×

ஆடம்பரம் அவசியம் தானா?

திசைகாட்டும் தெய்வீகம்!18

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

வீ   திகளின் இருபுறங்களில் மட்டுமே ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்
களின் விற்பனையகங்கள் இருப்பதாக எண்ணி விடாதீர்கள்! பலரின் வீட்டு அறைகளை நோட்டமிட அனுமதித்தால் ‘மினி நகை, ஆடைக் கடைகளைக் கண்டு நீங்கள் மிரண்டு போவீர்கள்’. மிரண்டபடியே வாசலுக்கு வெளியே வந்தால் அங்கு கழற்றி வைத்திருக்கும் காலணி ஜோடிகளைக் காண உங்களுக்குக் கண் இரண்டு போதாது.  
 
‘நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான் முகனே!’

என்ற அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரப் பாடல்வரிதான் இவர்களின் கால் அலங்கார அணிகளைக் கண்டவுடன் மனதில் நிழலாடும். அநாவசியமான ஆடம்பரங்களைப் புறக்கணித்து, அத்தியாவசியமான எளிமையை ஏற்றுக்கொண்டால், ஓய்வுக்காலத்தில் பிறரிடம்- ஏன் பிள்ளைகளிடம் பணத்திற்குப் பல் இளிக் காமல் உட்கார்ந்து சாப்பிடவும் முடியும். உள்ளத்திற்குள் ஒரு நிம்மதியையும் அமைதியையும் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

‘எங்கே வாழ்க்கை தொடங்கும்? - அது
எங்கே எவ்விதம் முடியும்?

என்று அறிய இயலாத - இந்த வந்து போகின்ற யாத்திரைக்கு இத்தனை வசதிகளும், வீண் விளம்பரங்களும் எதற்காக? பணத்தைச் சேர்ப்பது என்பது குண்டூசியால் குழி தோண்டுவதற்கு நிகரானது. ஆனால், அதைச் செலவழிப்பது என்பது குண்டு பலூன் ஒன்றை குண்டூசியால் குத்துவதற்கு நிகரானது. ஆடம்பரச் செலவுகளால் ஆயிரமாய் வருமானங்கள் பெருகினாலும், ஆற்றில் கரைத்த புளிபோல ஆகிவிடும் நிதி நிலைமை! ஆடம்பரத்தில் அதிகமோகம் கொண்டு தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்தால், பிற்காலத்தில் அவசியமான பொருட்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

‘ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெடும்!’


என்று எச்சரிக்கிறார்கள் புலவர் பெருமக்கள்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.


என்று பாடுகிறார் பாரதியார்.

பாரதியார் போன்ற வரகவிகளின் வார்த்தைகளை மேம்போக்காகப் படிக்காமல், கருத்தூன்றி கவனமாகப் படித்தால்தான் பாடலில் உள்ள நயங்கள் நமக்குத் தெரியவரும்.

‘அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’


என்று அவரே வேறொரு பாட்டில் கூறுகின்றார். பஞ்சினில் நெய்யும் துணியை ‘உடை’ என்கிறார். பட்டினில் நெய்வதை ‘ஆடை’ என்கிறார். மானம் காக்க உடுத்திக்கொள்ள உடைபோதும். பகட்டாக அணிந்து கொள்ள பட்டினில் நெய்யும் ஆடை வேண்டும். உடுத்திக்கொள்வது உடை. ஆடம்பரமாக உடுத்திக்கொள்வது ஆடை. பட்டாடைமேல் மோகம் கொண்டு அதிகமான பணம் செலவழித்து பட்டுப் புடைவைகள் வாங்கி அடுக்குவது மகளிர்களுக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

‘நீ பட்டுப்புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்’


என்று பாடுகிறார்கள். உண்மையில் பட்டுப்பூச்சிகளை மோட்சம் பெறச் செய்துதான் பட்டே தயாரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால், ஆடம்பர மோகம் ஓரளவு குறையும். பெருகி வரும் நாகரிக மோகச் சூழலில் பாலிஸ்டர் வேஷ்டிகளுக்கும், பட்டுப் புடவைகளுக்கும்தான் திருமண வரவேற்பு வைபவங் களில் ஏகப்பட்ட உபசாரங்கள் நடக்கிறது.

‘நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில் கண்டும்
பாராதவர் போல் இருப்பர்!
உடுத்தது பட்டு எனிலோ
வாராது இருப்பதென்? வாரும் என்பர்’


என்று உலகவர் நடவடிக்கையை உற்றுப்பார்த்து இராமலிங்க அடிகள் பாடுகின்றார். ஆடம்பரங்களுக்குக் கிடைக்கும் போலி உபசரிப்பையும், புன்னகையையும் பார்த்து நாம் மயங்கினால் பிற்பாடு அதோகதிதான்.

வரவு எட்டணா!
செலவு பத்தணா!
அதிகம் இரண்டணா!
கடைசியில் துந்தனா!


என்று நாமும் கோரஸ்ஸில் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டி வரும்! லெபனான் ஞானி ஒருவரைப் பார்த்து வாழ்த்தும், உபதேசமும் பெற விரும்பிய இளைஞன் ஒருவன், ஞானியின் உறைவிடத்திற்குச் சென்றான். சின்னஞ்சிறிய குடில் ஒன்றில் தங்கியிருந்த ஞானியைச் சந்தித்தான். ‘ஐயா! இதுதான் உங்கள் நிரந்தர உறைவிடமா?
 
இவ்வளவு சிறு பகுதியில், அதிகமான பொருட்கள் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க இயலுகிறது? ‘எனக்கு ஏன் அதிக பொருட்கள், வசதிகள்’ என்ற ஞானி ‘நீயும் எந்த சாமான்களும் இல்லாமல்தானே வந்துள்ளாய்?’ என்றார். ‘நான் விருந்தாளி! எனக்கு ஏன் பொருட்கள்?’ என்ற இளைஞனிடம், ஞானி சொன்ன பதில் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க அர்த்தமுள்ள வாசகம்.

‘நானும் இவ்வுலகத்திற்கு விருந்தாளியாகத்தான் வந்துள்ளேன். இந்நிலையில், எனக்கு ஏன் அநாவசியமான சுமைகள்’ சிந்தித்துப் பார்த்தால், அலங்கார ஆடம்பர வசதிப் பொருட்கள் எல்லாம் அர்த்தமற்ற அநாவசியமான சுமைகள்தான்!

சுமைகளை அதிகமாக்கிக்கொள்ளாமல் வாழ்வது தானே சுவை! வாழ்க்கைத் தத்துவத்தை உபதேசிப்பதில் வள்ளுவருக்கு நிகராக வேறு எவர் விளங்கமுடியும்.
சுருக்கமாகவும், சுவையாகவும், ‘தருக’ என்று மனத்தில் பதியும்படி சொல்வதில் வள்ளுவருக்கு நிகர் வள்ளுவர்தானே! சம்பாதிக்கும் பொருள் ஓரளவே என்றாலும், செலவழிக்கும் தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிறது திருக்குறள்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

அபிராமி அந்தாதியில் காஞ்சி காமாட்சி இயற்றும் முப்பத்திரண்டு அறச்செயல்களைப் போற்றுகிறார் அபிராமி பட்டர். சிவபெருமான் தந்தது என்னவோ இருநாழி நெல்தான்!  ஆனால், அதன் மூலமே ‘சிறுகக் கட்டி பெருக வாழும்’ தத்துவத்தைப் போதிக்கின்றாளாம் அம்பிகை.

‘ஐயன் அளந்தபடி இருநாழி நெல் கொண்டு
வையமெலாம் உய்ய அறம் செய்யும் தேவி!’


காஞ்சி மகாசுவாமிகள் தெய்வத்தின் குரலாகத் தெரிவிக்கின்றார்:

‘வாழ்க்கைத் தரம் என்பது வஸ்துக்களின்
பெருக்கத்தில் இல்லை’


தேவைகளை அதிகமாக்கி அவற்றிற்காக அல்லும் பகலும் அலைந்து கொண்டிருப்பதில் நிம்மதி, ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். மேல் நாட்டுக்காரர்கள் போல் ஆடம்பரத்திற்குப் பறக்கிறோம்.

ஆனால், வசதி ஆடம்பரங்களின் உச்சிக்குப்போன அவர்களோ அதில் அலுப்பும், சலிப்பும் மேலிட்ட காரணத்தால் நம்முடைய பக்தி, யோகாசனம், வேதாந்தத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதை அறிந்தும் நம்மவர்கள் திருந்தவில்லை என்றால் அது நம் அதிர்ஷ்டக் குறைவே! முன்னோர்களின் முதுமொழி ஒன்று முகத்தில் அறைந்தது போல் மொழிகின்றது!

‘ஆழாக்கு அரிசியில் தான் அன்னதானம்
ஆனால் அதற்கு ஆயிரம் ரூபாய் செலவில் கெட்டி மேளம்!

Tags :
× RELATED காமதகனமூர்த்தி