக்குச் செல்வத்தை அருள்வதற்கு அந்த முதல் பிடி அவலே போதுமானதாயிற்றே. அதற்கு மேலும் ஒரு பிடி அவலை உண்டால்தான் அருள் புரிவீர்களா?” என்று கேட்டாளாம் ருக்மிணி.

அதற்கு கண்ணன் ரகசியமாக ருக்மிணியிடம், “ருக்மிணி! உனக்குத் தெரியாதா? ஏற்கனவே, தான் குசேலர் வீட்டில் தங்கமழை பொழிந்தாகிவிட்டதே!” என்றானாம். “எனக்குத் தெரியாமல் எப்போது பொழிந்தீர்கள்?” என்று ருக்மிணி தன் பார்வையாலேயே கேட்டாள்.அதற்கு ருக்மிணியின் காதில் கண்ணன், “குசேலர் இத்தனை நாட்கள் வறுமையில் வாடியதற்குக் காரணம் அவரைப் பிடித்திருந்த தரித்திரம் எனப்படும் அலக்ஷ்மியே ஆகும்.

அந்த அலக்ஷ்மி அவரை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அழைத்து அவருக்குச் சாமரம் வீசச் சொன்னேன். லக்ஷ்மியான நீ சாமரம் வீசியபின், உன் அக்காளான அலக்ஷ்மி அங்கே இருக்க மாட்டாள் இல்லையா? எனவே நீ எப்போது சாமரம் வீசினாயோ, அப்போதே தங்கமழை அவர் வீட்டில் பொழிந்துவிட்டது. அவர்மீது உள்ள அன்பினால் அவர் தந்த அவலை வாங்கி உட்கொண்டேனே ஒழிய, அவலுக்காகத் தங்க மழை பொழியவில்லை. அவரது அன்புக்காக அப்போதே பொழிந்துவிட்டேன்!” என்று கூறினான்.

ஆனால், அது குசேலருக்குத் தெரியாதே என்றாள் ருக்மிணி. இப்போது சொல்ல வேண்டாம் அவரே தன் இல்லம் திரும்பும் போது அனைத்தையும் புரிந்துகொள்வார் என்று சொல்லிவிட்டான் கண்ணன். இப்படித் தனது அடியார்களுக்குச் செல்வத்தை அருளும் போது, காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அந்தச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளி வழங்கிவிடுவதால், திருமால் ‘தனேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தன’ என்றால் செல்வம், ‘ஈஸ்வர:’ என்றால் இவ்விடத்தில் விரைந்து அருள்பவர் என்று பொருள். ‘தனேஸ்வர:’ என்றால் செல்வத்தை விரைந்து அருள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 475-வது திருநாமம்.“தனேஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு விரும்பிய செல்வம் விரைவில் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

476. தர்மகுபே நமஹ (Dharmagupey namaha)

காஞ்சிபுரத்தில் சுவாமி வேதாந்த தேசிகன் வாழ்ந்துவந்த காலம். அதே காஞ்சியில் வசித்து வந்த ஒரு பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்குக் `கன்யாசுல்கம்’ என்று செல்வத்தை அளித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஏழையான இந்த பிரம்மச்சாரி கன்யாசுல்கம் கொடுப்பதற்குச் செல்வம் வேண்டிக் காஞ்சியில் உள்ள பலரை அணுகினான்.

அவர்களுள் சிலரிடம் பணம் இருந்தாலும் அதைத் தருவதற்குரிய மனம் இல்லாததால், அவர்கள் பிரம்மச்சாரியிடம், “நம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் என்று ஒருவர் இருக்கிறாரே! அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர்! நீ அவரது உதவியைப் போய் நாடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். உண்மையில் சுவாமி வேதாந்த தேசிகன், பேரருளாளப் பெருமாளையும் பெருந்தேவித் தாயாரையுமே தமக்குச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாரே ஒழிய, உலகியல் செல்வத்தை எல்லாம் அவர் கையாலும் தொட்ட தில்லை. அவரைச் சோதித்துப் பார்ப்பதாக எண்ணி இந்த பிரம்மச்சாரியை அவரிடம் சிலர் அனுப்பி வைத்தார்கள்.

அந்த பிரம்மச்சாரியும் அவர்களின் கூற்றை நம்பி சுவாமி வேதாந்த தேசிகனிடம் சென்று தான் திருமணம் செய்துகொள்வதற்குரிய செல்வம் வேண்டும் என்று கேட்டான். “நீ எதற்காகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார் தேசிகன். அப்போது அந்த பிரம்மச்சாரி, “நான் வேதங்களைக் கற்று விட்டேன். மேற்கொண்டு அந்த வேதங்கள் கூறும் தருமங்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல இல்வாழ்க்கை வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்றான்.

இதைக் கேட்டு வியந்தார் தேசிகன். “வெறும் இல்லற சுகத்தில் நாட்டம் கொள்ளாமல், இறைவனுக்கு ஆராதனமான தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி இவன் இல்வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறானே!” என்று பெருமைப்பட்டார். அந்த பிரம்மச்சாரியைக் காஞ்சிபுரத்தில் கல்யாணகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டுள்ள பெருந்தேவித் தாயாரின் சந்நதிக்கு அழைத்து வந்தார். பெருந்தேவித் தாயாரைக் குறித்து `ஸ்ரீஸ்துதி’ என்ற அற்புதமான துதியை இயற்றி அருளினார் தேசிகன். அதிலே,

“யோகாரம்ப த்வரிதமனஸோ யுஷ்மத் ஐகாந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமம் இஹ யே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதி க்ருஹாத் அம்பராத் அம்புதேர் வா
தாரா நிர்யாந்தி அதிகம் அதிகம் வாஞ்சி தானாம் வஸூனாம்”


என்ற பதினாறாவது ஸ்லோகத்தை வேதாந்த தேசிகன் சொன்னவாறே, பெருந்தேவித் தாயார் தங்கமழையை அங்கே அப்போதே பொழிந்து விட்டாள். “இல்லற தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி, யார் ஒருவர் திருமகளையும் திருமாலையும் நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு பூமியில் இருந்தும் குபேரன் வீட்டில் இருந்தும் வானில் இருந்தும் கடலில் இருந்தும் எல்லாச் செல்வங்களும் வந்து மழையாகக் கொட்டும்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பெருந்தேவித் தாயார் பொன்மழை பொழிந்த இக்காட்சி இன்றும் காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதியின் பிராகாரத்தில் சித்திர வடிவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

செல்வத்துடன் புறப்பட்ட பிரம்மச்சாரி, தேசிகனிடம், “சுவாமி! பெருமாளும் தாயாரும் அடியேனுக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைத் தந்து விட்டார்களே! இதனால் என் மனம் மாறி, தருமத்தையும் நான் மறந்து, ஒருவேளை செருக்குற்றுச் சுகபோகத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டால் என்ன ஆவது?” என்று கேட்டார்.

அதற்கு தேசிகன், “இது நீயாகத் தேடிய செல்வம் அன்று. திவ்ய தம்பதியர் அருளிய செல்வம். நாமாக ஈட்டிய செல்வமாக இருந்தால், அது நமக்கு கர்வத்தைக் கொடுக்கும். திவ்ய தம்பதியர் நமக்குச் செல்வத்தை அருளினால், செல்வத்தை அருளியதோடு அப்படியே விட்டு விடாமல், நாம் அதைக் கொண்டு அறவழியால் வாழ்கிறோமா என்பதையும் அவர்களே கண்காணித்து நம்மைக் காப்பார்கள். தன் அடியார்கள் தர்மத்தில் இருந்து விலகாமல் எப்போதும் காக்கும் அந்தப் பேரருளாளனும், பெருந்தேவியும் துணை நிற்க நீ அஞ்ச வேண்டாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இப்படி அடியார்கள் தருமத்தில் இருந்து விலகாமல் அவர்களைக் காப்பதால் திருமால் ‘தர்மகுப்’ - அடியார்களைத் தருமத்தில் இருந்து விலகாதபடி காப்பவர் - என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 476-வது திருநாமம்.“தர்மகுபே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், தருமத்தில் இருந்து என்றும் விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

477. தர்மக்ருதே நமஹ (Dharmakruthey namaha)

பட்டாபிஷேகத்தைத் துறந்து ராமன் வனவாசம் புறப்படும் சமயத்தில், தன் தாயான கௌசல்யாதேவியைச் சந்தித்து விடைபெறுவதற்காக அவளது அரண்மனைக்குள்ளே நுழைந்தான் ராமன். அவனை வரவேற்று ரத்தின சிம்மாசனத்தில் அமரச் சொன்னாள் கௌசல்யா. ஆனால் ராமன், “அம்மா! நான் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில் தான் அமர வேண்டும். சிம்மாசனத்தில் அமரக்கூடாது. தந்தை என்னைப் பதினான்கு வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டிருக்கிறார்.

அதை நிறைவு செய்துவிட்டு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன்!” என்றான்.இதைக் கேட்டு அதிர்ந்து போனாள் கௌசல்யா. “என்ன ராமா சொல்கிறாய்? உனக்கு இன்று பட்டாபிஷேகம் என்று நாங்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வனவாசம் என்கிறாயே! உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்? என் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தி ஒருவேளை எனக்கு இருந்தால் இப்போதே என் உயிரை விட்டுவிடுவேன்! ராமா! என்னை விட்டு நீ போகவே கூடாது!” என்றாள்.

மேலும், “ராமா! நான் உனக்கு உயர்ந்த தருமம் ஒன்றைச் சொல்கிறேன்! அதைச் செய்! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தை மனதில் கொண்டு வனம் போக விரும்பினாய்! ஆனால், இந்த உலகிலேயே மிகவும் உத்தமமான தருமம், தாய்க்குத் தனயன் பணிவிடை செய்வதே ஆகும். இப்போது உன் தாயான நான் ஆணை இடுகிறேன். எனக்குப் பணிவிடை செய்து கொண்டு, நீ அயோத்தியில் இருக்க வேண்டும்!” என்று ராமனுக்கு ஆணை இட்டாள் கௌசல்யா.

அதற்கு ராமன், “தாயே! நீங்கள் சொன்னது மிகவும் உயர்ந்த தருமம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், தந்தையின் சொல்படி வனவாசம் என்ற ஒரு விரதத்தை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். இப்படித் தொடங்கிய ஒரு விஷயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது தருமம் ஆகாது. மேலும், நான் தருமத்தின் வழி நடக்க விரும்புவோருக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்க விழைகிறேன். நானே இப்போது திடீரென்று, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தில் இருந்து விலகி, தாய் சொல்லைத் தட்டாதே என்ற தருமத்தைக் கடைபிடிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது பின்னால் வருவோருக்குக் குழப்பத்தையே விளைவிக்கும்.

எனவே, தாயே! நீங்கள் இட்ட கட்டளையை அவசியம் நான் நிறைவேற்றத் தான் போகிறேன். அதை நான் மீற மாட்டேன். ஆனால், முதலில் தந்தையின் கூற்றுப்படி பதினான்கு வருட வனவாசத்தை நிறைவு செய்து விடுகிறேன். அதன்பின் நாட்டுக்குத் திரும்ப வந்து, உங்களுக்குக் கூடவே இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் செய்து உங்கள் கட்டளையையும் நிறைவேற்றுகிறேன்!” என்றான்.

இனியும் ராமனைத் தன்னால் தடுக்க முடியாது என்று உணர்ந்து விடுகிறாள் கௌசல்யா. அதனால், பலவிதமான ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லி ராமனைக் காட்டுக்கு வழியனுப்பி வைக்கிறாள் கௌசல்யா தேவி. இதிலிருந்து, தருமத்தில் இருந்து இம்மிகூட விலகாமல் ராமன் பின்பற்றிக் காட்டினான் என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா? தருமங்களை உலகுக்கு விதித்தவரும், உலகியல் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவருமான திருமால், தானே ராமனாக அவதரித்தார்.

அந்தத் திருமால் எதற்காக இவ்வளவு தூரம் அந்தத் தருமத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் அத்தகைய தேவை அவருக்கு உள்ளதா? அவர் தருமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் தான். ஆனால், மனிதர்கள் எல்லோரும் தருமத்தைப் பின்பற்றி அதன்வழி நடக்க வேண்டும் என்று திருமால் நினைக்கிறார். அதனால், தானே முன்னுதாரணமாக இருந்து பிறருக்கு வழிகாட்டி, அவர்களும் தரும வழியில் நடக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் திருமால் ‘தர்மக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். தர்மக்ருத் என்றால் தருமத்தைக் கடைப்பிடிப்பவர் என்று பொருள். அவருக்கு அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அடியவர்களான நாம் தருமத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக அவர் தருமத்தைக் கடைப்பிடிக்கிறார். ‘தர்மக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 477-வது திருநாமம்.“தர்மக்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தரும சிந்தனை என்றும் நிலைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

478. தர்மிணே நமஹ (Dharminey namaha)

சீதையோடும் லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் சென்ற ராமன், வனவாசத்தின் இரண்டாம் நாள் இரவு வத்ச தேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தங்கினார்கள். அங்கே சயனித்தபடி தன் தாயான கௌசல்யாவை நினைத்து வருந்தி அழுதான் ராமன்.அதைக் கண்ட லட்சுமணன், “அண்ணா! நீங்கள் அன்னை கௌசல்யாவின் பேச்சைக் கேட்டு நாட்டிலேயே இருந்திருக்கலாமே!” என்று கேட்டான். ஆனால் ராமனோ, “இல்லை லட்சுமணா! தந்தை முதலில் கட்டளையிட்டு, அதை நான் ஏற்றபின் நடுவில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாதல்லவா? அதனால்தான் காட்டுக்கு வந்தேன். ஆனால், ஒரு மகனாக இருப்பவன் தன் தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும். தன் தாய் கண்ணீர் விடுவதற்கு மகனே காரணமாகக் கூடாதல்லவா? இப்போது நான் காட்டுக்கு வந்து, அங்கே என் அன்னை நிராதரவாகக் கண்ணீர் சிந்தி வருந்த நானே காரணமாகி விட்டேனே!” என்று கலங்கி அழுதான்.

மேலும் லட்சுமணனிடம், “இந்த அவதாரத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அவதரித்ததால், இப்படித் தாயைப் பிரியும் சூழல் வந்து விட்டது. அடுத்த அவதாரத்தில் பார்! அவதரித்த நாள் தொடங்கி நான் தாய் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்து காட்டப் போகிறேன்!” என்றானாம் ராமன். அதனால் தான் அடுத்த கிருஷ்ணாவதாரத்தில், ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாள் அன்று நள்ளிரவில், மதுராவில் உள்ள கம்சனின் சிறைச்சாலையில், தேவகி வசுதேவரின் மகனாகக் கண்ணபிரானாக அதே பகவான் வந்து அவதரித்தான்.

அற்புதக் குழந்தையாக, நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், தாமரைக் கண்களோடும், ஆச்சரியமான திரு ஆபரணங்களோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், நீலமேக சியாமள வண்ணத்தோடும் வந்து தோன்றிய கண்ணனைப் பார்த்த தேவகி, “குழந்தாய்! எட்டாவது குழந்தையான நீ நாராயணனாக இருப்பாயோ என்று ஏற்கனவே கம்சன் தேடிக் கொண்டிருக்கிறான். நீ பிறந்தவுடன் உன்னை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறான். இந்த நிலையில் நீயே உன்னை அடையாளம் காட்டிக் கொடுப்பது போல் இப்படி திருமாலுக்குரிய அடையாளங்களோடு வந்து தோன்றி விட்டாயே! கம்சன் இதைப் பார்த்து, நீ திருமால் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்று அஞ்சி நடுங்கினாள்.

மேலும், “குழந்தாய்! தயவு செய்து உனது கூடுதலான இரண்டு திருக்கரங்களையும் சங்கு சக்கரங்களையும் மறைத்துக் கொண்டு சாதாரண மனிதக் குழந்தையாக நீ மாற வேண்டும்!” என்று வேண்டினாள் தேவகி.

“உபஸம்ஹர விச்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்
சங்க சக்ர கதா பத்ம ச்ரியா ஜுஷ்டம் சதுர்புஜம்”

என்று ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்லோகம் வருகிறது.

இவ்வாறு தேவகி சொன்னவாறே, கண்ணன் சிரித்துக்கொண்டே, “அம்மா! இந்த அவதாரத்தில் தாய் சொல்லைத் தட்டக்கூடாது என்பதே என் சங்கல்பம். இப்போது பாருங்கள்!” என்று அடுத்த நொடியே இரண்டு கைகளைக் கொண்ட சாதாரணக் குழந்தையின் வடிவத்துக்கு மாறி விட்டானாம். அது மட்டுமில்லை, தனது பதினொன்றாவது வயதில் கம்சனை அழித்தான் கண்ணன். அழித்தவுடன், மறைத்து வைத்திருந்த இரண்டு கைகளையும் சங்கு சக்கரங்களையும் வெளியே கொண்டு வந்து, அதன்பின் அவதாரம் முழுவதும் நான்கு கைகளோடும் சங்கு சக்கரத்தோடுமே எழுந்தருளி இருந்தான்.

“பூய: ப்ராதுரபூத் தஸ்ய புஜயுக்மம் திரோஹிதம்”

என்று இதை ``யாதவாப்யுதயம்’’ என்னும் காவியத்தில் வேதாந்த தேசிகன் பாடியுள்ளார்.“ஏன் கைகளை வெளிக்கொணர்ந்தாய்?” என்று தேவகி கேட்டபோது, “தாய் சொன்னதைச் சொன்னபடி செய்பவன் நான். கம்சன் மீதுள்ள பயத்தால் கைகளை மறைத்துக் கொள் என்று நீங்கள் கட்டளை இட்டிருந்தீர்கள். அப்படியானால், கம்சன் அழிந்தபின் கைகளை வெளியே கொண்டு வரலாம் என்று தானே பொருள்படும். தாயின் கூற்றை இம்மி கூடப் பிறழாமல் கடைப்பிடிக்க விரும்புபவன் நான். எனவே இப்போது கம்சனை அழித்துவிட்டதால், இனி நான்கு கைகளோடும் சங்கு சக்கரங்களோடுமே இருப்பேன்!” என்றானாம் கண்ணன்.

ஆக, கண்ணன் நான்கு கைகளை இரண்டு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும், மீண்டும் இரண்டு கைகளை நான்கு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும் எது காரணம் என்றால், தாய் சொல்லை மீறக் கூடாது என்ற தருமமே காரணம். இப்படித் தான், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தருமத்தையே கருவியாகக் கொண்டு, தருமத்தின் அடிப்படையில் செயல்படுவதால் திருமால் ‘தர்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தர்மீ’ என்றால் தருமத்தைக் கருவியாகக் கொண்டு செயல்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 478-வது திருநாமம்.“தர்மிணே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் செயல்கள்யாவும் அறநெறிப்படி, விளங்கும்படி திருமால் அருள்புரிவார்.

479. ஸதே நமஹ (Sathey namaha)

(ஸ்ரீ பராசர பட்டருடைய விளக்கவுரையின் அடிப்படையில், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 479 முதல் 482 வரை உள்ள திருநாமங்கள்;“ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்”என்ற வரிசையில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. பொதுவாக நாம் சஹஸ்ரநாமம் சொல்லும் போது “ஸத் அஸத் க்ஷரம் அக்ஷரம்” என்று சொல்லிவந்தாலும், “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று கொள்வது சிறப்பாகும் என்று பராசர பட்டர் விளக்குகிறார்.மேலும், இத்தொடரைத் திருநாமங்களாகப் பிரிக்கையில்,

479 - ஸத்
480 - அக்ஷரம் ஸத்
481 - அஸத்
482 - அஸத் க்ஷரம்

என்று பிரித்துள்ளார். எனவே ஸ்தோத்திரமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று சொல்ல வேண்டும். தனித்தனித் திருநாமங்களாகச் சொல்லும்போது, ஸத், அக்ஷரம் ஸத், அஸத், அஸத்க்ஷரம் என்று சொல்ல வேண்டும்.) திருவரங்கத்தில் ராமானுஜர் சாந்தோக்ய உபநிஷத்தைத் தமது சீடர்களுக்கு விளக்கிவந்தார். அதில், “ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்” என்ற வாக்கியம் வந்தது.

“இந்த வாக்கியத்துக்கு மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், ‘ஸத்’ என்ற இறைவன் ஒருவன் மட்டுமே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை!” என்றார் ராமானுஜர். அதைக் கேட்ட சீடர்கள், “அப்படியானால் உலகில் நாம் பார்ப்பவை அனைத்தும் பொய்த் தோற்றங்களா? நிற்பதும் நடப்பதும் பறப்பதும் எல்லாம் வெறும் சொப்பனம்தானா? பல தோற்ற மயக்கங்களா? கற்பதும் கேட்பதும் கருதுவதும் எல்லாம் அற்ப மாயங்களா? அவற்றுள் ஆழ்ந்த பொருள் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ராமானுஜர், “உலகம் பொய் அன்று. உலகம் சத்தியம். இவ்வுலகில் நமக்குக் கண்ணெதிரே எத்தனை அனுபவங்கள் ஏற்படுகின்றன? கானல்நீர் போலவோ கனவு போலவோ இவ்வுலகம் மறைந்து போகாது. இறைவனும் உண்மை, உயிர்களும் உண்மை, உலகமும் உண்மை!” என்றார்.“அப்படியானால் இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை என்ற உபநிஷத் வாக்கியத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?” என்று சீடர்கள் கேட்டார்கள்.

அதற்கு ராமானுஜர், “இந்த உலகில் சோழ மன்னன் ஒருவன்தான் இருக்கிறான் என்று சொன்னால், சோழமன்னன் ஒருவன் மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறான், மற்றவர்கள் எல்லாம் பொய் என்றா பொருள்? அல்லவே! சோழ மன்னன் சிறப்பானவனாக, ஒப்பற்றவனாக இருக்கிறான். இந்தச் சோழ மன்னனைப் போல இன்னொருவன் இலன் என்று தானே பொருள்?
அதுபோலத் தான் “ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா” என்று நம்மாழ்வார் பாடிய படித் தனக்குச் சமமானவரோ, தன்னை விஞ்சியவரோ இல்லாதபடி ஒப்பற்ற ஒருவனாக இறைவன் இருப்பதாலே, ஸத் எனப்படும் இறைவன் ஒருவன்தான் இருக்கிறான்.

அவனைப் போல இரண்டாம் நபர் எவரும் இலர் என்று இங்கே உபநிஷத் சொல்கிறது. எனவே, உலகம் பொய் என்று கருதக் கூடாது!” என்று விளக்கினார். மேலும், `ஸத்’ என்ற வார்த்தைக்கு இருப்பவர் என்றும் பொருள் உண்டு, உயர்ந்து இருப்பவர் என்றும் பொருள் உண்டு. இங்கே சாந்தோக்ய உபநிஷத்தில் மிகவும் உயர்ந்தவராக இருப்பவர் என்ற பொருளில் `ஸத்’ என்ற வார்த்தை வந்துள்ளது.

உயர்ந்த தருமங்களைத் தன்னகத்தே கொண்டவராக, அவரைப்போல் இன்னொருவர் இலர் என்னும்படி மிக உயர்ந்து விளங்குவதாலே மிக உயர்ந்து இருப்பவர் - ‘ஸத்’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 479-வது திருநாமம்.“ஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில், மேன்மேலும் பல முன்னேற்றங்களைக் காணும்படி திருமால் அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!