ஆனந்தம் தரும் ஆடி -18ன் முழு விவரம்

நமது தமிழ் மாதங்களில் நான்காவதாக வருவது ஆடிமாதம் ஆகும். இந்த மாதம் பெண்களுக்குரிய பெண்மையை போற்றும் ஒரு மாதமாக கருதினால் அதை மறுப்பதிற்கில்லை. பின் வரப்போகும் மாதங்களில் பல விழாக்களின் தொடக்கமாக இம்மாதம் இருக்கிறது. அதே நேரத்தில் இம்மாதம் முழுவதும் இறைவனுக்கு அதிலும் குறிப்பாக பெண் தெய்வங்களுக்கு விழாக்கள் எடுக்கும் காலமாக இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா. இந்த நாளின் சிறப்பு பற்றியும் இந்த நாளில் செய்ய வேண்டியவை பற்றியும் இங்கு காண்போம்.

ஜோதிடத்தில் “கடக” ராசி “சந்திர பகவானுக்குரிய” ராசியாகும். சந்திரன் நீர் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு காரகனாகிறார். எனவே தான் இந்த ராசியில் சூரியன் பெயரும் ஆடி மாதத்தில் எப்படியாயினும் தென்மேற்கு பருவ மழை பெய்து நீரால் நிரம்புகிறது. பழங்காலம் தொட்டே நம் தமிழகம் விவசாயம் செழித்த பகுதியாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் தமிழகத்தின் உயிர்நாடியான “காவிரி நதி” தமிழகத்தில் பாய்ந்து வரும் பகுதிகள் எல்லாமே, அந்த நதியின் நீரை சார்ந்து விவசாயம் செய்யும் நிலப்பகுதிகளாகும். உலகிற்கு உணவளிக்கும் விவசாய பெருமக்களுக்கு உயிராதரமாக இருப்பது இந்த நதி.

கோடைகாலத்தில் வறண்டு போன நதிப்படுகைகளில் ஆடி மாதத்தில் காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பொழிந்து, காட்டாற்று வெள்ளமாக தமிழகத்திற்குள் வந்து விவசாயத்தையும், மக்களின் குடிநீர் பஞ்சத்தையும் போக்கும் இந்நதியை வரவேற்கும் விழாவே ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவாகும்.

நமது நாட்டின் ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாக காவிரி நதி இருக்கிறது. நதிகளை பெண் தெய்வமாக பாவித்து வணங்குவது இந்து மதத்தினரின் பாரம்பரியமாகும். எனவே ஆடி மாதம் பதினெட்டாம் தினத்தன்று பெண்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் பலவித சித்தர அன்னங்கள் படைத்து, காவிரி நதி ஓடும் படித்துறைகளில் காவிரி அம்மனை வணங்கி பொங்கலிட்டு, பழங்கள், மஞ்சள், புது தாலி சரடு மற்றும் பல பொருட்களை வைத்து அந்த அம்மனை பூஜை செய்த பின்பு புது தாலி கயிற்றில் மஞ்சள் பூசி வயதில் மூத்த சுமங்கலி பெண்கள் மூலம் அணிவித்து கொள்வர். இந்த பூஜையை புதுமண தம்பதிகள் செய்வதால் அவர்கள் இருவரும் நோய் நொடிகளற்ற நீண்ட ஆயுளும் சிறந்த மக்கட் பேறும் மங்காத செல்வ வளமும் பெற காவிரி தாய் அருளாசி புரிவாள்.

புனித நதிக்கரைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது. அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும் மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.

Related Stories: