×

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்!

விநாயகர் சதுர்த்தி 31-8-2022

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர்கள், நிவேதனங்கள் விசேஷம். பெருமாளுக்கு துளசி. சிவபெருமானுக்கு வில்வம். பராசக்திக்கு வேப்பிலை. விநாயகருக்கு அறுகம்புல்.

உலகம் வாழத் தகுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அறுகம்புல் என்ற தாவரம் வளர வேண்டும். உயிரினத்தின் அடிப்படை அறுகம்புல்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

என்று சிவபுராணத்தில் மாணிக்க வாசகர் பாடுகின்றபோது முதல் உயிரினமாக புல்லைத்தான் குறிப்பிடுகின்றார். புல் என்னும் தாவரம் எங்கும் இருக்கக் கூடியது. விநாயகர் எங்கும் இருக்கக் கூடியவர். அதனால்தான் அது விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

எளிமையானது என்பதால் அதை அலட்சியப்படுத்தமுடியாது. அறுகம்புல்லின் ஆற்றலையும் பலனையும் அலட்சியப்படுத்த முடியாது. பிள்ளையார் வழிபாடு எளிமையானது. முதன்மையானது. அதே நேரத்தில் அந்த வழிபாட்டின் பலன் அற்புதமானது. அதனால்தான் நம்முடைய சமய வழிபாட்டு முறையில் எளிமையான அருகம் புல்லையும், எளிமையான பிள்ளையாரையும் இணைத்தார்கள்.

அறுகம்புல் அற்புதமான தாவரம். மழை இல்லாமல் எத்தனை ஆண்டுக்காலம் வாடினாலும் அது இறந்துவிடாது. சிறு மழைத்துளிகள்மண்ணில் பெய்தாலும் மறுபடியும் பசும்
புல் தலை காட்ட ஆரம்பித்து விடும். எத்தனையோ சோதனைகள் வரலாம். ஏக்கங்கள் இருக்கலாம். போராட்டங்கள் இருக்கலாம். மனம் வாடிப் போகலாம். ஆனால், விழுந்துவிடக் கூடாது.

சிறு மழைத் துளியாய் பசும்புல் மறுபடியும் வீறு கொண்டு எழுவதைப் போல நமக்கான காலம் வருகின்ற பொழுது நாம் வீறுகொண்டு எழவேண்டும். அதற்கான மன ஆற்றலைத் தருவதும், மனக்குழப்பத்தை நீக்குவதும் பிள்ளையார் வழிபாடு. அந்தப் பிள்ளையாருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடுகின்ற வழிபாட்டு முறை இந்த உணர்வைத்தான் தரவேண்டும். அறுகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும், குளிர்ச்சித் தன்மையும் உடையது.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல்புண்களை ஆற்றும், இரத்தத்தைத் தூய்மையாக்கும். உடலை பலப் படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். அறுகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதி பொருள் உள்ளன. அறுகம்புல் ஏன் பிள்ளையாருக்கு பிடித்தமானதாக இருக்கிறது என்பதற்கு ஒரு கதை உண்டு.
கால தேவனாகிய எமனின் பிள்ளைக்கு அனலன் என்று பெயர். அவன் அசுரன். ஒரு கடுமையான வரத்தைப் பெற்று இருந்தான்.

ஜுரம் போல அவன் யாருடைய உடம்பிலும் புகுந்து அவர்கள் சக்தியை தனக்குள் இழுத்துக் கொண்டு அவர்களைச் சக்கையாக்கி விடுவான். இதனால் தேவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். அனலனை வீழ்த்துவதற்கான வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் விநாயகரிடம் சென்று தங்கள் குறையைச் சொல்லி அழுதனர். அவர்களைக் காப்பதற்காக அனலனொடு அவர் போர்புரிந்தார்.

ஒரு கட்டத்தில் அனலனை, அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டார். அனல் போல் கொதிக்கும் அனலன் விநாயகரின் வயிற்றுக்குள் சென்றதால் விநாயகரின் மேனி தகிக்க ஆரம்பித்தது. இந்த உலகமே அவருடைய திருமேனியில் இருப்பதால், அந்தக் கொதிப்பு உலகத்தையும் தாக்கியது. ஒரு துன்பத்தில் இருந்து இன்னொரு துன்பம் வந்துவிட்டதாக தேவர்கள் மயங்கினார். குளிர்ச்சியான பொருட்களால் அபிஷேகம் செய்து விநாயகரின் திருமேனியை குளிர்விக்க நினைத்தாலும் முடியவில்லை.

சந்திரன் தன்னுடைய குளிர்ந்த ஒளிக்கதிர்களை விநாயகரின் திருமேனியில் செலுத்தி குளிரவைக்க முயன்றான். ஆனாலும் கொதிநிலை தணியவில்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அறுகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது.

அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடும் முறை பிறந்தது. அறுகம்புல்லை ஆரோக்கியப்புல் என்கிறார்கள். அருகு, பதம், மூதண்டம் தூர்வை, (தூர்வா கணபதி விரதம் என்று ஒரு விரதமே இருக்கிறது.) மேகாரி என்று பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. சித்த வைத்தியத்தில் இது மிகச்சிறந்த மருந்து. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது. சித்தர்கள், விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது.

அறுகம்புல் சாறு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவது. அறுகம்புல் பறித்து தண்ணீரில் நன்கு அலசி சாறு எடுத்து அருந்தலாம். அறுகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்து அறுகம்புல் சாறு. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

கண் நோய் அகலும். அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொறி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும். நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும். அறுகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். இவைகளெல்லாம் உடல் ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட விஷயங்கள்.

உள்ள ஆரோக்கியம் அதை விட முக்கியம் அல்லவா. விநாயகரை வழிபடுவதன் மூலமாக மனம் பலப்படும். மனக்குழப்பங்கள் நீங்கும். அச்சம் அகலும். தெளிவு பிறக்கும்.
அறுகம்புல்லால் புறக்கண் பார்வை பெறுவது போல, விநாயகரை வழிபட்டால் அகக்கண் பார்வை தெளிவாகும். அகமும் புறமும் அற்புதம் பெறும். எனவேதான்,  அறுகம்புல்லை ஆனைமுகத்தோன் வழிபாட்டில் சேர்த்தார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அறுகம்புல் நோயெதிர்ப்பு சக்தியைத் தருவது. விநாயகர், வினை எதிர்ப்பு சக்தியைத் தருகின்றார்.

முனைவர் ஸ்ரீராம்

Tags : Anaimugan ,Arukampul ,
× RELATED ஆனைமுகனின் அறுபடை வீடுகள்