×

சமய வரலாற்றில் தண்ணீர் சடங்குகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பகுதி-2

விசர்ஜனம் என்ற தண்ணீர் சடங்கு

தண்ணீரில் சாமி சிலைகளை கரைத்தல் என்பது இந்து சமயத்தில் உள்ள ஒரு முக்கியச் சடங்காகும். விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்தி அன்றும், துர்க்கை சிலையை காளிபூஜை அன்றும் தண்ணீரில் கரைக்கின்றனர். இதற்கு சமஸ்கிருதத்தில் விசர்ஜனம் என்று பெயர். விசர்ஜனம் என்றால் `ஓய்வில் கிடத்து’ அல்லது `அசைவின்றி கிடத்திவை’ என்பது பொருள்.

புண்ணிய தீர்த்தமாடல்

சமய மரபுகளில் தண்ணீரில் மூழ்கி தூய்மை பெறுதல் அல்லது பாவம் நீங்குதல் மற்றும் புண்ணியம் பெறுதல் என்ற ஒரு கோட்பாடு பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. இதனால் இந்துக்களில் பலர், புண்ணிய ஷேத்திராட்டனம் என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ய நதிகளில் மூழ்கி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி நோய் நீங்குதல் அல்லது முடம் நீக்குதல், பார்வை பெறுதல் என்பவை மற்ற சமயங்களிலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் சைவ சமய எழுச்சி ஏற்பட்டபோது எழுதப்பட்ட ஸ்தல புராணங்களில் கோயில் தீர்த்தத்தில் குளித்து இந்திரன், பிரம்மன் அல்லது வேறு அசுரன், பக்தன் போன்றோர் பாவம் நீங்கப் பெற்றனர் என்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. கோயில் என்றால் மூர்த்தி, தலம் இவற்றுடன் தீர்த்தமும், (கோயில் தீர்த்தம்) முக்கிய மூன்றில் ஒன்றாக இடம் பெற்றது. மதுரை சொக்கநாதர் பற்றிய திருவிளையாடல் புராணத்தில் பக்தர்கள் குறை தீர்ப்பதில் பொற்றாமரைக் குளம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

திருமுழுக்கும் - திருமஞ்சனமும்

திருக்கோயிலுக்கு நடத்தப்படும் திருமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்தின் போது புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டுவந்து கோபுரக் கலசங்களின் மீது ஊற்றுகின்றனர்.  இதுதவிர தினமும் கோயிலுக்குள் இருக்கும் மூர்த்திக்கு அபிஷேகம் நடை பெறுகின்றது. சிவனுக்கு அபிஷேகப் பிரியன் என்ற சிறப்புப் பெயரும் வழங்குகிறது. ஆனி மாதம் நடராசருக்கென்று சிறப்பாகத் திருமஞ்சனம் நடக்கிறது.

தண்ணீரின் அறிவியல் உண்மைகள்

தண்ணீர் சடங்குகள் பற்றிய அறிவியல் உண்மைகள் வியப்பூட்டுகின்றன. தண்ணீர் கொட்டுவதைப் பார்ப்பதும் தண்ணீரின் இசையைக் கேட்பதும் மூளைக்கு அதிக இரத்தத்தைச் செலுத்தி மனதை அமைதிப்படுத்தி உடல் சோர்வை நீக்குகிறது. மேலும், தண்ணீரினால் நியூரோ கெமிக்கல் எனப்படும் நரம்புக்கு ஊட்டம் தரும் வேதிப் பொருட்கள், மனித மூளையில் அதிகளவில் நரம்புகளில் செல்கின்றன. இதனால் நரம்புகள் வலுப்படு கின்றன. மேலும், தண்ணீரை அதிகமாக குடிக்கும்போது அது உடம்பிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றிவிடுகின்றது.

உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்ல தண்ணீர் உதவுகின்றது. உடம்பின் வெப்பத்தை முறைப்படுத்தி PH சம நிலையைத் தக்கவைக்க தண்ணீர் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்க தண்ணீர் உதவுகின்றது. இவை தவிர தண்ணீருக்கு அருகில் இருந்தாலும், தண்ணீரின் ஒலியைக் கேட்டாலும், அதிக தண்ணீர் பருகினாலும், தண்ணீரின் அருகில் இருந்தாலும் (தலைமாட்டில் ஒரு செம்பு தண்ணீர் வைத்துகொண்டு படுப்பதாலும்) நரம்பு மண்டலத்தில் இருக்கக்கூடிய பாரா சிம்பதெடிக் என்ற முறையை விரைவாக செயல்பட ஊக்குவித்து மனிதனின் மனதிற்கு அமைதியையும் அவனுக்கு உணவு சீரணிக்கும் சக்தியையும் கொடுத்து உதவுகின்றது.

இதனால்தான் குற்றாலம் போன்ற அருவிகள் இருக்கும் இடங்களில் பைத்தியம் பிடித்தவர்களை அழைத்துச்சென்று தலையில் வேகமாக தண்ணீர் படும்படி குளிக்க வைத்து அவர்களின் நோயை சுகம் ஆக்குகின்றனர்.

தண்ணீரின் மருத்துவ மந்திரசக்தி

நாட்டுப்புறங்களில் தண்ணீரால் பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. விஷக் கடிக்கு தீர்த்தம் கொடுப்பது, கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கிப் பருகுவது, பிரிந்த குடும்பங்கள் மற்றும் தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செம்புத் தண்ணீர் கொடுத்து சேர்ந்து கொள்வது என்று பல சம்பவங்களில் தண்ணீர் மருத்துவப் பயன் கொண்டதாகவும் மந்திர சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

தண்ணீரின் சமூகச் செயல்பாடுகள்

1962-ல் பிளாக்மன் என்பவர் தண்ணீர்ச் சடங்குகள் பற்றி எழுதும்போது, இவை மந்திரசக்தி உடையவை. சமயங்களில் பயன்படுபவை என்று இருவகைப்படுத்தி விளக்குகின்றார். இதுதவிர தண்ணீரைக் கொண்டு பிரித்தல், மாற்றுதல், மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்று செயல்பாடுகள் நடப்பதாக அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். நம் தமிழ் மரபிலும் இம்மூன்றும் காணப்படுகின்றது.

1) பிரித்தல்

தன் குடும்பத்தை விட்டு ஒருவரைப் பிரிந்து செல்ல வைத்தல் அல்லது தன்னுடைய தொடர்பில் இருந்து பிரித்து விடுதல் என்பதைத் தண்ணீர் தெளித்து விடுதல் அல்லது அவனைக் கை கழுவி விடுதல் என்ற தொடர்களை பயன்படுத்துகின்றனர்.

2) மாற்றுதல்

ஒருவர் ஒரு மரபில் இருந்து இன்னொரு மரபுக்கு மாறும் பொழுது அந்நிகழ்வை மடைமாற்றம் என்ற பெயரால் அழைக்கின்றனர்.

3) இணைத்தல்

செம்புத் தண்ணீர் கொடுத்து இரண்டு குடும்பங்கள் இணைந்து கொள்ளும் போது அவற்றை மீண்டும் இணைத்தல் என்ற வழக்கின் கீழ் கொண்டு வருகின்றனர்.இவ்வாறாகத் தண்ணீர் மனிதகுல வரலாற்றில் அன்று முதல் இன்று வரை சடங்குகளின் ஊடாக சமூக வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து உள்ளதை அறியலாம்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags :
× RELATED காமதகனமூர்த்தி