×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

470. நைக கர்ம க்ருதே நமஹ  (Naika Karma Kruthey namaha)

(திருநாமங்கள் 457 [ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை - தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

நவ திருப்பதிகளுள் மூன்று திருத்தலங்
களான திருப்புளிங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய திருத்தலங்களை,
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங் கழியாதே என்னை யாள்வாய்


என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.

திருப்புளிங்குடி திவ்யதேசத்திலே சயனித்து, வரகுணமங்கை திவ்யதேசத்திலே அமர்ந்து, ஸ்ரீவைகுண்டம் என்னும் திருத்தலத்திலே நின்று, நம்மாழ்வாரைப் பெறுவதற்காகத் திருமால் காத்திருக்கிறாராம். இக்கருத்தை `ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் நூலில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், போக்ய பாகத்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம் என்று விளக்குகிறார்.அதாவது, ஒரு வீட்டில் சமையலறையில் சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் உள்ள ஒருவருக்குப் பசி அதிகமாக இருந்தால், உணவு தயாராகிவிட்டதா என்று அறியும் ஆர்வத்தோடு அவர் அடிக்கடி சமையல் அறைப் பக்கம் சென்றுசென்று வருவார் அல்லவா?

அதிலும் ஆரம்பநிலையில், சமையல் அறைப் பக்கமாக வந்து நிற்பார். இன்னும் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தால், சமையல் அறையிலேயே அவர் அமர்ந்துவிடுவார்.  உணவு தயாராகி அதை உண்டபின் இங்கிருந்து எழுவோம் என்ற எண்ணத்திலே அமர்ந்திடுவார். இன்னும் தாமதம் ஆகிக் கொண்டே போனால், சமையல் அறையிலேயே படுத்துவிடுவார். உணவு வந்து அதை உண்டபின்தான் எழுவேனே ஒழிய, அதுவரை இங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியால் சயனித்துவிடுகிறார்.

இதைப்போலத்தான் நம்மாழ்வார் என்ற ஜீவாத்மாவைத் தனக்கு உணவாகப் பெறவேண்டும் என்று திருமால் ஆசைப்பட்டாராம். அந்த நம்மாழ்வாரின் பக்தியானது பரபக்தி, பரஞானம், பரம பக்தி என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து, பக்குவப்பட்டுச் சமைக்கப்பட்டு வரவேண்டும் என்று திருமால் காத்திருக்கிறாராம். நீண்ட நாள் பசியில் வாடியவர் உணவை விரைந்து பெறத் துடிப்பது போல், திருமாலே எனக்கு எல்லாம் என்று சொல்லும் உயர்ந்த பக்தரைத் தேடிக்கொண்டிருக்கும் திருமால், நம்மாழ்வாரைக் கண்டவாறே அவரை விரைந்து பெற வேண்டும் என்று வேட்கை கொண்டாராம்.

அந்த வேட்கையில்தான், முதலில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வந்து நின்றாராம் திருமால். ஆழ்வார் திருநகரி புளிய மரத்தின் அடியில் சமைக்கப்பட்டுவரும் நம்மாழ்வார் என்ற தன் உணவுக்குப் பரமபக்தி முழுமை பெற்றுவிட்டதா என்று பார்த்தாராம் திருமால். ஆழ்வாரின் பக்தி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும் கூட, அவரை விரைந்து அடைய வேண்டும் என்ற துடிப்பால், திருமால் விஜயாசனப் பெருமாளாக வரகுணமங்கையிலே அமர்ந்து கொண்டாராம். இன்னும் சற்று தாமதம் ஆகவே, திருப்புளிங்குடியிலே காய்சின வேந்தனாக வந்து பள்ளி கொண்டு, ஆழ்வாரைப் பெறாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று உறுதியோடு காத்திருந்து ஆழ்வாரைப் பெற்றாராம்.

ஆக, தன் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக நிற்றல், இருத்தல், கிடத்தல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்கிறார் திருமால். அவ்வாறே திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதைக் கொடுப்பதற்காகப் பற்பல செயல்களைச் செய்தார் திருமால். மந்தர மலையைச் சுமந்து, தானே திருப்பாற்கடலைக் கடைந்து, தன்வந்தரியாக அமுதைக் கொண்டு வந்து, மோகினியாக அசுரர்களை மயக்கி - இப்படிப் பற்பல செயல்களைச் செய்து தேவர்களுக்கு அமுதைப் பெற்றுத் தந்தபடியால் அமுதம் தந்த திருமால் நைக கர்ம க்ருத் என்று அழைக்கப்படுகிறார்.

கர்ம என்றால் செயல், க்ருத் என்றால் செய்பவர், ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல. ‘நைக கர்ம க்ருத்’ என்றால் பலப்பல செயல்களைச் செய்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 470-வது திருநாமம்.“நைககர்மக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பலவிதங்களில் எப்போதும் திருமால் காத்தருள்வார்.

471. வத்ஸராய நமஹ (Vathsaraaya namaha)

தர்ஷன் ஹர்ஷன் என்ற இரண்டு நண்பர்கள் பண்டரிபுரத்தில் சந்திரபாகா நதிக்கரையிலே அமர்ந்திருந்தார்கள். தாங்கள் உண்பதற்காக இருவரும் ரொட்டிகள் எடுத்து வந்திருந்தார்கள். தர்ஷன் ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தார். ஹர்ஷன் மூன்று ரொட்டிகள் வைத்திருந்தார்.அப்போது அந்த வழியே வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் இருவரையும் பார்த்து, “நான் நீண்ட நாள்களாகப் பசியால் வாடி வருகிறேன்! எனக்கு ஏதாவது கொஞ்சம் ரொட்டி தர முடியுமா?” என்று கேட்டார். தர்ஷனிடம் உள்ள 5 ரொட்டிகளையும், ஹர்ஷனிடம் உள்ள 3 ரொட்டிகளையும் சேர்த்து மூவருக்குமாகச் சமமாகப் பிரிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. எட்டை மூன்றால் வகுக்க முடியாதல்லவா?

அந்த வழிப்போக்கர், “இதற்கு ரொம்ப எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று மூன்று துண்டு களாக வெட்டி விடுங்கள். எட்டு ரொட்டிகளையும் மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால், 24 துண்டுகள் கிடைக்கும். அதன்பின் ஆளுக்கு எட்டு துண்டுகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமே!” என்று சொல்ல, இந்த ஆலோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது என்று தர்ஷன் ஹர்ஷன் இருவருமே ஏற்றார்கள்.

ஆளுக்கு எட்டுஎட்டு ரொட்டித் துண்டுகள் என்று மூவரும் எடுத்துக் கொண்டபின், அந்த வழிப்போக்கர் தர்ஷன் - ஹர்ஷனிடம் எட்டுத் தங்க நாணயங்களைத் தந்து விட்டுப் போனார். தர்ஷன் ஹர்ஷனிடம், “நான்  நான்கு தங்கக் காசுகள் எடுத்துக் கொள்கிறேன். நீ நான்கு தங்கக்காசுகள் எடுத்துக் கொள். நமக்குள் சரிசமமாகப் பிரித்துக் கொள்வோம்!” என்று சொன்னான். ஆனால், ஹர்ஷன் ஒத்துக்கொள்ளவில்லை.

“தர்ஷன்! நீ செய்த தானத்தை விட நான் செய்த தானமே உயர்ந்தது. நீ ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தாய், நான் மூன்றுதான் வைத்திருந்தேன். ஐந்து ரொட்டிகள் வைத்திருப்பவன் தானம் செய்வது பெரிய விஷயம் இல்லை. மூன்று ரொட்டிகள் இருந்தபோதும் தானம் செய்தேனே, அதுதான் உயர்ந்த தானம். அதனால், எனக்குத் தான் நிறைய தங்கக் காசுகள் தரவேண்டும். சரிசமமாகப் பிரிப்பதை நான் ஏற்க மாட்டேன்!” என்றான்.

இதை தர்ஷன் ஏற்கவில்லை. சரிசமமாகத் தான் பிரிக்க வேண்டும் என்றான். இருவருக்குள்ளும் அது பெரிய வாக்குவாதமானது. இருவரும் ராஜாவிடம் சென்றார்கள். ராஜா வழக்கை விசாரித்து விட்டு, “எத்தனையோ அரசுப் பணிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு வழக்கா? நாளை பார்க்கலாம்!” என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விட்டார். அடுத்த நாள் காலை, ராஜா அரசவைக்கு வந்தார். தர்ஷன் ஹர்ஷன் இருவரும் வந்தார்கள். “தர்ஷனுக்கு ஏழு தங்க நாணயங்களும் ஹர்ஷனுக்கு ஒரு தங்க நாணயமும் வழங்கப்படும்!” என்று ராஜா தீர்ப்பு.

தீர்ப்பின் தாத்பரியம் புரியாமல் எல்லோரும் விழிக்க, ராஜா சொன்னார், “தர்ஷனுக்கும் ஹர்ஷனுக்கும் வழிப்போக்கனாக வந்து காட்சி தந்தவன் சாட்சாத் பாண்டுரங்கன். அதே பகவான்தான் என் கனவிலும் வந்து காட்சி தந்து, எனக்கு ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்தார். தர்ஷனிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தன. அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் 15 ரொட்டித் துண்டுகள் தேறும். ஹர்ஷனிடம் மூன்று ரொட்டிகள் இருந்தன.

அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் ஒன்பது ரொட்டித் துண்டுகள் தேறும். 15 துண்டுகள் வைத்திருந்த தர்ஷன், 7 துண்டுகளைத் தானமாக வழங்கிவிட்டான். 9 துண்டுகளை வைத்திருந்த ஹர்ஷன், ஒரு துண்டுதான் தானமாகக் கொடுத்திருக்கிறான். ஏழு ரொட்டித் துண்டுகள் கொடுத்தவனுக்கு ஏழு தங்கக் காசுகள், ஒரே ரொட்டித் துண்டு கொடுத்தவனுக்கு ஒரு தங்கக் காசு. இதுதான் பாண்டுரங்கன் தீர்ப்பு!” என்று விளக்கினார்.

இதன் மூலம் நாம் உணர்வது என்னவென்றால், நாம் செய்யும் தர்மம் அதர்மம் ஆகியவற்றை எல்லாம் பகவான் நம் கூடவே இருந்து கண்காணிக்கிறார். நாம் தர்மத்தைச் செய்தால் நமக்கு நன்மையை வழங்குகிறார். அதர்மத்தைச் செய்தால், அதற்குரிய தண்டனையை வழங்குகிறார். அந்தத் தர்மத்திலுமே ஏழு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஏழு தங்கக் காசுகள், ஒரு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஒரு தங்கக் காசு என்ற ரீதியில், என்ன தர்மம் செய்கிறோமோ அதற்குத் துல்லியமான கூலியைத் தருகிறார்.

இப்படியாக நம்மைக் கண்காணிப்பதற்காக நம் அனைவருள்ளும் எழுந்தருளி இருப்பதாலே, திருமால் ‘வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுதான் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தின் 471-வது திருநாமம். ‘வத்ஸர:’ என்றால் உள்ளே வசிப்பவர் என்று பொருள்.நாமும் “வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், நம்முடைய தர்மங்களுக்கான சரியான பலன் நம்மை வந்து சேரும்படி திருமால் நமக்கு அருள்புரிவார்.

472. வத்ஸலாய நமஹ: (Vathsalaaya namaha)

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய அற்புதமான ஒரு பாசுரம்:

“சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச்
செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும்
நின்றேத்தும் மாமுனியை மரமேழ் எய்தமைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே”


அன்று எந்தத் திருமால், ராமனாக அவதரித்து, சீதையைத் தன்னிடம் இருந்து பிரித்து வைத்த ராவணனையும் அரக்கர்களையும் அழித்தாரோ, அதே திருமால் இப்போது நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்து, ஜீவாத்மாக்கள் தன்னை அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துப் பாபங்களையும் போக்கி அருளிக்கொண்டு இருக்கிறார். தன் பக்தர்களான ஜீவாத்மாக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதைப் பற்றியே அனவரதமும் சிந்தித்துக் கொண்டு இருப்பதால், முனி - எந்நாளும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் - என்று போற்றப்படுகிறார் அந்த ஸ்ரீநிவாசப் பெருமாள்.

ராமாவதாரத்தில், ராமனின் வலிமை மீது சந்தேகம் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக ஒரே பாணத்தால் ஏழு மரங்களைத் துளைத்துக் காட்டினார். கலியுகத்தில், நம்பிக்கை இல்லாதிருக்கும் நம் போன்றோருக்கு நம்பிக்கையை அருள நம்பிக்கை நட்சத்திரமாக நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டுள்ளார்.தெளிந்த ஞானம் பெற்ற மகான்களாலும் கூடக் காணமுடியாதவனாக விளங்கும் அந்த ஸ்ரீநிவாசன், ஞானமில்லாமல் கலங்கிய மனநிலையில் இருக்கும் அடியேனுக்குத் தன் கருணையால் தரிசனம் தந்தருளினான். அவ்வாறு அவனைத் தரிசித்த அளவிலே, என் கண்கள் களிப்பக் களிப்புற்றேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவித்தார் திருமங்கையாழ்வார்.

இந்தத் தமிழ் அமுதைக் கேட்ட நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசன், திருமங்கை ஆழ்வாரிடம், “நான் உங்களுக்கு வலிய வந்து இப்படிக் காட்சி தந்தமைக்கு என்ன காரணம் என்று கூறுங்கள் பார்க்கலாம்!” என்றார். அடுத்த பாடலைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்:

“தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும்
தன்னையே நினைக்கச் செய்த தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை
அன்று இவ்வையம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை”


“இறைவா! தாய்ப்பசுவின் ஸ்தானத்தில் இருக்கும் நீ, உன் கன்றுக்குட்டியான அடியேன்மீது இரக்கம் கொண்டாய். கன்றுக்குட்டி தன் தாயை நினைப்பது போல், அடியேன் உன்னை நினைத்திருக்கும்படி நீயே அடியேனுக்கு அருள்செய்தாய். நான் உன்னை நினைத்ததை நீ அங்கீகரிக்கவும் செய்து, இப்பேரருளையும் நீயே தந்து விட்டாய்!” என்று இப்பாசுரத்தில் பதில் உரைக்கிறார் ஆழ்வார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், தன்னிடம் சரணாகதி செய்யும் அடியார்களைத் தனது கன்றுக்குட்டியாய்க் கருதி, அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களின் மனங்களுக்குள் திருமால் குடிவந்துவிடுகிறார். அந்த பக்தர்களையும் தன்னுள் நிலைநிறுத்தி விடுகிறார்.

திருமங்கையாழ்வார் என்னும் கன்றுக்குட்டி, தாய்ப்பசுவான ஸ்ரீநிவாசனை நினைக்கும்படி, ஸ்ரீநிவாசன் அருள்புரிந்தார். அதன்விளைவாக, அவர் மனதில் ஸ்ரீநிவாசன் குடிகொண்டார். இன்றும் திருவாலி திருநகரியில் எழுந்தருளியிருக்கும் திருமங்கை ஆழ்வாரின் திருமார்பில், பதக்க வடிவில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.
இப்படித் தாய்ப்பசு கன்றிடம் அன்பு காட்டுவது போல், சரணாகதியானவர்களிடம் அன்பு காட்டி, அவர்களுக்குள் வசிப்பதால், திருமால் ‘வத்ஸல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வத்ஸல:’ என்றால் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 472-வது திருநாமம்.“வத்ஸலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மீது திருமால் எல்லையற்ற தாயன்பைப் பொழிந்தருள்வார்.

473. வத்ஸிநே நமஹ: (Vathsiney namaha)

கண்ணன் பசுக்கள், எருமைகள், ஆடுகள் ஆகிய மூன்றையுமே மேய்த்திருக்கிறான் என்று புராணங்களைப் பார்க்கும்போது நமக்குத் தெரிய வருகிறது. ஆனாலும், நாம் எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றாலும், அங்கே ராஜகோபாலனாகப் பசுவோடுதான் கண்ணன் காட்சி தருகிறானே தவிர, எருமையோடோ ஆடுகளோடோ கண்ணன் காட்சி தருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தேன்.

அடியேனுடைய ஸ்ரீபாஷ்யாதி கிரந்த ஆசார்யன் டாக்டர் ஸ்ரீஉ.வே.கருணாகராச்சாரியார் சுவாமி, நகைச்சுவையோடு ஒரு விஷயம் கூறுவார். “எருமைமாடு யமனுடைய வாகனமாக இருப்பதாலே, கண்ணனை யமன் என்று தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் அஞ்சி விலகிவிடுவார்களோ எனக் கருதி, எருமையைத் தவிர்த்திருப்பார்கள். அவ்வாறே ஆடு என்பதும் வேறு நாடுகளிலும், மதங்களிலும் பயன்படுத்தப்படுவதால், கண்ணன் எந்த மதம் என்று கலக்கம் பிறக்க வாய்ப்பு வரும் என்று கருதி ஆட்டைத் தவிர்த்திருப்பார்கள். மீதமுள்ளது பசுதான், அதனால் அதனைப் பயன்படுத்துகிறார்கள்!” என்று ஹாஸ்யமாக ரசித்துச் சொல்வார்.

அந்த ஆசார்யரது திருவடிகளை அடியேன் தியானித்தபோது, அவரது திருவருளால் இதில் மற்றொரு விஷயம் பிடிபட்டது. மாடு, ஆடு வேறுபாட்டுக்குள் போகாமல், அவை உணர்த்தும் தத்துவங்களின் அடிப்படையில் மட்டும் இக்கருத்தை அணுகுமாறு வேண்டுகிறேன். என்னவென்றால், பசுமாடு சத்துவ குணத்தைக் குறிக்கிறது. ஆடு ரஜோகுணத்தைக் குறிக்கிறது. எருமை மாடு தமோ குணத்தைக் குறிக்கிறது.

பசு, எருமை, ஆடு ஆகிய மொத்தக் கால்நடைகளையும் மேயவிட்டுவிட்டுக் கண்ணன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்வான். அவற்றுள் எருமைகளும் ஆடும் புல் மேய்வதிலேயே தங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்தி விட்டுக் கண்ணனையே மொத்தமாக மறந்துவிடுமாம். ஆனால், பசுமாடுகள் மட்டும் கண்ணனின் குழலோசையில் மனதைப் பறிகொடுத்து, கண்ணனின் திருவடிகளையே நாடி வந்து, அத்திருவடித் தாமரைகளில் பொங்கும் தேனைப் பருகியபடி இருக்குமாம்.

இது உணர்த்துவது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள பல்வேறுபட்ட உயிர்களுக்குள், எருமை மாட்டால் உருவகப் படுத்தப்படும் தமோகுணம் மிக்கவர்களும், ஆடுகளால் உருவகப் படுத்தப்படும் ரஜோ குணம் மிக்கவர்களும் புல் மேய்வது போல் உலகியல் விஷயங்களை அனுபவித்து இன்பம் துய்ப்பதையே தங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டு, கண்ணனாகிய இறைவனை மறந்து தங்கள் காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஆனால், பசு மாடுகளால் உருவகப் படுத்தப்படும் சத்துவகுணம் மிக்கவர்கள், உலகியல் விஷயங்களாகிய புல்லை மேய்வதில் மனம் செலுத்தாமல், இறைவனான கண்ணனின் திருவடிகளை அடிபணிந்து, அவனையே சிந்தித்தபடி, அவனுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்து உய்கிறார்கள்.அதனால்தான் திருக்கோயில்களில் கண்ணனுக்கு அருகில் பசுமாடும், பசுங்கன்றுகளும் மட்டுமே நிற்பதாகச் சித்தரித்துள்ளார்கள். பல புகைப்படங்களிலும் கூட, எருமைகளும் ஆடுகளும் வெவ்வேறு திசைகளில் மேய்ந்துகொண்டிருக்க, பசுமாடு மட்டும் கண்ணன் திருவடிகளை வருடியபடி இருப்பதைக் காணமுடிகிறது.

ஆனாலும் கண்ணன், தன்னைக் கணிசிக்காத எருமை மாடுகளையோ, ஆடுகளையோ கைவிடுவதில்லை. பசுமாடுகளை மேய்ப்பது போலவே அவற்றையும் மேய்த்து அவைகளுக்குத் தேவையான உணவையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறான். அதுபோலத்தான், இறைவனை அண்டாதவர்களுக்கும் கூட இறைவன் நன்மையைச் செய்து, அவர்கள் மெல்லமெல்லப் பக்குவம் அடையும்படி அருள்புரிந்து, அவர்களும் தன்னை வந்தடைய வழிகாட்டிக் கொண்டேதான் இருக்கிறான்.

இப்படி உயிர்கள் அனைத்தையும் தன் கன்றுகளாகக் கருதி, அவைகளிடம் அன்பு காட்டும் தாயாகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘வத்ஸீ’ என்று அழைக்கப்படுகிறார். வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. ‘வத்ஸீ’ என்றால் கன்றுகளை உடையவர். இங்கே ஜீவாத்மாக்களே திருமாலுக்குக் கன்றுகளின் ஸ்தானத்தில் உள்ளார்கள் என்பதை இத்திருநாமம் குறிக்கிறது. ‘வத்ஸீ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 473-வது திருநாமம்.“வத்ஸினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைக் கண்ணன் நல்வழிப்படுத்திக் காத்தருள்வான்.

474. ரத்னகர்ப்பாய நமஹ (Rathnagarbhaaya namaha)

சுமார் பத்து வருடங்கள் முன்பு கேரளாவில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். குருவாயூரப்பனின் பெருமைகளையும், குருவாயூரப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படும் துலாபாரக் காணிக்கையைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். உடனே, “குருவாயூரப்பா! இன்று பிச்சைக்காரனாக இருக்கும் என்னை, நீ மட்டும் கோடீஸ்வரனாக ஆக்கிவிட்டால், உனக்கு என் எடைக்கு எடை தண்ணீரைத் துலாபாரக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்!” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார். விரைவிலேயே அந்தப் பிச்சைக்காரர், கையில் ஒரு லாட்டரி சீட்டு கிடைத்ததாம்.

அந்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ஒரு கோடி அவருக்குக் கிடைத்துவிட்டது. கண்கண்ட தெய்வமான குருவாயூரப்பன் செய்த இன்னருளை நினைத்து வியந்து போனார் அந்த நபர். பிரார்த்தனை செய்துகொண்ட படிக்காணிக்கையைச் செலுத்தி விடலாம் என்ற முடிவோடு குருவாயூரப்பனின் கோவிலுக்குச் சென்றார். ஆனால், அந்தப் புதிய கோடீஸ்வரருடைய மனதில் ஒரு சிறிய குறை இருந்ததாம். “குருவாயூரப்பனின் பேரருளும் கருணையும் மிகவும் உயர்ந்ததாக இருக்க, அவனுக்குக் காணிக்கையாக வெறும் தண்ணீரையா அளிப்பது?” என்று சிந்தித்து, தண்ணீருக்குப் பதிலாக எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பிக்கத் தீர்மானித்தார் அவர்.

துலாபாரத்தின் ஒரு தட்டில் கோடீஸ்வரர் அமர்ந்தார். மறுதட்டில் அவருடைய எடைக்கு இணையாகக் கற்கண்டை வைத்தார்கள். எவ்வளவு மூட்டை மூட்டையாகக் கற்கண்டு வைத்தாலும், அந்தக் கற்கண்டின் அளவு இவரது எடைக்கு நிகராக வரவில்லை. சுமார், 150 கிலோவுக்கு மேல் கற்கண்டு வைத்தும் கோடீஸ்வரர் அமர்ந்த தட்டுதான் கீழே இருந்தது.அதன்பின் திருக்கோயில் அர்ச்சகரை அழைத்து என்ன செய்வது என்று கேட்டார்கள்.

அவர் சிந்தித்துப் பார்த்து விட்டு, “நீங்கள் கற்கண்டு துலாபாரம்தான் பிரார்த்தித்திருந்தீர் களா? அல்லது வேறு ஏதாவது வேண்டிக் கொண்டீர்களா?” என்று கேட்டார். கோடீஸ்வரர், “நான் தண்ணீரைத் தான் எடைக்கு எடை தருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு செல்வத்தைக் குருவாயூரப்பன் அருளி இருக்கையில், வெறும் தண்ணீரையா அவனுக்குக் கொடுப்பது? அதனால்தான் எடைக்கு எடை கற்கண்டை அளிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன்!” என்றார்.

அர்ச்சகர், “நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதைக் கொடுத்தால்தான் குருவாயூரப்பன் ஏற்பான். அவன் என்ன செல்வம் இல்லாதவனா?  சொத்து இல்லாதவனா?  இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே அந்த பகவானின் சொத்துதான். நீங்கள் துலாபாரம் சமர்ப்பித்தால், உங்கள் பக்தியின் எடையைத்தான் குருவாயூரப்பன் பார்க்கிறானே ஒழிய, நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளின் எடையை அவன் பார்ப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் பொருளுக்காக அருள்புரிபவன் அல்லன் அவன். நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளால் புதிதாக அவனுக்குச் சொத்து வரவேண்டிய தேவையும் இல்லை. பிரார்த்தித்ததைச் சரியாகச் சமர்ப்பியுங்கள்!” என்றார்.

அவ்வாறே எடைக்கு எடை தண்ணீரைக் காணிக்கையாக இவர் சமர்ப்பித்தவாறே, துலாபாரம் நேராக நின்றது. காணிக்கையைக் குருவாயூரப்பனிடம் சமர்ப்பித்து விட்டு,
குருவாயூரப்பனிடம் சென்ற கோடீஸ்வரர், “பகவானே!  அடியேனுக்குக் கிடைத்த இந்த ஒரு கோடி ரூபாய் செல்வமும் கூட உன் சொத்தில் இருந்து நீ அருளியது தானே? அதை உணராமல் உனக்குப் புதிதாக ஒரு சொத்தை நான் தருவதாக எண்ணி விட்டேனே! தவறு! என்னை மன்னித்தருள்வாயாக! எல்லையில்லாத சொத்தை உடைய நீ, உன் அடியார்கள் விரும்பினால், அவர்களுக்கு அச்செல்வத்தை அருள்கிறாய் என்று உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டுத் தன் இல்லம் திரும்பினார்.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், எல்லையில்லாத சொத்துகளை உடைய திருமால், செல்வம் வேண்டி வரும் அடியார்களுக்கு அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்கிறார். எனவே, நம்மிடம் செல்வம் இருக்கிறது என்று நாம் கர்வம் கொள்ளாமல், அவன் அருளிய செல்வம் என்று உணர்ந்து நன்றியுடன் இருப்பதே நலம்.

இவ்வாறு எல்லையில்லாத செல்வத்தோடு திகழ்வதால் திருமால் ‘ரத்னகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 474-வது திருநாமம்.
“ரத்னகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வம் குறைவின்றி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!