×

கஜபூஜை செய்தால் மகிழும் மகாலட்சுமி!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தினமும் கோயில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சந்நதியை சுற்றி வரச் செய்வர். இதற்கு `கஜபூஜை’ என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என `சூக்தம்’ என்ற வேத நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின. இவளை `கஜலட்சுமி’ என்பர். `கஜம்’ என்றால் யானை. கஜலட்சுமி சிற்பத்தை கோயில் கருவறை நுழைவாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்! “யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெறுகும்!”

மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு, மிருகங்களில் பலம் உள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும்.

சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப் படுத்தும் ஆன்மிக முயற்சிகளுக்கு `சரகலை’ என்று பெயர். பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மிக பயிற்சி முறைகளாகும்.

வாசியோகம் அல்லது பிராணயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். இயற்கையாகவே சுழுமுனை வாசி யோகம் உள்ள யானை, அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் நமக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்!

தொகுப்பு: இரா. அமிர்தவர்ஷினி

Tags : Mahalakshmi ,
× RELATED கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை...