×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

459 (B). ஸுகோஷாய நமஹ:(Sughoshaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை - தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும். அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு வழங்கினார். இந்திரன் அதை அனாயாசமாக வாங்கித் தனது யானையான ஐராவதத்திடம் வழங்கினான். அந்த யானையும் பிரசாத மகிமையை உணராது மாலையைக் கீழே போட்டு மிதித்துவிட்டது.

இதைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனும் தேவர்களும் லட்சுமி கடாட்சத்தை இழப்பார்கள் என்று சாபம் தந்துவிட்டார். துர்வாசரின் இந்தச் சாபத்தால் தங்களது ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்றார்கள் தேவர்கள். அசுரர்கள் தேவலோக ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். இந்நிலையில் இந்திரனும் மற்ற தேவர்களும் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். “திருமாலைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காக்க முடியாது!” என்று தேவர்களுக்கு அறிவுரை கூறிய பிரம்மா, அனைவரையும் அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலின் கரைக்குச் சென்றார்.பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், தங்களுக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மனதாரத் திருமாலை பிரம்மாவும் தேவர்களும் வேண்டினார்கள்.

“நமாமி ஸர்வம் ஸர்வேசம் அனந்தம் அஜம் அவ்யயம்
லோகதாம தராதாரம் அப்ரகாசம் அபேதினம்”
என்று தொடங்கித் திருமாலைத் துதித்தார் பிரம்மதேவர். அவரைத் தொடர்ந்து மற்ற தேவர்களும்;
“பகவன் பூதபவ்யேச! யஜ்ஞமூர்த்திதராவ்யய!
ப்ரஸீத ப்ரணாதானாம் த்வம் ஸர்வேஷாம் தேஹி தர்சனம்”


என்று துதித்துத் திருமால் திருவடிகளிலே சரணாகதி செய்தார்கள். அப்போது, பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் தேவர்களுக்குக் காட்சி அளித்தார். தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் வேண்டினார்கள் தேவர்கள். தேவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த திருமால், “தேவர்களே!  நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து தேவாமிர்தம் கிடைக்கும். அதை உண்டால் நீங்கள் நல்ல வலிமையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் பெற்றுவிடுவீர்கள்.

அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்திவிட முடியும். உங்களால் மட்டும் இப்போது பாற்கடலைக் கடைய முடியாது. அதனால், அசுரர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடைவீர்களாக!” என்று ஆலோசனை கூறினார்.அதன்படி, மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை நாண் ஆக்கி, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் வேளையில், திருமாலே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். பாற்கடல் கடைந்த தேவர்களும் அசுரர்களும் சிறிது நேரத்தில் சோர்ந்து போன போது, திருமாலே அவர்களுக்குப் பதிலாகக் கடையத் தொடங்கி விட்டார். அவர் கடையும் அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் வியந்ததை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணிக்கிறார்;

“உபர்யகேந்த்ரம் கிரிராட் இவான்ய: ஆக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ர பாஹு:
ஹஸ்தௌ திவி ப்ரஹ்ம பவேந்த்ர முக்யை: அபிஷ்டுவத்பி: ஸுமனோபிஹ்ருஷ்ட:”


மந்தர மலைக்கு எதிரே மற்றொரு மலை திகழ்வது போல், திருமால் தனது மலை போன்ற தோள்களாலே திருப்பாற்கடலைக் கடையும் அழகைப் பார்த்து வியந்த பிரம்மா, சிவன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள் என அத்தனை பேரும் துதி செய்தார்கள். அத்தனை பேரும் செய்த அந்தத் துதிமொழிகள் பாற்கடல் கடைந்த பகவானைச் சூழ்ந்திருந்தன. இத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கியமையால் திருப்பாற்கடல் கடைந்த திருமால் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகோஷ:’ என்றால் நல்ல ஒலிகளால் சூழப்பட்டவர் என்று பொருள். தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் துதிக்கப்பட்டு, அத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கிய திருமால் ‘ஸுகோஷ:’! அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

அசுரர்கள் செய்த துதியை நல்ல வார்த்தை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? யார் சொன்னார்கள் என்பதை விட, யாரைப் பற்றிச் சொன்னார்கள் என்பதே முக்கியம் அல்லவா? திருமாலைக் குறித்த துதி என்பதால் அசுரர்கள் செய்த துதியையும் கூட தாழ்ந்த சொற்களாக நாம் கருத வேண்டியதில்லை.“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்துத் துதிகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

460 (B). ஸுகதாய நமஹ:(Sukhadhaaya namaha)

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த வேளையில், அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்கள். தேவர்கள் பலவாறு தேடியும் அவர்களால் அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தேவர்கள் அகத்திய முனிவரின் உதவியை நாடினார்கள். குறுமுனிவரான அகத்தியர் கடற்கரைக்கு வந்தார். “அச்யுதாய நமஹ:” என்று சொல்லிக் கையளவு நீரை எடுத்து உட்கொண்டார். உடனே ஏழு கடல்களும் வற்றிப்போயின. கடல் மொத்தமாக வற்றிய நிலையில், அசுரர்கள் ஒளிந்திருந்த இடத்தைத் தேவர்கள் கண்டறிந்துவிட்டார்கள். அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.

இந்நிலையில் ஏழு கடல்நீரையும் சுவைத்துப் பார்த்த அகத்திய முனிவர், அந்த ஏழு கடல் நீருக்கும் சாரமாக இருக்கும் அமுதைச் சுவைத்துப் பார்த்தாராம். “ஆஹா! இது மிகவும் இனிய அமுதமாக இருக்கிறதே! தேவர்களுக்கும்கூட கிடைத்தற்கரிய அமுதம் ஆயிற்றே இது! திகட்டாத அமுதம் ஆயிற்றே இது! இதை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்!” என்று கருதினார் அகத்தியர்.

அதனால், தன் தாயான குடத்திடம் அந்த அமுதைக் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். ஆனால், அகத்தியரின் தாயான குடத்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மனமில்லை. ஆகையால், குடம் அந்த அமுதைக் குடமூக்கின் வாயிலாக வெளியிட்டுவிட்டது. குடமூக்கு என்பதுதான் கும்பகோணம் என்னும் திருத்தலம். அது வெளியிட்ட ஆராவமுதம்தான் திருமாலின் ஆராவமுதன் என்ற திருநாமம்.

இக்கருத்தை ஆசுகவிவில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், அம்ருத சார்தூலம் என்னும் துதியில்,
“மன்யே ஸப்தபயோநிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம்
கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத்புன:
லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தாஸ் ஸ்த்ரிய:”
என்ற ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். இந்தக் கதைக்குள்ளே ஒரு தாத்பரியம் உள்ளது.


இங்கே ஏழு கடல் என்பது உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் குறிக்கிறது. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் தந்த தமிழ் முனிவர் ஆவார். ஏழு கடல் நீரையும் அகத்தியர் பருகினார் என்றால், உலகிலுள்ள அனைத்து மொழிகளில் உள்ள அனைத்துச் சொற்களையும், சொல்லிப் பார்த்தார் தமிழ்த் தாயின் தவப் புதல்வரான அகத்தியர். ஆனால், அனைத்துக்கும் சாரமாக, அனைத்து வார்த்தைகளை விடவும் மிகமிக இனியதாக இருக்கும் ஒரு சொல் உண்டென்றால், தமிழ் மொழியில் உள்ள திருமாலின் திருப்பெயரான ‘ஆராவமுதன்’ என்பது. இத்தகைய அமுதம் தேவர்களுக்கும் கிடைக்காத படி அகத்தியர் ஒளித்து வைத்தார் என்றால், தேவ பாஷை எனப்படும் வடமொழியிலும் இத்தகைய இனிய சொல் கிடைக்காதபடி, தன் தாயான தமிழ்மொழியில் அதை ஒளித்து வைத்தார் அகத்தியர்.

ஆனால் தமிழ்மொழியோ, தனது மற்றொரு தவப்புதல்வரான நம்மாழ்வார் வாயிலாக, அவர் திருக்குடந்தை திவ்யதேசத்தைப் பற்றிப் பாடிய பாசுரமான,

“ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாலே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே”

என்ற பாசுரம் வாயிலாக வெளியிட்டு விட்டது. மேலும், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்ற அருளிச்செயல் அமுதத்தையே உலகுக்கு வெளியிட்ட திருத்தலமும் கும்பகோணமே ஆகும். இப்படித் தன்னையும் தனது திருநாமத்தையும் தன்னைக் குறித்த பாசுரங்களையுமே அமுதம் என்று கருதும் அடியார்களான நமக்கு, திருக்குடந்தையில் திருமால் ஆராவமுதனாகக் காட்சி தந்து, ஆராவமுதம் போல் இனிய திருநாமமும் பூண்டு, `ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் துதிக்கப்பட்டு விளங்குகிறார். தேவாமிர்தமே தங்களுக்கு இலக்கு எனக் கருதும் தேவர்களுக்கு அந்த அமுதைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்.

இப்படி அவரவர் விரும்பும் அமுதத்தை அவரவர்க்கு அளித்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதால், திருமால் ‘ஸுகத:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகத:’ என்றால் அமுதம் தந்து மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம்.“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ஆராவமுதைப் பருகி இன்புறும் பேற்றை ஆராவமுதனின் அருளால் பெறுவார்கள்.

461 (B). ஸுஹ்ருதே நமஹ:(Suhrudhey namaha)

துர்வாசர் சாபத்தால் ராஜ்ஜியம், செல்வம், வலிமை அனைத்தையும் இழந்த தேவர்கள் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலை அடிபணிந்து துதித்தார்கள் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அவர்களுக்குத் திருமால் தரிசனம் தந்தார். அவருடைய திருமேனி அழகில் ஈடுபட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய தேவர்கள், அவரது திருவடிகளிலே விழுந்து வணங்கினார்கள்.

“நமோ நமோ விசேஷஸ்த்வம் த்வம் ப்ரஹ்மா த்வம் பினாக த்ருக்
இந்த்ரஸ்த்வம் அக்னி: பவன: வருணஸ் ஸவிதா யம:
த்வம் ப்ரஸாதம் ப்ரஸன்னாத்மன் ப்ரபன்னானாம் குருஷ்வ ந:
தேஜஸா நாத ஸர்வேஷாம் ஸ்வசக்த்யா ஆப்யாயனம் குரு”


“திருமாலே! நீயே கதி என்று உன்னையே நாங்கள் சரணமாகப் பற்றி அடைக்கலம் புகுகிறோம். எங்களுக்கு அனைத்து நன்மை களையும் நீயே செய்தருள வேண்டும்!” என்று சரணாகதி செய்தார்கள். இவர்கள் சரணாகதி அடைந்ததால், அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னித்தார் திருமால். “தேவர்களே! எப்போது என் பாதங்களில் நீங்கள் விழுந்து சரணடைந்து விட்டீர்களோ இனி நான் உங்களுக்கு நண்பன். ஒரு நண்பனாக இருந்து உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் நான் செய்கிறேன்!” என்றார் திருமால்.

“நீங்கள் முதலில் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறுவீர்களாக! அதை உண்டால் நீங்கள் வலிமையும் நீண்ட ஆயுளும் பெற்று அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்றார் திருமால். “வலிமையில்லாத நிலையில் எங்களால் எப்படி இவ்வளவு பெரிய பாற்கடலைக் கடைய முடியும்?” என்று கேட்டார்கள் தேவர்கள். உடனே திருமால், “நீங்கள் அசுரர்களையும் கூட்டு
சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அமுதில் பங்கு தருவதாகச் சொல்லி அழையுங்கள். பின்னால், அமுதம் கொடுக்காமல் ஏமாற்றி விடலாம். இது ராஜநீதிப்படி சரிதான். பசுவைக் காப்பதற்காகப் புலியை வஞ்சிப்பதில் தவறில்லை!” என்று மீண்டும் நண்பனாக இருந்து ஆலோசனை வழங்கினார்.

பாற்கடலை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள் தேவர்கள். மீண்டும் திருமாலே ஆலோசனை சொன்னார். “பச்சிலைகளை இட்டுப் பாற்கடலை நிரப்புங்கள்!” என்றார் திருமால். அவ்வாறே செய்தார்கள் தேவர்கள். மத்துக்கும் கயிறுக்கும் எங்கே போவது என்று சிந்தித்தார்கள் தேவர்கள். திருமாலே கருடனின் தோள் மீது மந்தரமலையைத் தூக்கிவைத்து, அவரே அந்த மலையைத் திருப்பாற்கடலில் மத்தாகக் கொண்டு வந்து நாட்டினார்.

வாசுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றினார் திருமால். அதன் தலைப்பகுதியில் நின்றால் அதன் விஷம் தங்களைப் பாதிக்குமோ என அஞ்சினார்கள் தேவர்கள். திருமால் அங்கேயும் உதவி செய்து அசுரர்களைத் தலைப்பகுதியில் நிறுத்தி தேவர்களை வால் பகுதியில் நிறுத்தி விட்டார். வாசுகி கக்கிய விஷம் அனைத்தும் அசுரர்கள் மேலேயே பட்டது. தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கியபோது, மலை கடலுக்குள் அழுந்தியது. அப்போதும் திருமாலின் உதவியையே நாடினார்கள் தேவர்கள். ஆமைவடிவில் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை முதுகில் தாங்கி அருளினார் திருமால். மேலும், தானே தன்வந்தரியாக அவதரித்து அமுதத்தைக் கொண்டுவந்து அளித்து, மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, அந்த அமுதம் தேவர்களுக்கே கிடைக்கும்படி செய்தார் திருமால்.

இப்படி ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்வது போல், தேவர்களுக்கு நல்ல நண்பனாக இருந்து ஆலோசனைகளும் வழங்கி, அமுதம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் செய்தபடியால் திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நலம்விரும்பியாய் இருக்கும் நண்பர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்

461-வது திருநாமம் .“ஸுஹ்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நண்பராக இருந்து அனைத்து நலங்களையும் திருமால் தந்தருள்வார்.

462 (B). மனோஹராய நமஹ:(Manoharaaya namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளைக் குறித்து அருளிய ``அபர்யாப்தாம்ருத விம்சதி’’ என்னும் துதியிலே ஒரு கவிநயம் மிக்க அற்புத ஸ்லோகம்

“அம்ருதம் அம்ருத! தத்வா மோஹினீ பாவதஸ்த்வம்
கிமிதி பரிணதோபூ: பூருஷஸ் ஸுந்தராங்க:
இதம் இதம் இதி தத்த்வம் ப்ருஷ்டதோ தேவதேவ!
த்வயி விநிஹித த்ருஷ்டிர் வக்த்யஸௌ கும்பநாத:”


கும்பகோணம் திருத்தலத்துக்கு வந்த சிவபெருமான், நகரின் மத்தியில் கோயில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைக் கண்டாராம். குடத்துக்குள் சாரமாக அமுதம் இருப்பது போலே, கும்பகோணம் எனும் குடத்தினுள்ளே ஆராவமுதமாக இனிக்கும் சாரங்கபாணியின் அழகால் ஈர்க்கப்பட்டார் சிவபெருமான். அந்தப் பெருமாள் முன்னே வந்து நின்று தனது இரு கண்களாலும் சாரங்கபாணியின் அழகைப் பருகினாராம். பருகிய நோக்கென்னும் பாசத்தால் ஆராவமுதப் பெருமானை அப்படியே தனது மனத்தினுள்ளே நிலைநிறுத்திக் கொண்டார் பரமசிவன்.

ஆராவமுதனை அப்படியே வலம் வந்து அவனுடைய பின்னழகை ரசிக்கப் புகுந்தார் சிவபெருமான். அந்தப் பின்னழகைப் பார்த்தவாறே பரமசிவன், குடத்துக்குள் உள்ள அமுதம் போலே இங்கே திருமால் விளங்குகிறார். இவரது பின்னழகைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். அது என்ன காட்சி திருப்பாற்கடல் கடைந்து அமுதம் வந்த வேளையில், அந்த அமுதக் குடத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டார்கள். அச்சமயம் அசுரர்கள் கையில் அமுதம் கிடைக்காமல் நல்லவர்களான தேவர்களின் கையில் அது சேர வேண்டும் என்பதற்காக மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.

அந்த மோகினியின் வடிவழகில் அசுரர்கள் மொத்தமாக மயங்கி விட்டார்கள். நான் அமுதைப் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொன்ன மோகினி, கையில் அமுதக் குடத்தை ஏந்தியபடி தேவர்களுக்கு மட்டும் அமுதைக் கொடுத்தாள் என்பது வரலாறு. அந்த மோகினியின் அழகில் பரமசிவனும் மயங்கினார் என்று புராணத்தில் பார்க்கிறோம் அல்லவா?

இப்போது ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளின் பின்னழகைப் பார்த்த பரமசிவனுக்கு, அந்த மோகினியின் அழகுதான் நினைவுக்கு வந்ததாம். “ஓ திருமாலே!  மோகினி அவதாரம் எடுத்த நீ, அப்படியே அந்தப் பெண் வடிவத்தில் இருந்து ஆண் வடிவத்துக்கு மாறி விட்டாய் போலும்! அதுதான் சாரங்கபாணியாகிய உனது இவ்வடிவம் போலும்!” என்று வியப்புடன் சொன்னார் பரமசிவன். இந்தப் பின்னழகை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய பரமசிவன், கும்பேஸ்வரர் என்ற பெயரோடு அப்படியே சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலுக்குப் பின்னே கோயில் கொண்டு அமர்ந்து, ஆராவமுதனின் அழகை ரசிக்கத் தொடங்கினாராம். (கும்பேஸ்வரருக்குப் பிரசித்தமாக வழங்கப்படும் தல வரலாற்றை நாம் மதிக்கிறோம், மறுக்கவில்லை. ஒரு கவியின் கண்ணோட்டத்திலே இக்கருத்து வழங்கப்பட்டுள்ளது.)

கும்பேஸ்வரருக்கு அருகிலிருந்த பார்வதி தேவியான மங்களாம்பிகை, ``என் அண்ணன் சாரங்கபாணியின் அழகில் மயங்கி விட்டீரோ? நீங்கள் மயங்கியதில் வியப்பில்லை. தீய சக்தி களான அசுரர்களே அவரது மோகினி அவதாரத்தைப் பார்த்து மயங்கிய போது, தூய மனத்துடன் எப்போதும் தவத்தில் ஈடுபடும் உங்கள் மனம் அவரது அழகில் ஈடுபட்டதில் வியப்பில்லையே!” என்று பரமசிவனைப் பார்த்துச் சொன்னாராம்.

இப்படி மனத்தூய்மை மிக்கவர்கள் முதல் தொடங்கி, தீய எண்ணம்கொண்ட அசுரர்கள் வரை அத்தனை பேரின் மனங்களையும் தனது மோகினி அவதார வடிவால் மயக்கியதால், திருமால் ‘மனோஹர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 462-வது திருநாமம்.“மனோஹராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் தனது அழகால் கவர்ந்து தன்னிடம் ஈடுபடும்படி அருள்புரிவார்.

463 (B). ஜிதக்ரோதாய நமஹ:(Jithkrodhaaya namaha)

அடியேனும் அடியேனின் ஸ்ரீபாஷ்ய குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியும் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்றோம். அப்போது எங்களோடு வந்த ஒரு நபர், அந்தத் திருக்கோயிலின் பிரம்மாண்ட ராஜகோபுரத்தைச் சுட்டிக் காட்டி, ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியிடம், “இந்தக் கோபுரத்தின் கீழ்த்தளத்தில் கண்ணன் கோபிகைகளோடு புரியும் சிருங்கார லீலைகள் சித்தரிக்கப் பட்டுள்ளனவே! எங்களைப் போன்றவர்களின் பார்வைக்கு முகம் சுளிக்க வைக்கும் சித்திரங்களாக இவை தெரிகின்றன! இந்த அமைப்புக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி அற்புதமான ஒரு பதிலை வழங்கினார்; நம் மனித மனமானது அற்பமான உலகியல் சுகங்களையே நாடிக்கொண்டிருக்கின்றது. நேராக அப்படியே உலகியல் விஷயங்களை விடுத்து இறைவனை நாடு என்று சொன்னால், நம் மனம் அதற்கு உடனே இணங்காது. அதனால் நம் பெரியோர்கள் நம்மைப் பார்த்து, “நீ காதலைத் தானே பார்க்க விரும்புகிறாய்? உலகியல் காதலைப் பார்க்காதே! அந்த தெய்வீகமான இறைவனின் காதலைப் பார்!” என்கிறார்கள்.

இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் காதல் என்பது தெய்வீகமான சிருங்கார ரசம். அது உலகியலுக்கு அப்பாற்பட்டது. உலகியல் காதலில் உள்ள ரஜோகுணம், தமோகுணம் போன்ற தோஷங்கள் ஏதுமே இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் சிருங்கார ரசத்தில் இல்லை. அது உலகியலுக்கு அப்பாற்பட்ட சுத்த சத்துவ மயமாக இருக்கிறது. அதைத் தியானிக்கத் தியானிக்க நம் மனதில் உள்ள அழுக்குகள், ரஜோகுணம், தமோகுணம், பாபங்கள் அனைத்தும் நீங்கி மனத்தூய்மையை நாம் அடைகிறோம்.

அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன், “ஆஸீத் அநுத்யேயதமம் முனீனாம்” - முற்றும் துறந்த முனிவர்களுக்கும் தியானிக்கத் தக்கதாக இறைவன் - இறைவியின் சிருங்கார ரசம் இருக்கிறது என்கிறார். ஆசைகளைத் துறந்த முனிவர்களும் தங்களுக்கு முழுமையான வைராக்யம் கைகூட வேண்டும் என்றால் இந்த சிருங்கார ரசத்தைத் தியானிக்க வேண்டும். அத்தகைய சிருங்கார ரசத்தைக் காட்டி முதலில் நம் மனதைக் கோயில் பக்கம் ஈர்க்கிறார் திருமால். அதனால்தான் கோபுரத்தின் கீழ் தளத்திலே சிருங்கார ரசம் நிறைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

அதன்மூலம் நம் மனதை ஈர்த்தபின் மேலே தனது தெய்வீகப் பேரானந்தத்தில் நம்மை ஆழ்த்துகிறார் பகவான். அதனால்தான் அடுத்தடுத்த மேல் தளங்களில் பகவானின் மற்ற லீலைகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்திருக்கும். கோபுரம் போல் நம் மனதையும் எண்ணங்களையும் உயர்த்த முதல்படியாக சிருங்கார ரசத்தைச் செய்து காட்டுகிறார் இறைவன் என்பதே தாத்பரியம்.

“கோயில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே!
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே!”


என்று திரு. பூவை செங்குட்டுவன் என்னும் கவிஞர் பாடியுள்ளார். நம் எண்ணங்களையும் உள்ளத்தையும் கோபுரம் போல் உயர்த்த வல்லது இறைவனின் சிருங்கார சேஷ்டிதம். மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களைத் திருமால் மயக்கினார் அல்லவா? அதன்மூலமும் இந்தத் தத்துவத்தையே உணர்த்தினார். நம் மனமே பாற்கடல். அதில் உள்ள நல்ல எண்ணங்கள் தேவர்கள், தீய எண்ணங்கள் அசுரர்கள். வேதம் என்னும் மத்தைக் கொண்டு, இறையருள் என்னும் கயிற்றால் நம் மனமாகிய பாற்கடலைக் கடைந்தால், ஜீவாத்மா - பரமாத்மா பற்றிய அமுதமயமான ஞானம் ஏற்படும். அந்த ஞானமாகிய அமுதம் தீய எண்ணங்களாகிய அசுரர்கள் கையில் கிட்டாமல் நல்ல எண்ணங்களாகிய தேவர்கள் கையில் கிடைக்கவே மோகினி வேடம் தரிக்கிறார் திருமால். அதாவது, தனது தெய்வீக சிருங்கார ரசத்தால் அசுரர்களாகிய நம் தீய எண்ணங்களை மயக்கி, நல்லெண்ணங்கள் அமுதமயமான ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறார்.

இந்த விளக்கத்தை ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி அருளியவாறே, கேள்வி கேட்ட நண்பர் தெளிவுபெற்று நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். தேவர்களுக்கு அமுதம் கிடைத்துவிடக்கூடாது என்று அசுரர்கள் கோபத்துடன் அவர்களைத் தாக்கப் பார்த்தார்கள். ஆனால், மோகினியாக பகவான் தோன்றி அவர்களை மயக்கியவாறே, அவர்களின் கோபம் மொத்தமாக அடங்கிவிட்டது. இதுபோலத்தான் நமது மனதில் எழும் தீய எண்ணங்களையும் தனது அழகைக் காட்டி சாந்தப்படுத்தி நீக்குகிறார் திருமால். இப்படி அசுரர்களின் கோபத்தை வென்றதால் ‘ஜிதக்ரோத:’ என்று திருமால் அழைக்கப்படு கிறார். ‘க்ரோத’ என்றால் கோபம், ‘ஜிதக்ரோத:’ என்றால் தேவர்கள் மீது அசுரர்கள்கொண்ட கோபத்தை வென்றவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 463-வது திருநாமம்.“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனதில் தீய எண்ணங்கள் எழாதபடி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!