×

வளமான வாழ்க்கையைத் தரும் வரலட்சுமி விரதம்

ஆடி மாத அமாவாசை முடிந்து விட்டால், ஆவணி மாதம் பிறப்பதாக, சந்திரனை அடிப்படையாகக்  கொண்ட கணக்கு ஒன்று உண்டு. அந்த ஆடி பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படும் விரதம் வரலட்சுமி விரதம். அன்னை மகாலட்சுமிக்கு உரிய விரதம். இந்த ஆண்டு, வரலட்சுமி விரதம் 5.8.2022 வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி, சுவாதி நட்சத்திரத்தில் வருகிறது. இந்த தினத்தில் துர்காஷ்டமி இருப்பது மிகச் சிறப்பு.

மகாலட்சுமி என்றாலே செல்வத்தின் தேவதை அல்லவா! எனவே இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் மங்கலங்களும் சேரும். மகாலட்சுமி எப்பொழுதும் அவர்களுக்கு நல்லாசிகளை தந்து காப்பாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், காலம்காலமாக இந்த வரலட்சுமி விரதம் பெண்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.இதோடு சேர்ந்து சுமங்கலி வழிபாடும் இணைந்திருப்பதால், இந்த விரதம் சக்தி வாய்ந்த விரதமாகவும், சிறந்த பரிகாரமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதம் எப்படி வந்தது என்பதற்கு சில புராணக் கதைகள் உண்டு.

1) தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான போது, சில அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

2) இன்னொரு கதையும் உண்டு சௌராஷ்டிர நாட்டின் அரசி சுசந்திரா, தனதுசெல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். தன் மகளைப் பார்த்து தாயான சுசந்திராவும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

மிக முக்கியமான விஷயம், வரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை, விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும்.வரலட்சுமி நோன்பு, விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும். கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்களும் கடைப்பிடிக்கக்கூடிய மிக முக்கியமான வரலட்சுமி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை இங்கு பார்போம்.

எப்படிக் கொண்டாடுவது?

முதலில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும். வசதி மிக்கவர்கள், வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையை தாழம்பூவால் மற்றும் நறுமணமிக்க பூக்களால் அலங்கரித்தபின், அதை ஒரு பலகை மீது வைக்கவும். அல்லது  கடைகளில் வரலட்சுமி தேவியின் முகம் கிடைப்பதால் அதை வாங்கி அலங்காரம் செய்யலாம். வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, மகாலட்சுமி திருவுருவத்திற்கு  மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். நகைகளையும் அணிவிக்கலாம்.

ஒரு கும்பத்தை எடுத்து அதில் தூய நீர் நிரப்பி மாவிலையுடன் தேங்காயை வைத்து புஷ்பங்களால் அலங்கரித்து, அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். அதன்பின், ஆரத்தி தட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கலாம். பூக்களால் மஹாலஷ்மியை அர்ச்சனை செய்யவும். குங்கும அர்ச்சனையும் செய்யலாம். நிவேதனங்களைச் செய்து படைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி, கொழுக்கட்டை படைக்கலாம்.

தூப தீப ஆரத்தி வைத்து பூஜையை முடிக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது, மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். மூத்தவர்களிடமும், மூத்த சுமங்கலிகளிடமும் ஆசீர்வாதம் பெறுவது சிறப்பு. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.கும்ப நீரை கால் படாத இடத்தில் சேர்த்து விடலாம் அல்லது செடி கொடிகளுக்கு ஊற்றலாம். வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?