×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)

(திருநாமங்கள் 456 [ஸுவ்ரத:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை - நர நாராயண அவதாரம்)ஒரு மனிதனுக்கு நான்கு நண்பர்கள் இருந்தார்களாம். அவர்களுள் முதல் நண்பன், இந்த மனிதன் மீது மிகவும் அன்பு காட்டி அவனுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்துவந்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளாத அந்த மனிதன், முதல் நண்பனைக் கண்டுகொள்ளாமலேயே தனது வாழ்வை நடத்தி வந்தான்.

இரண்டாவது நண்பன் இந்த மனிதனுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் உதவி செய்து கொண்டும், ஆலோசனைகள் வழங்கிக் கொண்டும் இருந்தான். அந்த ஆலோசனைக்காகவும் உதவிகளுக்காகவும் அந்த நண்பனிடம் நட்பு பேணி வந்தானே ஒழிய, அவன் மீது இந்த மனிதனுக்கு முழுமையான அன்பு இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாவது நண்பன் மிகப்பெரிய செல்வந்தன். அந்தப் பணத்தின் மீதுள்ள ஆசையாலே அந்த நண்பனிடம் இந்த மனிதன் நட்பு பாராட்டினான். அந்த நண்பனிடம் வேறு யாராவது நட்பு கொண்டால் கூட அவர்களும் அவனது செல்வத்தைப் பெற்று விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அந்த நண்பனோடு இவன் பழகிவந்தான்.

நான்காவது நண்பன், இவனுக்குப் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும், இந்த மனிதனோடு கூடவே இருந்து முகத்துதி பாடிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த நான்காவது மனிதன்தான் தனக்கு அனைத்து வித நன்மைகளும் செய்யக்கூடியவன் என்று கருதிக் கொண்டு, ஆத்மார்த்தமாக அந்த நான்காவது நண்பனை நேசித்தான் இந்த மனிதன்.

இந்நிலையில், இந்த மனிதனின் மரணக் காலம் வந்தது. யம தூதர்கள் வந்து அவன் மீது பாசக் கயிற்றை வீசினார்கள். தான் மிகவும் நேசித்த நான்காவது நண்பன் தான் தன்னோடு வருவான் எனக்கருதி அவனை அழைத்தான் மனிதன். வர மறுத்தான் நான்காவது மனிதன். மூன்றாவது நண்பனை அழைத்தான். அவனும் வரவில்லை. இரண்டாவது நண்பனை அழைத்த போது, அவனும் மறுத்தான். ஆனால், இவன் அழைக்காமலேயே முதல் நண்பன் மட்டும் அவனுக்கு உதவியாக உடன் வந்தான். “நீ எங்கே சென்றாலும் நான் உன்னோடு வருவேன்! உன்னை விடமாட்டேன்! நான் உனக்குச் செய்த நன்மைகளை நீ உணராவிட்டாலும் நான் நன்மை செய்வேன்!” என்றான் முதல் நண்பன்.

யார் அந்த மனிதன்? யார் அந்த நண்பர்கள்? அந்த மனிதன்தான் ஜீவாத்மா (நாம் அனைவரும்). நான்காவது நண்பன் நமது உடல். நாம் வாழும்போது, இந்த உடல்தான் நமக்கு எல்லாம் என்று கருதிப் புறஉடலில் கவனம் செலுத்தி வாழ்கிறோம். ஆனால், இறுதிக் காலத்தில் யமன் நம்மைக் கொண்டு செல்லும் போது இந்த உடல் நம்மோடு வருவதில்லை.

மூன்றாவது நண்பன்தான் நமது செல்வம். வாழ்நாள் முழுவதும் பணத்தின் உதவி நமக்குத் தேவை என்று கருதிப் பணத்தைச் சேர்த்து வைக்கிறோம். பிறர் அதைக் கொண்டு செல்லாமல் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், மரணித்தபின் அந்தப் பணம் நம்மோடு வருவதில்லை. இரண்டாவது நண்பன், நமது சொந்தங்களும் நண்பர்களும். உதவியும் ஆலோசனையும் வழங்கி சுற்றமும் நட்பும் உயிர் பிரியும் தறுவாயில் வருந்துவார்களே ஒழிய, உடன் வர மாட்டார்கள். ஆனால், நாம் கண்டுகொள்ளாத அந்த முதல் நண்பன்தான் இறைவன். நாம் அவனை மறந்தாலும், அவன் நம்மை மறவாது நமக்குள் நம்மோடு நமது நண்பனாக உடன் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் எல்லாவித நன்மைகளையும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நமக்கு நன்மைகளை செய்து கொண்டேயிருக்கிறான். என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணைநிற்கும் ஒரே நண்பன் அவன்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாக, உற்ற நண்பனாக இருக்கும் அந்த இறைவன், உலக நன்மைக்காக நர நாராயணர்களாக அவதாரம் செய்து உலக நன்மைக்காகத் தவம் புரிந்தான். அதனால் நர நாராயண அவதாரம் செய்த திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நல்ல மனம் படைத்த நண்பர் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல மனம் கொண்ட நண்பனாகிய திருமால் ‘ஸுஹ்ருத்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 461வது திருநாமம்.“ஸுஹ்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சிறந்த நண்பனாக இருந்து அனைத்து நன்மைகளையும் செய்தருள்வார்.

462. மனோஹராய நமஹ (Manoharaaya namaha)

ஒரு ஊரில் ஒரு பெரிய கலவரம் நடந்தது. அச்சமயம் அந்த ஊரில் இருந்த கலவரக்காரர்கள் அவ்வூர் கோயிலுக்குள் சென்று, அங்குள்ள விக்கிரகத்தை வெளியே கொண்டு வந்துதரையில் போட்டு உடைத்தார்கள். இக்காட்சியை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் பார்த்தான், சிந்திக்கத் தொடங்கினான். “தங்களது பிரார்த்தனை எல்லாம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்தத் தெய்வத்திடம் எல்லோரும் வந்து வேண்டுகிறார்கள்.

தங்களைக் காக்க வேண்டும் என்று மக்களால் வேண்டப்படும் தெய்வத்துக்குத் தன்னைக் காத்துக் கொள்ளக் கூட சக்தியில்லையே! அதனால் தானே கலகக்காரர்கள் இந்தச் சிலையை உடைத்து விட்டார்கள்! அப்படியானால் கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் உள்ளானா? இல்லையா? நாம் செய்யும் வழிபாடுகள் உண்மையில் இறைவனைச் சென்று சேர்கின்றனவா? இல்லையா? பல கோயில்கள் பல ஊர்களில் இருக்கும்போது, எந்த ஊரில் எந்தக் கோயிலில் உண்மையில் இறைவன் இருக்கிறான்?” என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவரை அண்டித் தனது சந்தேகங்களை விண்ணப்பித்தான் அந்த இளைஞன். அவர் இளைஞனிடம், “கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் இல்லை. அவை இறைவனை நினைவூட்டும் சின்னங்களே!” என்றார். “அப்படியானால் நாம் சமர்ப்பிக்கும் பொருள்களை இறைவன் ஏற்பானா? மாட்டானா?” என்று கேட்டான் இளைஞன். “அதெல்லாம் இறைவன் ஏற்கமாட்டான். ஒரே நேரத்தில் பொள்ளாச்சியில் ஒருவரும் செங்கல்பட்டில் ஒருவரும் அர்ப்பணிக்கும் பொருள்களை எப்படி இறைவனால் ஏற்க முடியும்?” என்றார் பெரியவர்.

“அப்படியானால் இறை வழிபாட்டுக்கு என்ன தான் பலன்?” என்று கேட்டான் இளைஞன். “நீ சுவர்க்கம் போவதற்காக ஒரு வேள்வி செய்கிறாய் என்று வைத்துக்கொள்! உடனே சுவர்க்கம் போய் விடுவாயா? இல்லை. நீ செய்யும் வேள்வி அபூர்வம் என்பதை உருவாக்கும். அந்த அபூர்வம் மற்றொரு அபூர்வத்தை உருவாக்கும். இது சங்கிலித் தொடராகத் தொடர்ந்து, பரம அபூர்வம் என்பதை உருவாக்கி, பின்னாளில் அது வேண்டிய பலனாகிய சுவர்க்கத்தைத் தரும்.

அதுபோலத்தான் இறைவழிபாடு செய்யும்போது, அபூர்வம் ஒன்று உருவாகும். அது சங்கிலித் தொடராகப் பெருகி அதுவே பலன் தந்துவிடும். அதனால், இறைவழிபாடு வீண்போவதில்லை!” என்றார். இதைக் கேட்ட இளைஞன், தனக்கு ஏதோ நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என எண்ணி இறைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினான். ஆனால், அவன் மனதில் பக்தியோ பெரிய நம்பிக்கையோ இல்லை.

ஆனால் அடிக்கடி கோயிலுக்குச் செல்வதால், நாளடைவில் கோயிலில் உள்ள இறை வடிவத்தை வெறும் குறியீடு என்று ஏற்க அவன் மனம் மறுத்தது. மேலும், நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் இறைவனைச் சென்று அடையாது என்றும், அவை ஏதோ அபூர்வத்தை உருவாக்கும் என்றும் பெரியவர் சொன்ன கொள்கைகளிலும் ஏதோ பிழை இருப்பதாக உணர்ந்தான் இளைஞன். அதனால், அதே ஊரில் வடமொழி வேதம், தமிழ்மறை அனைத்தும் கற்ற ஒரு பெரியவரை அணுகி விளக்கம் கேட்டான்இளைஞன். அவர், “கோயிலில் இருப்பவன் சாட்சாத் இறைவனே. நம்மைக் காக்க ராமனாகவும், கண்ணனாகவும் அவதரித்த அதே பகவான்தான், நம்மைக் காக்கத் திருக்கோயில்களில் அர்ச்சாவதாரமாகத் தோன்றியுள்ளான்.

இறைவன் பல வடிவங்களை எடுக்கவல்லவன். ஒரே நேரத்தில் பத்ரிநாத்தில் ஒருவரும், மதுரையில் மற்றொருவரும் வழிபாடுசெய்தாலும், அந்தந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவ்வழிபாட்டை ஏற்பான். கோயிலில் எழுந்தருளும் போது, அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை நமக்குத் தருவதற்காகவே தன்னைக் குறைத்துக் கொண்டு நம் கைப்பாவையாக, நம் கையை எதிர்பார்த்து இருக்கிறான். அவன்மீது ஊர்கின்ற புழுபூச்சிகளைக் கூட அகற்ற முடியாதவன் போல், நாம் அகற்ற வேண்டும் என எதிர்நோக்கி இருப்பது அவன் எளிமையால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதே.

கோயிலில் உள்ள விக்கிரத்தை யாரோ நாத்திகர் உடைத்ததால், இறைவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதனால் அதைப் பொருட் படுத்தாமல் உதாசீனனாக அவன் இருந்து விடுகிறான். அதே சமயம் உள்ளார்ந்த பக்தியுடன் வரும் அடியார்களிடம் வாய் திறந்து பேசவும், உறவாடவும் செய்வான்!” என்று விளக்கினார். “ஆஹா சுவாமி! இந்த விளக்கத்தை அடியேனுக்கு முன்னமே இறைவன் காட்டி இருக்கலாமே! நான் வேறொருவரிடம் சென்று வேறு விதமான விளக்கத்தைப் பெற்றுக் குழம்பிப் போனேன்! உங்களால்தான் தெளிவுபெற்றேன்!” என்றான் இளைஞன்.

அப்போது அந்தப் பெரியவர், “இல்லை குழந்தாய்! இளமைத் துடிப்புடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் உனக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த ஆழ்ந்த வேதக் கருத்தைச் சொன்னால் புரியாது. அதனால், உன்னைப் பக்குவப் படுத்தவே அந்தப் பெரியவரிடம் இறைவன் உன்னை அனுப்பி வைத்தான். அவரது விளக்கங்களால், அதுவரை கோயிலுக்கே செல்லத் தயங்கிய நீ, முதல்முறையாக ஏதோ ஒருவித எண்ணத்துடன் கோயிலுக்கு வந்துவிட்டாய். நீ கோயிலுக்கு வந்தபின், உன் மனதில் மேலும் சில கேள்விகளை எழவைத்து என்னிடம் அனுப்பி வேதாந்தக் கொள்கையை உணர்த்தி, உன்னை முழு பக்தனாக ஆக்கிவிட்டான் பகவான்.

இது அத்தனையுமே அவன் உனக்குச் செய்த நன்மைகள். இவை மட்டுமன்றுஎத்தனையோ பிறவிகளுக்கு முன்பு, நீ ஒரு புல்லாகவோ, பூண்டாகவோ, ஈயாகவோ, எறும்பாகவோ இருந்திருப்பாய். அப்போது முதல் இறைவன் உனக்குப் படிப்படியாகப் பல நன்மைகள் செய்து செய்து உன்னைப் பகுத்தறிவு உள்ள மனிதனாக ஆக்கியுள்ளான். நீ கேட்காமலேயே உனக்கு இவ்வளவு நன்மைகள் செய்தவன் இறைவன்!” என்றார்.

இதைக் கேட்டவாறே இறைவன் மீது அந்த இளைஞனுக்குப் பேரன்பு ஏற்பட்டது. திருக்கோயிலுக்குள் ஓடிச்சென்று இறைவன் முன்னே நின்று அழத் தொடங்கினான். “அறியாக் காலம் தொட்டு அடியேன் மீது அன்பு வைத்து இத்தனை நன்மைகள் புரிந்திருக்கிறாயா நீ?” என்று கதறி அழுதான். அவன் மனம் மொத்தமாக இறைவன்பால் ஈடுபடத் தொடங்கியது. இப்படி அடியார்களுக்கு நன்மைகள் பல செய்து, அதன்மூலம் அவர்கள் மனங்களைத் தன்பால் ஈர்ப்பதால், ‘மனோஹர:’ என்றுதிருமால் அழைக்கப்படுகிறார்.

நர நாராயண அவதாரத்திலும், நமக்காகத் தவம்புரிந்து அதன் மூலம் நம் மனங்களை ஈர்த்ததால் ‘மனோஹர:’ என்று பகவானுக்குத் திருநாமம். ‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 462வது திருநாமம்.“மனோஹராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் கவர்ந்தருள்வார்.

463. ஜிதக்ரோதாய நமஹ (Jithakrodhaaya namaha)

சாட்சாத் சுவாமி என்ற பெரியவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் விடியற்காலையில் காவிரியிலே நீராடுவதுவழக்கம். நீராடிவிட்டுச் சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, காவிரிக் கரையில் தமது அனுஷ்டானங்களைச் செய்துவிட்டு, அரங்கனை வழிபடுவதற்காகச் செல்வார். அவரது நடவடிக்கைகளை அப்பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்கள் கவனித்து வந்தார்கள். அவருக்கு எப்படியாவது கோபத்தை உண்டாக்கி அதன்மூலம் தாங்கள் மகிழ வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கருதினார்கள். அதனால் தங்கள் குழுவில் உள்ள ஒரு இளைஞனைத் தேர்ந்தெடுத்து, “நாளை அவர் நீராடிவிட்டு வரும் போது நீ அவர் மீது எச்சில் துப்ப வேண்டும்!” என்று சொன்னார்கள். அவனும் சரி என்று ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் விடியற்காலை சாட்சாத் சுவாமி காவிரியில் நீராடி விட்டுக் கரைக்கு ஏறினார். இந்த இளைஞன் திட்டமிட்டபடி அவர் மீது எச்சில் துப்பினான். மற்ற இளைஞர்கள் அங்கே ஒளிந்திருந்து, சாட்சாத் சுவாமி கோபப்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், சாட்சாத் சுவாமியின் முகத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை. துளி கூட கோபம் இல்லாமல், அமைதியாக மீண்டும் காவிரிக்குச் சென்று நீராடினார்.

நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பிய சாட்சாத் சுவாமியின் மீது  மீண்டும் எச்சில் துப்பினான் இளைஞன். மீண்டும் அவர் காவிரிக்குப் போய் நீராடினார். மீண்டும் எச்சில் துப்பினான். மீண்டும் நீராடி விட்டு வந்தார்.அவரது பொறுமையைக் கண்டு வியந்த இளைஞன், அடுத்த முறை அவர் கரைக்கு வந்த போது அவரது பாதங்களில் விழுந்து, “சுவாமி! அடியேனை மன்னிக்க வேண்டும்! உங்களிடம் இவ்வளவு அபச்சாரப்பட்டேனே! அடியேன் மீது உங்களுக்குக் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.

சாட்சாத் சுவாமி, “உன் மீது ஏனடா நான் கோபப்படவேண்டும்? உனக்கு நான் நன்றி தானே சொல்ல வேண்டும்! உன்னால்தான் காவிரியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முறை நீராடும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது? இப்போது ஐப்பசி மாதம் வேறு! துலா காவிரி ஸ்நானம் அவ்வளவு விசேஷம் தெரியுமா?நன்றிகள் பல!” என்றார்.“சுவாமி! சிலரின் தவறான வழிகாட்டுதலாலே தவறு செய்து விட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்! உங்களுக்குக் கோபமே வராதா?” என்று கேட்டான் இளைஞன்.

அதற்கு சாட்சாத் சுவாமி, “நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தால், நாம் உடனே யோசிக்காமல் அவர்மீது நமது எதிர்வினையைச் செலுத்துகிறோம். அதுதான் தவறு. ஒருவர் தீங்கு செய்தாலும், சற்றே நிதானித்துக்கொண்டு அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு நிதானித்து அனைத்திலும் உள்ள நன்மையைப் பார்க்கத் தொடங்கினால் கோபம் வராது. நர நாராயணர்களாகத் திருமால் அவதரித்து, பத்ரிநாத்தில் தவம் புரிந்தார். அப்போது இந்திரன், பல தேவ மாதுகளை அனுப்பி அவர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். அப்போது, நர நாராயணர்கள் இந்திரன்மீது கோபப்படவில்லை. மாறாக, ஊர்வசி என்னும் தேவமாதைத் தன் தொடையில் இருந்து உருவாக்கி, இந்திரனுடைய தேவலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார் பகவான்!” என்றார்.

“சுவாமி! அடியேன் இனி உங்களுக்கு மெய்காப்பாளனாக இருக்கிறேன். ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால்சொல்லுங்கள். என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது!” என்றான். “அப்படியானால், காவிரியின் இந்தப் படித்துறையை நன்றாகச் செப்பனிட்டு நீ கட்டிக் கொடுத்தால், பலருக்கும் பயன்படும்!” என்றார் சாட்சாத் சுவாமி. அதன்படி இன்று அம்மா மண்டபம் என்று அழைக்கப்படும் அந்தப் படித்துறையை அந்த இளைஞன் செப்பனிட்டுக் கட்டிக் கொடுத்தான்.

இப்படித் தனக்குத் தீங்கு செய்ய நினைப்பவர் மீது கோபம் கொள்ளாமல் இருந்து, கோபத்தை வெல்லவேண்டும் என்று உலகுக்கு உணர்த்திக் காட்டியவர் நர நாராயணர். அதனால்தான் நர-நாராயண பகவானுக்கு ‘ஜிதக்ரோத:’ என்று பெயர். ‘ஜிதக்ரோத:’ என்றால் கோபத்தை வென்றவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 463வது திருநாமம். “ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் மனங்களில் கோபம் எழாதபடி பகவான் அருள்புரிவான்.

464. வீரபாஹவே நமஹ (Veerabaahavey namaha)


(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை - தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு) ஆழ்வார்களில் கடைக்குட்டியாக அவதரித்த திருமங்கை ஆழ்வார், திருவரங்கநாதனை மங்களாசாசனம் பண்ணும்பொழுது அற்புதமான ஒரு பாசுரம் பாடுகிறார்.

மாயிருங் குன்றம் ஒன்று மத்து ஆக
மாசுணம் அதனொடும் அளவி


பாயிரும் பௌவம் பகடு விண்டு அலறப் படுதிரை விசும்பிடைப் படரசேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்பஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானேஇந்தப் பாசுரத்திலே பகவான் ரங்கநாதன் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி, மொத்தப் பிரபஞ்சமும் அலறும்படியாக, யானையின் பிளிறல் ஓசை போல் கம்பீரமாக ஒலி பரவும்படி, திருப்பாற்கடலில் எழுந்த அலைகள் சுவர்க்கம் வரை தெளிக்கும் விதமாக, அத்தகைய வேகத்தோடும் ஆற்றலோடும் திருப்பாற்கடலைக் கடைந்தார் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

மேலும், தனது ஆயிரம் தோள்களால் திருமாலே திருப்பாற்கடலைக் கடைந்ததாகவும், இதில் ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். அவன் கடைந்த விதத்தைப் பார்த்துத் தேவர்கள், முனிவர்கள், சூரியன், சந்திரன் என அத்தனை பேரும் வியந்து போனார்களாம். தேவர்களும், அசுரர்களும் தானே திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்? திருமால் கடைந்ததாக இங்கே ஆழ்வார் பாடுகிறாரே என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். தேவர்களும் அசுரர்களும் தான் முதலில் கடைந்தார்கள். ஆனால் துர்வாசர் சாபத்தால் வலிமை இழந்திருந்த தேவர்களால் தொடர்ந்து கடைய முடியவில்லை. அவ்வாறே வாசுகியின் விஷம் பட்டு வலிமை இழந்தஅசுரர்களாலும் தொடர்ந்து கடைய முடியவில்லை.

இதைக் கண்ட திருமால், நாமே கடைவோம் என்று முடிவெடுத்து, தேவர்கள் மத்தியில் ஒரு உருவத்தோடும் அசுரர்கள் மத்தியில் மற்றோர் உருவத்தோடும் தோன்றினார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். ஏற்கனவே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையை முதுகில் தாங்கிநிற்கும் நாராயணன், இப்படியும் இரு வடிவங்கள் கொண்டாராம்.இப்படித் திருமால் தன் கையால் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கியவாறே, பேரொலி உண்டானதாம். அந்த ஒலியைத் திருவாய்மொழியில் நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.

ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அரவு
ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே


கடலில் கலக்கும் ஆறுகள் எதிர்த்திசையில் சென்று மலையில் மோதிய ஒலியும், வாசுகி பாம்பும் மந்தர மலையும் உரசும் ஒலியும், கடல்நீர் சுழல்கின்ற ஒலியும் மூன்றும் சேர்ந்து ஒரே நேரத்தில் பேரொலியாக ஒலிக்கப் பாற்கடலைக் கடைந்தார் திருமால். அனைத்தும் சரி, ஆனால் ஆயிரம் தோள்களால் திருமால் பாற்கடலைக் கடைந்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் சொல்கிறதே. திருமாலுக்கு நான்கு கைகள் தானே என்று நமக்குத் தோன்றலாம். நான்கு திருத்தோள்களால் தான் திருமால் கடைந்தார். ஆனால், அவர் கடைந்த வேகத்தில் அந்த நான்கு திருக்கைகள் ஆயிரம் திருக்கைகள் போல் தெரிந்தனவாம்.

அதாவது, நம் வீடுகளில் உள்ள மின்விசிறிகளில் மூன்று அல்லது நான்கு இறக்கைகளே இருக்கும். ஆனால் மின்விசிறி வேகமாகச் சுற்றுகையில் அவை பல இறக்கைகள் போலத் தெரியும். அத்தகைய வேகத்தில் திருமால் கடைந்தார் என்பதைக் குறிப்பிடவே, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.

பாஹு என்றால் தோள் என்று பொருள். வீரபாஹு: என்றால் வலிமை மிக்க தோள்களை உடையவர். திருப்பாற்கடலை வேகமாகவும், பேரொலி எழும் வகையிலும் கடைந்து அமுதை எடுத்த வலிமை மிக்க தோள்களை உடைய திருமால் வீரபாஹு : என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 464வது திருநாமம்.வீரபாஹவே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல வலிமையோடு வாழும்படித் திருமால் அருள்புரிவார்.

465. விதாரணாய நமஹ (Vidhaaranaaya namaha)

திருப்பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தபோது, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற மிகப்பெரிய போட்டி எழுந்தது. திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்போது திருமால் மோகினி என்னும் பெண் வடிவம் பூண்டார். அழகிய தோற்றம் கொண்ட அந்த மோகினி, தன் அழகால் அசுரர்களை மயக்கி விட்டாள். அமுதின் மேல்பகுதி வெறும் சக்கைஎன்றும் அடிப்பகுதியே சாறு என்றும் சொன்ன மோகினி, “நானே அவரவருக்கு ஏற்றபடிபிரித்துத் தருகிறேன்!” என்று கூறினாள். அவளது அன்பைச் சம்பாதிக்க விரும்பிய அசுரர்கள் அவள் சொன்னதை அப்படியே தலை ஆட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

முதலில் சக்கையான மேல்பகுதியைத் தேவர்களுக்கு அளிக்கப் போகிறேன் என்று சொன்ன மோகினி, தேவர்களுக்கு அமுதை வழங்கத் தொடங்கினாள். அசுரர்கள் அவள் அழகில் மயங்கியபடி அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுவர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் சூரியன் சந்திரன் ஆகிய இரு தேவர்களுக்கும் நடுவே தேவர் வேடத்தில் வந்து நின்று கொண்டான்.

“தேவ லிங்க ப்ரதிச்சன்ன: ஸ்வர்பானு: தேவஸம்ஸதி
ப்ரவிஷ்டஸ் ஸோமம் அபிபத் சந்த்ர அர்க்காப்யாம் ச ஸூசித:”


என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம். மோகினி கொடுத்த அமுதை அந்த சுவர்பானும் வாங்கி உண்டு விட்டான். ஆனாலும், தேவன் வேடத்தில் இருந்த அந்த அசுரனைச் சூரியனும் சந்திரனும் அடையாளம் கண்டு, மோகினி வடிவில் இருந்த திருமாலிடம் காட்டிக் கொடுத்தார்கள். உடனே மோகினி,

“சக்ரேண க்ஷுரதாரேண ஜஹார பிபதச் சிர:”
என்கிறபடி, தனது கூரிய சக்ராயுதத்தால் அவனது தலையைக் கொய்துவிட்டாள்.


அவனது உடல்பகுதிக்கு அமுதம் இன்னும் செல்லவில்லை என்றாலும் தலைப்பகுதிஅமுதத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. அதனால் வெட்டப்பட்ட தலை மரணம் அடையாமல் அப்படியே இருந்தது. அவன்மீது கருணை கொண்ட பிரம்மா, ஒரு பாம்பின் உடலை அவனது தலையோடு ஒட்ட வைத்தார். அவனை ஒரு கிரகமாக, ராகு என்ற பெயருடைய ஒரு கிரகமாக பிரம்மதேவர் ஆக்கினார். சூரியனும் சந்திரனும் தன்னைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற கோபத்தில் கிரகணக் காலங்களில் சூரியனையும் சந்திரனையும் ராகு விழுங்கிவிட்டு அதன்பின் விடுவிக்கிறான்.
இந்த வரலாறு நமக்கு ஒரு முக்கியத் தத்துவத்தை உணர்த்துகிறது. திருப்பாற்கடல் என்பது நம் மனம்.

அதிலிருந்து எழுந்த அமுதம்தான் நம் மனதில் எழுகின்ற பரமாத்மாவைப் பற்றிய ஞானம். அச்சமயம் இறைவன் அந்த ஞானமாகிய அமுதை நம் நல்லெண்ணங்களாகிய தேவர்களிடம் தர முயல்கிறார். அமுத மயமான ஞானத்தை நல்லெண்ணங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால், நாம் உய்வடையலாம். ஆனால், அப்போதும் கூட சுவர்பானு என்ற அசுரன் வந்தது போல், சில தீய எண்ணங்கள் எழுந்து நம் அமுதமயமான அறிவை வேறு பக்கம் திசைதிருப்பப் பார்க்கின்றன. அவனது தலையைச் சீவிய பின்னும் அவன் சூரியனை விழுங்கப் பார்ப்பது போல், எவ்வளவு தான் பல தீய எண்ணங்களை நாம் அழித்தாலும், ஒரு சில தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து நம் மனதைக் கலைக்கப் பார்க்கின்றன.

சூரியனை ராகு விழுங்குவது போல் நம்புத்தியையும் தீயஎண்ணங்கள் அடிக்கடி விழுங்க முயல்கின்றன. ராகு சூரியனை விழுங்கினாலும், அதிலிருந்து சூரியன் விரைவில் வெளிப்படுவது போல், நம் புத்தியை எத்தனை தீய எண்ணங்கள் கலைத்தாலும், நாம் இறைவனைச் சரணடைந்து அவன் அருளையே எதிர்நோக்கி இருந்தோமானால், நிச்சயமாக அந்த இறை அருளால் தீய எண்ணங்கள் அனைத்தையுமே நாம் வென்று, அவற்றிலிருந்து வெளிவந்து பக்தியில் ஈடுபட்டுப் பரமனை அடைய முடியும்.

இதை உணர்த்தவே சுவர்பானு என்ற அசுரனின் தலையைச் சீவிக் காட்டினார் திருமால். அதுபோல் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் வெட்டுபவர் அவர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தீய சக்திகளை வெட்டுவதால், திருமால் விதாதா - வெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 465வது திருநாமம். விதாத்ரே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனதில் எழும் எல்லாத் தீய எண்ணங்களையும் திருமால் வெட்டி அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!