×

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம்:சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களுக்கான தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங் 2022ஐ நடத்தவுள்ளது. இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. இத்தகைய கண்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படுகிறது.நாடு முழுவதிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார்/அரிசி தவிடு/அரிசி மட்டை/விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள் தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள் துணி/சணல் பொருட்கள், போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தும் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அவர்கள் காட்சிப்படுத்த உள்ளார்கள்.இந்நிகழ்வின் இரண்டு நாட்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான மாற்றுப்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் காற்று மாசு மேலாண்மை ஆகியவை பற்றிய ஐந்து தொடக்க தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. மேலும் தொழில் முனைவோர் நிதி ஆதாரங்களை பெறுவதற்கு ஏதுவாக நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்பவர்களையும் மற்றும் அவற்றை வாங்குபவர்களை அடையாளம் காணவும் இந்த கண்காட்சி வாய்ப்பளிக்கும்.முதல் நாளான 26.9.2022 அன்று தேசிய கண்காட்சியை, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்தின் கூடுதல் செயலாளர் நரேஷ் பால் கங்வார், மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி முன்னிலையில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் துவக்கி வைப்பார்.மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொகுக்கப்பட்ட தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுற்றுச்சூழல் மாற்றுப் பொருட்களின் உற்பத்தியாளர்களின் கோப்பகம் இக்கண்காட்சியின் போது அறிமுகப்படுத்தப்படும். இரண்டாவது நாளான 27.9.2022 அன்று ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களுக்கும் மற்றும் காற்று தர மேலாண்மைக்கான தொழில்முனைவோருக்கான கருத்தரங்கை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்தின் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே துவக்கி வைப்பார்.ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநில அரசுகளின் பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் செயலர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த தேசிய கண்காட்சி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில்முனைவோர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள் போன்ற வணிகங்களில் ஈடுபடும் நபர்கள் உட்பட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றியும் மற்றும் அதன் தயாரிப்புமுறை மற்றும் காற்று தர மேலாண்மைக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் உதவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம்:சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : National Exhibition on Alternatives to Single-Use Plastics and Seminar for Entrepreneurs ,Chennai Trade Center ,National Exhibition on Environmentally Friendly Alternative Materials ,National Exhibition on Alternatives to Single-Use Plastics and Entrepreneurs Seminar ,Dinkaran ,
× RELATED சென்னை வர்த்தக மையத்தில் யுமாஜின் 2024...