×

வைணவ ஆலயங்களில் நவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1. ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவராத்திரி

ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஒவ்வொரு தலங்களிலும் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் மணலால் உருவ பொம்மைகளைச்  செய்து பாவை நோன்பு நோற்றது உண்டு. மணலால் கண்ணனை நினைத்து சிறு வீடு கட்டியது போன்ற செயல்கள், அக்காலத்தில்  மண் பதுமைகளை கொலு வைப்பது என்பதின் அடிப்படை. ராமானுஜர் காலத்தில் திருவரங்கத்தில் சிறுசிறு மண் பொம்மைகளை வைத்துக்கொண்டு சிறுவர்கள் திருவரங்க கோயிலாக பாவித்து, உற்சவாதிகளை பாவனையாக நடித்துக் காட்டியது குறித்து பல செய்திகள் உண்டு.

2. இராமாயணத்தோடு தொடர்பு

வைணவத்தில் நவராத்ரி உற்சவம் இராமாயணத்தோடு தொடர்புபடுத்தப் பட்டு கொண்டாடப்படுகிறது. இராமபிரான் இராவணனோடு போர்புரிந்து இராவணனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது. இராமாயண காலத்தில் இருந்தே இந்த நவராத்திரி உற்சவம் கொண் டாடப் படுவதாக வைணவத்தில் சொல்கிறார்கள்.

சீதாபிராட்டியை போர் புரிந்து மீட்ட இராமபிரான், அவளைத்  திரும்ப அயோத்திக்கு அழைத்து சென்ற வைபவத்தை பிராட்டி வைபவமாக நவராத்திரியில்  கொண்டாடப் படுகிறது .. இரண்டு வேறு விதமான கதைகள் இருந்தாலும், இரண்டு சம்பிரதாயங்களிலும், அவரவர் மரபு சார்ந்து  திருக்கோயில்களில் நவ ராத்திரி கொண்டாடப்படுவதால், நவராத்திரி உற்சவம் எல்லா  ஆலயங்களிலும் விசேஷமாக நடக்கிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நவராத்திரியின் முதல் நாள் மது கைடபர் என்னும் இரு அரக்கர்களைக்  கொன்றார். தர்மம் வெல்லும். அதர்மம் தோற்கும் என்பதை உணர்த்துவது நவராத்திரி தத்துவம் என்ற கருத்தும் உண்டு.

3. வைணவத்தில் கொலு

வைணவ ஆலயங்களில் நவராத்திரிக்கு, தினம் ஒரு அலங்காரமாக பெருமாளை அலங்காரம் செய்வார்கள். முதல்நாள் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணனாகவும், இரண்டாம் நாள் காளிங்க நர்த்தன கிருஷ்ணனாகவும், மூன்றாம் நாள் வேணுகோபாலனாகவும், நான்காம் நாள் வைகுண்ட நாதனாகவும், ஐந்தாம் நாள் நாச்சியார் கோலத்திலும், ஆறாம் நாள் சார்ங்க பாணியாகவும், ஏழாம் நாள் ராஜகோபாலனாகவும், எட்டாம் நாள் ஸ்ரீரங்கநாதர் கோலத்திலும்  அலங்காரம் செய்து, ஒன்பதாம் நாள் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அலங்காரம் செய்வார்கள். இன்னும் வேறுவித அலங்காரங்களும்  செய்வது உண்டு.

4. திருவரங்கத்தில் நவராத்திரி உற்சவம்

கோயில் என்று அழைக்கப்படும் வைணவ சமயத்தின் தலைமைப்  பீடமான திருவரங்கத்தில் மிகச் சிறப்பாக நவராத்திரி உற்சவம் கொண் டாடப்படுகிறது. அங்கே பெரிய அளவில் கொலு வைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் மகாளய அமாவாசை அன்று நவராத்திரி உற்சவம் தொடங்கிவிடும். அன்று நம் பெருமாள் புறப்பாடு கண்டருளுவார். சந்தனு  மண்டபத்தில் அவருக்கு 81 கலச திருமஞ்சனம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் வளர்பிறை பிரதமையில் இருந்து கோயில் நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகும்.

ஸ்ரீரங்க நாச்சியாருக்கு  கர்ப்பக்கிரகத்தில் திருமஞ்சனம் நடைபெறும். பெருமாள் எழுந்தருளும் தங்க குதிரைக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் ரக்‌ஷாபந்நனம் நடக்கும்.தோளுக்கினியானில் பிராகார வலம் வந்து நாலுகால் மண்டபத்தில் திருவாராதன வைபவங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். சரஸ்வதி பூஜை அன்று கொண்டாடப் படும் ஒன்பதாம் நாளில் அக் கோயிலில் உள்ள 8 மூர்த்திகளுக்கு திருவாராதனம் நடைபெறுவது கண் கொள்ளாக்காட்சியாகும்.

எட்டு மூர்த்திகள் யார் என்று கேட்கிறீர்களா?

கருவூல நாச்சியார், நாயகர் அறை நாச்சியார், சுக்கிரவார நாச்சியார், அரவிந்த நாச்சியார், ஹயக்ரீவர், சரஸ்வதி, செங்கமல நாச்சியார், குருகூர் நாச்சியார்.ஏழாம் நாள் உற்சவத்தில் ஸ்ரீரங்கநாயகியார் திருவடி சேவை சிறப்பு . சரஸ்வதி பூஜையன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்கு  விசேஷமான திருமஞ்சனம்   நடந்து ரக்‌ஷாபந்தன விசர்ஜனம் நடைபெறும். தங்கக்குதிரை வாஹனம் நம்பெருமாள் சந்நதிக்குக் கொண்டு வரப்படும். அங்கு பெருமாளுக்கும் தங்க குதிரைக்கும் ரக்‌ஷாபந்தனம் செய்யப்படும். அடுத்த நாள் விஜயதசமி காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி, காட்டழகிய சிங்கர் சந்நதி சென்று அடைவார்.அங்கே உபய உபசாரங்கள்  நடந்து  மாலையில் குதிரை வாகனத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அது முடிந்தவுடன் அடைய வளைந்தான் வீதி ,சாத்தார வீதி வழியாக ஆஸ்தானம் சென்று அடைவார்.

5. திருவல்லிக்கேணியில் நவராத்திரி  

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெறும்.இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவேதவல்லி தாயாருக்கு தனி சந்நதி இருப்பது முக்கிய அம்சமாகும். ஸ்ரீவேதவல்லி தாயார் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுகிறார். முதல் நாள் தாமரை வாகனம், மறுநாள் கிளி வாகனம், மூன்றாவது நாள் சேஷ வாகனத்தில் வரும் அவர் 4ம் நாள் யாளி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.5ம் நாள் மீண்டும் தாமரை வாகனத்திலும், 6ம் நாள் குதிரை வாகனம், 7ம் நாள் ஹம்ச வாகனம், 8ம் நாள் யானை வாகனத்திலும் உற்சவம் காண்கிறார். 9ம் நாள் ஸ்ரீவேதவல்லித் தாயார், ஸ்ரீரங்கநாதருடன் எழுந்தருளுகிறார்.

6. திருமலையில் நவராத்திரி

திருமலையில் நவராத்திரியை ஒட்டி, நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது.

7. திருச்சித்திர கூடத்தில் நவராத்திரி

தில்லைத்  திருச்சித்திர கூடத்தில் நவராத்திரி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.  அமாவாசை அன்று தாயாருக்கு லட்சார்ச்சனை தொடங்கி, இருவேளையும் நடந்து,  சரஸ்வதி பூஜை அன்று மாலையோடு நிறைவுபெறும். தினந்தோறும் காலையில்  தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தோடு  தாயார் கண்ணாடி அறையில் சேவை தருவார். இரவு பிரகார புறப்பாடு நடந்து, பெருமாள் சந்நதியில் மாலை மாற்றுதல் நடை பெறும்.

பிறகு சேர்த்தி ஊஞ்சல்  உற்சவம் நடைபெறும். மகாநவமியான சரஸ்வதி பூஜை அன்று பெருமாள் மூலவருக்கும்,  உற்சவருக்கும் திருமஞ்சனம் செய்யப் படும். அன்று  தாயார் பெருமாள் தேவாதி  தேவனோடு சேர்த்தியாக எழுந்தருளுவார். விஜய தசமியன்று பெருமாள் குதிரை  வாகனத்தில் புறப்பாடு கண்டருளுவார். அன்று வன்னி மரத்துக்கு அம்பு போடும்  சேவை நடைபெறும்.

8. பிற ஆலயங்களில் நவராத்திரி விழா

புரி ஜகந்நாதர் ஆலயத்தில் நவராத்திரியை, 16 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒன்பதாம் நாள், ஆயுதபூஜையன்றுஜகந்நாதரின் சங்கு சக்கரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். உடுப்பி கிருஷ்ணனுக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் மைசூர் மகாராஜா சமர்ப்பித்த பட்டுப் புடவைகளை அணிவிக்கிறார்கள். கும்பகோணம் நாச்சியார் கோயில், வஞ்சுளவல்லித் தாயாருக்கு நவராத்திரி நாட்களில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து அதிமதுர பாயசமும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதித்தால் சகல சௌபாக் கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோயிலில் தேவநாத பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். இந்தத் தாயாருக்கு புரட்டாசி நவராத்திரி உற்சவம் வெகு கோலாகலமாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் தாயாரின் புறப்பாடு வெகு அற்புதமாக இருக்கும்.

தொகுப்பு: வி.சங்கர்

Tags : Navratri ,Vaishnava Temples ,
× RELATED மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்