×

அகிலம் முழுதும் ஆனைமுகத்தானின் வழிபாடு

* சீனாவில் கி.பி., 513ல் யானைமுகக் கடவுளின் பழைய சிலை ஒன்று `குர் ரங்’ என்ற ஊரில் காணப்படுகிறது.

* ஜப்பானில் யானை முகக் கடவுளை `தாயி ஷோ தென்’ என்ற பெயரில் மிகப்பெரிய கடவுள் என்ற பொருளில் அழைக்கின்றனர். `தாயி’ என்றால் ஜப்பான் மொழியில் பெரியது என்று பொருள். `தென்’ என்றால் ஜப்பானியரின் பழைய சமயமான `ஷிந்தோ’ சமயத்தில் தெய்வம் என்று பொருள்படும். இவர் அங்குக் காதலர்களை சேர்த்து வைக்கும் தெய்வமாகவும், (வள்ளி திருமணம் நினைவுக்கு வருகிறதா!) மூத்தவர்களுக்குத் தொழிலில் நல்ல லாபம் பெற்றுத்தரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இவருக்குக் `காங்கி தென்’ என்ற பெயரும் உண்டு. காங்கி தென் என்ற பெயரில் திசை களின் காவலராக விளங்கும் காவல் தெய்வம் இவர். (அஷ்ட திக் கஜங்கள் நினைவுக்கு வருகிறதா!) கி.பி., 6ஆம் நூற்றாண்டு முதல் இவர் ஜப்பானில் வழிபடும் தெய்வமாக இருந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் ஜப்பானில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது.

* நேபாள நாட்டில் யானை முகக்கடவுளை, பெண் வடிவில் கணேஷினியாக வணங்குகின்றனர். இந்த கடவுளுக்கு நெற்றியில் பிறைச் சந்திரன் போன்ற திலகம் வரையப்பட்டுள்ளது. அந்த நாட்டில், புத்தர்சிலை அருகில் யானைமுகக் கடவுள் சிலை காணப்படுகிறது. மகா காலனின் அடியில் இருக்கும் சிலைகளும் இங்குண்டு. இந்த நாட்டில் மகா காலன் முக்கியத் தெய்வமாக வணங்கப்படுவதால், அவனுக்கருகில் மற்றொரு முக்கியத் தெய்வமாக யானைமுகக் கடவுள் காணப்படுகிறார். இவரை இங்குக் கோயிலின் முன்வாசலில் காவல்தெய்வமாக வைத்தும் வணங்குகின்றனர். இவர் கையில் கமண்டலம், மோதகம், கோடரி, திரிசூலம் ஆகியவை
உள்ளன.

* கம்போடியா நாட்டில் யானைமுகக் கடவுள் மூன்று கண்களும், ஒற்றைத் தந்தமும் கொண்டு காட்சியளிக்கிறார். கைகளில் கமண்டலமும், திருவோடும் வைத்துள்ளார். இவரது பெயர் பிராஹ்கணேஷ்.

* ஜாவா தீவுகளில் யானை முகக் கடவுளைக் கல்விக் கடவுளாக வணங்குகின்றனர். ஆற்றங்கரையில், சுயம்புமூர்த்தியாக இவர் உருவாகி இருப்பதாகக் கருதுகின்றனர். இவருடைய தோற்றம் இங்கு விசித்திரமாக இருக்கும். மொட்டைத் தலையும் உடையாத தந்தமும் கொண்டிருப்பார். மண்டை ஓடும் எலும்பு மாலையும் அணிந்திருப்பார். கையில் கோடரி மற்றும் கரண்டியும் கொண்ட உருவத்தில் இவரை இங்கு வணங்குகின்றனர்.

* எகிப்துநாட்டில் போர் மற்றும் அமைதியின் கடவுளாக யானை முகக் கடவுள் ஒருவர் வணங்கப்படுகிறார். சொர்க்கத்தின் சாவி இவர் கையில் இருக்கின்றது.

* நேபாளநாட்டில் விநாயகருக்கு 23 மூஞ்சூறு வாகனங்கள் உண்டு. புத்தரின் சீடரான ஆனந்தனுக்கு `கணபதி ஹிருதயம்’ என்ற மந்திரத்தை விநாயகர் அருளினார் என்ற நம்பிக்கை இந்த நாட்டில் நிலவுகிறது. இங்கு மக்கள் கணபதி ஹிருதயம் மந்திரத்தைச் சொன்ன பிறகே எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவர். கணபதி ஹிருதயம் மந்திரத்தை சொல்லியே நேபாளிகள் அறுவடைப் பணியை ஆரம்பிக்கின்றனர். இந்த நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள ஒரு கோயிலில், நாகம் குடைபிடிக்க ஆறு கைகளைக் கொண்ட விநாயகர் காணப்படுகிறார்.

* தாய்லாந்தில் உலகின் மிக உயர்ந்த விநாயகர் சிலை உள்ளது.

முனைவர் செ.இராஜேஸ்வரி

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்