×

ஆவணி மாத கிரக நிலைகள்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

அனைத்து நவகிரகங்களுக்கும் நாயகன் என்ற பெருமை பெற்ற சூரியன், அவரது ஆட்சிவீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே “ஆவணி மாதம்” என்றும் “சிரவண மாதம்” எனவும் பூஜிக்கப்படுகிறது, ராகு, கேது தவிர்த்து, மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனிடமிருந்தே தங்கள் தேஜஸைப் (ஒளி - சக்தி) பெறுவதாக “சூரிய சித்தாந்தம்” என்ற புகழ்பெற்ற புராதன நூல் விளக்கியுள்ளது.

சூரியனுக்கு “பித்ரு காரகர்” என்ற தனிச் சிறப்பு உண்டு! காலஞ்சென்ற நம்முடைய மூதாதையர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம், திதி பூஜை, நைவேத்தியம் செய்யும் விசேஷ படையல்களையும் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சூரியனே!! ஆதலால்தான், சூரியனை “பித்ரு காரகர்” என அனைவரும் பூஜிக்கின்றனர். நமது பூமியை சதா வலம் வரும் ஆதவன், சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவர். காஸ்யப மகரிஷியின் புத்திரரான சூரியனுக்கு, “ஆதவன்”, “கதிரவன்”, “பாஸ்கரன்”, “ஆதித்யன்”, “ரவி” எனப் பல பெயர்களுண்டு.

சுவர்ணமயமான (தங்கம்) ரதத்தில், இவர் தினமும் வலம் வந்துகொண்டேயிருக்கிறார். இவரது ரதத்தை ஓட்டும் சாரதியான, “மாதலி”, கருடனின் மூத்த சகோதரர் ஆவார். மாதலியின் தாய் அதிதி. தர்ம சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்களையறிந்த சிலரில் சூரியனும் ஒருவர். நவக்கிரகங்களில் அளவற்ற வீர்யம் (சக்தி) படைத்த சனி, சூரியனின் புத்திரர் ஆவார். சூரியனின் தர்மபத்தினி சாயாதேவி.

மந்திரங்களில் உயர்ந்த “காயத்ரி” மந்திரத்திற்கு உரியவர் சூரியனே. ஆதலால், நவக்கிரகங்களில் “ஆத்மகாரகர்” எனவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளார் ஆதவன்!!
ஜோதிடக் கலையில், சூரியனின் ஆட்சி ராசி, சிம்மம் ஆகும். உச்ச ராசி மேஷம். நீச்ச வீடு துலாம். சந்திரன், குரு, செவ்வாய் மூவரும் நட்புக் கிரகங்களாவர். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று  நட்சத்திரங்களுக்கும் நாயகன் சூரியனே!

ஆத்ம பலம், சருமம், நரம்பு மண்டலம், இதயம், ரத்தம் ஆகியவை சூரியனின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன என ஆயுர் வேத சாஸ்திரமும், சரகஸம்ஹிதையும் சுஷ்ருதர் ஸம்ஹிதையும் விளக்கியுள்ளன. ரிக் மற்றும் யஜுர் வேதங்கள், சூரியனின் பெருமைகளை விவரிக்கின்றன. ஆத்ம, பித்ருகாரகரான சூரியன், தன் ஆட்சிவீடான, சிம்மராசியில் பிரவேசிக்கும் ஆவணியில்தான், ஸ்ரீகண்ணன் அவதரித்தான். அவனது அவதாரத்தைப் படிப்பது, பாவங்களைப் போக்கும்; புண்ணியத்தை அள்ளித்தரும்!!

ஆவணி 3, வெள்ளிக்கிழமை (19-8-2022)

தர்மத்தை உலகில் நிலைநாட்ட பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த மகத்தான புண்ணிய தினம். கண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா! மன்னன் உக்கிரமசேனனின் மகனும் இளவரசனுமாகிய கம்சன் மதுராநகரை ஆட்சி புரிந்துவந்தான். அவனது கொடுங்கோல் ஆட்சியினால், மக்கள் சொல்லொண்ணாத் துயரத்துடன் வாழ்ந்துவந்தனர்.

அனைவரையும் கொடுமைப்படுத்துவதிலும், துன்பப்படுத்துவதிலுமே இன்பத்தைக் கண்டுவந்த கம்சனுக்கு மிகவும் பிரியமான சகோதரி, அன்பும், பண்பும் மிகுந்த தேவகி இருந்தாள்! அவளிடம் தன் உயிரையே வைத்திருந்தான்!! தனது பாசமலர் தங்கையின் திருமணத்தை, ஊரே மெச்சும் வண்ணம் நடத்தி வைத்து, மாப்பிள்ளையாகிய வசுதேவரையும், தன் தங்கையாகிய தேவகியையும் தன் தேரில் அமர வைத்து, புக்ககத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க, தேரைச் செலுத்தும் சமயம் வானத்திலிருந்து அசரீரி ஒலித்தது, “மூடனே!” என்றதுதான் தாமதம், தேரை நிறுத்திவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தான்!!

தன்னைத்தான் யாரோ கூப்பிடுகிறார்கள் எனத் தீர்மானமாக எண்ணினான்! அந்த அசரீரி மேலும் தொடர்ந்தது,  “திருமணக் கோலத்திலிருக்கும் உனது தங்கையின் வயிற்றில் பிறக்கும் 8-வது மகன் உன்னைக் கொல்வான்!” என்றதும் திடுக்கிட்டு, மதியிழந்து, புதுமணத் தம்பதியர் என்றும் தன் பாசமிகு தங்கை என்றும் பாராமல், தன் உடைவாளை எடுத்து, தங்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்து, தலையைத் துண்டிக்கவும் எத்தனித்தான்.

உடன் வசுதேவர், கம்சனின் பாதங்களில் பணிந்து, “திருமணக் கோலத்திலிருக்கும், உன் அருமைச் சகோதரியும் எனது மனைவியுமாகிய தேவகியைக் கொல்லலாமா? மேலும், அசரீரிப்படி, 8வது குழந்தையினால்தானே உனக்கு ஆபத்து? மற்ற குழந்தைகளால் அல்லவே பிறக்கும் குழந்தைகளனைத்தையும் உன்னிடம் கொணர்ந்து கொடுத்துவிடுகிறேன்!” எனக் கூறக் கேட்டதும், சற்றே மனச் சமாதானமடைந்து, கொல்லாமல் இருவரையும், மதுராபுரிக்கே அழைத்துக்கொண்டுசென்று, தனது அந்தப்புரத்து வீட்டுக் காவலில் சிறை வைத்தான்.

தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் தரையில் அடித்துக் கொன்றான், கம்சன்! ஏழாவது பிறக்கவிருந்த கர்ப்பத்தை, எடுத்துச்சென்று வசுதேவரின் மற்றொரு மனைவியும் கோகுலத்தில் வசித்து வந்தவளுமான ரோகிணியின் வயிற்றில் - கர்ப்பப்பையில் குழந்தையை வைத்துவிட்டார்கள்.  இந்தக் குழந்தையே பிற்காலத்தில் பலராமர் என்றழைக்கப்பட்டார். ஏழாவது குழந்தை கர்ப்பம் கலைந்துவிட்டதாகக் கம்சனுக்குச் செய்தி அனுப்பினர், சிறைக்காவலர்கள்! எட்டாவதாக மீண்டும் கர்ப்பமானாள், தேவகி!!  

இம்முறை தன் தங்கையைக் காண வந்த கம்சன், தன் தங்கையின் முகத்தில் இருந்த அபரிமிதமான, கண்களைக் கூசக்கூடிய தேஜஸை (ஒளி) கண்டு பிரமித்தான். மனத்திற்குள்ளாக நினைத்துக்கொண்டான், நிச்சயமாக இந்தக் குழந்தைதான் தன்னைக் கொல்லப்போகிறது என ஊர்ஜிதம் செய்துகொண்டான். சிறைச் சாலைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது!!

குழந்தை பிறந்த மறுவிநாடி தனக்கு செய்தி அனுப்பும்படி கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது! பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, வசுதேவர்-தேவகி தம்பதியினரின் கனவில் தோன்றி, தான் அவதரிக்கப்போவதையும் தன்னை, கோகுலத்தில் உள்ள யசோதைக்குப் பெண் குழந்தை பிறக்கவுள்ளதையும், தன்னை கோகுலத்திற்கு  எடுத்துச் சென்று வைத்துவிட்டு, அங்கு பிறந்துள்ள பெண்குழந்தையை எடுத்துவந்துவிடுமாறு பணித்தார், இறைவன்!

வசுதேவர், குழந்தையை ஒரு கூடையில் சுமந்து செல்ல, கைவிலங்குகள் தானாக அவிழ்ந்தன; பூட்டிய சிறைக் கதவுகள் திறந்து வழிவிட்டன; சிறைக் காவலர்கள் குரட்டைவிட்டு, அயர்ந்து, மயங்கிக்கிடந்தனர்! மழைத் துளிகள் கண்ணனை நனைத்துவிடாமலிருக்க, ஸ்ரீஆதிசேஷன் குடையாகப் பாதுகாத்தான். யமுனா நதியின் அலைகள் சற்றே மேலே உயர்ந்தனவாம், பகவானின் திருவடியை ஸ்பரிக்க எத்தனித்ததாம்! வசுதேவர் பகவானை ஸ்மரிக்க, இருபுறமும் இருகரையாக நடுவில் பாதையாக நதிநீர் விலகி வழிவிட்டாள், யமுனாநதி! கோகுலத்தை வந்தடைந்தார், வசுதேவர்!!

யசோதைக்கு அப்போதுதான் பச்சிளம் பெண்குழந்தை பிறந்து அனைவரும் உறக்கத்திலிருந்தனர். வசுதேவர், தன்னிடமிருந்த குழந்தையை (ஸ்ரீகிருஷ்ண பெருமானை), யசோதையின் பக்கத்தில் வைத்துவிட்டு, அவளருகே இருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்துவிட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கே திரும்பிவிட்டார்.

அவர் சிறை அறைக்குள் சென்றதும், கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன! மதுராவில் தேவகிக்கு குழந்தை பிறந்த விஷயம் கம்சனின் காதுகளுக்கு எட்டியது! உடனே சிறைச்சாலைக்கு வந்துசேர்ந்தான்; குழந்தையைத் தருமாறு கேட்டான்! அவளோ தர மறுக்க, கோபமடைந்த கம்சன், குழந்தையின் கால்களைப் பற்றி இழுத்து சுவரில் ஓங்கி அடிக்க முற்பட்டான்.

குழந்தையோ, அவன் கைகளிலிருந்து நழுவி அந்தரத்தில், பன்னிரு திருக்கரங்களுடனும், துர்க்கா தேவியாகக் காட்சியளித்து, “உன்னைக் கொல்லக்கூடிய, தேவகியின் மைந்தன் கோகுலத்தில் இருக்கின்றான், நானே உன்னைக் கொல்ல முடியும்; ஆனால், தெரிந்தோ தெரியாமலோ என் பாதங்களைப் பற்றினாய்! என்னடி பணிவாரைக் காப்பேனேயன்றி, கொல்ல மாட்டேன்!” எனக் கூறி மறைந்தாள். கண்ணன் பல லீலைகளைச் செய்து, கம்சனை வதைத்து, தன் தாய் - தந்தையரை சிறையிலிருந்து விடுவித்தான். பாரதப் போரில் கீதையை உபதேசித்தான்; பீஷ்ம பிதாமகரை சகஸ்ரநாமம் சொல்ல வைத்தான். ஜகத் (உலகின்) குருவானான்.

ஆவணி 15, புதன்கிழமை (31-8-2022)

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடர்கள் அனைத்தையும் தகர்த்தெறியும் ஸ்ரீவினாயகப் பெருமானின் அவதார தினம். அம்பிகை உமா மகேஸ்வரி, கைலாயத்தில், திருமஞ்சனமாடும் சமயத்தில் தனக்குக் காவலுக்காக, ஒருவரை நியமிக்க நினைத்தாள். தனக்கு வைக்கப்பட்டிருந்த மஞ்சனத் திரவியங் களில் சந்தனம், மஞ்சள் பொடிகளைக் கலந்து கங்கை நீர் தெளித்து, தன் திருக்கரங்களினால் உருண்டையாகப் பிடித்து வைத்து, அதற்கு உயிரையும் கொடுத்தவுடன், அழகிய குழந்தையாக, வட்ட முகத்துடனும், சுருண்ட, அடர்ந்த கேசங்களுடனும், குழிவிழும் மாம்பழக் கன்னங்களுடனும், குமிழ்ச் சிரிப்புடனும், கொவ்வைச் செவ்வாயுடனும், உருவெடுத்த அக்குழந்தையிடம், தான் மஞ்சனமாடப் போவதாகவும், யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாமென்றும் கட்டளையிட்டுச் சென்றாள்.

சப்த ரிஷிகளும், தேவர்களும், முனி சிரேஷ்டர்களும் அக்குழந்தையின் முகலாவண்யத்தையும், நேர்த்தியான புருவ அமைப்புகளும், அலைபாயும் “துரு, துரு”வென கண்களும், ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்துடன்கூடிய தேஜஸையும் கண்டு, “யார் இந்தப் பிள்ளை?, யார் இந்தப் பிள்ளை?” எனத் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு நகர்ந்தனர்.

அவ்வாறு கேட்டதனாலேயே அவருக்குப் “பிள்ளையார்” எனப் பெயர்க் காரணமாக அமைந்தது! திருக்கைலாய எம்பெருமான், உமயவளைக் காண வந்தபோது, தாய் நீராடிக்கொண்டிருப்பதாகவும், யாரையும் அனுமதிக்கக் கூடாதெனவும் கூறியுள்ளதைச் செவியுற்றுக் கடுங்கோபமுற்ற கைலாய எம்பெருமான், சிறு பாலகனாகிய பிள்ளையாரின் தலையைக் கொய்துவிட்டார். இச் செய்தியைக் கேள்வியுற்ற உமையவள் மீளா சோகத்திலாழ்ந்ததை உணர்ந்த கையிலயம்பதி, தன் பூதகணங்களை அழைத்து, “வட திசையில் யார் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாலும் அவர்களின் தலையைக் கொய்துவரும்படி உத்தவிட்டார்.

அதன்படி, பூதகணங்களும் பல்வேறு திக்குகளுக்கு விரைந்தனர். ஓரிடத்தில் ஒரு யானை, வட திசையை நோக்கியவாறு படுத்துக்கிடந்ததைக் கண்ட அவர்கள், அதன் தலையை மட்டும் எடுத்துவந்து சிவபெருமானிடம் தர, அந்தத் தலையை சிவபெருமான், பாலகனின் உடலில் பொருத்த, துயிலிலிருந்து எழுவதைப் போல பாலகன் உயிர்பெற்று எழுந்து அனைவரையும் வணங்கி நின்றார். சிவபெருமான் - அம்பிகை உமாபதியுடன் அவரை வாழ்த்தினர்.

விநாயகப் பெருமான் பலவித லீலா விநோதங்களைச் புரிந்து, பக்தர்களின் விக்கினங்களைப் போக்கும் கலியுக வரதனாக, எங்கும் நிறைந்தவராக, ஏகாந்த தாரணியாகவும் அனைவருக்கும் சர்வ மங்களங்களையும் அளித்தருளும் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த புண்ணிய தினம்.

ஆவணி 22, புதன்கிழமை (7-9-2022)

பகவான், ஸ்ரீமந் நாராயணன், உலக நன்மைக்காக வாமனராக அவதரித்து, அவர்தம் திருப்பாதங்களின் ஸ்பரிசத்தினாலேயே பரமபவித்ரமான கங்கையும் அவதரித்த அரிய புனித தினமாகும். தனது குருவின் துணையுடன் மிகப் பெரிய, யாராலும் செய்ய முடியாத விஷ்வஜித் யாகத்தைச் செய்தார் மன்னர் மாபலிச் சக்கரவர்த்தி. அவ்வேள்வியின் மூலம் கிடைத்த பல்வேறு தெய்வீக ஆயுதங்களுடனும், ஸ்வர்ணத்தினாலான தேரிலேறி மூவுலகையும் தன்கொற்றக் குடைக்கீழ் கொணர தேவலோகமாகிய அமராவதியை நோக்கி விரைந்தான், மன்னன் பலி! இதையறிந்த இந்திரனும், தேவர்களும் தேவலோகத்தை விட்டு வெளியேறினர்.

தான் வருவதற்குள் அனைவரும் ஓடி ஒளிந்ததை எண்ணி,  தான் மூவுலகிற்கும அரசனென அட்டகாசமாகக் கொக்கரித்தான். இதையறிந்த தேவர்களின் தாய் அதிதி, ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி வேண்டி நின்றாள். அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தருவதாகக் கூறினார், பகவானும்.மகாபலி மிகப் பெரிய யாகத்தைச் செய்தார்.

அந்த யாகத்திற்கு வருகைபுரியும் எவரும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்;  மன்னர் மகாபலி முகங்கோணாமல், யாசிப்போருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய விதி! மகாவிஷ்ணு, தன்னை மூன்றடியாகக் சுருக்கிக் கொண்டு, ஒரு அந்தணராக, யாகசாலைக்கு எழுந்தருளினார். அவருடைய சிறிய உருவத்தையும், முகத்தில் மிளிரும் கண்ணைப் பறிக்கும் தேஜஸையும் கண்ட, மகாபலி சக்கரவர்த்தி, தன் ஆசனத்திலிருந்து எழுந்துவந்து, அந்தணருக்குத் தகுந்த ஆசனமளித்து, பாதபூஜைசெய்து, யாசகமாக எதைவேண்டுமானாலும் தரச் சித்தமானதைத் தெரிவித்தவுடன், மகாவிஷ்ணுவோ, தன் காலடியால் மூன்றடி நிலம் மட்டுமே தந்தால் போதும், என்றார்!

அதைக் கேட்ட பலிச்சரவர்த்தி, எள்ளி நகையாடினான்! மேலும், தன்னிடம் யாசகம் பெற்றுவிட்டு வேறு ஒருவரிடம் யாசகம் கேட்கக்கூடாது; அப்படிச் செய்தால், அது தனக்கு அவமானம்! ஆகையால, தேவையானவற்றைப் பெற்றுச் செல்லுமாறு வேண்டி நின்றான். அதற்கு, அந்தண வடிவில் இருந்த மகாவிஷ்ணுவோ, தான் கேட்டதைத் தந்தால்போதும் என்றார்.

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன்!!

குலகுருவாகிய சுக்கிராச்சாரியார் எச்சரித்தும், வந்திருப்பது மகாவிஷ்ணு, அவருக்கு தானமளிக்காதே எனக் கூறியும் அதைப் புறந்தள்ளி, இறைவனே தன்னிடம் யாசகம் பெறப்போகும் இச்சந்தர்ப்பத்தைத் தான் நழுவ விட முடியாதென, அந்தணர் கேட்டபடியே, சக்கரவர்த்தியின் பட்ட மகஷி நீர்வார்க்க, அந்தக் கமண்டலத்தினுள் ஒரு சிறு வண்டு வடிவமெடுத்து, தண்ணீர் வரும் பாதையை அடைத்து நின்றார் சுக்கிராச்சாரியார். அதைக் கண்ட மகாவிஷ்ணு, தன் கையில் அணிந்திருந்த பவித்திரத்தினால் (ஒருவகைப் புல்லினால் செய்யப்பட்டது), நீர் வரும் பாதையில் - கமண்டல ஓட்டையில் குத்தினார்! சுக்கிராச்சாரியாரின் கண்கள் குருடாகி வெளியே வந்து விழுந்தார்!!

மூன்றடி நிலத்தைத் தானம் தந்தார் பலி! இரண்டடியினால் அனைத்து உலகங்களையும் அளந்துகொண்ட ஸ்ரீமகாவிஷ்ணு, மூன்றாவது அடியை எங்கு வைக்கட்டும் எனக் கேட்க,  தான் கொடுத்த வாக்கை பொய்யாக்கக் கூடாதென வேண்டி, தன் சிரசை வாமனரின் மூன்றாவது அடிக்குக் கொடுத்து பெரும்புகழ் பெற்றான், மகாபலிச் சக்கரவர்த்தி!! வாமன மூர்த்தியும், பாதாளலோகத்தை அவனுக்கு அளித்து, எந்நேரமும் அவனருகில, அவனைக் காப்பதாக நல்லாசி நல்கினார்.

ஆவணி 26, ஞாயிற்றுக்கிழமை (11-9-2022)

மறைந்த நம் முன்னோர்கள் (பித்ருக்கள், நமது வீட்டிற்கு வந்து, மகாளய அமாவாசை தினம் வரை நம்முடன் தங்கியிருந்து, நமக்கு நல்லாசி வழங்கும் நன்னாள்.
மகாளயபட்சம் எனும் மகத்தான அந்த 15 நன்னாட்கள்! மகாளய புண்ணிய காலமாகிய (மாளயபக்ஷம்) அந்த 15 நாட்களும், மறைந்த நமது மூதாதையர்கள், தர்மராஜரின் அனுமதி பெற்று, ஸ்வர்ண மயமான (தங்கம்) விமானங்களில், சூரியனின் சக்திவாய்ந்த கிரணங்கள் மூலம், நமது வீடுகளுக்கு எழுந்தருளி (வருகை புரிந்து), 15 நாட்கள் நம்முடன் தங்கியிருந்து, நமது பூஜைகளை ஏற்று, நம்மை ஆசிர்வதித்து, மகாளய அமாவாசையன்று, தர்ப்பணம் மூலம் நாம் அளிக்கும் எள், தீர்த்தம் ஆகியவற்றை ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, அதே விமானங்களில் சூரியனின் கிரணங்கள் மூலமாக, பித்ருக்களின் உலகங்களுக்கோ அல்லது அவர்கள் எடுத்துள்ள மறுபிறவிகளுக்கோ சென்றுவிடுகின்றனர். அவ்வாறு வரும் பித்ருக்களின் ஆசிக்கு மகத்தான சக்தியுண்டு!

Tags : Avani ,
× RELATED சிம்ம ராசி குழந்தையும் தெய்வமும்