×

குறளின் குரல் - குற்றம் கடிதல்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

மனிதர்களிடமுள்ள குற்றங்களையெல்லாம் கண்டறிந்து நீக்குவதுதானே திருவள்ளுவரின் பணி? பொருட்பாலின் நாற்பத்து நான்காம் அதிகாரத்தை ‘குற்றம் கடிதல்’ என்ற தலைப்பிலேயே அமைக்கிறார். பத்துக் குறட்பாக் களில் தம் கருத்தை விளக்குகிறார்.‘குற்றம் கடிதல்’ என்பது குற்றங்களை நீக்குவதும், விலக்குவதும், கண்டிப்பதும் ஆகிய மூன்றையும் குறிப்பது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் உள்ள குற்றங்களை அறிந்து அவற்றை நீக்க வேண்டும். பிறகு, மீண்டும் குற்றங்கள் வந்துவிடாமல் விலக்க வேண்டும். அதன்பிறகு தன்னைச் சேர்ந்தவர்களிடத்திலுள்ள குற்றங்களைக் கண்டிக்க வேண்டும் என்று குற்றம் கடிதல் பற்றி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மிக அழகாக விளக்குகிறார்.  

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
(குறள் எண் 431)


செருக்கும் சினமும், காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் செல்வவளம் மேம்பாடு உடையதாகும்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
(குறள் எண் 432)


நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் அவர்களை வணங்காதிருப்பது, கெட்டவற்றில் மகிழ்வது - இவை ஆட்சிசெய்பவர்களுக்குக் குற்றங்களாகும்.

தினைத்துணையாங் குற்றம் வரினும்பனைத் துணையாக் கொள்வர் பழிநாணுவார்.
(குறள் எண் 433)


பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக்கொள்வார்கள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
(குறள் எண் 434)


குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால், குற்றம் செய்யாமல் இருப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி
முன்னர்வைத்தூறு போலக் கெடும்.
(குறள் எண் 435)


குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போரைப் போல் அழிந்துவிடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்
பின்என்குற்ற மாகும் இறைக்கு.
(குறள் எண் 436)


முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு குறை நேராது.

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
(குறள் எண் 437)

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை
எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
(குறள் எண் 438)

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் கொடுக்காமல் வாழ்வதுதான்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
(குறள் எண் 439)

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி தன்னைத் தானே வியந்து பேசக்கூடாது. நன்மை தராத செயல்களில் ஈடுபடவும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
(குறள் எண் 440)

தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி ரகசியத்தைக் காப்பாற்றினால், அவனை அழிக்க எண்ணும் பகைவரின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் கடந்த காலத்தில் குற்றங்களுக்கு எப்படியெல்லாம் தண்டனைகள் வழங்கப்பட்டன என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்புக் கலந்த பெருமிதம் ஏற்படும். மனுநீதிச்சோழன் தன் மகனுக்கு அளித்த தண்டனையும் அதன் வழியே தனக்கே அவன் கொடுத்துக் கொண்ட தண்டனையும் அனைவரும் அறிந்த கதைதான்.

தன் மகன் வீதிவிடங்கன் ஓட்டி வந்த தேர், ஒரு பசுங்கன்று இறக்கக் காரணமாகி விட்டதை அறிந்த சோழமன்னன் தானே தேரோட்டி தன் மகன்மேல் தேர்ச் சக்கரத்தை ஏற்றி தன் மகனைக் கொன்றான் என்பது நீதியை நிலைநாட்டுவதில் உச்ச கட்டமல்லவா? பின்னர், கன்றையும் அரசிளங்குமரனையும் சிவபெருமான் உயிர்ப்பித்ததாகப் புராணம் பேசுகிறது.
உயிருக்குப் பதில் உயிர் என்பதில் ஒரு நியாயம் தென்படுகிறது.

ஆனால், ராமாயணத்தில் சூர்ப்பணகையின் நாசியை அரிந்தானே இலக்குவன்? அது சரிதானா? நியாயமான தண்டனை தானா அது? இந்தக் கேள்வியை ஓர் அபூர்வ ராமாயணத்தில் சீதையே லட்சுமணனிடம் கேட்கிறாள். ‘லட்சுமணா, அவள் என்னைத் தூக்கிச் செல்ல முயன்றாளே அன்றித் தூக்கிச் செல்லவில்லை, நீ சிறிய குற்றத்திற்குப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டாய். மூக்கை அறுத்தாயே, அந்த மூக்கு இனி வளராது. அதற்கு பதிலாக நீ கூந்தலை வெட்டியிருக்கலாம், கூந்தல் மறுபடி வளரும். இனி அவளின் நாசியற்ற முகத்தைப் பார்ப்பவர்கள் எல்லாம் அவளைப் பரிகசிப்பார்கள். அந்தப் பரிகசிப்பை ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும்போதும் அவள் மனத்தில் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நாம் இனி, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என அறிவுறுத்துகிறாள் சீதாதேவி.

இலக்கிய உலகில் அறச் சீற்றத்தோடு குற்றத்தை எதிர்த்த ஒரு புலவரைப் பார்க்கிறோம். அவர்தான் நக்கீரர். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என சிவபெருமானை நோக்கியே சீறியவர். திருமுருகாற்றுப் படை எழுதிய நக்கீரரின் தார்மிக ஆவேசம் உண்மையிலேயே நம்மை பிரமிக்கத்தான் வைக்கிறது. வள்ளல்களைப் புகழ்ந்துபாடிப் பரிசு பெற்றுச்செல்லும் புலவர்கள் மத்தியில். நக்கீரர் வித்தியாசமானவர்.

தப்புத் தப்பாகச் செய்யுள் எழுதும் போலிப் புலவர்களுக்கு இலக்கண நாட்டம் கொண்ட சில புலவர்கள், கடுமையான தண்டனை வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் வரலாறு சொல்கிறது. இலக்கணத் தவறோடு செய்யுள் புனைந்தவனின் தலையில் குட்டியிருக்கிறான் பிள்ளைப் பாண்டியன் என்ற மன்னன். அத்தகைய போலிப் புலவர்களின் செவியை அறுத்திருக்கிறார் வில்லிபுத்தூரார், தலையை வெட்டியிருக்கிறார் ஒட்டக்கூத்தர். இப்போது அத்தகையோர் யாருமில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் புலவர் என்று தங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டு திரியும் நிலை தோன்றியுள்ளது என வருந்துகிறார் படிக்காசுத் தம்பிரான். அவர் எழுதிய கீழ்க்கண்ட பாடல் தனிப்பாடல் திரட்டில் உள்ளது.

`குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங் கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே’

இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என்ற நியமங்கள் உலகில் எல்லா இடங்களிலும் உண்டு. காலப்போக்கில் சில நியமங்கள் மாறலாம். ஆனால் எல்லாக் காலத்திலும் தண்டனைகள், சில நெறிமுறைகளுக்கு உட்பட்டே வழங்கப்படுகின்றன.முந்தைய மனுநீதி அந்தக் கால மரபிலான தண்டனைகளைப் பேசுகிறது, காலம் மாறுகையில் சமுதாயச் சூழலுக்கு ஏற்ப நமது சட்டதிட்டங்களும் மாறத்தான் செய்கின்றன. தூக்குத் தண்டனை வழங்குவது சரியல்ல என்ற ஒரு வாதம் எல்லாக் காலத்திலும் யாராலாவது எழுப்பப்படுகிறது. கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கினால், அவன் செய்த அதே செயலை நாம் சட்டபூர்வமாகச் செய்கிறோம் அவ்வளவுதானே? என்று கேள்வி கேட்பவர்கள் கேட்கிறார்கள், இதற்கு என்ன பதில் சொல்வது?

கொலையிற்  கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். என்ற திருக்குறளையே அவர்களுக்குப் பதிலாகத் தரலாம். கொடுங்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தருவதென்பது பயிர் வளரவேண்டும் என்ற நோக்கத்தில் அதன் இடையே முளைக்கும் களையை வெட்டுவது போன்றது என்கிறார் வள்ளுவர். கல்வெட்டுகளில் கடந்த காலங்களில் குற்றம் செய்தவர்களுக்குப் பல வகையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதைச் செய்திகளாகக் காண்கிறோம்.

குறிப்பிட்ட காலத்திற்கு ஆலயங்களில் தீபம் ஏற்ற எண்ணெய் கொண்டு தர வேண்டும் என்றெல்லாம் அக்காலத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகெங்கும் நிறைய மர்மநாவல்கள் எழுதப் படுகின்றன. நிறைய மர்மத் திரைப்படங்கள் வெளிவருகின்றன. அவற்றிற்கெல்லாம் பெரும்பாலும் ஒரே சூத்திரம்தான், ஒருவன் குற்றம் செய்வான், தப்பிவிடுவான், ஆனால், காவல்துறை குற்றம் செய்தவன் யார் என உளவறிந்து சான்றாதாரங்கள் மூலம் அவனே குற்றவாளி என்பதை நிரூபித்து அவனுக்குத் தண்டனை வாங்கித் தரும். இந்தப் பொதுவான கதைப் போக்கை விறுவிறுப்பாகச் சொல்வதில் இருக்கிறது படைப்பின் வெற்றி.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றொரு பழமொழி உண்டு. குற்றமில்லாதவர்கள் யார்? நாம் சுற்றம் சூழ மகிழ்ச்சியோடு வாழ விரும்பினால் சுற்றத்தாரின் குற்றங் களைப் பொருட்படுத்தக்கூடாது என்று சொல்கிறது இந்தப் பழமொழி. குற்றத்தைப் பற்றிப் பல திரைப்பாடல்கள் பேசுகின்றன. குற்றம்புரிபவர் நிம்மதியாக வாழ இயலாது என்ற உண்மையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது ஒரு திரைப்பாடல்;ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் தஞ்சை ராமையாதாஸ் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாட எம்.ஆர்.ராதா நடிப்பில் பெரும் புகழ்பெற்ற பாடல் அது.

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்ப தேது
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது..


என்ற பாடல் வெளிவந்த காலத்தில் அதை உச்சரிக்காத உதடுகளே இராது.

`குலமகள் ராதை’ திரைப்படத்தில் டி.எம்.செளந்தரராஜன் பாடியுள்ள கண்ணதாசன் பாடல், யாரைக் குற்றம் சொல்லி என்ன செய்வது என்ற அங்கலாய்ப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி...’

என வளர்கின்றன அதன் வரிகள்,

குற்றமே செய்யாத சுதந்திரத் தியாகிகள் குற்றம் செய்ததாகப் பொய்வழக்குப் போடப்பட்டு அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டதை நம் சுதந்திர வரலாறு சொல்கிறது. பால கங்காதர திலகர் எந்தக் குற்றமும் செய்யாதவர். ஆனால், அவர் குற்றவாளி எனப் பழிசுமத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்தச் செய்தியை அறிந்த அவரின் மனைவி சத்தியபாமா அதிர்ச்சிக்கு ஆட்பட்டாள். தன் மூன்று பெண் குழந்தைகளை இனி எப்படி வளர்ப்போம் எனத் திகைத்தாள்.

அன்றிரவே அவள் இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமானாள் என்கிறது நம் வரலாறு. எத்தகைய மாபெரும் தியாகங்களைச் செய்து நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தை வாங்கினோம் என்பதை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும்.அரவிந்தர் செய்யாத கொலையைச் செய்ததாக அவர்மேல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. அவரைக் கைது செய்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார்கள். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பின் அவர் விடுதலையானார். அவரது அன்பரான வழக்கறிஞர் சித்தரஞ்சன்தாஸ்தான், அரவிந்தர் தரப்பில் வாதாடினார்.

அவரது அபாரமான வாதத்திறன் காரணமாக அரவிந்தர் விடுதலை செய்யப் பட்டதைச் சொல்கிறது ஸ்ரீ அரவிந்தரின் புண்ணியத் திருச்சரிதம். பின்னாளில் அரவிந்தர் புதுச்சேரியில் முற்றிலும் ஆன்மிகம் சார்ந்து வாழத் தொடங்கியபோது, அவரிடம் சீடராகச் சேர்ந்தார் சித்தரஞ்சன்தாஸ் என்பதையும் அரவிந்தர் வரலாறு பதிவு செய்கிறது.

இதெல்லாம் வடக்கில் நடந்ததென்றால் தெற்கிலும் இதுபோன்றவை நடக்கவே செய்தன. வ.உ.சி. சிறைத்தண்டனை பெற்றதும் அந்தச் செய்தி தந்த அதிர்ச்சியில் அவரது சகோதரர் மீனாட்சி சுந்தரம் பித்துப் பிடித்தவர் ஆனார். அவர் பித்தராகவே இருந்து காலமானார் என்ற தகவலைத் தருகிறது வ.உ.சி. வரலாறு. வள்ளுவர் சொன்னபடி குற்றங்களை நீக்குவது, விலக்குவது, கண்டிப்பது ஆகிய மூன்றையும் நாம் மேற்கொண்டால் மேலான வாழ்க்கை நமக்கு அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Kural ,
× RELATED குறளின் குறல்: திருக்குறளில் ஆமை!