×

வற்றாத வரங்களை தரும் வரலட்சுமி

மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே லட்சுமி. இந்த சுபகுணங்களே ஒவ்வொருவரும் விரும்புவது. இதற்காகத்தான் லட்சுமி வழிபாடு. மழைக்கால வைபவத்தில் சிராவண மாதம் (ஆடி, ஆவணி) பவித்திரமான தேவி வழிபாட்டிற்கான தருணம், சிராவண திங்கள், சிராவணச் செவ்வாய், சிராவண வெள்ளி, பௌர்ணமி போன்ற புனித நாட்கள் இந்த மாதத்திற்குப் பிரத்யேக அழகைக் கூட்டுகின்றன. சிராவண பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி விரதம் மேற்கொள்வதென்பது சனாதன சம்பிரதாயம். இந்த விரததினத்தில் வழக்கமாகக் கூறும் கதை அழகான குறிப்புகளோடும், தர்ம சூட்சுமங்களோடும்கூடியது.

சௌம்யமாக, அன்போடு கூடிய ஒற்றுமையான வாழ்க்கை நடத்தி, குடும்பப் பொறுப்பை அழகாக ஏற்று நடத்தி வரும் சாருமதி தேவியை லட்சுமி அனுகிரகம் செய்யும் கதை இது. சாருமதி என்னும் பெயர் ஒரு அழகான குறிப்பு. சுந்தரமான புத்தியே சாருமதி. கெட்ட எண்ணங்கள், துஷ்ட சங்கல்பங்கள், துர்குணங்கள் இல்லாத நல்ல மனமே சாருமதி. அப்படிப்பட்ட நல்ல மனதிற்கே வரலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது இக்கதை கூறும் முதல் குறிப்பு.

லட்சுமி தேவி கனவில் தோன்றி விரதம் செய்யும்படி ஆணையிடவே, விடியற்காலையில் எழுந்து கணவனுக்கும் மாமியார் மாமனாருக்கும் தெரிவிக்கிறாள் சாருமதி. அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கின்றனர். கணவனும் சந்தோஷமாக அனுமதியளிக்கிறான். சூதுவாதற்ற அன்யோன்ய அன்பு கொண்ட குடும்பச் சுழல் என்று இக்கதை தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட அன்பு நிறைந்த சௌம்யமான சூழ்நிலையே லட்சுமியின் அருளைப் பெற்றுத் தரக்கூடியது.

சில பெண்களோடு சேர்ந்து வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கிறாள் சாருமதி. சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் பாவனை இந்த விஷயத்தில் தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற நோன்புகள், பண்டிகைகள் போன்றவை சினேக பலத்தை வளர்க்கும் உத்தமமான வழக்கங்களே. தேவியை வழிபடுபவர்கள் ‘சாருமதி’களாக இருந்தால் எளிதில் தேவியின் அருள் கிடைக்கும் என்று இந்த விரதக் கதையில் அற்புதமாக போதித்துள்ளார்கள்.

சித்த லட்சுமி: மோட்ச லட்சுமி: ஜய லட்சுமி: சரஸ்வதி.
ர் லட்சுமி: வரலட்சுமிஸ்ச ப்ரசன்னா மம சர்வதா

காரிய சித்தி, சத்திய விசாரணை மூலம் கிடைக்கும் சம்சாரத் தளையிலிருந்து பெறும் விடுதலை, தடைகளை வெற்றி கொள்ளும் ஜெயம், கல்வியறிவு, ஐஸ்வர்யம், சிறப்பு என இந்த ஆறும் லட்சுமியின் வடிவங்கள். இந்த ஆறு ஐஸ்வர்யங்களும் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றே இவ்விரதத்தை மேற்கொள்கிறோம்.‘வர’ என்றால் ‘சிறப்பானது’ என்று பொருள், ஒவ்வொருவரும் எந்த துறையிலிருந்தாலும், ஒவ்வொரு பொருளிலும் சிறப்பானதையே விரும்புகிறோம்.

அச்சிறப்பே தேவியின் ஸ்வரூபம். சுத்த, சத்துவ ஸ்வரூபத்துடன் பிரகாசிக்கும் ஜகத் ஜனனி  லட்சுமி. சிலர் அஷ்ட லட்சுமிகளாக, சிலர் ஷோடச லட்சுமிகளாக வழிபட்டாலும், அவள் அனந்த லட்சுமி. சூரிய ஒளி, சந்திர ஒளி, அக்னி பிழம்பு, பூமியின் பாரம், நீரின் குளிர்ச்சி, க்ஷேத்திரங்களின் பசுமை, புஷ்பங்களின் சௌந்தர்யம், பழங்களின் பிரகாசம், ஆரோகியம், உற்சாகம், ஆகாசத்தின் விசாலம், சமுத்திரத்தின் கம்பீரம், குரல்களில் கானம், சரீரத்தில் சைதன்யம், கலைகளின் விஞ்ஞானம். இப்படிப்பட்ட முடிவில்லாத விபூதிகள் (மகிமைகள்) எத்தனை எத்தனையோ!
ஒரே பரமேஸ்வரனின் இந்த எண்ணிலடங்கா சக்திகளே லட்சுமிகள். இத்தனை சக்திகளை அள்ளித் தெளிக்கும் ஒரே பரமேஸ்வர சக்தியே வரலட்சுமி. இத்தனை வரங்களையும் பொழியும் அம்மனை வணங்கி வழிபடுவோமாக! அம்பாள் ரஸ ஸ்வரூபிணி. எனவேதான், ரஸமயமான சந்திரகலைகளின் வளர்ச்சியை அனுசரித்து அவளை நாம் வழிபாடு செய்கிறோம்.

‘சந்த்ராம் சந்த்ர சஹோதரீம்’ என்பவை லட்சுமி நாமங்கள்.
‘சந்திரனின் சகோதரி’ என்பது புராணங்களின் கூற்று
மகிழ்ச்சி, திருப்தி, ரஸ ஸ்வரூபம் (கருணை), முழுமை, அன்பு  ஆகியனைத்தும் சந்திரனின் குணங்கள். இந்த குணங்களின் தேவதை லட்சுமி. விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள சைதன்யம் பல்வேறு குணங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சந்தோஷம், கம்பீரம், உக்ரம், இனிமை, கருணை, கடினம், ஆகிய குணங்களனைத்தும் விஸ்வ சைதன்யத்தின் லீலைகளே! அந்தந்த பாவனைகளின் வடிவங்களாக அந்த மகா சைதன்யத்தை அறிவது தான் விதவிதமான தேவதைகளின் வடிவங்களாக வழிபடும் தன்மை.ஒரே சைதன்யத்திலிருந்து அனைத்து பாவனைகளும் தோன்றி வெளிப்படுவது போலவே ஒரே பரமாத்மாவை அனேக தேவதைகளின் வடிவங்களாக வழிபடுகிறோம். விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள பிரகாசம், அழகு, கருணை, செல்வம், ஒளி, சௌம்யம், வாத்சல்யம், உற்சாகம், ஆனந்தம் போன்ற தெய்வீக பாவனைகளனைத்தும் ஒன்று சேர்ந்தால் வரும் வடிவமே லட்சுமியின் வடிவம்.

எந்த ஒரு காரியமானாலும் ‘சித்தி’ பெறுவதே அதன் பலன். அது கிடைக்காதென்றால் எந்த செயலுக்கும் முயற்சியே இருக்காது. எனவே ‘சித்தி’ என்பது முதல் லட்சுமி ‘சித்தி’ (பலன்) கிடைத்தபின் செயல் செய்வதிலிருந்து விடுதலை பெறுகிறோம். வீடுகட்டி முடிதல் என்ற ‘சித்தி’ (பலன்) கிடைத்தபின் ‘வீடு கட்டுவது’ என்ற செயலால் உண்டான சிரமத்திலிருந்து விடுதலை கிடைப்பது போல், அந்த முக்தியே ‘மோக்ஷ லட்சுமி’.

பிரதி கூலமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வதே ஜெயலட்சுமி. செயலுக்குத் தேவையான புத்திக்கூர்மை, சமயத்திற்குத் தகுந்த ஆலோசனை, சரியாகத் தீர்மானிக்கும் திறன், விஞ்ஞானம் போன்றவை அனைத்தும் வித்யா லட்சுமி அதுவே சரஸ்வதி. பலனாகப் பெறும் செல்வம், சம்பத்து, ஆனந்தம் இவை  லட்சுமி. அதனால் கிடைக்கும் சிறப்பு, பெருமை வரலட்சுமி. இறுதி லட்சியம் இதுதான்.

எனவேதான், வரலட்சுமி முதன்மையானவள். மற்ற ஐந்து லட்சுமிகளையும் வழிபடுவது அவள் அருளைப் பெறுவதற்காகவே. இப்பூஜையில் வழிபடும் உருவம் கலசம். கலசத்தில் (செம்பில்) அரிசியோ, ஜலமோ நிரப்பி (தண்ணீர்), பச்சை மாவிலைகளை அமைத்து அதன்மேல் பூரணபழமான தேங்காயை வைத்து பூஜிப்பது சிறப்பானதாகும்.பிரம்மாண்டமென்னும் கலசத்தில் செல்வம், மங்களத்தைக் குறிக்கும் பசுமை, நற்பலன் இவை நிரம்பி வழிபடப்படுகின்றன. விரதத்தில் சிரத்தையை வளர்ப்பதற்கு புராணம் நமக்களித்த கதையில் சாருமதி என்னும் சாத்வீகமான பெண். லட்சுமியின் அருளைப் பெற்று அம்மனை ஆராதனை செய்கிறாள். இதுஉண்மையின் கதாபாத்திரமல்ல.

இறை வழிபாட்டிற்குத் தேவையான பாத்திரம். இறைவனை வழிபடும் புத்தி ‘சாருமதியாக’ இருக்க வேண்டும். உத்தமமான குணங்களே ‘‘சாரு’’ (நன்மை). அவைகள் உள்ள புத்தியை கதையில் ‘சாருமதி’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த புத்தியை லட்சுமி கருணையுடன் ஆசீர்வதிக்கிறாள். இதனையே இக்கதை குறிப்பால் உணர்த்துகிறது. கிடைக்கும் செல்வங்களை தேவதைகளாக, பிரசாதங்களாக மகிழ்வுடன் தரிசிக்க வைக்கும் சம்பிரதாயம் நம்முடையது.

‘வரம்’ என்றால் ‘சிறப்பானது’ என்று பொருள். ஒவ்வொன்றும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அப்படிப்பட்ட சிறப்புகளை அளிப்பவளே ஜகதம்பாளாம் வரலட்சுமி. அந்த அம்மனின் மகிழ்ச்சியை விட நமக்கு வேறென்ன வேண்டும்!

பிரம்ம சண்முக சர்மா

Tags : Varalakshmi ,
× RELATED லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!