பிரிந்த தம்பதியரை சேர்த்து வைப்பான் சேர்வாரன் சாமி

ஆராய்ச்சிபட்டி, சங்கரன்கோவில்

சேலம் மாநகரில், கிச்சிப்பாளையம் என்னும் ஊரைச் சேர்ந்தவன் சேர்வாரன். அங்கு மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் பனை ஒலையால் வேயப்பட்ட குடிசை அமைத்து, அதிலிருந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தான். 25 வயது நிரம்பிய கட்டிளம் காளை, இடுப்பில் வேட்டி கட்டி அதன் மேல் ஒரு கை வீதி கொண்ட பெல்ட் அணிந்திருப்பான். அந்த பெல்ட்டிலிருந்து ஒரு வாரை பிணைத்து அந்த வார் இடுப்பிலிருந்து தோள் வழியாக பின்புறம் இணைக்கப்பட்டிருக்கும்.

வேட்டியும் முழங் காலுக்கு மேலிருக்கும். பார்ப்பவர்கள் சேர்வா, போலீஸ்காரர் மாதிரி வார் போட்டியிருக்கிற, ஆனா, உடம்புல ஒரு சட்டத்துணிய போட்டுக்கலையே, என்ன மனுஷன்யா நீ, என்று கேலி செய்யாத குறையாக பேசுவதுண்டு. யார், என்ன பேசினாலும் சிறிய புன்னகையை மட்டுமே

எதிரொலிப்பான், எதையும் கண்டு கொள்ளாத சேர்வாரன். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தான்.

தன் தாய், தந்தையர் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். கறுப்பாக இருந்தாலும் கலை பொருந்திய முகத்தோடு, அரும்பிய மீசையை முறுக்கிவிட்டு சிங்கமென திகழ்ந்தான். சேலத்தில், தற்போது குகை என்று அழைக்கப் படும் பகுதியில் அரண் மனைக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட வசதி படைத்தோர் வாழ்ந்து வந்தனர்.

அவர்களை அப்பகுதியினர் அரண்மனை வீட்டுகாரர்கள் என்றும், பண்ணை வீட்டுக்காரர்கள் என்றும் அழைத்து வந்தனர். ஒரு நாள், பண்ணை வீட்டில் இருந்து வேலைக்காரன் குப்பன், சேர்வாரனிடம் வந்தான். ‘‘ஏய், உன்ன, மூத்தவரு பண்ணைக்கு வரச்சொன்னார்” என்றான்.

“இதோ, வூட்டுல இருந்து அப்பன் கஞ்சி கொண்டாந்தாங்க, அத குடிச்சுப்புட்டு உடனே வந்துறேன். ‘‘சரி, சரி சீக்கிரமா வந்து சேரு” என்று கூறிவிட்டு குப்பன் சென்றதும், சேர்வாரன் மனதில் சந்தோஷம். எப்படியும் பண்ணை வீட்டுக்காரங்க அண்ணன் தம்பிங்க ஏழு பேரும் செருப்பு தைக்க சொல்வாக, அந்த துட்டுல தாய், தகப்பனுக்கு புதுத்துணிக வாங்கி கொடுக்கணும் என எண்ணம்கொண்டார்.

உணவருந்திய பின் பண்ணை வீட்டுக்குச் சென்றான் சேர்வாரன். வீட்டில் யாரும் இல்லை, அமைதியாக இருந்தது. வாசலில் நின்று ‘‘ஐயா, சேர்வாரன் வந்திருக்கேங்க...” என்று மூன்று முறை குரல் கொடுத்தான். அமைதியான இடத்தில் கொலுசு ஒலி எழுந்தது. அந்த சத்தம் அதிகமாகக் கேட்க, வாசலை உற்று நோக்கினான். மல்லிகை மணம் வீச ஆறு  வாசலுக்கு முன்பு தேவதை போல அழகுடைய பண்ணை வீட்டுப் பருவமங்கை, ஏழு அண்ணன் மார்களின் உடன்பிறந்த ஒரே தங்கை கம்மாடச்சி வந்து கொண்டிருந்தாள்.

‘‘யாரு நீ, என்ன வேணும்” அதிகார வர்க்கத்தின் தோரணையில் கேட்டாள் கேள்வி, தலை குனிந்து பதிலளித்தான் சேர்வாரன், “அம்மா, நான் சேர்வாரன் வந்திருக்கேங்க..’’ ‘‘சேர்வாரன் எந்த நாட்டு இளவரசரு...” என கேலியாகக் கேட்டாள்.

“அம்மா, நான் செருப்பு தைக்கிறவன்.’’

‘‘அப்படி சொல்லணும்ல்லா, அப்பதான

தெரியும். நிமிந்து முகத்தை காட்டு.”

 “அம்மா, அப்படி நான் பார்க்கக் கூடாது.’’ என்ற சேர்வரானிடம் ‘‘நான் பார்க்கணும்ல்லா” என்றாள் கம்மாடச்சி மிடுக்குடன். நிமிர்ந்தான் சேர்வாரன். அவனை பார்த்தவுடன் கேட்டாள் ‘‘என்னய்யா, உன் கண்ணுக்கு மை தீட்டுவியா, இமையில கூட எவ்வளவு முடி வளர்ந்திருக்கு, உன் கண்ணு அழகா இருக்கியா” “அம்மா, நீங்க விளையாட்டா சொல்றத, யாராச்சும் கேட்டுப்புட்டா, உங்க அண்ணங்க, என் கண்ண நோண்டி புடுவாங்க. நான் போயிட்டு அப்புறமா வாரேன்மா,’’ என்று கூறியவாறு அவ்விடத்திலிருந்து அகன்ற சேர்வாரனை, ‘‘யோவ், எங்க அண்ணங்க பின்னாடி களத்துமேட்டுல நிக்கிறாங்க போய் பாரு.” என்ற தகவலை கூறிவிட்டு, சேர்வாரன் நடந்து செல்வதை ரசித்துப் பார்த்தாள்.

களத்துமேட்டுல பண்ணை வீட்டுக்காரங்க சுத்தி நிக்க, ஒருவனை போட்டு அடித்து உதைத்து கொண்டிருந்தார் மூத்த பண்ணையார். சுற்றி நின்று கொண்டிருந்த வேலைக்காரர்களில், குப்பனை தனியாக அழைத்துக்கிட்டான் சேர்வாரன். “களத்துமேட்டுல வச்சிருந்த நெல் மூடைகளில் ஒன்றை களவு செய்துவிட்டான் அதனால அவனை மூத்தவரு இரண்டு தட்டு தட்டினாரு, வேற ஒண்ணுமில்ல, இங்கேயே நில்லு. ஐயா, உன்ன கூப்பிடுவாரு’’ என்று குப்பன் கூறினான்.

சிறிது நேரத்தில் பண்ணையாரில் மூத்தவர் ராஜமாணிக்கம், அவருக்கு தம்பிகள் மகேந்திர பூபதி, கஜேந்திர பூபதி, ராஜேந்திரபூபதி, சொக்கநாதன், தவசிநாதன், சுந்தரநாதன் ஆகியோர் வந்தனர். மூத்தவன் ராஜமாணிக்கம் அழைத்தான்.

“ஏ, சேர்வாரா, அரண்மனைக்கு வா’’ என்று அழைத்தான். வீட்டில் வரவேற்பறையில் அனைவரும் இருக்க, சொக்கநாதன் தங்கையை அழைத்தான். கம்மாடச்சியும் வந்து தூணில் சாய்ந்த படி நின்றாள். “ஏ, சேர்வாரா உள்ளே வா,’’ என்று வீட்டுக்கு வெளியே நின்ற சேர்வாரனை சுந்தரம் அழைத்தான். நாம் கம்மாடச்சி யோட பேசினத பார்த்துட்டாங்களோ, என்ன நடக்குமோ தெரியலையே என்ற கலக்கத்துடனே வந்தான் சேர்வாரன். தங்கையை நாற்காலியில் அமரவைத்து, “சேர்வாரா, என் தங்கச்சிக்கு அழகா செருப்பு செய்யணும் அளவு எடு.

இதுக்குதான் உன்னை கூப்பிட்டு விட்டோம்’’ என்றான் மூத்தவன். செருப்பு அளவு எடுத்துச் சென்ற சேர்வாரன் 3 வது நாள் அழகான முறையில் செருப்பு செய்து கொண்டு வந்தான். வீட்டில் யாருமில்லை. அன்று போல் பண்ணையார்கள் எவனையாவது களத்து மேட்டில் அடித்துக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு, குரல் கொடுத்தான் சேர்வாரன்.

கம்மாடச்சி வந்தாள். ‘‘சேர்வாரா, வா, வா, உன்னை பாக்கிறதுக்காகத்தான் நான் கோயிலுக்கு போகல, அண்ணிங்க கூப்பிட்டதுக்கு கூட, எனக்கு வர வசதியில்லன்னு சொல்லிட்டேன். எனக்கு உன்ன ரெம்ப பிடிக்கும். சேர்வாரா, நீ என்கூட வாழ்க்கையில ஒண்ணா சேருவியா”“அம்மா, என்ன வார்த்தை பேசுறீங்க, யோசிச்சுதான் பேசுறீங்களா.?

‘‘ஆமா, சேர்வாரா நான் முடிவு பண்ணிட்டேன். நான் நினைச்சத சின்ன வயசிலேயிருந்து அடைஞ்சிட்டு வாரேன். எங்க அண்ணங்க எப்படியும் வாங்கி கொடுத்திருவாங்க. ஆனா, அவங்க கிட்ட சொன்னா, நீ எனக்கு கிடைக்கமாட்ட. நான் வாழ்ந்தா, உங்கூடத்தான் வாழணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். நீ திடமான ஆம்பிளையா இருந்தா, உன் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா என்னை கூட்டிட்டு போ, இப்போதே போகலாம் வா, என்றபடி, சேர்வாரன் கையைப் பிடித்துக் கொண்டு அணிந்திருந்த உடையுடனும், பொன் நகையுடனும் வெளியேறினர்.. இல்லை இல்லை வெளியேறினாள்.

சேலத்திலிருந்து நெல்லை சீமைக்கு வந்தனர். சொரிமுத்தையன் கோயில் அருகே இருக்கும் வனப்பேச்சியம்மன் கோயிலில் வைத்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தை அடுத்திருக்கும் பட்டாடைகட்டி என்னும் மலைக் கிராமத்தில் குடியேறினர்.

மகாராணியாக இருந்த கம்மாடச்சியை ஒரு வேலையும் செய்ய விடாமல் அனைத்து வேலைகளையும் தானே செய்து வந்தான் சேர்வாரன். ஆனால், அவளோ மற்ற பெண்களைப்போல் தானும் கணவனுக்கு உரிய பணிவிடையைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்து நடந்தாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர்

அளவில்லா பிரியத்துடன் வாழ்ந்துவந்தனர்.

(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்...)

தொகுப்பு : சு.இளம் கலைமாறன்

Related Stories: