×

சேலம்காரரின் தந்திரத்தால் தள்ளாடும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரர் தனது எதிரியான தேனிக்காரரின் கோட்டையில் கூட்டத்தை காட்டும் மும்முரத்தில் இருக்கிறாராமே…’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்னையால், இடைக்கால பொதுச்செயலாளரான சேலத்துக்காரர், தனது மாவட்டம், சென்னையை தவிர வேறெங்கும் செல்ல முடியாமல், நீதிமன்ற வழக்கு, தேர்தல் ஆணைய மனு தாக்கல் உள்ளிட்ட பிரச்னைகளில் மூழ்கி இருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு விபரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழு ஆதரவு தனக்கு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு தென்மாவட்டத்தில், தனது ஆதரவாளர்களை சந்தித்து, பலத்தை உறுதிப்படுத்த சேலத்துக்காரர் முடிவு செய்தார். இதற்காக வரும் 29ம் தேதி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தேனிக்காரர் ஆதரவு பகுதியில் நுழைவதால், அங்கும் தனக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் முழு ஆதரவு உள்ளது என்பதை காட்ட வேண்டும். அதற்காக உங்களது கோஷ்டிபூசலை மூட்டைகட்டி வையுங்கள். அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்தால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவேன் என சேலத்துக்காரர் கண்டிப்புடன் கூறிவிட்டாராம். பொதுவாக, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்டச் செயலாளர்களும் எப்போதும் நவக்கிரகம் மாதிரி வெவ்வேறு திசைகளில் திரும்பி கட்சி பணியாற்றுவார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் காலைவாரிவிடுவார்கள். தற்போது சேலத்துக்காரரின் கண்டிப்பு காரணமாக மூன்று மூர்த்திகளும் ஒரே அணியாக நின்று, சேலத்துக்காரர் நிகழ்ச்சியை நடத்தி முடிப்பது என முடிவு செய்துள்ளார்களாம். இதுவரை மூம்மூர்த்திகளும் இணைந்து எந்த நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. இதற்கான பணிகளை மூன்று மாவட்டச்செயலாளர்களும் சேர்ந்து துவக்கியுள்ளனர். இது தேனிக்காரருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம். கூட்டத்தை காட்டி விட்டால், தனது நிலைமை தள்ளாடிவிடும் என ஆதங்கத்தில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கபடி போட்டியில கட்சிக்குள்ள பிரச்னையாமே.. என்ன மேட்டர்…’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை  கட்சியை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக, ஒன்றிய அரசாங்கத்தோட  முக்கிய பொறுப்புல இருக்கிற தலைவரோட பிறந்தநாளை முன்னிட்டு தாமரை  கட்சியின் இளைஞர் விளையாட்டு பிரிவு கபடி போட்டி நடத்தியது. இதன் இறுதி  போட்டிகளை நடத்தி மாவட்ட அணியை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நேரத்துலதான்  வெயிலூர் கார்ப்பரேஷன் அலுவலகத்துல போராட்டம் என்ற பேர்ல அத்துமீறி தாமரை  கட்சி நிர்வாகிங்க 103 பேரு கைதாகி கம்பி எண்ண போயிட்டாங்க. அவங்களுக்கு  ஜாமீனு கிடைச்சு நேற்று முன்தினம் விடுதலையானாங்க. ஆனா அவங்க  விடுதலையாகுறதுக்குள்ள அவசர, அவசரமா போட்டியை நடத்தி முடிச்சு மாவட்ட அணியை  செலக்ட் பண்ணிட்டாங்களாம் தாமரை கட்சியின் இளைஞர் விளையாட்டு அணியை  சேர்ந்தவங்க.இது தெரிஞ்சு விடுதலையாகி வந்த தாமரை கட்சியின் மாவட்ட  நிர்வாகிங்க கண்கள் சிவந்து போச்சாம். இப்போ கட்சிக்கு வந்து சேர்ந்தவங்க  பதவியை வாங்கிய பின்னர் தன்னிச்சையா செயல்படுறதை எப்படி ஏற்பது என்ற  ரீதியில் கடும் அதிருப்தியில் இருக்கிறது மட்டுமில்லாம, மாநில தலைமையிடம்  இந்த பிரச்னையை கொண்டு செல்லவும் முடிவு செஞ்சிருக்காங்களாம்’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் மீது மாஜி அமைச்சரின் திடீர் விமர்சனத்துக்கு பின்னணி இருப்பதா சொல்கிறார்களே.. என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம்   மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த இலை கட்சியின் கூட்டத்தில் மாஜி அமைச்சர்,   தேனிக்காரர் பற்றி கடும் விமர்சனம் செய்தாராம்… இதனால் தேனிக்காரர்   அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.. மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த   மாஜி அமைச்சர், தேனிக்காரருக்கு ஆதரவாக திரைமறைவில் செயல்பட்டு வருவதாக,   சேலத்துக்காரருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, அவரை ரகசியமாக   கண்காணிக்கும் பணியில் சேலத்துக்காரர் டீம் களத்தில் இறங்கினர். இந்த தகவல்   தெரிய வந்த மாஜி அமைச்சர், தன்மீது விழுந்துள்ள சந்தேக பார்வையை   போக்குவதற்காக திடீரென தேனிக்காரர் மீது விமர்சனம் செய்து வருகிறாராம் என   தேனிக்காரர் அணியில் அரசல் புரசலாக பேச்சு ஓடுதாம்… மாஜி அமைச்சரின்   இந்த விமர்சனத்தை நம்புவதா வேண்டாமா என சேலத்துக்காரர் அணியில் உள்ள மற்ற   மாஜி அமைச்சர்களுக்கு இன்னும் சந்தேகம் தீர வில்லையாம்…. இதனால் அவர்கள்   குழப்பத்தில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேறென்ன வில்லங்கம் இருக்கு…’’  ‘‘திருப்பூரில் மாநகர காவல்துறை தலைமை அதிகாரி ஒருவர் சமீபத்தில் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இவருக்கு பதிலாக வேறு ஒரு அதிகாரி வந்துள்ளார். இவர் வந்த    பிறகு, மாநகர காவல்துறையில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இதில் ஒன்று,    நுண்ணறிவு பிரிவு போலீசை கூண்டோடு இடமாற்றம் செய்தது.தற்போது நுண்ணறிவு    பிரிவில் நியமிக்கப்பட்டிருக்கும் போலீசார் போதிய அனுபவம் இல்லாதவர்கள்.   இவர்கள், பல்வேறு நபர்களின் பரிந்துரையின்பேரில், வந்துள்ளனர். இவர்களை வைத்து, மாநகர போலீஸ் உயரதிகாரிகள் பலர், மாதம்தோறும் கல்லா கட்டி வருகின்றனர். அதாவது, டாஸ்மாக் ‘பார்’ ஒன்றுக்கு மாதம்தோறும் தலா ரூ.13 ஆயிரம் பெறப்பட்டு வந்த மாமூல் தொகை, தற்போது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு விட்டது. சில ‘பார்’களில் ரூ.20 ஆயிரம் வரை பெறப்படுகிறது. திருப்பூர் மாநகரில் மட்டும் 101 டாஸ்மாக் ‘பார்’கள் செயல்படுகிறது. இந்த ‘பார்’களில்    சட்டவிரோதமாக மது விற்க அனுமதி அளிக்கப்பட்டு, இந்த மாமூல்  பெறப்படுகிறது.   மாதம்தோறும், தோராயமாக ரூ.20 லட்சம் வரை வசூல்  எடுக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ‘ஸ்பா’ என்ற பெயரில் நடக்கும் மசாஜ்  சென்டர்கள், பாலியல் தொழில் மையமாக மாற்றப்பட்டு, அதிலும் மாமூல் கொட்டுகிறது. சூதாட்ட கிளப்புகள்   மூலம் பெறப்படும் மாமூல் தனி. இப்படியாக, மாதம் ரூ.50  லட்சம் வரை தட்டி   எடுக்கிறார்கள். இதை, எந்தெந்த அதிகாரிகள், எந்தெந்த  சதவீதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற நீண்ட பட்டியலே மாநகர  காவல்துறையில் உள்ளது. மாதம்தோறும் இந்த டார்கெட் எட்டப்படவில்லை  என்றால், மெமோ கொடுக்கப்படுகிறதாம்..’’ என்றார் பீட்டர் மாமா….

The post சேலம்காரரின் தந்திரத்தால் தள்ளாடும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,Yananda ,Salemgarh ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...