×

கலைத்தாயை வணங்குவோம்!

சரஸ்வதி பூஜை 4-10-2022

விஜய தசமி 5-10-2022

* சரஸ்வதி

நிறைந்தகல்வியின் அடையாளங்களை நிரல்பட தொகுத்தால் தேவியின் திருவுருவம் நம் மனதை கொள்ளை கொள்ளும். வெள்ளைத்தாமரையில், வெண் பட்டாடை அணிந்து, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள். அதாவது ஒரு திருவடி மடக்கியும், ஒரு திருவடி தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், தலையில் சடா மகுடமும் தரித்திருப்பாள். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பாள்.

* நதியாக விளங்கும் நாயகி


வேத காலம் தொட்டு சரஸ்வதிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வீணையை வைத்திருப்பதால் வீணாவாதினி என்றும், நாடிச் சுவடிகளை வைத்திருப்பதால் புஸ்தக வாணி  என்றும் வழங்கப்படுகிறாள். வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. சரஸ்வதி என்னும் சமஸ்கிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ரிக் வேதம் சரஸ்வதியை எதையும் தூய்மைப்படுத்துபவளாகக் கருதுகிறது. மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

* வேத உபநிடதங்களில் சரஸ்வதி

ரிக் வேதத்தின் 2.41.16 ஆம் பாடல் ‘அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதி அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திம் அம்ப நஸ் க்ருதி’ என்று சரஸ்வதியை இருகரம் கூப்பித் தொழுதழைக்கிறது. பேச்சாற்றலைத் தரும்படி வேண்டுகிறது. ரிக் வேதத்தில்தான் சரஸ்வதி ஸூக்தம் எனும் பிரத்தியேகமான மந்திரங்கள் உள்ளன. அதில் நல்ல எண்ணங்கள் தேவர்களாகவும் கெட்ட எண்ணங்கள் அசுரர்களாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றன. கெட்ட எண்ணங்களை அழிக்க வேண்டும்.

நல்ல எண்ணங்கள் வளர வேண்டும் என்று சொன்னால் முதலில் எது நல்ல எண்ணம் எது கெட்ட எண்ணம் என்று பகுத்தறியும் அறிவு வேண்டுமல்லவா அந்த அறிவைத் தர வேண்டும் என்று சரஸ்வதி தேவியை இந்த சூக்தம் வேண்டுகிறது. ரிக்வேதம் தவிர மற்ற மூன்று வேதங்களிலும் தைத்திரீய உபநிஷத் போன்ற உபநிடதங்களிலும் சரஸ்வதிதேவியைப் பற்றிய மந்திரங்கள் உள்ளன.

* கலைமகள் குடியிருக்கும் இடங்கள்


தேவிபாகவதம், கல்வி நிலையங்கள், நூலகங்களை கலைமகள் குடியிருக்கும் இடங்களாகச் சுட்டிக் காட்டுகிறது. அறிவும் ஆற்றலும் நிறைந்த இடத்தில் கலைமகள் வீற்றிருப்பாள். எண்ணும் எழுத்தும் அறிந்தவர் இதயத்தில் கலைமகள் எழுந்தருளி இருப்பாள். குருவாய்த் திகழ்பவர்கள், குருவின் நல்ல சீடர்கள், நல்லவற்றையே பேசும் “நா” உடையவர்களிடத்தில் சரஸ்வதி வீற்றிருப்பாள்.

வேதம் பயிலும் இடம், நாதம் ஒலிக்கும் இடம், நடனக் கலைகள் சிறக்கும் இடம், கீதம் இசைக்கும் இடம், போன்ற இடங்கள்  எல்லாம் கலைமகள் விரும்பி குடியிருக்கும் இடங்களாகும். நான்கு நல்ல புத்தகங்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் கலைமகளின் சாந்நித்தியம் இருப்பதாகவே பொருள்.

* சரஸ்வதி சப்தமி

சப்தமி திதி கல்விக்கும் சரஸ்வதிக்கு உரிய நாள். நவராத்திரியில் சப்தமி நாளில் இருந்து சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதியை ஆவாகணம் செய்யும் அந்த நாளை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அதாவது சப்தமி, அஷ்டமி, நவமி கலைமகளுக்கு உரிய நாள்கள்.

* ஹயக்ரீவரும் கலைமகளும்

கல்விக்குத் தேவதை சரஸ்வதி. சரஸ்வதிக்கு, குரு யார் தெரியுமா? ஹயக்ரீவர். ஹயக்ரீவர் அவதாரம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும். முன்பு ஒரு நாள் வேதங்களின் துணைகொண்டு, பிரம்மா தனது படைப்புத் தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களை பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேதங்களைப்பெண்குதிரை வடிவில் உருமாற்றி பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். வேதங்கள் இல்லாமல் உலகம் இருள் சூழ்ந்தது.

பிரம்மா திகைத்தார். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார். மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அற்புதமான வடிவம் எடுத்தார். அந்த வடிவம்தான் ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மத்வ ஸம்ப்ராயதத்தில் ஸ்ரீவாதிராஜ ஸ்வாமிகள் ஹயக்ரீவ உபாசகராக விளங்கி புகழ் பெற்றார். அவருடைய ஸ்லோகம் இது. நாளும் சொல்ல வேண்டும்.

``ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படி
காக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே’’


ஹயக்ரீவருக்கும் சரஸ்வதிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையானஸ்படிகம் போன்ற தேகத்தையும் உடையவர்கள். சகல கல்விக் கலைகளுக்கும் ஆதாரமுமானவர்கள். சரஸ்வதி பூஜையன்று அவர் குருவான ஹயக்ரீவரையும் வணங்க வேண்டும்.

* குமரகுருபரரும் கலைமகளும்

குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கலைமகளின் அருளைப்பூரணமாகப் பெற்றவர். வாய் பேச முடியாத குறையுடன் பிறந்த இவர் திருச்செந்தூர் முருகன் அருளால் அக்குறை நீங்கப் பெற்று பாடல் புனையும் வல்லமையைப் பெற்றவர். அவர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அங்கே தமிழ் வளர்க்க ஒரு திருமடம் கட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.

அப்பொழுது அரசாண்டு கொண்டிருந்த டெல்லி பாதுஷாவின் ஆளுநரை சந்திக்கச் சென்றார். தமிழைத் தவிர வேறு அறியாத குமரகுருபரருக்கு, அரச பிரதிநிதிகளோடு பேசும் பன்மொழி ஆற்றல் அருள வேண்டும் என்று பாடிய நூலே சகலகலாவல்லிமாலை. இதன் மூலம் பல மொழிகளிலும் பேசும் ஆற்றல் ஏற்பட்டது. இந்த சகலகலாவல்லி மாலையைப் படித்தால் குழந்தைகளுக்கு பன்முக ஆற்றலும், பன்மொழித்திறமையும் ஏற்படும் என்பது கண்கூடு.

* பன்மொழி ஆற்றலைத் தருவாள் சரஸ்வதி

சகலகலாவல்லி மாலையில் ஒரு அற்புதமான பாடல் இது. இதில் குமரகுருபரர் சரஸ்வதியை எப்படிப் போற்றுகின்றார் பாருங்கள்.

அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!


மழை பொழிகிறது. அந்த நேரத்தில் மயில் தோகை விரித்து மகிழ்ந்து ஆடுகிறது. அதைப் போல கற்றுத்தேர்ந்த புலவர்கள் கவிதைகளை மழையாகப் பொழியும்பொழுது  சரஸ்வதிதேவி களிப்படைகிறாள். அப்படிப்பட்ட கலைவாணியே! நீ எளியேனுக்கு உன் அருட் கடல் எனும் ஆன்மிக அனுபவத்தைப் பெற்று அதில் மூழ்கும் அனுபவத்தை எனக்குத் தரலாகாதா? இந்தப் பாடலை தினமும் ஒரு முறை மனமுருகிப் பாடினாலே கலைமகளின் அருள் கிடைக்கும். மொழித் திறமை சிறக்கும்.

* எப்படி வழிபட வேண்டும்?

சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். கல்விக்குரிய பொருட்களையும் பூஜையில் வைப்பர். முடிந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம் மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றை சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதம் செய்து வழிபட்டால், கலைமகளின் திருவருள் சித்திக்கும்.

* சரஸ்வதி பூஜையும் பொரிகடலையும்

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை அன்று அவசியம் பொரிகடலை வைத்துப் படைக்க வேண்டும். பொரி என்பது தேவர்களுக்கு முக்கியமான உணவு. ஹோமங்களில் பொரி இட்டுச் செய்வதை லாஜ ஹோமம் என்பார்கள். திருமணத்தில் தீர்க்காயுள் கிடைக்க இந்த ஹோமத்தைச் செய்வார்கள். சரஸ்வதி பூஜை என்பதும் ஒரு ஞான வேள்விதான்.

எனவே அன்றைக்கும் பொரியை அவசியம் படைக்க வேண்டும். அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதமாகச் சாப்பிடுவதன் மூலம் பாவங்கள் போகும் என்று பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். அதோடு இந்த அவல் பொரியை வெல்லம் கலந்து குழந்தைகளுக்கும் பசுக்களுக்கும் பறவைகளுக்கும் தரவேண்டும்.

தொகுப்பு: கோகுல கிருஷ்ணன்

Tags : Kalaitai ,
× RELATED கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே:...