×

இளைஞரின் உறுதிமிகு கடவுள் நம்பிக்கை

(தானியேல் 1:1-17)

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

பொதுவாக இளைஞர்களை முதியோர் அவ்வளவு உயர்வாக நடத்துவதில்லை. சில வேளைகளில் பெற்றோர், வயதுக்கு வந்த தமது மகன் அல்லது மகளை வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் அறிமுகம் செய்யும்போது அவர்களைத் தரம் இறக்கியும், நகைப்புக்குள்ளாக்கியும் அறிமுகம் செய்வதுண்டு. ஆனால், இளைஞர்கள் மிகவும் துடிப்பானவர்கள். விரைவாக சிந்தித்து, விரைவாக செயல்படுகின்றவர்கள்.

மாற்றி யோசிப்பவர்கள், மாற்றத்தை நேசிப்பவர்கள். துணிவுமிக்கவர்கள், கடுமுயற்சிகளில் களமிறங்குபவர்கள். பெற்றோர் மீதுள்ள பாசத்தைத் தேக்கிவைத்து வெளிப்படுத்தத் தெரியாமல் திணறுபவர்கள். கடவுள்பக்தியும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள் என்பது முதியவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்து பிறப்புக்கு முன், ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்நேசர் யூதா நாட்டை வீழ்த்தி சுமார் 10,000 பேரை சிறைபிடித்துச் சென்றான். “ஒருவரின் உடலை சிறை வைக்கலாம்.

அவரது சிந்தனையை அல்ல” என்பதற்கு ஒப்ப சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள், அரசியல் உரிமைகளற்று வாழ்ந்த போதும் தங்கள் கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல் மன உறுதியோடு எந்தத் துன்பத்தையும் ஏற்கத் துணிந்தார்கள் என்பதைத்தான் தானியேல் புத்தகம் எடுத்தியம்புகிறது. சிறைபிடிக்கப்பட்ட யூதர்களில் தானியேல் எனும் இளைஞர் அறிவும், இலக்கியத்தில் தேர்ச்சியும்கொண்டதோடு கனவுகளை விளங்கச்செய்யும் ஞானம் உடையவராகவும் இருந்தார் (தானியேல் 2:17).

திறமையுள்ளவர்களை ஆட்சியில் தமக்கு உதவியாக வைத்துக்கொள்ளும் வழக்கமுடைய அரசர் தானியேலுக்கு முக்கியப் பொறுப்புகளை அளித்தார். தானியேலும் அவருக்கு அளிக்கப்பட்டப் பொறுப்புகளில் நேர்மையோடும், ஊழல் ஏதுமின்றி நடந்து கொண்டார். (தானியேல் 6:4 )

இப்படி வேற்று நாட்டைச் சேர்ந்தவன் அதுவும் சிறைபிடிக்கப்பட்ட ஒரு அடிமை உயர் அரசபதவியில் இருப்பதை சில பாபிலோனியர் விரும்பவில்லை. தானியேலைப் பதவி இறக்கம் செய்யவும் தண்டிக்கவும் சதித் திட்டம் தீட்டினர். சரியானதொரு சூழலைப் பயன்படுத்தி அரசரிடமிருந்து ஒரு அரசாணை பெற்றனர். அதன்படி முப்பது நாட்களுக்கு அரசரைத் தவிர வேறு யாரிடமோ அல்லது வேறு எந்தக் கடவுளிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்யக்கூடாது என்றும் இதை மீறுவோர் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடவுள் நம்பிக்கையையும், சமய ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து வந்த தானியேல் தமது வழக்கத்தின்படி மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்திவந்தார். (தானியேல் 6:10). தானியேலுக்கு எதிராக இயங்கி வந்த பாபிலோனியர்கள் இதைக் கண்டுபிடித்து அரசஉத்தரவுக்குக் கீழ்படியாதவரை சிங்கக்குகைக்குள் தள்ளி தண்டிக்க அரசரை வற்புறுத்தினர்.

தானியேல் மீது நன்மதிப்பு கொண்டிருந்த அரசருக்கு இதில் விருப்பமில்லை என்ற போதிலும் அவர்களின் வற்புறுத்துதலுக்குப் பணிந்து தானியேலை சிங்கக் குகைக்குள் தள்ள அனுமதித்தார். இருப்பினும் நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக என்று தானியேலுக்கு வாழ்த்து கூறினார். காலையில் அரசரே  நேரில் சென்று தானியேல் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்று அவரை விடுவிக்கக் கட்டளையிட்டார்.

தானியேலுக்குத் தீங்கிழைக்க நினைத்தவர்களை அவர்கள் குடும்பத்துடன் சிங்கக்குகைக்குள் தள்ளித் தண்டித்தார். அதுமட்டுமல்ல என் ஆட்சிக்குட்பட்ட நாடுமுழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை என அறிவித்தார். (தானியேல் 6:26).

இவ்வாறு தானியேல் எனும் இளைஞர் எத்தகைய கொடிய தண்டனைக்கும் அஞ்சாமல் தாம் வணங்கும் கடவுளுக்கு உண்மையாக இருந்து தமது பக்தியை வெளிப்படுத்தினார். தானியேல் மன்றாடுகையில் நாங்கள் எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம் (தானியேல் 9:18) என்று கடவுள்முன் தம்மைத் தாழ்த்தினார். இளைஞர்களிடம் முதியவர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதற்கு தானியேலின் வாழ்க்கை நல் எடுத்துக்காட்டாக அமைகிறது.

Tags : God ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?