×

கடவுளின் அருட்பணி

அருட்பணியும் கிறிஸ்தவமும் பிரிக்கமுடியாதவை. வெறும் ஆராதனை நடத்திப் பாட்டுப்பாடி, பிரசங்கம் கேட்டு, ஜெபம் செய்து ஒரு கிறிஸ்தவர் மனநிறைவு அடைந்துவிட முடியாது. இது கடவுளுக்கும் ஏற்புடையதாக இருக்காது. திருச்சபைக்கு வெளியே சென்று, கடவுளின் அன்பை செயல்வடிவில் காண்பிக்க வேண்டும் என கிறிஸ்துவின் கற்பித்தல்கள் வலியுறுத்துகின்றன. இயேசு ‘‘பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’’ எனும் ஒசேயா தீர்க்கரின் வார்த்தையை வலியுறுத்திப் பேசினார். (மத்தேயு 9:13, ஒசேயா 6:6).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கடவுளின் அருட்பொழிவைப் பெற்றவராக நாசரேத்து ஜெப ஆலயத்தில் இவ்வாறு பேசினார். ‘‘ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது;  ஏனெனில், அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்றார்’’ (லூக்கா4:18-21, எசாயா61:1-3). ஒரு கிறிஸ்தவர், ஒரு திருச்சபை தனது அருட்பணிக்கான மாதிரியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதில் ஏழைகளுக்கு நற்செய்தி என்பது ஏழைகளுக்கு எதிராக இயங்கும் ஏழ்மை, ஏழ்மையை உருவாக்கும் அனைத்து கட்டமைப்புகள், ஏழைகளுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அகற்ற வேண்டியதின் அவசியத்தை உணர்த்துவதாகும்.

பஞ்சத்தை எதிர்கொள்ளல் வரலாறு நெடுகிலும் மனித இனம் ஏன்? இதர உயிர்கள் கூட பஞ்சத்தை எதிர்கொள்ளாமல் இருந்ததில்லை. பஞ்சம் அடிப்படையில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக அனுபவிக்கும் பெரும் துயர் ஆகும். இப்படிப்பட்ட பஞ்சத்திற்கு நாடு தழுவிய வறட்சி, பெருவெள்ளம், பேரழிவுகள் காரணமாக அமைவதுண்டு. அத்துடன் உணவுப்பொருட்கள் பதுக்கல், இலாப நோக்கில் செய்யும் வரம்பற்ற உணவுப் பொருள் ஏற்றுமதியும் காரணங்களாக அமைவதுண்டு. இப்படிப்பட்ட பஞ்சங்கள் பல ஆண்டுகளாக நீடித்தால் இலட்சக் கணக்கான மனித உயிர்களும் இதர உயிர்களும் மடிவது இயல்பு.

இந்தியாவில் 1765-1947 வரை 12 பஞ்சங்கள் ஏற்பட்டதாகாகக் கூறப்படுகிறது. 1876-1878 ஆண்டுகளில் நீடித்த பஞ்சத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் மடிந்துள்ளனர். இது போன்ற நேரங்களில் அரசுக்கு அதிகப் பொறுப்பும் கடமையும் உள்ளது.

பஞ்சங்களை எதிர்கொள்ள உதவும் கடவுள்.

1 அரசர்கள் 17:1-16 வரை அடங்கியுள்ள பகுதி தீர்க்கன் எலியாவின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் பற்றி கூறுகிறது. கடவுள் எலியா தீர்க்கரையோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடை அருகில் ஒளிந்து கொள்ளக் கட்டளையிடுகிறார். அங்கு அவருக்குக் காகங்கள் தினமும் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. இன்று நாம் விலங்குகளின் இறைநேயமிக்க (மனித நேயம்) நடத்தைகளை ஊடகங்கள் வழி காண்கையில் காகங்கள் எலியாவுக்குப் பஞ்ச காலத்தில் உணவளித்ததை நம்புவது அவ்வளவு கடினமாக இல்லை. இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி யாதெனில் மனிதரின் பசியையும் பஞ்சத்தையும் போக்க கடவுளின் இதரப் படைப்புகள் முக்கியபங்கை வகிக்கின்றன என்பதாகும்.
எனவே இயற்கையையும், இதரப்படைப்புகளையும் அழியாமல் காப்பதன் மூலம்தான் மனிதர் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முடியும் என்பதாகும். இதைத் தொடர்ந்து கடவுள் எலியாவை சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குச் செல்லக் கட்டளையிடுகிறார். அங்கு தனக்கும் தன் மகனுக்கு மட்டும் ஒரு வேளை உணவுக்கு ரொட்டி சுடுவதற்கு மாவு வைத்திருந்த கைம்பெண்ணை சந்தித்துத் தனக்கு உணவளிக்க வேண்டுகிறார். சிறிது உரையாடலுக்குப் பின் அப்பெண் பட்டினியாயிருக்கும் அந்நியனான எலியாவுடன் தங்கள் உணவை பகிர்ந்து கொள்கிறார். அன்று தொட்டு அந்த வீட்டில் உணவுக்குத் தேவையான மாவும் எண்ணெயும் குறைவுபடவில்லை எனப்படுகிறது. இதில் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பல.

பட்டினி, பஞ்சம் மற்றும் இதரப் பேரிடர்களைத் துணிவுடன் சந்தித்த அனுபவம் ஏழைகளிடம் தான் உள்ளது. பணக்காரர்களினால் அல்ல ஏழைகளின் கூட்டமைப்பில் தான் அவர்களின் எழுச்சியில் தான் ஏழ்மை விரட்டப்பட முடியும். கடவுள் இப்படிப்பட்டவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணருகிறார், மேலும் ஆற்றல் படுத்துகிறார், எழுச்சி கொள்ளச் செய்கிறார், மாற்றங்களுக்கு அவர்களைத் தலைமையேற்கச் செய்கிறார். இம்மானுவேலராய் அவர்களுடன் இணைபிரியாது இருக்கிறார். இதையே வலியுறுத்தி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ‘‘ஆவியில் தரித்திரர் பாக்கியவான்கள் கடவுள் ராஜ்யம் அவர்களுடையது’’ என்று தமது புகழ்மிக்க மலைப்பொழிவில் கூறியுள்ளார். (மத்தேயு 5:3).

Tags : God ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?