×

கண்பார்வை அருளும் ஆனையூர் விநாயகர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆனையூர் - கோயம்புத்தூர் மாவட்டம்

வினைகள் அகற்றும் விக்னேஸ்வரனை துதித்து போற்றியவர் பலர். சப்த ரிஷிகளும் தேவர்களும் விநாயகப் பெருமானே உன் பக்தர்கள் அறுகம்புல் மாலை அணிந்து வர வேண்டும் பிரார்த்தனையை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஆமோதித்து அருளிய அறுகம்புல் பிரியரான ஆனை முகன், தன் மீது நம்பிக்கை கொண்ட பக்தருக்கு மனமிரங்கிய தலம் ஆனையூர். பழங்காலத்தில் ஆனையூர் பகுதியில் வாழை, கரும்பு என விளைச்சல்கள் நிறைந்த விவசாய பூமியாக இருந்த போது யானைகள் அடிக்கடி வந்து முகாமிட்டிருந்ததாம். இப்பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் யானையை ‘‘ஆனை” என்று அழைத்திடுவது வழக்கம்.

இதனால் இந்த ஊரின் பெயர் ஆனையூர் என வழங்கப்படுகிறது. ஊரில் நூறாண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேறத் துவங்கும்போது விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள ஒருவருக்கு திடீரென ஏதோ காரணத்தால் கண் பார்வை பறிபோனதால் செய்வதறியாது திகைத்தார். நான் என்ன பாவம் செய்தேன். நன்றாக தெரிந்த கண் இப்படி பறிபோய்விட்டதே என இத்தல விநாயகரிடம் வந்து மாதக் கணக்கில் முறையிட்டு வழிபட்டுள்ளார். உற்றார், உறவினர்கள் வேறு எங்கெங்கோ வைத்தியம் பார்க்க செல்லுமாறு அவரிடம் அறிவுரை கூற, அந்த பக்தரோ நான் இந்த விநாயகரை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.

அவரிடமே தான் தினமும் முறையிடுவேன் என அடம் பிடித்து, கணேசா எனக்கு கண் பார்வை தா என உரத்த குரலில் முறையிடுவதை தொடர்ந்துள்ளார்.தன் மீது அளவுகடந்த நம்பிக்கையை வைத்துள்ள இந்த பக்தனை இனியும் சோதிக்கக் கூடாது என வினைகளை தீர்த்திடும் விநாயகப் பெருமான் நினைத்தாரோ என்னவோ அந்த பக்தருக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்து விட்டதாம்.

விநாயகப் பெருமானின் அருள்மழையில் அகம் மகிழ்ந்த அந்த பக்தர் தும்பிக்கையுடைய விநாயகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்தால் எல்லா நற்காரியமும் சித்தியாகும் என்ற கூற்று பொய்த்துப் போகாது என மற்ற பக்தர்களிடம் சிலிர்ப்புடன் கூற அவர்களும் அதை ஆமோதித்துள்ளனர். பக்தருக்கு கண் பார்வை அருளிய நிகழ்வுக்கு பின்னர் இத்தல விநாயகப் பெருமானுக்கு கண் தந்த சித்தி விநாயகர் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

பின்னர் பக்தர் ஒருவர் மேடை அமைத்திட, அங்கு விநாயகப்பெருமானை பிரதிஷ்டை செய்து சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். பக்தருக்கு கண் தந்த கணநாதனின் மகிமை சுற்று வட்டார பகுதிகளுக்கும் பரவ வெளியூர் பக்தர்களும் அவ்வப்போது வந்து வழிபட்டுள்ளனர். இத்தல விநாயகப் பெருமானுக்கு கருவறை, மகா மண்டபம், சுற்று தெய்வங்களுக்கு தனித்தனி சந்நதிகள் அமைத்து கடந்த 2016-ம் ஆண்டு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

கிழக்கு நோக்கிய ஆலயத்தில் நுழைந்ததும் மகாமண்டபத்தில் பலிபீடம்,மூஷிக வாகனத்தின் காட்சியும், பால விநாயகர், பால முருகன் தரிசனமும் கிடைக்கின்றது. கருவறையில் மூலவர் கண் தந்த சித்தி விநாயகர் வந்த வினையும், வல்வினையும் தீர்க்கும் வல்லவராக அருள்பாலிக்கிறார். இவரை மனமுருக அறுகம்புல் சாற்றி வேண்டி தொழில் அபிவிருத்தி,கல்வியில் உயர்ந்த நிலை, உடல் நலமும்,மன அமைதியும் அடைந்தவர்கள் ஏராளம்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,சிவ துர்க்கை ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. பரிவார தெய்வங்களாக கன்னிமூல கணபதி ராகு, கேதுவுடன் அருள்பாலிக்கிறார். நவநாயகர்கள் தனி சந்நதியில் தரிசனம் தருகின்றனர். தலவிருட்சமான அரச மரத்தடியில் ராகு, கேதுவின் தரிசனம் கிடைக்கின்றது. தினந்தோறும் காலை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

மாத சிறப்பு வழிபாடாக சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை ஆகிய விரத தினங்களில் அபிஷேக,அலங்காரங்கள் முடிந்து தீபாராதனை நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம்     பெரும்பகுதி குறையும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

விநாயகர் சதுர்த்தி நாளில் கண் தந்த சித்தி விநாயகருக்கு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமாகிறது. பால் மற்றும் அபிஷேக திரவியங்களால் அபிஷேகம், அலங்காரங்கள் முடிந்து தீபாராதனை நடைபெறுகிறது. இந்த நாளில் நீங்களும் குடும்பத்தோடு ஆனையூர் கண் தந்த சித்தி விநாயகரை தரிசனம் செய்து வாழ்வில் கணநாதன் அருளால் வளம் பெற்றிடுங்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் - சிறுமுகை சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள ஆனையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆனையூர் அரசுப் பள்ளி செல்லும் வழியில் சற்று தூரம் சென்றால் இத்தலம் உள்ளது.

தொகுப்பு: சென்னி வீரம்பாளையம் செ.சு. சரவணகுமார்

Tags : Anaiyur Vinayagar ,
× RELATED திருவேங்கடமுடையானின் தாகத்தை தீர்த்தவர்