திருப்பதி பிரம்மோற்சவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிரம்மோற்சவம்: 27-9-2022 முதல் 5-10-2022 வரை

மலை  ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே” என்பது ஆழ்வார் பாசுரம். ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத்   தொழுவது கூட இரண்டாம் பட்சம். திருமலையின் திசையை நோக்கி வணங் கினாலே, இதுவரை நம்மை வாட்டி எடுத்த வினைகள்  ஓய்ந்து, நமக்கு  நல் வாழ்வைத்  தரும் என்கின்ற உறுதியைத் தருகிறது ஆழ்வார் பாசுரம். “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரும்,நம் விருப்பம் கூடும்” என்பதற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரு மலைக்கு வந்து,  எம்பெருமானை சேவிக்கிறார்கள். அதுவும் புரட்டாசி மாதம் என்றால் திருமலை பிரம்மோற்சவம் நினைவுக்கு வந்துவிடும். அந்த பிரம்மோற்சவம் குறித்த பல்வேறு தகவல்களை வாசகர்களுக்காக முத்துக்கள் முப்பது எனத் தொகுத்துத் தருகிறோம்.

1. பிரம்மோற்சவம் எத்தனை நாட்கள்?

பிரம்மோற்சவம் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும்? எத்தனை நாட்கள் நடைபெற்று இருக்கிறது ?என்பதைக்  குறித்த பல சுவையான செய்திகள் கல்வெட்டுகளின் மூலம் அறியக் கிடக்கிறது. திருவேங்கடம் மலை  வரலாற்று மாலை என்கின்ற நூலில் மலையப்ப சுவாமிக்கு முதல் முதலாக நான்முகனால்  பிரம்மோற்சவம் செய்யப்பட்டது என்ற குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கி கொடி இறக்குதல் வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவம் 14 நாட்கள் வரை கூட சில ஆண்டுகளில் நடந்து இருக்கிறது. அதாவது குறைந்த பட்சமாக ஒன்பது நாட்கள் முதல் அதிகபட்சமாக 14 நாட்கள் வரை பிரம் மோற்சவம் நடந்திருக்கிறது. சில முறை  பத்து நாட்கள் நடந்திருக்கிறது . சில முறை 12 நாட்கள் நடந்து இருக்கிறது .சில நேரங்களில் 13 நாட்களும் நடந்து இருக் கிறது. இவை குறித்த குறிப்புகள் திருமலை கோயிலொழுகு நூலில் இருந்து அறியலாம்.

2. திருச்சானூரில் நடைபெற்றது

இப்பொழுது திருமலை பிரம்மோற்சவம் திருமலையில் நடைபெறுகிறது. திருமலை ஒரு குட்டி நகரமாக சகல வசதிகளோடு இன்றைக்கு விளங் குகிறது. லட்சக்கணக்கான மக்கள் வந்து தங்கி பிரம்மோற்சவத்தை சேவிக் கும் வாய்ப்பு இன்றைக்கு உண்டு. ஆனால் ஒரு காலத்தில் திருமலை அப்படிப்பட்ட வசதிகளோடு இல்லை. அடிவாரத்திலிருந்து மலையைக்  கடந்து , ஆலயத்தை அடைவது என்பது மிகவும் கடினமான காரியம். அடர்ந்த மரங்கள் உள்ள மலை திருமலை. பலவிதமான கொடிய விலங்குகள் நடமாடும் என்பதால், பெருமாள் சேவைக்கு செல்பவர்கள் குறைவு. பிரம்மோற்சவம் போன்ற பெரிய திருவிழாக்கள் செய்வதற்கு இடம் இல்லாமல் இருந்தது.

அதனால் பிரம்மோற்சவம் ஆரம்பகாலத்தில் திரு மலையின் அடிவாரத்தில் உள்ள திருச்சுகனூர்  என்று அழைக்கப்படும் திருச்சானூரில் நடைபெற்றது. இதற்காக அங்குராப்பண விழாவின் முன் கொடியேற்ற விழாவை (துவஜாஹரோகணம்) திருமலையில் நடத்தி விட்டு,உற்சவ மூர்த்தியை திருச்சானூரில் எழுந்தருளச் செய்தனர். அங்கே முறையாக மாடவீதிகளில் ஒவ்வொரு நாளும் மலையப்பசுவாமி எழுந்தருளினார். 8 நாட்கள் வாகன சேவை நடந்த பிறகு, ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி முடிந்து, மாலையில் திருவேங்கட மலைக்கு எழுந்தருளச் செய்து அங்கே கொடி இறக்கம் செய்து(துவஜ அவரோகணம்) தொடர்ந்து புஷ்ப யாகத்தை திருமறையிலே நடத்தினார்கள்.

3. திருவோணப் பெருவிழா

திருமலையில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில், திருமலையப்ப சுவாமியின் அவதார திருநட்சத்திரமான  திருவோண நட்சத்திரத்தை  முன்னிட்டு நடைபெறும். இதை திருமழிசை ஆழ்வார்ஓணப் பெருவிழா என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாடி யிருக்கிறார். இதை பின்வரும் பாசுரம் நமக்குத் தெரிவிக்கும்.

காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து

உதிர

ஓண விழவில் ஒலி அதிர பேணி

வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்

திருவேங்கடம் அதனைச் சென்று

(நான்முகன் திருவந்தாதி)

4. இரண்டு பிரம்மோற்சவங்கள்

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவங்கள் அடுத்தடுத்து, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவது உண்டு. இதில் இரண்டாவது பிரம்மோற்சவம் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆகும். இரண்டாவது பிரம்மோற்சவத்தில் கொடியேற்று விழா கிடையாது. ஆனால், மற்ற வாகன புறப்பாடுகள் முதல் பிரம்மோற்சவம் போலவே நடை பெறும்.

5. ஆர்ஜித பிரம்மோற்சவம்

இதுதவிர தினசரி உற்சவத்தில், பிற்பகல் திருக்கல்யாணம் முடிந்து பிரம்மோற்சவம் நடைபெறும். சில மணி நேரங்களுக்குள்ளேயே வெவ்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்வார்கள். ஆனால் வீதி உலா கிடையாது. இதற்கு ஆர்ஜித பிரம்மோற்சவம் என்று பெயர். இது தவிர ரதசப்தமி அன்று, ஏகதின பிரம்மோற்சவமாக காலை முதல் இரவு வரை வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வருவார். இதைப்  பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள். இதுதவிர ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கருடசேவை வீதிஉலா உண்டு.

6. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா

இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி எந்தெந்த நாட்களில் பெருமாள், எந்தெந்த வாகனங்களில் உலா வருவார் என்பதைப்  பார்ப்போம்.

27.9.2022 செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம்

27.9.2022 செவ்வாய்க்கிழமை இரவு பெரிய சேஷ வாகனம்

28.9.2022 புதன்கிழமை பகல் சிறிய சேஷ வாகனம்

28.9.2022  புதன்கிழமை இரவு ஹம்ச வாகனம்

29.9.2022  வியாழக்கிழமை பகல் சிம்மவாகனம்

29.9.2018 வியாழக்கிழமை இரவு முத்துப்பந்தல் வாகனம்

30.9.2022 வெள்ளிக்கிழமை கல்ப விருட்ச வாகனம்

30.9.2002 வெள்ளிக்கிழமை இரவு சர்வ பூபால வாகனம்

1.10.2022 சனிக்கிழமை பகல் மோகினி அவதாரம்

1.10.2022 சனிக்கிழமை இரவு கருடவாகனம்

2.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகனம்

2.10.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனம்

3.10.2022  திங்கட்கிழமை காலை சூரிய பிரபை வாகனம்

3.10.2022 திங்கட்கிழமை இரவு சந்திர பிரபை வாகனம்

4.10.2022 செவ்வாய்க்கிழமை காலை திருத்தேர்

4.10.2022 செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனம்

5.10.2022 புதன்கிழமை பகல் சக்கரஸ்நானம் தொடர்ந்து துவஜாரோகணம்

7. திருமுளைப்பாரி

முளைப்பாலிகைக்காக பரிசுத்தமான இடத்திலிருந்து புதுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி. திருமுளைப்பாரி என்பது அங்குரார்ப்பணத்திற்கு  முன்னால்  நடைபெறும். சிறிய மண் தட்டுகளில் மண்ணை சேகரித்து (மிருத் சங்கிரணம்) அதில் வேதமந்திரங்களைச் சொல்லி நவதானியங்களை விதைப்பது. விழாவில் எந்த தடையும் வராமலிருக்க இதைச் செய்ய வேண்டும். வடமொழியில் அங்குரார்ப்பணம் என்றும் தமிழில்திருமுளைப்பாரி (பாலிகை தெளித்தல்) என்றும் கூறுவர். “வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்”என்று இந்த அங்குரார்ப்பணம், திரு முளைப்பாரி குறித்து பெரியாழ்வார் பாடுகிறார்.

8. விஷ்வக்சேன ஆராதனம்

வைணவத்தில் சேனை முதலிகள்(விஷ்வக்சேனர்) ஆராதனம் என்பது முக்கியம். இறைவனை வானின் இளவரசு என்று சொல்வார்கள். விஷ்வக் சேனர் பரிவாரங்களை கையில் பிரம்புகொண்டு ஒழுங்கு படுத்தும் நாயகர். சேனை முதலிகள்(விஷ்வக்சேனர்) . பவர் ஆப் அட்டர்னி (power of attorney)என்றும் authorised person என்றும் சொல்கிறோம் அல்லவா, அதைப் போல இறைவனின் சார்பாக அவருடைய சம்மதத்தோடு இந்த பிரபஞ்ச செயலை நடத்துகின்றவர். சேனைகளின் நாயகர். அவருடைய அனுமதி இல்லாமல் எந்த திருக்கோயில்களிலும் உற்சவங்கள் நடக்காது. அதைப்போலவே இறைவன் திருவீதி உலா வருகிறார் என்று சொன்னால், சேனை முதலிகள்  முதலில் திருவீதி உலா வந்து, அவருடைய அனுமதிக்கு பிறகு, பெருமாள் திரு வீதி உலா வருவர்.

9. கொடியேற்றம்(த்வஜாரோஹணம்)  

வைணவத்தில் உள்ள நித்யசூரிகளில்  மிக முக்கியமான மூவர் .அனந்தன்,கருடன், சேனை முதலிகள்  . இதில் சேனை முதலிக்கு தனிச்சந்நிதி உண்டு அவர்தான் விழாவின் துவக்கத்தில் எல்லாவற்றையும் கண்காணிப்பவர். அவருக்கு தனி பூஜை உண்டு. அடுத்து கருடாழ்வாரை பொருத்தவரையில் அவருடைய கொடியேற்றம் தான் (த்வஜாரோஹணம்) விழாவின் துவக்கத்தை அறிவிப்பது. அவருடைய கொடி இறக்கம் தான் (த்வஜவ ரோஹணம்)  விழாவின் நிறைவை தெரியப்படுத்துவது.

ஒவ்வொரு ஆலயத்திலும் பலிபீடம், த்வஜஸ்தம்பம், கருடன் சந்நதி என்று மூன்று இருக்கும். இந்த த்வஜஸ்தம்பத்தில்  கருடக் கொடியை ஏற்றுவது வழக்கம்.கருடத்வஜ என்று சுப்ரபாதத்தில் வரும்.  ஸ்ரீ தேவி பூதேவியோடு  மலையப்பசுவாமி ஊர்வலமாக மங்கல வாத்தியங்களும் வேத பாராயணங்கள் முழங்க புறப்பாடு கண்டருளி, த்வஜஸ்தம்பம் அருகே வந்தவுடன், கருடக் கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனப் புறப்பாடு உண்டு.

10. பெரிய சேஷ வாகனம்

விஷ்வக்சேனர் ஆராதனம் முடிந்துவிட்டது. கருடக்கொடி ஏறிவிட்டது. மூன்றாவது முக்கியமான நித்தியசூரி  அனந்தன். அவர் இல்லாமல் பெருமாள் இல்லை. ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்பவர். கருடன், சேனை முதலியாரை  சற்றுப்  பிரிந்து இருந்தாலும் அனந்தனை எப்பொழுதும் பெருமாள் பிரியமாட்டார். ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் அவதரித்தவர் அநந்தன் .அதனால் கருடக்கொடி ஏறியவுடன் முதல் வாகன சேவையாக பெத்த சேஷவாகனம் எனப்படும் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியோடு  பெருமாள் வீதி வலம் வருவார்.

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்

நின்றால் மரவடியாம் நீள் கடலுள்  என்றும்

புணையாம்  மணி விளக்காம் பூம் பட்டாம்  புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு

ஏழுதலை நாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி இருபக்கமும் இருப்ப, சதுர்புஜத்தோடு,  வலதுகாலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டுக்கொண்டு சேவை சாதிப்பார் எம்பெருமான். திருமலை என்றாலே ஏழுமலை தானே. ஏழுமலை என்பதால் ஏழு தலை நாகத்தின் மீது எம்பெருமான் காட்சி தருகின்றார். பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பொழுது பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் வைணவ கோஷ்டியினர் பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதி பாசுரங்களைச் சேவித்துச் சொல்வார்கள்.

11. சின்ன சேஷ வாகனம்

முதல் நாள் மாலை ஏழுதலை நாகத்தின் அமர்ந்து, திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழக்  காட்சி தந்த பெருமான், அடுத்த நாள் காலை, ஐந்து தலை நாகத்தில், தான் மட்டும் அமர்ந்து காட்சி தருவார். கண்ணனுடைய வேடத்தில் காட்சிதருவார்.

செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய

பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப்

பல்லாண்டு கூறுதுமே

என்று பெரியாழ்வார் ஐந்து தலை நாகத்தின் மீது பெருமாள் காட்சி தந்த கோலத்துக்கு திருப்பல்லாண்டு பாடியிருக்கிறார். சின்ன சேஷ வாகனத்தில் செல்லும்போது பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம்திருவந்தாதி சேவிக்கப்படுகிறது.

12. ஹம்ச வாகனம்

பெருமாளுடைய அவதாரங்களில் ஒன்று அன்னாவதாரம். அன்னத்தை ஹம்சம் என்பார்கள். ஹம்சபட்சி பாலையும் நீரையும் வைத்தால், நீரை விலக்கி பால் பருகும். இதில் நீர் என்பது அசாரம். பால் என்பது சாரம். எம்பெருமானை நினைத்து இருக்கக்கூடிய பக்தன் தான்(சேதன இலாபம்) பெருமாளுக்கு சாரம். அதைப்போலவே ஒரு ஜீவாத்மாவுக்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், பெருமாள் தான்(ஈஸ்வர லாபம் ) சாரம். ஒரு ஜீவாத்மாவுக்கு உஜ்ஜீவனமான விஷயம் எம்பெருமான் மட்டுமே என்பதை தெரிவிப்பதற்காக, அம்ச வாகனத்தில் வீதி உலா வருகின்றார் என்பதைக் காட்டுவது அன்னவதார சேவை.

அன்று வெண்மையான பட்டு உடுத்தி, கையில் வீணையோடு, கலைமகள் கோலத்தில் இருப்பார். வீணையும் அம்சமும் கலைகளின் குறியீடுகள். கலை என்பது வேதத்தைக்  குறிக்கும் சொல். “கற்றிலேன் கலைகள்” “கலையறக்  கற்ற மாந்தர்” என்பதுஆழ்வார் பாசுரம். வேதம் அசுரர்களால் மறைக்கப்பட்டது. படைப்புத்தொழில் நின்றது. உயிர்கள் தவித்தன. உலகம் இருளடைந்தது. அப்போது பகவான் ஹம்ச அவதாரத்தை எடுத்து வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அன்னமாய் அருமறை பயந்தவனே  என்பது ஆழ்வார் பாசுரம். வேதத்தை அன்னமாக உருவகித்து, வேதத்தின் பொருளை பெருமாளாக உருவகித்தார்கள்.

13. சிம்ம வாகனம்

மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் மட்டும் யோக நிலையில் அமர்ந்தபடி காட்சி தருவார். பெருமாள் சிங்கபிரானாக  அவதரித்தவர். கண்ணனாக அவதரித்த போதும் அவருக்கு சிங்கம் என்று தான் பெயர். சிற்றாயர் சிங்கம் என்பார்கள். ராமனை ராகவ சிம்மம் என்று சொல்வார்கள். நம்மாழ்வார் சிங்க பிரானை நினைத்தாலே நம்முடைய மனம் பரவசப்படும் என்கிறார்.

ஆடி ஆடி அகம் கரைந்து இசை

பாடிப் பாடி கண்ணீர் மல்கி

நாடிநாடி நரசிங்கா என்று.

வாடி வாடும் இவ்வாள்  நுதலே

என்பது நம்மாழ்வார் பாசுரம்.

பெருமாள் சிங்கம் போல வரவேண்டும் என்பதை ஆண்டாள் ஒரு பாசுரத்தில் பாடுகின்றார்.மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து  வரவேண்டும்.எம்பெருமான் சீரிய சிங்காசனத்தின் மீது வரவேண்டும் என்று விரும்புகிறாள்.  சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக மலையப்ப சுவாமி வருகின்ற பொழுது அவருக்கு முன்னால் பேயாழ்வாரின்  மூன்றாம் திருவந்தாதி ஓதப்படுகின்றது. அந்தத் தமிழைக்  கேட்டுக்கொண்டே பெருமாள் வீதி வலம் வருகின்றார்.

14. முத்துப்பந்தல் வாகனம்

மூன்றாம் நாள் மாலையில் அழகான முத்துப்பந்தல் வாகனத்தில் எம் பெருமான் உபய நாச்சிமாரோடு மாட வீதி வலம் வருகின்றார். முத்துப்பந்தல் வாகனம்  நவமணிகளோடு  விதவிதமான புஷ்ப அலங்காரங்களோடு அற்புதமாக காட்சி தரும். அதில் எம்பெருமான் நாகப்படம் மீது நர்த்தனமாடும் கோலத்தில், இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் வைத்துக்கொண்டு அதி அற்புதமாகக்  காட்சி தருவார். இந்த கோலத்தைக்  காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

15. கற்பக விருட்ச வாகனம்

நான்காம் நாள் காலையில் பெருமாள் உபய நாச்சிமாரோடு கல்ப விருட்ச வாகனத்தில் வீதி வலம் வருவார். “கற்பக விருட்சம்” என்பது எதைக் கேட்டாலும் தருவது மட்டுமல்ல, எதை நினைத்தாலும் தருவது. திருமலை அப்பனிடம் பிரார்த்தனை கூட செய்ய வேண்டியதில்லை. மனதில்விருப்பம் வந்துவிட்டால் திருமலையப்பன் அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக் கிறார். அதற்கு அடையாளமாகத்தான் பக்தர்களின் மனதை நிறைவேற்றும் பரமமூர்த்தியாக  கற்பக விருட்ச வாகனத்தில் நான்காம் நாள் காலையில் காட்சி தருகின்றார்.

 16. சர்வ பூபால வாகனம்

சகல உலகங்களும் அவருடைய “ஆதீனத்தின் கீழ்” என்பதை சுட்டிக்காட்ட சர்வ பூபால வாகன சேவை.  அவனிட்ட வழக்காக  இந்த உலகம் விளங்குகின்றது என்பதை உணர்த்த நாச்சிமாரோடு வீதி வலம் வருகின்றார். சர்வ பூபால  வாகனம் அங்குலம் அங்குலமாக, திருமலையில் பிரத்தியேகமாக இருக்கக்கூடிய புஷ்பங்களால் அலங்கரிக்கப்படுகிறது. பூப்பந்தல்  போன்ற அமைப்பின் கீழே, ஸ்ரீ தேவி, பூதேவி, நாச்சிமார்கள் இருபுறம் திகழ, திருமலையப்பன் காட்சி தருகின்றார். பெருமானின் பரதத் துவத்தை, உலகுக்கு உணர்த்திய திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஓதப்படுகிறது.

17. மோகினி அவதாரம்

ஐந்தாம் நாள் காலையில் பகவான் அதி அற்புதமாக மோகினி அவதாரத்தில் வருகின்றார். பல்லக்கு போன்ற வாகனத்தில் வலது கையில் கிளியை ஏந்திக்கொண்டு, இடதுகையால், இடது காலை மடக்கி கட்டிக்கொண்டு, வெண்பட்டு உடுத்தி, ஒய்யாரமாக, சகல ஆபரணங்களோடு காட்சிதருகின்றார் பெருமாள். பெற்ற தாயினும் ஆயின செய்யும் என்பதுதிருமங்கை ஆழ்வார் வாக்கு. பெருமானை ஜகன்மாதா(த்வம் ஏவ மாதா) என்று கருதுவது வழக்கம். தேவர்களுக்கு அமுதத்தைத்  தருவதற்காக எடுத்த  அவதாரத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் பெருமாள் வீதி உலா வருகின்றார். கூடவே தனிப் பல்லக்கில் கண்ணன் எழுந்தருளுவார். முதலில் கண்ணனுக்கு கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு மோகினிஅவதாரத்தில் வீற்றிருக்கும் மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி செய்வார்கள்.

18. கருட சேவை

பிரம்மோற்சவத்தின் மிகச் சிறப்பான சேவை கருடசேவை. இந்த கருட சேவையைப்  பார்க்க மட்டும் லட்சக்கணக்கான மக்கள் நான்கு மாட வீதிகளிலும் காத்திருப்பார்கள். இன்றைக்கும் நீங்கள் தாமதமாகப் போனால் மாடவீதி கேலரி பகுதிக்குள் நுழைந்து இடம் பிடிக்க முடியாது. இரவு நேர வீதி உலாவை பார்ப்பதற்காக காலை முதலே பக்தர்கள் காத்திருப்பார்கள். பிரம் மோற்சவத்தின் அதிகபட்ச பக்தர்களின் வருகை அன்றைய தினம்   இருக்கும்.

கருடன் என்பது வேதத்தைக்  குறிப்பது.  அந்த வேதத்தின் உச்சி பாகம் பிரம்மத்தை தெரிவிப்பது. அந்த பிரம்மம், “தான் தான்” என்பதை உலகுக்குப் பறைசாற்றும்படி  எல்லா பெருமாள் ஆலயங்களிலும்  பிரம்ம உற்சவம் கருட சேவை சிறப்பாக இருக்கும். அதனால் தான், வேண்டிய வேதங்கள் ஓதி, பெரியாழ்வார் பாண்டியன் சபையில், பரத்துவம் நிர்ணயம்செய்தபொழுது, பெருமாள் கருடாரூடனாய் காட்சி தந்தார். அப்படிக்  காட்சி தந்த பெருமாள், திருமலை அப்பனே என்பதை ,தன் திருமொழியில் கடைசிப் பதிகத்தில் பாடுகின்றார்.

சென்னியோங்கு தண் திருவேங்கடம் உடையாய்

உலகு  தன்னை வாழ நின்ற நம்பீ

என்று, இந்தப் பாடலில் அவர் திருமலையின் கருட சேவையைக் குறித்துப் பாடுகின்றார்.

பறவை ஏறும்  பரம்புருடா  நீ

என்னைக்  கை கொண்டபின்

பிறவி என்னும் கடலும் வற்றி பெரும் பதம்

ஆகின்றது

என்று பெரியாழ்வார், கருடன் மீது ஆரோகணித்து வந்த பெருமாளை மங்களாசாசனம் செய்கின்றார்.

19. ஆண்டாள் மாலையும்மூலவர் ஆபரணங்களும்

கருட சேவை அன்றைக்கு விசேஷமான அலங்காரங்கள் பெருமாளுக்கு அணிவிக்கப் படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அன்றைய தினம் பெருமாள் அணிந்து கொள்வார்.கருட சேவையின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், மூலவருக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களில் விலை மதிக்க முடியாத லட்சுமி ஹாரமும் ,மகரகண்டி முதலிய ஆபரணங்களும் மலையப்பஸ்வாமி அணிந்து  வருவார். வேறு எந்த நாளிலும் அவர் இந்த ஆபரணங்களை அணிவது கிடையாது.  நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம் திரு வீதிகளில் சேவிக்கப்படும். இந்த பசுந்தழைக்  கேட்டுக்கொண்டே மலையப்ப சுவாமியின் கருடசேவை விழா நடைபெறும்.

20. அனுமந்த வாகனம்

ஆறாம் நாள் காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் புறப்பாடு கண்டருள்வார். இராமாயணத்தில் ஒரு காட்சி. இராமனும் இராவணனும் யுத்தகளத்தில் சந்திக்கிறார்கள். இராமன் தரையில் நின்று கொண்டிருக்கிறார். இராவணன் தன்னுடைய வர பலத்தால் பெற்ற தேரில்  நின்றுகொண்டு சகல விதமான பரிவாரங்களும் சூழ போர்புரிகின்றான். இதைக்கண்டு அனுமான், “நம் சுவாமி இப்படி வாகனம் இல்லாமல் தனியாக தரையில் நின்று கொண்டு போர் புரிகிறாரே” என்று நினைத்தவர், இராமபிரானிடம் பிரார்த்திக்கிறார். “சுவாமி, அடியேன் தோள் மீது அமர்ந்து கொண்டு போர்புரிய வேண்டும்.

அடியேன் தங்களுக்கு வாகனமாக இருப்பேன். அந்த பாக்கியத்தை  தந்தருள வேண்டும்” என்று விண்ணப்பிக்க இராமன், அனுமன் தோள்மீது நின்று கொண்டு சண்டை புரிகின்றார். அந்தச்  சேவையை நினைவூட்டும் காட்சியாக மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதிவலம் வருகின்றார். அன்று மாலை ஸ்ரீதேவி பூதேவி யோடு மலையப்ப சுவாமிக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் பெருமாள் வெண்பட்டுப் பீதாம்பரம் அணிந்து காட்சி தருவார். சகலவித வாசனாதி திரவியங்களும் பயன் படுத்தப்படும். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் திருவீதி வலம் வருவார்.

21. யானை வாகனம்

ஆறாம் நாள் இரவு மலையப்ப சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களை மகிழ்விப்பார் அன்றைய தினம்நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதி சேவிக்கப்படும் முதல் நாள் இரவு அந்தாதி செய்த பிறகு ஆறாம் நாள் வரை பெரியாழ்வார் திருமொழி சேவித்து முடிப்பார்கள். பத்து நாளும் பசுந்தமிழ் பாசுரங்களும்  வேத பாராயணமும் இணைந்து உபய வேதாந்தமாக  நடைபெறும் உற்சவம் பிரம்மோற்சவம். எம்பெருமானுக்கும் யானைக்கும் பல தொடர்புகள் உண்டு. கண்ணன் நடந்து வருகின்ற அழகே ஒரு யானை நடந்துவருகின்ற அழகோடு இருக்கும் என்பார் பெரியாழ்வார்.

தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப

படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்

உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க

தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.

மணிகள்  எல்லாம் ஓசை எழுப்ப, மிக மெதுவாக அசைந்து அசைந்து, யானை நடந்து வருவதுபோல் கண்ணன் நடந்து வருவான். தெருவில் யானை செல்கிறது என்றால் மணிஓசை கேட்கும் அல்லவா. யானையின் மீது பெருமாள் அமர்ந்து வீதி வலம் வர வேண்டும் என்பது ஆண்டாளின் திருவாக்கு. அதற்கான பாசுரம் இது.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதிவ லம்செய்து மணநீர்

அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

இதில் மூன்றாவது வரியைப்  பாருங்கள். அவனோடு சென்று ஆனைமேல் மஞ்சனம் ஆட்டக் கனாக்கண்டேன் என்று யானையின் மீது அமர்ந்து செல்வதை ஆண்டாள் பாடுகின்றார்.

22. சூரிய பிரபை

ஏழாம் நாள் காலையில் பகல் வேளையில் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய ரதத்தில் பெருமாள் வீதி வலம் வருவார். எம்பெருமானுக்கு சூரிய நாராயணன் என்று பெயர். ஒளியைக்  கொடுப்பவன். சூரியன் ஜீவர்களின் ஆத்மகாரகன். அந்தச் சூரியனின் ஆத்மகாரகன் மன் நாராயணன்.விழிகள் தான் ஒளி கொடுக்கின்றன. பெருமாளுடைய விழிகளாகச் சூரியனை சொல்லுகின்ற மரபு உண்டு. புருஷ சூக்தத்தில் பகவானின் கண் ஒளியிலிருந்து  சூரியன் தோன்றி விளங்குகின்றான் (சக்ஷோ: ஸூர்யோ அஜாயத)என்று வருகிறது. ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: ).

23. சந்திர பிரபை

ஏழாம் நாள் இரவு ,நிலவு வானத்தில் மிதக்க, மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் காட்சி தருவார். வெண்மையான வண்ணத்தோடு  அந்த வாகனம் காட்சி தரும். வெண்மையான மலர் மாலை அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, வலது கையில் கிளியோடு, பெருமாள் காட்சி தருவார். அவருடைய குளிர் பார்வை நம் மீது படாதா என்று  பக்தர்கள் காத்திருப்பார்கள். வேதம், “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்று பெருமாளின் மனதிலிருந்து சந்திரன் தோன்றியதாகக்  குறிப்பிடுகிறது. ஏழாம் நாள் காலையிலும், மாலையிலும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி பாசுரங்கள் ஓதப்படும்.

24. திருத்தேர் உற்சவம்

எட்டாம் நாள் காலை திருத்தேர் உற்சவம் நடைபெறும். திருத்தேரில்  மலையப்ப சுவாமி உபய நாச்சிமாரோடு பவனி வருவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரை நிமிட நேரமாவது இந்தத்  தேர்வடம் பிடித்து இழுக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.

தேர் பற்றி கடோபநிஷத் பின்வருமாறு கூறுகிறது.

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரரம் ரதமேவ து

புத்திம் சாரதிம் வித்தி மன:ப்ரக்ரஹமேவச

இதன் பொருள் இதுதான்.

ஆத்மாவை ரதத்தில் செல்பவனாகவும் இவ்வுடல் ரதமாகவும், அறிவை இரதத்தை ஓட்டுபவனாகவும், இந்திரியங்களாகிற குதிரைகளைக் கட்டுப்படுத்தும் கடிவாளமாகவும் நினைத்து வாழ்க்கையை நடத்து என்கிறது உபநிடதம். இந்தத் தேரை அவனிடம் ஒப்படைத்துவிட்டால், அவன் பார்த்த சாரதியாக இருந்து வெற்றியை தேடித் தருவான்.

தேர் எந்த அமைப்பில் இருக்கிறதோ, அதே அமைப்பில் “ரத பந்தம்” என்று ஒரு சித்திரக் கவிதை திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். அதற்கு திருவெழுகூற்றிருக்கை என்று பெயர். அந்தப் பிரபந்தம் மாடவீதிகளில் ஓதப்படும். இதுதவிர சிறிய திருமடல், பெரிய திருமடல், பெரிய திருமொழி மூன்றாம் பத்து மூன்றாம் திருமொழி தொடங்கி சேவிப்பார்கள். ஊர்வலம் நிறைவு பெறும் பொழுது பெரியாழ்வார் திருமொழியும் பெரிய திருமொழியும் சாற்று மறை (நிறைவு) செய்யப்படும்.

25. குதிரை வாகனம்

எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணன் குதிரையின் மீது எழுந்தருள்வார் அல்லவா . தர்மத்தை நிலை நாட்டும் அந்த அவதார கோலம் எட்டாம் நாள் இரவு சேவையாகும்.இதுதவிர சக்தியை அளவிடும் போது குதிரை சக்தி (horse power) என்று அளவிடுகிறார்கள். சர்வசக்தனான எம்பெருமான், சக்தியின் அளவிலான குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். இடதுகையால் குதிரையின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, வலது கையில் சாட்டைக்  குச்சியை வைத்துக்கொண்டு அமர்ந்த கோலம் அற்புதமாக இருக்கும். குதிரை வாகனம் மாடவீதிகளில் வருகின்ற பொழுது ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி சேவிக்கப்படும்.

26. சூர்ணாபிஷேகம்

ஒன்பதாம் நாள் காலையில் சுவாமிபல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்படும் பெருமாள் உள்ளே வந்தவுடன் சூர்ணாபிஷேகம் நடக்கும் .சூர்ணம் என்றால் வாசனைப்  பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்குச்  சமர்பிக்கப்படுகிறது. பெருமாள் வாகனங்களில் எழுந்தருளிய களைப்பு தீர  சூர்ணாபிஷேகம் நடக்கும். திருமழிசை ஆழ்வார் “கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்”  என்று பாடுகிறார். திருக்கோவிலில் பெருமாள் முன்பு, உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்துப்பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் முதல் மதுரகவி ஆழ்வார்கண்ணிநுண் சிறுத்தாம்பு வரை முதல் ஆயிரம் பாசுரங்கள் அப்பொழுது  சேவிக்கப்படும்.

27. சக்ரஸ்நானம் (தீர்த்தவாரி)

அன்றைய தினம் காலையில் பிரமோற்சவ விழா நிறைவையொட்டி தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம்(அவபிரத ஸ்னானம்) நடைபெறும். திருமலையில் ஆதி தெய்வமான ஸ்ரீவராக பெருமாள்சன்னதி வாசலில் சுவாமி புஷ்கரணி கரையில் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி காட்சி தருவார். வேத கோஷங்கள் முழங்க அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். திருவாராதனத்தில் , திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருப் பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, ராமானுஜ நூற்றந்தாதி மற்றும் உபதேசரத்தினமாலை சேவித்து சாற்று முறை செய்யப் படும். சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜை முடிந்தவுடன் பட்டாச்சாரியார்கள் சக்கரத்தாழ்வாரை  அணைத்துக் கொண்டு சுவாமி புஷ்கரணியில் மூழ்கி எழுவார்கள். புனித தீர்த்தம் அனைவருக்கும் புரோக்ஷணம் ஆகும்.

28. கொடி இறக்குதல்

ஒன்பதாம் நாள் இரவு மலையப்ப ஸ்வாமி ஸ்ரீ தேவி பூதேவியோடு மேளதாள வாத்தியங்கள் முழங்க வேத பாராயணங்கள் சேவிக்க  கொடிமரம் அருகில் எழுந்தருள்வார். அப்பொழுது விசேஷ பூஜைகள் செய்து கொடி இறக்கப்படும். இந்தப்  புறப்பாட்டின்போது ராமானுஜ நூற்றந்தாதி சேவிக்கப்படும்.

29. பாக் சவாரி

பிரம்மோற்சவ விழா முடிந்த மறுநாள் அதாவது பத்தாம் நாள் மலையப்ப சுவாமி, ராமானுஜரின் உத்தரவுப்படி நந்தவனம் அமைத்து, புஷ்ப கைங்கர்யம் செய்த அனந்தாழ்வான் தோட்டத்திற்கு எழுந்தருள்வார். இதற்கு பாக் சவாரி என்று பெயர். அனந்தாழ்வான் நந்தவனத்தில் மலர்களைப்  பயிரிட்டு பராமரித்துக்கொண்டிருந்த போது, அவருடன் விளையாட எண்ணம் கொண்ட பெருமாள், ஒரு சிறுவனாக வந்து, மலர்களை எடுத்துக்கொண்டு ஓடினார். அவரைத்  துரத்திக்கொண்டு அனந்தாழ்வார் வர, அவர் பின்பக்கமாக ஓடி திருக்கோயிலுக்குள் ஒளிந்துகொண்டார்.

இதை நினைவுபடுத்தும் வண்ணம் இப்பொழுதும் மலையப்ப ஸ்வாமி பின்பக்கமாக (reverse) வருவார். நந்தவனத்தில் மகிழ மரமாக அனந்தாழ்வான் திருவரசு அமைந்த இடத்தில் தன்னுடைய பக்தனுக்கு சடாரிமரியாதை அளித்துவிட்டு, இடவலமாக அதாவது பின் சுற்றாக புறப்பட்டு ஆஸ்தானத்தை  அடைவார்.

30.புஷ்ப யாகம்

செண்பக மல்லிகையோடு

செங்கழு நீர் இரு வாட்சி

எண்பகர் பூவும் கொணர்ந்தேன்

என்பது பாசுரம்.திருமலைக்கு புஷ்ப மண்டபம் என்று பெயர்.  ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். உற்சவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறும். டன் கணக்கில் மலர்கள் கொண்டு வரப்படும். ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்ற 14 வகை புஷ்பங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்படும்.இந்த யாகத்தோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

இந்த ஆண்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கருட சேவை புரட்டாசி மாதம் 3 வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். நாமும் திருமலை பிரம்மோற்சவத்தின் பெருமையை உணர்ந்து, அப்பெருமானை வணங்கி நலம் பெறுவோம்.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

Related Stories: