×

நடிகை ஜெசிகா தற்கொலை விவகாரம் ஐ-போனில் உள்ள ஆதாரங்களால் சிக்குகிறார் இயக்குநர் : தடயவியல் சோதனைக்கும் சென்றது, போலீசார் நடவடிக்கை

சென்னை: நடிகை ஜெசிகா தற்கொலை விவகாரத்தில், மாயமான ஐ-போனில் உள்ள ஆதாரங்களின் படி காதலனான இயக்குநருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ-போனில் அழிக்கப்பட்ட சில வீடியோக்களை மீட்க தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் தீபா(எ) ஜெசிகா பவுலின்(29). இவர்  சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் வாய்தா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி நடிகை ஜெசிகா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், தனது தங்கை தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், தனது தங்கை பயன்படுத்திய போன் ஐ-போன் மட்டும் மாயமாகி உள்ளது. அந்த போனை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினால், எனது தங்கையின் தற்கொலைக்கான காரணம் தெரியும் என்று நடிகை ஜெசிகாவின் சகோதரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, கோயம்பேடு போலீசார் நடிகை ஜெசிகாவின் ஐ-போன் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 17 ம் தேதி நடிகை தற்கொலை செய்து கொண்ட அன்று இயக்குநர் சிராஜூதீன் நண்பர் பிரபாகரன் போலீசார் உடலை கைப்பற்றிய போது உடன் இருந்தார். எனவே அவரிடம் மாயமான ஐ-போன் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பிரபாகரன், எனக்கும் நடிகை தற்கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை. இயக்குநர் சிராஜூதீன் கூறியதால்தான் நான் அவர் வீட்டிற்கு சென்றேன். நடிகையும் இயக்குனரும் காதலித்து உண்மை தான். இயக்குநர் தான் நடிகை ஜெசிகாவுக்கு  ஐ-போனை வாங்கி கொடுத்தார். அதேநேரம், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் என்னை தொடர்பு கொண்டு நடிகையிடம் கொடுத்த ஐ-போனை வாங்கி வர சொன்னார். அதன்படி நான் நடிகையிடம் சில நாட்களுக்கு முன்பே அவரை நேரில் சந்தித்து ஐ-போனை வாங்கி வந்தேன் என்று விசாரணையில் பிரபாகரன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட ஐ-போனை சைபர் க்ரைம் உதவியுடன் கோயம்பேடு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நடிகையுடன் இயக்குநர் நெருங்கிய தொடர்பில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. சில வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நடிகையுடன் இயக்குநர் மணிக்கணக்கில் இரவு நேரங்களில் பேசியதும் தெரியந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து இயக்குநரை கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். எனவே, இயக்குநருக்கு எதிராக ஐ-போனில் இருந்து சைபர் க்ரைம் போலீசார் ஆதாரங்களை மீட்டாலும், அதை சட்டப்படி உறுதி வேண்டும். இதனால் மீட்கப்பட்ட ஐ-போனில் உள்ள விபரங்களின் உண்மை தன்மை குறித்தும், அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தடயவியல் துறை மூலம் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் போலீசார் உள்ளனர். இதனால் மீட்கப்பட்ட ஐ-போனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகை ஜெசிகா தற்கொலை தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரி கோயம்பேடு போலீசார் சார்பில் இயக்குநர் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. ஆனால், சம்மன் அனுப்பி 5 நாட்கள் ஆகியும் அவர், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை காரணம் காட்டி காரைக்குடியில் இருப்பதாக போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் கடத்தி வருகிறார்.* நடிகை வீட்டில் இருந்த 26 சவரன் நகை எங்கே?நடிகை ஜெசிகா தனது வாடகை வீட்டில் 26 சவரன் தங்க நகைகள் வைத்திருந்ததாக அவரது உறவினர்கள் தற்போது போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகை ஜெசிகா தற்கொலைக்கு பிறகு அவரது வீட்டில் இருந்த 26 சவரன் நகை மாயமாகி உள்ளது. எனவே நடிகை ஜெசிகா தற்கொலையில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் நபர் இல்லை. தைரியமானவர் என்தால் தான் தனி நபராக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திராவில் இருந்து சென்னை வந்து தங்கி சினிமாவில் நடித்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகை வீட்டில் இருந்து மாயமான 26 சவரன் தங்க நகைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post நடிகை ஜெசிகா தற்கொலை விவகாரம் ஐ-போனில் உள்ள ஆதாரங்களால் சிக்குகிறார் இயக்குநர் : தடயவியல் சோதனைக்கும் சென்றது, போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Jessica ,Forensic ,Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!