×

சமய வரலாற்றில் தண்ணீர் சடங்குகள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

பகுதி-1

ஆதிகாலம் தொட்டு மனித வரலாற்றில் தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளமாக சமயச் சடங்குகளில் பயன்பட்டுள்ளது. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதன் மழை வேண்டி சில போன்மைச் சடங்குகளைச் (Imitative rituals) செய்த போது வானத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல, மரத்தின் மீதேறி தண்ணீரைப் பொழிந்தான். தண்ணீரில் வாழும் மீன், தவளை, நண்டு போன்ற உயிரினங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊர் சுற்றி வந்து அந்தப் பாத்திரத்தைக் கொண்டுபோய் நீர்நிலையில் கொட்டினான்.

இவன் நீர்நிலையில் விட்ட தண்ணீரில் வாழும் உயிரினங்களைப் போல, இனிவரும் காலத்தில் தண்ணீரில் உயிரினங்கள் பெருகும் என்று நம்பினான். அப்படி என்றால் தண்ணீரும் அளவு கூடும் என்ற ஒரு கணிப்பில் அவன் இதுபோன்ற தண்ணீர் சடங்குகளைச் செய்ததாக சர் ஜேம்ஸ் பிரேசர் தனது `The Golden Bough’ என்ற நூலில் தெரிவிக்கின்றார்.

தண்ணீர்க் கடவுள்

மனிதன் காலப்போக்கில் தண்ணீருக்காக தனிக்கடவுளையே ஏற்படுத்தினான். ஆப்பிரிக்காவில் கடலுக்கான தெய்வத்தின் பெயர் மாஞ்சா. இந்தியாவிலும் கடலைத் தெய்வமாக வணங்கும் மரபு உள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்ட செம்மீன் நாவலில், கடலை கடலம்மே என்று விளிக்கும் வழக்கு இருப்பதைக் காண்கின்றோம். தமிழக மீனவர்களும் கடலைக் கடல் தாய் என்றுதான் அழைக்கின்றனர். இந்தியாவில் நதியை கங்கா, யமுனா, காவிரி, வைகை என்று பெரும்பாலும் பெண்கள் பெயரிட்டுப் பெண் தெய்வங்களாகக் கருதுகின்ற மரபைக் காண்கின்றோம்.

ஆனால், இடி மின்னல் மழையை மட்டும் ஆண் கடவுளாகப் பெயரிட்டு வணங்கினான். இந்தியாவின் வட பகுதியில் வருணன் மழைக் கடவுளாகப் போற்றப்பட்டான். இந்திரன் இடியின் கடவுளாக விளங்கினான். தென்பகுதியில் இவ்விரு கடவுளருடன் மாரியம்மனும் (சீதளாதேவி) மழைத் தெய்வமாக வணங்கப்பட்டாள்.

கிரேக்க நாட்டில் கடல் தேவதையை வெற்றித்தேவதை என்று அழைக்கின்றனர். கிரேக்கத்தில் ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தெய்வங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில், அலை தேவதை என்று தனியாக ஒரு தேவதை வணங்கப்படுகிறாள். அங்கு மணிவாடா என்ற பெயரில் தண்ணீர்த் தெய்வம் தனிப் பெரும் தெய்வமாக வழங்கப்படுகிறது. செனகல் முதல் ஜாம்பியா வரை இவ்வழிபாடு பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது.

ஆப்பிரிக்காவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தண்ணீர்த் தெய்வ வழிபாடு பெருவழக்காக இருக்கின்றது. ஆப்பிரிக்க மக்கள், அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போதும் கூட அவர்களின் தெய்வ வழிபாட்டைக் கைவிடுவதில்லை. இத்தெய்வம் பெரும்பாலும் பெண்ணாகவே வணங்கப்படுகிறது. சில இடங்களில் மட்டும் ஆணாக வழங்கப்படுகிறது.

தண்ணீர் தெய்வவழிபாட்டுக்கு போகும்போது அல்லது வழிபாடு நடத்தும்போது அதற்கான பீடத்தின் மீது பூக்கள், பழம், கண்ணாடி, கடல் சங்கு போன்றவற்றை வைத்தும் சீப்பு போன்றவற்றை வைத்தும் அலங்காரம் செய்கின்றனர். அங்கு பக்தர்களும் குளித்து சுத்தமாகச் செல்வதுடன் தாங்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் நறுமணத்துடன் திகழவேண்டும் என்பதற்காக வாசனைப் பொருட்களை அதிகமாகத் தடவிக்கொண்டும் வாய்க்குள் போட்டுக்கொண்டும் செல்கின்றனர். ஆப்பிரிக்காவின் அலை தேவதையை எத்தியோப்பியாவின் முதல் ராணி என்று வணங்குகின்றனர்.

திருமுழுக்கு -அபிஷேகம்


தொடக்க காலம் தொட்டு தூய்மைச் சடங்கும் தண்ணீரையே மனிதன் பயன் படுத்தினான். நடுகல் நட்டு வழிபட்டு வந்த காலத்திலும் நீர்ப்படை செய்தல் என்ற சடங்கு நடைமுறையில் இருந்ததைத் தொல்காப்பியம் வழியாக அறிகிறோம். தெய்வ உருவச் சிலைகளையும் தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்தினான் அல்லது தெய்வச் சிலைகளை ஆற்றில் அல்லது வேறு நீர்நிலைகளில் கொண்டு வந்து அங்கு அதற்கு நீராட்டு - ஆராட்டு நடத்தினான்.

இதுவே பிற்காலத்தில் திருமஞ்சனம் திருமுழுக்கு - அபிஷேகம் நீராட்டு - தீர்த்தவாரி என்று பல பெயர்களில் வளர்ந்தது. காலை, மாலை வேளைகளில் அந்தணர் நடத்தும் வழிபாடுகளில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சந்தியா வந்தனத்தில், பூஜைகள் முடிந்து நீர் விளாவுதல் போன்று, நாட்டார் சமயத்திலும் தண்ணீர் வழிபாட்டுச் சடங்கில் இன்றியமையா இடம் பிடித்துள்ளது.

தண்ணீரின் புனிதம்
வள்ளுவர் தமது திருக்குறளில்;


`புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை - வாய்மையால் காணப்படும்’ என்று குறிப்பிட்டது தூய்மைக்கான தண்ணீர்ச் சடங்குகள் புழக்கத்தில் இருந்ததனைக் குறிப்பிட்டதாகக் கொள்ளலாம். எல்லா மதங்களிலும் தண்ணீர் ஒரு புனிதப் பொருளாகக் கருதப்படுவதை காண்கிறோம். இந்து சமயத்தில் கங்கைநதியில் நடக்கும் கும்பமேளா, காவிரியில் கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம் புகழ்பெற்ற தண்ணீர்த் திருவிழாக்கள் ஆகும்.

பௌத்த சமயத்தில் புத்தர் சிலையை தண்ணீரால் கழுவுதல் அல்லது புத்தர் சிலையின் மீது தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற சடங்குகள் மனத்தூய்மையை குறிக்கும் வகையில் நிகழ்த்தப்படுகின்றன. தாய்லாந்தில், புத்தர் சிலைகளை ஆங்காங்கே வைத்து அவற்றின் மீதும் தெருக்களிலும் தண்ணீர் பீய்ச்சும் விழா, மதுரை கள்ளழகர் திருவிழா நிகழ்ச்சி போல் நடக்கிறது. இந்து, கிறிஸ்துவ சமயங்களைப் போலவே பௌத்தத்திலும் சமயச் சடங்குகளில், தண்ணீர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தண்ணீரின் புது வரவும் வழிபாடும்

சங்க இலக்கியத்தில் வையை பரிபாடலில் ஏழு பாடல்கள் வைகையில் வரும் புதுவரவு பற்றி விளக்குகின்றன. அவ்வாறு தண்ணீர் புதிதாக வரும்போது அதனை பூத்தூவி வரவேற்றனர் என்றும், அந்த மண் கலந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்து கண்கள் சிவக்க வெளியே வந்தனர் என்றும் பல தகவல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் அன்று, பதினெட்டாம் பெருக்கு என்ற பெயரில் கொண்டாடப்படும் விழா காவிரியில் வரும் புதுவெள்ளத்தில் மலர்தூவி தீபம் ஏற்றி வரவேற்கிறது. அன்று பெண்கள் தாலிபெருக்கி அணிகின்றனர். இதற்குப் புராணக்கதை ஒன்று உள்ளது.

தண்ணீர் பெருக்கும் தாலி பெருக்கும்

இந்திரனின் மகள் மந்திரமாலை என்பவள், வன்னிய மகாராசாவை மணந்தாள். அவன் இலங்கைமீது படையெடுத்துச் சென்றபோது இறந்துவிட்டான் என்ற
தகவலறிந்து கைம்மைக் கோலம் பூண்டாள். தனது தாலியை அகற்றிவிட்டாள். ஆனால், அவன் ஒரு நாள் உயிரோடு திரும்ப ஊருக்கு வந்துவிட்டான். அவன் வந்ததும் அவள்  ஆடிப்பெருக்கு நன்னாளில் புதிதாக தாலி அணிந்துகொண்டாள். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலிபெருக்கிப் போடுவது இப்பகுதியில் வழக்கமாக இருக்கின்றது. இதனை வன்னிய புராணம் என்ற நூல் தெரிவிக்கின்றது.

தண்ணீர் வழிபாடு

ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் புழங்கக்கூடிய அனைத்து இடங்களிலும், வீட்டில் இருக்கும் கிணற்றடி முதல்கொண்டு குழாய், குழாயடி, ஆறு, குளம், கடல் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீருக்கான வழிபாடு நன்றி தெரிவிப்புச் சடங்காக நடத்தப்படுகிறது.

சிவப்பாக நிறம் மாறும் ஆறு

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதி காமாக்கியா கோயிலுக்கு அருகில் பாயும் இடத்தில், ஆண்டுக்கு மூன்று நாட்கள் சிவப்பாக நிறம் மாறிவிடும். தேவி, தீட்டுப் பட்டு இருப்பதால் ஆற்றுநீரும் சிவந்த நிறத்தில் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். தட்சன் யாகம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிவபெருமான் பார்வதியை சுழற்றி எறிந்த போது அவளது உடல் 64 துண்டுகளாய்ப் பல்வேறு இடங்களில் விழுந்தது. அவற்றில் இங்கு தேவியின் பெண்ணுறுப்பு விழுந்ததாக நம்பப்படுவதால் அவள் பூப்படையும் நிகழ்வும்  சமய நிகழ்வாக ஏற்கப்படுகிறது.

தண்ணீரும் வெண்ணிலவும்

முழுநிலவு  இரவு உலகெங்கும் கொண்டாட்ட இரவாகத் திகழ்ந்தது. தமிழகத்தில் தை முதல் வைகாசி வரையிலான அனைத்து பௌர்ணமிகளும் கொண்டாட்ட தினங்கள் ஆகும். குறிப்பாகப் பங்குனி, சித்திரை மாதங்களில், பௌர்ணமியன்று எல்லா நீர்நிலைகளிலும் பெருமாளை இறக்குகின்ற வழிபாட்டுச் சடங்கு நடைபெறுகின்றது. அன்றிரவு நீர்நிலைகளில் மக்கள் கூடி இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர். பங்குனி முழுநிலா நாளன்று ஆற்றங்கரைகளில் காமன் பண்டிகை கொண்டாடப்படும். அது கலவித் திருநாள். அன்று திருக்கோயில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும்.  

தண்ணீருக்கு நன்றி - இந்திரவிழா

சிலப்பதிகாரத்தில் புகார்நகரில் இந்திர விழா பங்குனி முழு நிலா நாள் அன்று தொடங்கி சித்திரை முழுநிலா நாள் வரை 28 நாட்கள் கடற்கரையில் நடைபெற்றதாக விளக்குகிறது. இந்திர விழா கொண்டாடாவிட்டால் நாட்டில் மழை பெய்யாது. பசியும் பஞ்சமும் தோன்றும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திரன் இடி, மழைக்குரிய கடவுள் என்பதாலும் இவ்விழா நீர்நிலைகளை ஒட்டி அவற்றின் அருகே நடைபெற்றது. அப்போது மக்கள் `வசியும் வளனும் சிறக்க’ என்று வாழ்த்தி வணங்கினார். இவ்விழா தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விழா ஆகும்.

கடல் நீராடலும் முன்னோர் அருளும்

கடலில் நீராடி நீர்க்கடன் இயற்றுவதால் முன்னோர்களின் அருளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை காரணமாக அமாவாசையன்று பலர் இச்சடங்கைச் செய்கின்றனர். முழுநிலவன்று கடற்கரை ஓரம் இருந்து தண்ணீர்ச் சடங்குகள் செய்வது களிப்பு, கலவியின்பம், வருங்கால மேன்மை, மகிழ்ச்சி, சந்ததிப் பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவும். இருட்டு நாளான அமாவாசையன்று நீர்க்கடன் செய்வது முன்னோரின் தீராத ஆசைகளைத் தீர்க்கவும், அவர்களின் மனக் குறைகளைப் போக்கவும், அவர்களிடமிருந்து பூரண ஆசிகளைப் பெறவும் உதவும். இருட்டு இறந்தவரோடும், வெளிச்சம் தேவர்களோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.

சூரியனின் பாதையைக் கணக்கில் கொண்டு ஆடி அமாவாசை, ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நீத்தார் கடன் தீர்க்கும் சடங்குகளை கடலில் குளித்து செய்யும் மரபு உள்ளது. குறிப்பாக, புரட்டாசி அமாவாசையில் இருந்து ஐப்பசி அமாவாசை வரை எந்த நாளில் கடலில் நீராடி நீர்க்கடன் செலுத்தினாலும், அதன் பலன் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று நீத்தார் கடன் தீர்க்க முடியாதவர்கள் அல்லது தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் மஹாளய அமாவாசைக்கு ஒருநாள் கடலாடி நீத்தார் கடனை நிறைவேற்றலாம்.

கடல் நீர் என்பது மிகப்பெரிய அளவிலானது என்பதால், இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க வல்லது என்பது நம்பிக்கை. இறந்தவர்களுக்கு இந்நாளில் நீர்க் கடன்கள் செய்யக் காரணமாகவும் அமைகின்றது. பாதாளத்தில் இருந்த கடலை மேலே பூமிக்கு கொண்டு வந்தவர்கள் 60 ஆயிரம் பேர். அவர்களின் தந்தை சகரன் என்று அழைக்கப்படுகிறார். வருணன் பிரம்மஹத்தி தோஷத்தால் கட்டுண்டு செயலிழந்து கடலுக்குள் கிடந்தபோது சாபம் தீர்க்க அங்கிருந்தே சிவனை நோக்கித் தவம் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. எனவே, கடலுக்குள் இருந்து இறைவனை வேண்டினால் தீராத பாவமும் தீரும் என்பது மாறாத நம்பிக்கை ஆயிற்று.

பிள்ளை வரம் வேண்டுவோர், முன்னோர் சாபம் தீர, பிதுர் தோஷம் போக்க ராமேஸ்வரம் சென்று கடலில் குளித்து இறைவனை வேண்டுகின்றனர். சமணர்கள் அருகதேவனை அமுதசாகரன் என்று அழைக்கின்றனர். கிரேக்கர்களின் கடல் தெய்வம் போஸிடோன் இருக்கிறார். ஜப்பானியர்கள் கடல் தெய்வம் ஷிந்தயிசத்தில் சூயிஜின் என்பதாகும். சூயி என்றால் தண்ணீர். எகிப்தின் கடல் தெய்வம் க்னேம் என்பதாகும். இவ்வாறு நாகரிகம், பண்பாடு வளர்ந்த நாடுகளில் தண்ணீர்க் கடவுள் கடல் தேவதை என்று பல வழிபடப்பட்டன.

(தொடரும்)

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்