×

மேலப்பாளையம்- கோயம்பள்ளி உயர்மட்ட பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

கரூர்: கடந்த பல ஆண்டுகளாக இணைப்புச் சாலை பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இழுபறியில் இருந்து வரும் மேலப்பாளையம்- கோயம்பள்ளி உயர்மட்ட பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை அருகேயுள்ள மேலப்பாளையம் பகுதியின் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. மேலப்பாளையம் எதிர்ப்புறம் கோயம்பள்ளி உள்ளது. இந்நிலையில் மேலப்பாளையம், கோயம்பள்ளி ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ. 15 கோடி மதிப்பில் கடந்த 2011ம் ஆண்டு உயர்மட்ட பாலப்பணி கட்டும் பணி நடைபெற்றது. 2015ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிவுற்றன. ஆனால், பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை அமைப்பதில் ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் காரணமாக இதுநாள் வரை பாலப்பணி முழுமை பெறாமல் உள்ளது. கரூர் மாவட்டம் நரிக்கட்டியூர், தொழிற்பேட்டை, மேலப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அமராவதி ஆற்றின் எதிர்ப்பகுதிகளில் உள்ள கோயம்பள்ளி, சோமூர், திருமுக்கூடலூர், நெரூர் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் மேலப்பாளையம், கோயம்பள்ளி இடையே உயர்மட்ட பாலப்பணிகள் துவங்கப்பட்டு முடிவுற்றது.ஆனால், அணுகுசாலை பிரச்னை காரணமாக இதுநாள் வரை பாலப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக முழுமை பெறாமல் உள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எளிதில் கரூர் வந்து செல்ல முடியாமல் 15 கிமீ தூரம் சுற்றி கரூர் வந்து செல்கின்றனர். கரூரில் இருந்து கோயம்பள்ளி, சோமூர், நெரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அனைத்து தரப்பு மக்களும், ஐந்து ரோடு, அரசு காலனி, பஞ்சமாதேவி வழியாக நெரூருக்கும், பஞ்சமாதேவி அடுத்துள்ள 16 கால் மண்டப பகுதியில் இருந்து சோமூர், திருமுக்கூடலூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கும் பொதுமக்கள் தினமும் 15 கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர்.மேலும், கோயம்பள்ளி பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. ஆனால், அவசர காலங்களில் உடனடியாக மருத்துவமனைக்கு வர முடியாமல் பெரும்பாலான மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையிலான உயர்மட்ட பாலம் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும் நிலையில், கோயம்பள்ளி, நெரூர், ஒத்தக்கடை, 16 கால் மண்டபம், சோமூர், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், திருமுக்கூடலூர் உட்படட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எளிதாக கரூர் வந்து செல்லும் நிலை ஏற்படும், மேலும், இந்த பகுதி விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களும் எளிதாக கொண்டு செல்ல முடியும். அவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதில் நிலவி வரும் அணுகு சாலை பிரச்னையை தீர்க்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்யும் சமயங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு அமராவதி ஆற்றில் தண்ணீர் திருமுக்கூடலூரை நோக்கிச் செல்லும்.ஆற்றில் தண்ணீர் வராத சமயங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆற்றின் குறுக்கே கரூர் போன்ற பகுதிகளுக்கு நடந்தும், இரண்டு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். தண்ணீர் வரும் சமயங்களில் மட்டும் ஆற்றில் செல்வது தடைபட்டு 15 கிமீ சுற்றித்தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் அதிகளவு கவனம் செலுத்தி மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள அணுகுசாலை அமைக்கும் பணியில் உள்ள சிரமங்களை போக்கி விரைந்து பாலப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.குடிமகன்களின் கூடாரம்அணுகுசாலை இல்லாமல் பாலம் பயன்பாட்டுக்கு வராத நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பாலத்தின் மேற்புற பகுதிகளுக்கு சென்று அடையாளம் தெரியாத சிலர் சரக்கு அடித்து விட்டு கும்மாளம் போடும் பகுதியாக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் பாலப்பகுதிகளின் அருகே மற்ற எவரும் எளிதாக செல்ல முடியாத நிலையும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை முற்றிலும் களையும் வகையிலும், பல்வேறு கிராம மக்கள் எளிதாக கரூர் மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் வகையில் மிக முக்கியமான பாலமான இதனை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post மேலப்பாளையம்- கோயம்பள்ளி உயர்மட்ட பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Governing- Coimballi ,Karur ,Coimballi ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...