×

பக்திக்கு முக்தி தரும் கமலாம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவாரூருக்கு உயர்வே இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமியும், ஸ்ரீகமலாம்பிகை அம்பிகையையும்தான். 5 வேலி நிலத்தில் பரந்து விரிந்துள்ள இக்கோயிலை முழுவதும் தரிசனம் செய்ய முழுமையாக ஒருநாள் போதாது என்றால் எவ்வளவு பெரிய கோயில் என்று நினைத்துப் பாருங்கள். 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிராகாரங்கள், 365 லிங்கங்கள், 100க்கும் மேற்பட்ட சந்நதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரம்மாண்டமான கோயில் இது.

நாயன்மார்களால் பாடல் பெற்ற இத்தலம், அருள்வதில் தரணியில் இதற்கிணை ஏதுமற்றது. திருவாரூர்க் கோயிலுக்குள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நதிகள் இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம். இதையே மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ‘குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்’ என்று தம் வாக்கால் புகழ்ந்து பாடுகின்றார். கோயில் மட்டுமல்லாது தேர்களிலேயே திருவாரூர் தேர்தான் மிக பெரியது. மிகவும் அழகுடையது. ஆழித்தேர் என்று பெயர்.

இந்த ஆலயச் சிறப்புகளில்சிலவற்றைக் காண்போம்

இத்தலத்தில், திருமால் தியாகராஜரைத் தமது மார்பில் வைத்துப் பூஜித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் ஈசன் அஜபா நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூஜித்தார். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். இத்துடன், மேலும் ஆறு தியாகராஜ மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடன் சேர்த்து இவை சப்த (ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.

சிவபெருமான், இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமதர்மனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக்கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. சிதம்பர ரகசியம் போல, தியாகராஜருக்குப் பின்னுள்ள மூலஸ்தானத்திலும் ரகசியம் உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை பிரதோஷ பூஜை நடைபெறும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில், தினமும் மாலை 6 மணிக்கு நித்ய பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வருவதாக ஐதீகம். எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும் என்பர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பதுசிறப்பு. கமலாலயத்தின் குளத்தின் மத்தியில் உள்ளது யோகாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயிலாகும். பிரதோஷ காலத்தில் இங்கு வந்து வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். தியாகராஜருக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்துக்குத் தான் தினமும் அபிஷேகம் நடக்கிறது. இத்தலத்தில் எட்டு துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிராகாரத்தில், மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாக விளங்குகிறாள். மேலும் 2 துர்க்கை சந்நதியும், இரண்டாம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நதியில் ஒன்றுமாக எட்டு துர்க்கை சந்நதிகள் அமைந்திருப்பது சிறப்பானது.

இந்த  துர்க்கைகளையும், மகாலட்சுமியயும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு. வன்மீக நாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த சந்நதிக்கு வலது புறத்தில் இத்தலத்தின் பிரதான மூர்த்தி தியாகராஜர் சந்நதி அமைந்திருக்கிறது. இந்த சந்நதியின் வலதுபுறத்தில் உள்ள பீடத்தில் பெட்டகத்தில், வீதிவிடங்கர் மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது. தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று வலப்பாதத்தையும் தரிசிக்க வேண்டும். மற்ற அங்கங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது.

நீலோத்பலாம்பாள் சந்நதி

கோயிலில் இரண்டாம் பிராகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. தமிழில் அல்லியங்கோதை என்றும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் இவளுக்குப் பெயருண்டு. அங்கு அவள் நின்ற கோலத்தில் வலது திருக்கரத்தில், கருங்குவளை மலர் ஒன்றை ஏந்திய வண்ணம் காட்சி தருகின்றாள். இந்த அன்னை, இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இன்னருள் சுரப்பவளாக திகழ்கின்றாள். இந்த அம்பாள் இரண்டு திருக்கரங்களுடன் ஆதிசக்தியாகக் காட்சி அளிக்கிறாள்.

அம்பிகையின் அருகிலே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனைச் சுமந்திருக்க, முருகனின் சுட்டுவிரலைத் தனது இடதுகரத்தால் பற்றி நிற்கின்றாள். பிற எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி இது. நீலோத்பலாம்பிகை, தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளித் திகழும் காட்சியானது. இல்லற வாழ்வின் மாண்பினை உயர்த்துவதாகும். அம்பாளுக்கு இடதுபுறம் ஒரு சிறுவனைத் தோளில் வைத்தப்படி ஒரு பெண் காட்சி அளிக்கிறாள். அந்தச் சிறுவன் மீது அம்பாளின் இடதுகை படிமானமாக இருப்பது போல, ஒரே கல்லில் சிலை செதுக்கியிருப்பது வேறு எங்கும் காணமுடியாத விசேஷம்.

கமலாம்பிகை

நீலோத்பலாம்பிகையைப் போன்றே, துறவற வாழ்வை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு, அன்னை கமலாம்பிகையும் மூன்றாவது பிராகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி தனிக் கோயிலில் எழுந்தருளி அருளுகின்றாள். இங்கு அம்பிகை, சிரசில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். அவள் தவக்கோலத்தில், கால் மேல் கால் போட்டுக் கொண்டு யோகாசனமாக வீற்றிருக்கிறாள்.

அதோடு அவள் பாசம், உருத்திராட்சம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி அருளுகின்றாள். இந்த அம்பிகை அழகே உருவானவள். கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக இந்த அம்பிகை விளங்குகிறாள். அன்னை கமலாம்பாள் சந்நதி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி பீடங்களுள் இது கமலைப் பீடமாக விளங்குகின்றது. இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் தவக்கோலத்தில் அன்னை அமர்ந்திருக்கிறாள்.

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்கின்ற மூன்றடுக்குப் பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி வளர்பிறையும், கங்கையும் பிறைகளாய் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, மையெழுதிய விழிகளை இமைகளால் மூடி சிவானந்தத் தென்றலை சுவாசித்து மோனம் ததும்பும் ஞானத்தின் உச்சியில் சிவராஜயோகத்தில் சாக்தர்கள் போற்றிப் புகழ்பாடும் வடிவில் அருட்காட்சி நல்குகிறாள். இவளின் இந்த உருவத் தியானமே ஜீவன் முக்தியை நோக்கி ஒருவரை நகர்த்தும். அவளின் இந்த திவ்ய உருவம் தத்துவமே மோட்ச சாதனத்தை கைமேல் கனியாக்கும்.

பைந்தவம் என்பது புருவமத்தி. குண்டலினியாகிய அம்பிகை இங்கு ஒளிர்கின்ற போதுதான் உயிர் அஞ்ஞானமகன்று மெய்ஞானத் தலைவனை உணர்கிறது. அந்த அருட்சக்தியான காமகலையே கமலாம்பிகை எனும் தேவி. காமம் அனைத்தும் முடிகின்ற கோடி (கடைசி) நிலமாக, அதாவது, எல்லா விருப்பங்களும் இறந்துபட்ட அத்வைதமாக கமலாம்பிகை தோற்றமளிக்கிறாள்.

இவள் எழுந்தருளியுள்ள பீடமே 51 சக்தி பீடங்களுக்கும் ஆதார நிலையாகும். லலிதா சஹஸ்ரநாமம் பல இடங்களில், இத்தேவியை துதித்துப் போற்றுகிறது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இவளே. தியாகராஜர் சந்நதி, வல்லப கணபதியில் தொடங்கும். கமலாம்பிகா சந்நதி, உச்சிஷ்ட கணபதியில் தொடங்குகிறது.ஸ்ரீவித்யா உபாசனையும், வல்லபகணபதியில் தொடங்கி உச்சிஷ்ட கணபதி யிலேயே அடங்கும். அதை இது உள்மறையாக உணர்த்துகிறது.

காமகலையாகும் கமலாம்பிகையே மஹாக்ஷோடஸி, ஸ்ரீவித்யை, பஞ்சதசாக்ஷ, பாலை, பகளா, மாதங்கி, ஸ்வயம்வர கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகை, மகாவாராஹி, ராஜமாதங்கி, திரஸ்கரணி, சுகஸ்யாமனை, லகுச்யாமளை, அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமாவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரம்மானந்த சித்கலை போன்ற சக்திபேதங்கள் என்கின்றன உபநிஷத்துகள். காமா என்ற பெயருடனும், கலா வடிவமாகவும் இருப்பதால் பராசக்தி கமலா என்கிற பெயரைப் பெற்றாள்.

இத்தேவி, காமரூபிணி என்றும் வணங்கப்படுகிறாள். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், பிராகாரம், நந்தி, பலி பீடம், துவஜஸ்தம்பம், அனுக்கிரக மண்டபம் எனும் வாது மண்டபம் என அமைந்து பூலோக மணித்வீபமாய் விளங்கும் தனிக்கோயிலே கமலாம்பிகையின் திருக்கோயில். ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம், பராசக்திபுரம், பரையூர் என்றெல்லாம் திருவாரூர் பேசப்படக் காரணமாய் விளங்கும் இக்கோயிலே, சக்திப் பீடங்களுக்குத் தாய் வீடாகும். அர்த்த மண்டபத்தில், வாம பாகத்தில் நின்ற கோலத்தில் மந்த்ரிணியாகிய ராஜமாதங்கியும், நிலைவாசல் வெளிப்புறம் சாமரம் வீசும் கலைமகள், அலைமகள் சிற்பங்களும் உள்ளன.

கமலாம்பிகை திருக்கோயிலின் உட்பொருள் உணர்ந்து தரிசனம் செய்பவர்களுக்கு, பாரதத்தில் பரந்து கிடக்கும் 51 சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசித்த நிறைவு கிடைக்கும் என்பது  உண்மையே. எனவேதான் பாரெங்கும் உள்ள தேவி உபாசகர்கள், குருவின் வழிகாட்டுதலின் பேரில் திருவாரூரை தரிசிக்க வருகின்றனர். கமலாம்பிகையே ஏனைய தலங்களிலும் உள்ளீடாய் விளங்குகிறாள் என்பதை கமலாம்பிகை பிள்ளைத்தமிழில் வரும் கைலை நாகேஸ்வரம் எனும் பாடல் உறுதி செய்கிறது. பராசக்திப் பீடங்களுள் ஒன்றான அம்பாள் கோயிலின் மேற்குமூலையில் அட்சரபீடமுள்ளது. இதில் பீடமும், 51 எழுத்துக்கள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் அட்சர பீடத்தை சில நிமிடங்கள் தியானித்து கல்வியறிவு பெருகும். ஆடிவெள்ளி, தைவெள்ளி, ஆடிப்பூரம் அன்று அம்பிகையை வழிபட்டால் அருள் உண்டாகும்.

யோகநிலையில் பிறப்பதே சுத்த சித்த நிலை. இந்நிலையை அடைய இந்த அன்னையை தியாகம் புரிதல் வேண்டும். இதனை உணர்த்தவே அன்னை கமலாம்பிகை தவக்கோலத்து யோகநிலையில் எழுந்தருளி விளங்குகின்றாள். இந்தத் திருத்தலத்திலே அன்னை பராசக்தி இருவிதத் தோற்றம் கொண்டு காணப்படுவதற்கு சிறப்பான பொருள் உண்டு. குழந்தை, பால முருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பிகை இம்மை வாழ்க்கையின் தத்துவ விளக்கமாகும். கமலாம்பிகை தவத்திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவ விளக்கமாகும். இம்மைக்கும், மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தியே திகழ்கின்றாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை திருவாரூரில் இருவிதத் தோற்றங்களுடன் எழுந்தருளி இருக்கிறாள்.

கமலாம்பிகையை உளத்தூய்மையோடு தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு அன்னையை தியானித்தால் இவ்வுலக மாயைகளிலிருந்து மனமானது விடுபட்டு விடும். எந்நேரமும் ஓயாது தியானம் செய்தால், கட்டுப்பாடில்லாமல் ஓடும் மனமானது உள்முகமாகிடும். அப்படி ஒருமுகப் படும் மனதில் ஓர் உணர்வு பிறந்திடும். உணர்வினிலே தெளிவான காட்சி தோன்றும். அத்தெளிவான காட்சியே முக்தியான வீடுபேற்றினை அருளும்.இத்தலத்தில், ரௌத்திர துர்க்கை அம்பாள் திருமணவயதை அடைந்த இளம்பெண்களுக்கு உண்டாகும் திருமணத்தடையைப் போக்குகிறாள். ராகுகாலத்தில் தனக்கு அர்ச்சனை செய்பவர்களின் குறை களைத் தீர்த்துவைக்கிறாள்.

நெடுநாள் தீராத பிரச்னை, வாராக்கடன், தீராத பிணிகள் அனைத்தையும் தீர்த்து வைக்க இங்கிருக்கும் ருண விமோசனர் அருள்புரிகிறார். அமாவாசை அன்று இவருக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். மூலவரான தியாகேஸ்வரரை வணங்கினால் திருமணவரம், குழந்தைவரம், கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவுபெறும்.

அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம். எண்ணற்ற சிறப்புக்களைக்கொண்டிருக்கும் திருவாரூர் தியாகராஜரையும், கமலாம்பிகையையும் தரிசித்து பெறுவதற்குரிய பேறுகளைப் பெறுங்கள். அம்பிகை ராஜயோகம் தருவாள். பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். அம்பிகையின் திருப்பாதம் பணிவோம்!

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்

Tags : Kamalambika ,Bhakti ,
× RELATED முத்துக்கள் முப்பது-பக்திப் பரவசம் தரும் பங்குனி உத்திரம்