×

கலைமகளுக்கு குருவாய் அமைந்த ஹயக்ரீவர்

11.8.2022. ஹயக்ரீவர் ஜெயந்தி

“ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே” என்பது ஹயக்ரீவர் குறித்த மங்கள ஸ்லோகம்.
தினசரி கூற வேண்டிய ஸ்லோகம். மது கைடபர்கள் வேதத்தை  குதிரை உருவில் கொண்டு போய்  மறைத்து உலகை இருள் சூழ வைத்த  பொழுது, தானும் குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து உக்கிரமாகப் போரிட்டு வேதத்தைக் காத்தவர். அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார், ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார்.

‘‘முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்” என்றும்,
‘‘வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை
பயந்தவனே! எனக்கருள் புரியே”
என்றும் ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறார்.

அவருடைய திருக்கோயில்கள் பல இடங்களில் இருக்கின்றன. செட்டி புண்ணியம், பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை, நல்லாத்தூர் போன்ற இடங்களில் கோயில் கொண்டுள்ளார். ஹயக்ரீவ ஸ்தோத்திரம் என்று ஒரு நூல் கொண்டு முப்பத்தி மூன்று பகுதிகள் கொண்டது இதனைப் பாராயணம் செய்தால் எல்லா வித்தைகளையும் தேர்ச்சி பெறமுடியும் ஹயக்ரீவர் மூல மந்திரத்தை வாய்விட்டு சொல்லும்பொழுது ஹயக்ரீவர் நம் அருகில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். ஓம் எனும் பிரணவ உருவாகவும், அதன் அட்சரங்களாகவும் இருக்கிறார்.

ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் வாதிராஜ ஸ்வாமிகள் ஸ்ரீஹயக்ரீவர் துதி இயற்றியிருக்கிறார். அது மிகவும் புகழ்பெற்றது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்த பொழுது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. அப்பொழுது விழுந்த மலையின் ஒரு சிறு பகுதிதான் ஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ள திருவஹீந்தபுரம் (திருவந்திபுரம்) எனும் அற்புதத் தலம். சுவாமி வேதாந்த தேசிகருக்கு சகல வித்தைகளையும் தந்தது ஹயக்ரீவ பெருமாள்தான்.

கடலூர் மாவட்டம் திருவஹீந்தபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவஹீந்தபுரத்தில் வைணவ ஆச்சார்யர் ஸ்ரீநிகமாந்த மகா தேசிகன் கருடமந்திரத்தை ஆவ்ருத்தி செய்ததால் கருட பகவான் மகிழ்ந்து இவருக்கு ஹய்க்ரீவ மந்திரத்தை உபதேசித்து  ஹயக்ரீவ விக்ரகத்தையும் கொடுத்து மறைந்தார்.

ஔஷதகிரி என்ற மலையின் மேல் ஹயக்ரீவ மந்திரத்தையே இவர் தொடர்ந்து ஜபிக்க ஹயக்ரீவர் நேரில் எழுந்தருளி இவருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்தார். அதன் பின் சுவாமி தேசிகன் பற்பல சமஸ்க்ருத ஸ்லோகங்களும், தமிழில் மும்மணிக்கோவை, நவமணி மாலை போன்றவைகளையும் எழுதினார். ஆடி பௌர்ணமியில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.

தொகுப்பு: சங்கர்

Tags : Hayagrivar ,Guruvai ,Kalaima ,
× RELATED அறிவைத் தந்தருளும் ஹயக்ரீவர்