பவித்ரோத்ஸவம் பார்த்தால் பரம புண்ணியம்

7.8.2022 ஞாயிற்றுக்கிழமை பவித்ரோத்ஸவம்

பவித்ரோத்ஸவம் என்பது புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள்.

பெரியாழ்வாரும்,

“பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய  சொல்

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே”

- என்று போற்றுகிறார்.

இதில் பவித்ரன் என்ற பதம் பெருமாளைக் குறிக்கிறது. பெருமாளுக்கு இரண்டு சிறப்பு. அவன் தூய்மையானவன். எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துபவன். விஷ்ணு அனைத்தையும் தூய்மைப்படுத்துகிறார் என்பதன் அடையாளமாக பவித்ரோத்ஸவம் வருடாந்திர சடங்காகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு திருக்கோயில்களும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.

ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களின்படி, ஒவ்வொரு விஷ்ணு கோயிலிலும் தினசரி உற்சவங்கள், பருவகால உற்சவங்கள், மாதாந்திர உற்சவங்கள் மற்றும் வருடாந்திர உற்சவங்கள் என பலவிதமான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும்போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள்.

அதேபோல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

ஸ்ரீ ரங்கநாதர் கோயில்

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்ஸவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்திரத் திருவிழா

கள்ளழகர் கோவிலில்ஆவணி மாதம் நடைபெறும் திருப்பவுத்திர திருவிழாவில் 108 கலசங்களில் நூபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் நடைபெறும். இந்தத் திருவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டப வளாகத்தில் மேளதாளம் முழங்க தொடங்கும். இங்குள்ள மண்டபத்தில் உற்சவர் கள்ளழகர் சுந்தரராச பெருமாள் எழுந்தருள்வார்.

 

அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்படும். 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள், அழகர்மலை உச்சியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு நூபுர கங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு நூல் மாலைகள் வைத்து பூஜைகள் நடக்கும்.

தொடர்ந்து சர விளக்கு பூஜைகளும், திருமஞ்சனமும், அலங்காரம், அபிஷேகங்கள் நடக்கும். அதன்பின்னர் பூஜையில் வைக்கப்பட்டிருந்த பட்டு நூல் மாலைகள் மூலவர் சுவாமி, தேவியர்களுக்கும், உற்சவர் கள்ளழகர், தேவியர்களுக்கும் மற்றும் சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், சுவாமிகளுக்கும் அணிவிக்கப்படும்.

உற்சவத்தின் பலன்

இந்த உற்சவத்தின் பலஸ்ருதி அபாரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

1. உற்சவத்தில் ஈடுபடுபவர்கள், பங்கு பெறுபவர்கள், உதவி செய்பவர்கள் ஆகியோருடைய பாபங்கள் தீரும்.

2. நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

3. இந்த உற்சவம் நடத்துவதன் மூலமாக அந்த பகுதியில் நன்கு மழை பொழியும். வியாபார விருத்தியும், செல்வச் செழிப்பும் ஏற்படும்.

தொகுப்பு: பி.என்.கே.ராமன்

Related Stories: