×

அருளும் பொருளும் தரும் ஆடிப்பூர நாயகி ஆண்டாள்


ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் நினைவு வராமல் போகாது. அவள் அருளிச்செய்த திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் நினைவுக்கு நிச்சயம் வரும். அவருடைய அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் என்கின்ற ஊர் நினைவுக்கு வராமல் போகாது. அங்கு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை ஒட்டி நடக்கும் மிகப்பெரிய ஆண்டாள் உற்சவமும் நினைவுக்குள் வந்துவிடும். ஆண்டாளின் பெருமைகளையும், அவள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரின் சிறப்புக்களையும், அங்கு நடைபெறும் ஆடிப்பூர உற்சவ சிறப்புகளையும், 30 முத்துக்களாகக் காண்போம்.

1) ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பூமிப் பிராட்டியாகிய கோதை பிறந்த ஊர், அவளை அடைய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனான கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணி மாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர்கள் வாழும் ஊர், நான் மறைகள் சர்வ காலமும் ஓதும் ஊர், திருமகள் உறைந்து, மனிதர்களின் சகல பாபமும் தீர்க்கும் ஊர், இப்படி ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று வில்லிபுத்தூரின் பெருமையை ஒரு பாடல் பேசுகிறது;
 
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
இந்த ஊரின் பெயர் வில்லிபுத்தூர் என்று எப்படி
வந்தது என்கின்ற பெயர்க் காரணத்தை ஆராய வேண்டும்.
 
2) வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர்

இரண்டு முனிவர்கள் பூர்வ வினையால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்படி சாபம் வந்தது. அப்போது மல்லி என்கின்ற பெண் இந்த வனப் பகுதியை ஆண்டு வந்தாள். அவளுக்கு குமாரர்களாய் இந்த இரண்டு முனிவர்கள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் வில்லி. மற்றொருவர் பெயர் கண்டன். இவர்கள் இருவரும் வளர்ந்து, பல கலைகளையும் கற்றார்கள். ஒரு நாள் வேட்டையாடச் சென்றனர். இதில் கண்டன் என்பவர் வேட்டையாடும் பொழுது ஒரு புலியால் கொல்லப்படுகிறார். அவருடைய உடலை தேடிச்சென்று கண்ட வில்லி, தன் சகோதரர் கண்டனின் மரணத்தைக் கண்டு கதறுகிறார். மனம் கலங்குகிறது. இறையருளால் மனதில் ஒரு ஒளி ஏற்பட, வைராக்கியத்துடன் அந்தக் காட்டுப் பகுதியை திருத்தி புதிய ஊராக ஆக்குகின்றார். வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர் என்பதால் அதற்கு வில்லிபுத்தூர் என்று பெயர் சூட்டப்படுகிறது.

3) வராக க்ஷேத்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு, வராக சேத்திரம். தமிழ்நாட்டில் மிகப்பழமையான திருத்தலங்கள் வராக அவதாரத்தை ஒட்டியே ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாளின் அவதாரத்திற்கு வராகப்பெருமாள் தான் காரணம். வராக புராண கதையில் இருந்துதான் ஆண்டாளின் அவதார ரகசியம் தெரிகிறது.

4) ஆண்டாள் அவதாரம் ஏன்?

இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க, பூமி பிராட்டியும், பூமியில் உள்ளவர்களும் மிகவும் துன்பப்படுகின்றார்கள். ஸ்ரீமன் நாராயணன், வராகப் பெருமாளாக, அவதாரம் எடுத்து, பூமியை மீட்டு எடுக்கிறார்.

“நீல வரை இரண்டு
பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப,
கோல வராகம் ஒன்றாய்,
நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்,
நீலகடல் கடைந்தாய்''
என்று இந்த நிகழ்வை நம்மாழ்வார் பாசுரம் தெரிவிக்கிறது.

அப்போது பூமி பிராட்டி, இந்த உலகமக்கள் உய்வு பெற எளிய வழி ஏதாவது இருக்கிறதா என்று வராகப்பெருமாளிடம் கேட்க, வராகப் பெருமாள் மூன்று எளிய வழிகளை உபதேசம் செய்கிறார்.

1. பகவானுடைய திருநாமங்களைப் பாடுவது.
2. எளிய பூக்களால் அவனுக்கு அர்ச்சனை செய்வது.
3. அவனைத் தவிர வேறு வழி இல்லை என்ற தூய்மையான மனதோடு அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்வது.
 5) பெரியாழ்வாரின் பெண் பிள்ளை

இந்த வழிகளை, இந்த உலக மக்களுக்கு, தானே சொல்ல வேண்டும் என்று நினைத்த பூமிப்பிராட்டி, அதற்காகவே, இந்த வராக ஷேத்திரத்தில், பெரியாழ்வார் என்கிற மகானுக்கு திருமகளாக அவதாரம் செய்யவேண்டும், ஒரு பரம பாகவதரின் மகளாக வளர வேண்டும், அவரை ஆசாரியனாக ஏற்றுக்கொண்டு, அவர் திருவாயால் பகவானின் பெருமைகளையெல்லாம் கேட்டு, மகிழ்ந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும் என்று நிச்சயிக்க. அதற்காக ஒரு நட்சத்திரத்தையும் மாதத்தையும் தீர்மானிக்கிறாள்.

அப்படித் தீர்மானித்த மாதம்தான் ஆடி மாதம் பூரம் நட்சத்திரம். தன்னுடைய எல்லாப் பாசுரங்களிலும், நிறைவாக, தன்னுடைய வளர்ப்பு தந்தைமற்றும் ஆச்சாரியரான பெரியாழ்வாரின் திருநாமத்தை ஆண்டாள் குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. ‘‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை” என்றுதான் அவள் பாசுரம் நிறைவுபெறும். தந்தையை குருவாக நினைக்க வேண்டும், குருவை தந்தையாக நினைக்க வேண்டும், பிதுர் தேவோ பவ; ஆச்சார்யோ தேவோ பவ  என்கின்ற செய்தியை ஆண்டாள் இதன் மூலம் உலகுக்குச் சொல்லுகின்றாள்.

6) நமக்காக கீழே குதித்தவள்

ஆண்டாள் அவதாரச் சிறப்பை மணவாள மாமுனிகள் என்கின்ற ஆச்சாரியர் உபதேச ரத்தினமாலை என்னும் அருமையான தமிழ் நூலில் பின் வருமாறு அற்புதமாகப் பாடுகின்றார். ஒரு ஆடிப்பூரத்தன்று அவர் ஆண்டாளை தரிசிக்கச் சென்ற பொழுது, ஆண்டாளின் பெரும் கருணையை நினைத்து பின்வருமாறு பாடுகின்றார்;

இன்றோ திருவாடிப்பூரம்? எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

நாமெல்லாம் வைகுந்தம் புகுந்து பேரின்ப வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே, அவள் வைகுந்தத்தில் இருந்து கீழே குதித்து, இந்த மண்ணுலகத்தில் நமக்காக வாழ்ந்தாளே, அப்படி அவள் அவதாரம் செய்த நாள் அல்லவா இந்த ஆடிப்பூரம் என்று கொண்டாடுகின்றார்.

7) ஆண்டாள்  பெயர் பொருத்தம்

சிம்ம ராசியில் ஆண்டாள் அவதாரம் என்பதால், பிறப்பு முதலே, வாழ்க்கையிலும் வார்த்தையிலும் ஒரு கம்பீரம் இருந்தது. ஆளுமை இருந்தது. ‘‘மனிதர்களுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ மாட்டேன். அந்த மாதவனுக்கே வாழ்க்கை படுவேன்” என்கின்ற உறுதி இருந்தது. அதனால்தான் அவள் பகவானையே ஆண்டாள். அற்புதமான தமிழை ஆண்டாள். தன்னை தேடி வரும் அன்பர்களுக்கு அருள் கொடுத்து அவர்களையும் ஆண்டாள். எனவே ஆண்டாள் என்கிற பெயர் அவளுக்கு மிக பொருத்தமாக அமைந்தது.

8) ஆடியும் பூரமும்

ஆடி மாதம் சூரியன் தட்சிணாயனத்தில் நுழையும் முதல் மாதம். கடக மாதம் என்பார்கள். சூரியனின் ராசியான சிம்ம ராசியில் உள்ள நட்சத்திரம் பூர நட்சத்திரம். சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம். சுக்கிரனின் அதிதேவதையான மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம். எனவே மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள், சிம்ம ராசியில், ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில் அவதாரம் செய்தாள். ஒரு தாயின் கருவறையில் நின்று பிறக்காமல், அயோநிஜையாக, பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசி மாடத்தில், துளசிச் செடியின் கீழ் ஒரு சிறு பெண் குழந்தையாக அவதாரம் செய்தாள்.

கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம்
பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம்
என்ற மங்கள ஸ்லோகம் இதை விளக்குகிறது.

9) தானே பின்பற்றினாள்

சொல்வது யார்க்கும் எளியது. எந்த சாஸ்திரத்தையும் வாயால் சொல்லிவிடலாம். ஆனால், அப்படிச் சொல்வதை விட, தானே முன்மாதிரியாக அனுஷ்டித்துக் காட்டி, தான் பெற்ற பலனையும் மக்களுக்குக் காட்டவேண்டும் என்பதை வைராக்கியமாக கொண்ட ஆண்டாள், கண்ணனையே கணவனாக அடைய, நல்ல எண்ணங்கள் கொண்டு, வராகப்பெருமாள் சொல்லிய உபதேசத்தை தானே பின்பற்றிக் காட்டினாள். அப்படிப் பின்பற்றிக் காட்டுவதற்காகவே அவள் அருளிய தமிழ் பிரபந்தம் தான் திருப்பாவை. அதில் ஒரு பாடலில் இந்த மூன்று விஷயங்களையும் இணைத்துக் காட்டுகின்றாள்.

தூயோமாய் வந்து நாம்
தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான்
நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு.

 தூய மனதோடு, மலர்களைத் தூவி, வாயால் பாடி, அவனைச் சிந்தித் தால், தீயில் பட்ட தூசுகள் பொசுங்கிப் போவது போல உங்கள் பாவங்கள் போய்விடும் என்பது இந்தத்  திருப்பாவையின் பொருள்.

10) ஆண்டாள் திருமாளிகை

ஸ்ரீவில்லிபுத்தூரில், அக்காலத்தில், ஆண்டாளும் ஆண்டாளின் தகப்பனாரான பெரியாழ்வாரும் வழிபட்ட கோயில், ஆதிகோயில். அது தனியாக இருக்கிறது. புஜங்க சயனத்தில் திருமால் உலகம் உண்ட பெருவாயனாக வட பெருங்கோயில் உடையவனாக உறைந்தருளுகிறான். இப்பொழுது பிரதானமாக இருப்பது ஆண்டாள் கோயில் என்று சொல்லப்படும் கோயில். இந்த இரண்டு கோயில்களையும் இணைக்கும் நந்தவனத்தில் தான் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது. இப்பொழுது உள்ள ஆண்டாள் கோயில் நாச்சியார் திருமாளிகை என்று சொல்வார்கள். கைசிக ஏகாதசியன்று ஆண்டாள் ரெங்கமன்னார் பெரியாழ்வாரோடு நாச்சியார் திருமாளிகையிலிருந்து வடபத்ரசாயி சந்நதிக்குப் புறப்படுவார்கள். அங்கே 108 போர்வைகள் போற்றப்படும். அதற்குப் பின்னே ஆஸ்தானம் திரும்புவார்கள்.

11) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தீர்த்தங்கள்

அற்புதமான திருக்கோயில் இது. அழகான மண்டபங்கள். அற்புதமான தூண்கள். திருக்கோயிலில் நுழைந்தாலே ஒருவிதமான பரவசம் நம்மைப் பற்றிக் கொள்ளும். பற்பல சிற்பங்கள் காண்பவர்கள் கண்களையும் கருத்தையும் இழுக்கும். பெரியாழ்வார் தன் காலத்தில் திருமாளிகையில் திருவாராதனம் செய்த பெருமாள் லட்சுமி நாராயணன் முதல் பிராகாரத்தில் கிழக்கு மூலையில் வடதிசை நோக்கி சேவை தருவார். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றி பல சிறப்பு மிக்க தீர்த்தங்கள் உண்டு. திரிவேணி தடாகம், திருப்பாற்கடல், சக்கர தீர்த்தம், கண்ணாடித் தீர்த்தம், திருக்கோனேரி, பஞ்ச பூததீர்த்தங்கள், மண்டூக மகரிஷி திருநாமத்தில் அமைந்த மண்டூக நதி என பல தீர்த்தங்கள் உண்டு.

நாச்சியார் திருமாளிகையில் அமைந்த மூன்று கிணறுகளில் கண்ணாடி கிணறு என்பது மிக முக்கியமானது. தர்பண தீர்த்தம் என்று பெயர். பெருமானுக்குக் கட்டப்பட்ட மாலைகளை, ஆண்டாள் தான் சூடி, இது பெருமாளுக்கு அழகாக இருக்குமா என்று அழகு பார்த்த கிணறு கண்ணாடிக் கிணறு. அதற்கு அருகாமையில் சந்தன கிணறு என்று ஒன்று உள்ளது. அது கருட தீர்த்தம். மடைப்பள்ளி இன்னொரு கிணறு உண்டு. அதற்கு வாசுகி தீர்த்தம் என்று பெயர். அங்கிருந்துதான் தளிகைக்கான தீர்த்தம் எடுக்கப்படுகிறது. மிக முக்கியமானது ஊருக்கு வெளியே அமைந்த திருமுக்குளம் தீர்த்தம்.

12) இந்தக் குளத்தில் என்ன தேடினார் அனந்தாழ்வார்?


இந்தத் திருக்குளத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் ஒரு சம்பவம் வைணவ குரு பரம்பரை கதைகளில் உண்டு. ஸ்ரீ ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் இங்கு ஒரு முறை வந்து இந்த தீர்த்தத்தில் நீராடுகின்றார். திருக்குளத்தில் வெகுநேரம் எதையோ தேடினார். “என்ன தேடுகிறாய்?” என்று விசாரித்த பொழுது, ``ஆண்டாள் நீராடிய திருக்குளத்தில் அவள் பூசிக் குளித்த மஞ்சளின் ஒரு சிறு பகுதி கிடைக்குமா என்று தேடுகிறேன்” என்றாராம்.

13) சுதர்சன ஆழ்வார் காட்சி தரும் குளம்

மண்டூக மகரிஷி என்னும் முனிவர் காட்டில் தவம் இருந்தார். அப்பொழுது காலநேமி என்னும் அசுரன் அங்கு தவம் செய்த முனிவர்களை மிகவும் துன்புறுத்தினான். அந்த முனிவர்கள் எல்லாம் மண்டூக மகரிஷியிடம் சென்று முறையிட்டனர். மண்டூக மகரிஷி, ``இனி எம்பெருமானே கதி, அவனிடம் பிரார்த்திப்போம்” என்று சொல்லி, பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய, பெருமாளுடைய திருச்சக்கரமான சுதர்சன ஆழ்வார் கால நேமியை கொன்று விடுகிறார். முனிவர்கள் நிம்மதி அடைகின்றனர் கால நேமியை அழித்த சக்கரத்தாழ்வார் இந்த திருமுக்குளத்தில் வந்து அமர்ந்தார் திருமுக்குளத்தில் கிழக்குப் பகுதி படித்துறையில் சற்று தண்ணீர் குறைந்த காலத்தில் சக்கரத்தாழ்வார் தரிசனம் கிடைக்கும்.

14) வட பத்திரசாயீ

காலநேமியை அழித்த பிறகு எம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவத்தில், சின்னஞ்சிறு ஆலிலையில் இங்கு துயில் கொண்ட நிலையில்  முனிவர்களுக்குக் காட்சி தந்ததால் பெருமானுக்கு வடபத்ரசாயி என்று திருநாமம். ``வட” என்றால் ஆலமரம். “பத்ரம்” என்றால் இலை. “சாயி” என்றால் துயில். ஆலிலையில் துயில் கொண்டவன் என்பதே வடபத்ரசாயி என்ற சொல்லுக்குப் பொருள். வடமொழியில் இதற்கு வடபுரேசம் என்றும் பெயர். அதாவது, ஆலிலை நகரம் என்று பெயர். இந்தப் பெருமானைத்தான் அக்காலத்தில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் பாடி மங்களாசாசனம் செய்தனர்.

உய்ய உலகு படைத்த மணிவயிறா,  
ஊழிதோறூழி பல ஆலின் இலை, அதன்மேல்
பையஉயோகு துயில் கொண்ட பரம்பரனே,
பங்கையநீள்  நயனத்து அஞ்சன மேனியனே!
என்று பெரியாழ்வார் இப்பெருமானைப் பாடுகின்றார்.

15) வடபெருங்கோயிலுடையான் தரிசனம்

அழகான தமிழில் வட பெருங்கோயில் உடையான் என்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கிறார்கள். ஆண்டாள் கோயிலுக்குப் பக்கத்தில் பழம் பெருமை மிக்க இக்கோயில் உண்டு. இக்கோயிலில் இரண்டு தட்டுகள். கீழே நரசிங்கப் பெருமாள் சந்நதி, இச்சந்நதிக்குக் கிழக்கே வடபுறம் பன்னிரு ஆழ்வார்களும் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கிறார்கள். தென்பக்கமாக மேல் மாடிக்குப் போகப் படிகள் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்சென்றால் முதலில் நாம் சேர்வது கோபால விலாசம்.

அதனை அடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழே உள்ள கருவறையில் வட ஆல விருட்சத்துக்கு அடியில், ஆதிசேஷன்மீது பூதேவியும் சீதேவியும் அடிவருட வடபத்திரசயனர் சயனித்திருக்கிறார். வடபத்ரசாயியை தரிசிக்கும்போது, ஸ்ரீதேவி, பூதேவி, அனந்தன், கின்னரர்கள், அருக்கன், சோமன், கந்தர்வர்கள், தும்புரு, நாரதர், சனத்குமாரர்கள், கருடன், அனுமன், மார்க்கண்டேய மகரிஷி இவர்களோடு சிவனும் காட்சி தருவார். மார்கழி மாதம் முதல் நாள் அடியார்கள் சேவை செய்வதற்கு என இங்குள்ள திட்டி வாசல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

16) மண்டூக பர்வதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு சிறிய மலையை தரிசிக்க முடியும். அதற்கு மண்டூக பர்வதம் என்று பெயர். மண்டூகம் என்றால் தவளை என்று பொருள். ஏன் அதற்கு இந்தப் பெயர் வந்தது? ஒரு முறை ரிஷி ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அதுவும் நீருக்குள் நின்று தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவரைப் பார்ப்பதற்காக துர்வாச முனிவர் வந்தார். தவ நிலையில் இருந்ததால் இவரை கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், அவரை தவளையாகப் போகும்படி சபித்தார். தவளையாக மாறிய அந்த முனிவருக்கு மண்டூக மகரிஷி என்ற பெயர் ஏற்பட்டது.

இருந்தாலும் அவர் விடாமல் தவம்செய்து எம்பெருமானை தியானித்தார். எம்பெருமான் இவர் முன் தோன்றிய பொழுது, தான் ஏற்கனவே தியானம் செய்த திருமாலிருஞ்சோலை பெருமாளான சுந்தர்ராஜனின் தோற்றத்தில் தரிசனம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய, அப்படியே  பெருமாள் இங்கு அவருக்கு தரிசனம் தந்தார். இன்றும் இந்த மலையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உண்டு. அந்த முனிவர் சுந்தரராஜ பெருமாள் வெகுகாலம் தரிசனம் செய்து நிறைவாக மோட்சம் அடைந்தார்.

17) பெரியாழ்வார் கட்டிய கோயில்

அந்தக் காலத்தில் சிறிய கோயிலாக இருந்த வில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் ஆலயத்தை மிகச் சிறப்பாகக் கட்டியவர் பெரியாழ்வார். இந்தக் கோயிலை கட்டியதோடு ஒரு நந்தவனமும் அமைத்து பராமரித்து வந்தார். பாண்டியன் அரசவையில், வேத புராண இதிகாசங்களை விளக்கி பகவானின் பரத்துவத்தை, வித்வான்கள் மத்தியிலே, நிர்ணயம் செய்து பாண்டியன் அளித்த பொற்கிழியைப் பெற்றார். அப்படிப் பெற்ற செல்வத்தைக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமானுக்கு ராஜகோபுர கைங்கரியம், நந்தவன கைங்கரியம் என்று பல கைங்கரியங்களையும் செய்தார்.

இங்குள்ள ராஜகோபுரம் மிக உயர்ந்தது. கம்பீரமானது. அரசாங்கத்தின் சின்னமாக விளங்குவது. இதனைக் கம்பர், மகாமேரு என்று புகழ்ந்திருக்கிறார். அப்படிக் கம்பன் பாடிய பாடலின் கல்வெட்டு ஒன்று இங்கு உண்டு. இதனை விளக்கும் பாடல் ஒன்றுண்டு.

பாண்டியன் கொண்டாடப்  பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்து ஊத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
பாதங்கள் யாம் உடைய பற்று

பெரியாழ்வாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் பிரான் என்றும் விஷ்ணுசித்தர் என்றும் இரண்டு திருநாமங்கள் உண்டு. (கிழி-பொற்காசுகள் கொண்ட சன்மானப் பை)

18) ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

பெரியாழ்வார் ஒவ்வொருநாளும் பாமாலையோடு பூமாலையும் சமர்ப்பிப்பார். தன் கையாலேயே கட்டிய மாலையை பவித்ரமாகக் கருதி, அதை எம்பெருமானுக்குச் சூட்டுவார். ஒருநாள் அவர் கட்டிவைத்த மாலையை அவர் திருமகள், ஐந்து வயதுக்கும் குறைவான கோதை, தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்தாள். தனக்கு அழகாக இருக்கிறதா என்று நினைக்கவில்லை. இதை சூட்டினால் எம்பெருமானுக்கு அழகாக இருக்குமா என்று நினைத்து அவள் தனக்குத்தானே சூடிப் பார்த்துக் கொண்டு கூடையில் வைத்து விடுவாள். இதை ஒரு நாள் நேரில் கண்ட பெரியாழ்வார் அதிர்ந்து போனார்.

“இது என்ன அபசாரம்? அவன் சூடிக்களைந்த மாலையைத் தானே நாம் பிரசாதமாகச் சூடவேண்டும். நாம் சூடிக்களைந்து கொடுத்ததை எம்பெருமானுக்குச் சூட்டுவது தகுமா?” என்று கோபம் கொண்டார். தன் மகள் கோதையைக் கண்டித்தார். ‘‘இனி இப்படி செய்ய கூடாது” என்று எச்சரித்தார். “தாமதமாகி விட்டதே” என்று அவசரம் அவசரமாக வேறு ஒரு மாலையைக் கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தார். ஆனால், அவர் மனம் அமைதியடையவில்லை. மனக்குறையோடு உணவும் கொள்ளாமல்படுத்தார்.

 19) ஆண்டாள் மாலையே வேண்டும்

ஆண்டாள் தான் தவறு செய்து விட்டோமே, தகப்பனாரின் மனது இப்படி கஷ்டப்படுகிறதே என்று நினைத்து அழுது கொண்டிருந்தாள். அன்றைய தினம் பெரியாழ்வாருடைய கனவில் வந்த எம்பெருமான், ‘‘விஷ்ணு சித்தரே, நீர் இரண்டாவதாக மிகவும் ஆசாரமாக நினைத்துக்கொண்டு கட்டி கொடுத்த மாலையை விட, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே நமக்கு உகந்தது. இனிமேல் ஆண்டாள் சூடிய மாலையைத் தான் நமக்கு நீர் சமர்ப்பிக்க வேண்டும்” என்று சொல்ல ஆண்டாளின் தெய்வத் தன்மையை பெரியாழ்வார் அறிந்துகொண்டார். அன்று முதல் அவளுக்கு “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் வந்தது, இன்றைக்கும் தினந்தோறும் முதல் நாள் இரவு ஆண்டாளுக்கு சூட்டிய மாலையை வட பத்திரசாயி என்ற பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுக்கு மறுநாள் காலை முதல் மாலையாக அணிவிப்பார்கள்.

20) மார்கழியில் நோன்பு, பங்குனியில் திருக்கல்யாணம்

திருமணப் பருவம் வந்ததும் கோதையின் திருமணப் பேச்சை பெரியாழ்வார் எடுத்தார். அவள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று சொல்லிவிட்டாள். அதாவது, நான் அந்தக் கண்ணனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அவன் தான் என் அழகன். என்று சொல்லியதோடு அவனையே நினைத்து உடல் மெலிந்தாள். தன் நிலையை பாசுரமாகவும் பாடினாள்.

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர்  எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

கண்ணனை அடைவதற்காகவே அன்று ஆயர் குலப் பெண்கள் நோற்றதாகச் சொல்லப்படும் பாவை நோன்பை நோற்றாள். அதுவே மார்கழி மாத திருப்பாவை நோன்பு. பகவான் கண்ணன் தன்னை திருமணம் செய்து அழைத்துப் போவதாகவும் கனவு கண்டாள். அந்த கனவுப் பாசுரங்கள் வாரணம் ஆயிரம் என்ற பதிகமாகப் புகழ்பெற்றது.

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

திருமணமாகாதவர்கள் இன்றைக்கும் இந்தப் பதிகத்தை ஆண்டாளை வேண்டிக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்கிறார்கள். வைணவர்கள் தங்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் இந்தப் பதிகத்தை ஓதி திருக்கல்யாணம் செய்கிறார்கள். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்த பதிகம் கட்டாயம் இடம்பெறும்.

 21) அரங்கனை “கை பிடித்த” ஆண்டாள்

ஆண்டாள் கண்ட கனவு பாண்டிய மன்னருக்கும் நிகழ்ந்தது. பெரியாழ்வாரையும், ஆண்டாளையும் அரச மரியாதையோடு திருவரங்கம் அழைத்து வரச்சொல்லி பாண்டியன் வல்லபதேவன் கனவில் உத்தரவு பிறந்தது. அவன் உடனடியாக செயலில் இறங்கினான். திருவரங்கம் தொடங்கி திருவில்லிபுத்தூர் வரை, பாதையைச் செப்பனிட்டு வழியெங்கும் தண்ணீர் தெளித்தான். கோலங்கள் போட ஏற்பாடு செய்தான்.

தோரணங்கள் கட்டினான் வாழை, கமுகு, பாளை என அலங்காரங்கள் செய்தான். விஷ்ணுசித்தர், திருமகள் ஆண்டாளுக்கு திரு ஆபரணங்கள் பூட்டி ஒரு பல்லக்கில் எழுந்தருளச் செய்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள், பொதுமக்கள் பின் தொடர திருவரங்கம் புறப்பட்டான். அங்கே எல்லோரும் பார்த்திருக்க அரங்கன் கருவறையில், நாகணை மிதித்து ஏறி, அரங்கனோடு கலந்தாள். இது நடந்தது பங்குனி உத்திரத் திருநாளன்று. அதை நினைவு கூறும் வண்ணம் இன்றும் பங்குனி உத்திரத் திருநாளன்று ரங்கமன்னார் ஆண்டாள் திருமண வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுகிறது.

 22) திருமலையப்பன் விரும்பிய ஆண்டாள் மாலை

ஸ்ரீ ராமானுஜர் ஒரு முறை திருமலைக்கு எழுந்தருளினார். அப்பொழுது திருமலையப்பன், ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை தனக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்ச்சகர் முகமாகக் கட்டளையிட்டான். ஸ்ரீ ராமானுஜர் உடனே புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து அடைந்தார். திருமலையப்பனின் ஆணையைத் தெரிவிக்க, அன்றிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த திருமாலை, திருமலையப்பனுக்கு சூட்டப்படுகிறது.

புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் கருட சேவை நடக்கும் பொழுது ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை திருமலையப்பன் சூடிக்கொண்டு வீதி உலா வருவான். ``குளிர்அருவி வேங்கடத்து என் கோவிந்தன்” என்றும் “வேங்கடவற்கு என்னை விதி” என்றும் பல படியாக கோவிந்தன் மீது ஆண்டாள் ஈடுபாடு கொண்டு இருந்ததை நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் மூலமாக அறியலாம். அப்படிப்பட்ட பரம பக்தையும், பூமிப்பிராட்டியின் அம்சமுமான ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை தான் சூட வேண்டும் என்று திருமலையப்பன் கருதியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

23) கோயில் அண்ணன்

ஆண்டாள், நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசிலும் சமர்ப்பிப்பதாக திருமாலிருஞ்சோலை அழகருக்கு நேர்ந்து கொண்டாள்.

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!
என்பது நாச்சியார் திருமொழிப்  பாசுரம்.

இதை மானசீகமாகச் சொன்னாளே தவிர நேரடியாக சமர்ப்பிக்கவில்லை என்று எண்ணிய சுவாமி ராமானுஜர், ஆண்டாளின் மனோரதத்தை நிறைவேற்றவேண்டும் என்று எண்ணினார். தன் சீடர்களுடன் திருமாலிருஞ்சோலை சென்று “அழகருக்கு ஆண்டாள் சமர்ப்பணம்” என்று கட்டியம் சொல்லி நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் சமர்ப்பித்தார். அன்று அழகன் பேரழகனாக சந்துஷ்டியுடன் காட்சி அளித்தான்.

எம்பெருமானாருக்கும் பூரண திருப்தி. அதோடு ஆண்டாளின் சேவைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபோது, கருவறையிலிருந்து ஆண்டாள், ‘‘ஒரு அண்ணன், தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றுவது போல என் மனோரதத்தை நிறைவேற்றி தந்தீரே, வாரும் கோயில் அண்ணரே” என்று வரவேற்பது போல ஒரு அடி முன்னே எடுத்து வைத்தாள். அந்தக் காட்சியை இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் பார்க்க முடியும்.

அன்றுமுதல் ராமானுஜருக்கு கோயில் அண்ணர் என்ற பெயர் வந்தது. இதை அவருடைய வாழித்திருநாமத்திலும் நாம் காணலாம். ‘‘ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிக்குப்பின்னானாள் வாழியே” என்று அந்த வாழித் திருநாமம் வரும். இதன் விளைவாக ஆண்டாள் சந்நதி உற்சவங்களில். அருகே உள்ள அர்த்த மண்டபம் தனில் எழுந்தருளுகின்றார் அதைப்போலவே மார்கழியில் ஆண்டாள் திருநீராட்ட உற்சவத்தில் கோயில் அண்ணன் (ராமானுஜர்) புறப்பாடு இங்கு நடக்கும்.

24) அடியாருக்காக தனி உற்சவம்

ஒருமுறை ஆண்டாளின் மீது அதீத பக்தி கொண்ட சுவாமி மணவாள மாமுனிகள் மார்கழி நீராட்ட உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். ஆனால், அவர் வருவதற்குள் அந்த உற்சவம் முடிந்து விட்டது. உற்சவத்தை சேவிக்க முடியாத மன வருத்தத்துடன் அவர் இருப்பதை அறிந்த ஆண்டாளின் திருவுள்ளம் நெகிழ்ந்தது. மணவாள மாமுனிகள் மறுபடியும் நீராட்ட உற்சவத்தை கண்டுகொள்ள வேண்டும் என்று அர்ச்சகர் முகமாக கட்டளை பிறப்பிக்க, மணவாள மாமுனிகளின் மனக்குறையை நீங்கியது. உளப்பூர்வமான தூய பக்திக்கு ஆண்டாளின் தாயுள்ளம் எப்படி இரங்கியது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு. மணவாள மாமுனிகளுக்காக மார்கழி மாதம் முடிந்து, தைத்திங்கள் முதல் நாளும் எண்ணைக் காப்பிட்டு நீராட்ட உற்சவம் கண்டருளுகிறார் ஆண்டாள்.

25) கிருஷ்ணதேவராயரின் பக்தி

விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயர் சிறந்த புலவர். இலக்கிய ரசிகர். ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆண்டாளின் நாச்சியார் திருமொழியையும் திருப்பாவையையும் நன்கு கற்றவர். தம்முடைய தாய்மொழியான தெலுங்கில் ஆண்டாளின் பெருமைகளையெல்லாம் ஒரு நூலாக இயற்றினார். மிகச்சிறப்பான அந்நூலுக்கு ஆமுக்த மால்யத என்று பெயர் சூட்டினார். ஆமுக்த மால்யத என்றால் மாலையைச் சூடிக் கொடுத்தவள் என்று பொருள்.

இது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் நூலாகும். ஏழு அத்தியாயங்கள் உள்ள இந்நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் பெரியாழ்வாரின் வரலாறும், அடுத்த மூன்று அத்தியாயங்களில் ஆண்டாளின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது. என்று பெயர். ஆந்திர வைணவர்களிடையே இது ஒரு மிகச் சிறப்பான நூலாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது தவிர ஆந்திராவில், மார்கழியில், தமிழ்ப் பிரபந்தமான ஆண்டாளின் திருப்பாவையை தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் காலையில், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடும் நிகழ்வை காணலாம்.

26) ஆடிப்பூர உற்சவ தங்கப் பல்லக்கும், தந்தப் பல்லக்கும்

 ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுகின்ற ஒவ்வொரு உற்சவமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூரம்தான் ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரம். அந்த உற்சவம் தான் இத்தலத்தின் பிரசித்தி பெற்ற உற்சவம். திருமால் அடியார்கள் லட்சக்கணக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுவார்கள். ஆடிப்பூர உற்சவம் பத்து நாள்கள் வெகு சிறப்பாக நடக்கும். கோயிலுக்கு வெளியே மிகப் பெரிய அலங்காரப் பந்தல் போட்டு, ஒவ்வொரு நாளும் பல பெரியவர்களின் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், மேளக்கச்சேரிகள் என அமர்க்களமாக நடக்கும். இந்தத் திருநாள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. முதல் திருநாளில் முற்பகலில் தங்க தோளுக்கினியானில் ஆண்டாள் ரெங்கமன்னார் சேர்த்தி உற்சவம்.

அன்று இரவு 16 வண்டி எனும் திருச்சப்பரத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் அற்புத சேர்த்தி உலா வருவார்கள். இரண்டாம் நாள் திருநாளில் தினமும் முற்பகலில் தங்கப்பல்லக்கில் ஆண்டாளும், தந்தப் பல்லக்கில் ரங்கமன்னாரும் வீதி உலா வருவார்கள். இரண்டாம் நாள் இரவில் சந்திர பிரபையில் ஆண்டாளும், சிம்ம வாகனத்தில் பெருமாளும் வீதி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. காரணம் ஆண்டாள், கோப்புடைய சீரிய சிங்கமாக பெருமாள் வரவேண்டும் என்று தானே திருப்பாவையில் பாடினாள். எனவே சிங்கப்பெருமாள், சிங்கவாகனத்தில் ஏறி வருவது பொருத்தம் தானே.

27) பெரியாழ்வார் மங்களாசாசனம்

மூன்றாம் திருநாளில் தந்த பரங்கி நாற்காலி என்னும் வாகனம். அதில் தாயார் (ஆண்டாள்) வீதி வலம் வர, பின்னால் அனுமன் வாகனத்தில் ஸ்ரீ ரங்கமன்னார் உலா வருவார். நான்காம் நாள் சேஷவாகனத்தில் ஆண்டாளும் திருகோவர்த்தனம், அதாவது மலை குடையாய் தாங்கிய தோற்றத்தில் பெருமாளும் புறப்பாடு எழுந்தருளுவார்கள். ஐந்தாம் நாள் திருவிழா மிகச் சிறப்பானது. முற்பகலில் பெரிய கொட்டகை போடப்பட்டிருக்கும்.

அங்கே தந்தத்தால் ஆன தோளுக்கினியானில் பெரியாழ்வார் எழுந்தருள்வர் அதன் பின்னர் ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள், சுந்தரராஜப் பெருமாள், திருவேங்கடமுடையான், (ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை தல பெருமாள்), சிவகாசிக்கு அருகில் இருக்கும் திருத்தண்கால் அப்பன் இவர்களெல்லாம் எழுந்தருள, ரங்கமன்னார் எதிர்சேவை ஆகும். அப்பொழுது பெரியாழ்வார் வலம் வந்து மங்களாசாசனம் செய்யும் காட்சி மிக அற்புதமாக இருக்கும்.

28) ஸ்ரீவில்லிபுத்தூர் கருடசேவை

ஆடிப்பூர ஐந்தாம் நாள் இரவு உச்ச நிகழ்ச்சிகளில் ஒன்றான ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும். முதலில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்தில் எழுந்தருள, பின்னால் அவருடைய தகப்பனார் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்தில் எழுந்தருள்வார். வரிசையாக திருத்தண்கால் அப்பன், சுந்தர்ராஜப் பெருமாள், ஸ்ரீரங்கமன்னார், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், ஆண்டாளுடன் ஸ்ரீனிவாசப் பெருமாள் என ஒவ்வொரு பெருமாளும் கருட சேவையில் வீதிவலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் வீதிகள் அத்தனையும் அன்று மக்களால் நிரம்பி இருக்கும். பத்தடிக்கு ஒன்றாக, வெவ்வேறு கிராமங்களில் இருந்து வந்த மக்கள், பஜனை பாடி, கும்மி கோலாட்டம், என “ஆடி ஆடி அரங்கா” என அழைக்கும் காட்சி  பரவசமாக இருக்கும்.

கருடசேவை வீதிவலம் வரவர, இவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி மாறி, விடிய விடிய நாம சங்கீர்த்தன பிருந்தாவன பஜனை வைபவம் நடைபெறும். நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று பாடும் மணம் உடை பக்தர்களை பெரியாழ்வார் அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது போல லட்சக்கணக்கான மக்கள் போடும் கோவிந்த நாம சங்கீர்த்தன ஒலி, விண்ணை முட்டும். ஆறாம் நாள் இரவில் ஆண்டாள் தண்டிலும், பெருமாள் ரங்கமன்னார் யானை வாகனத்திலும் திருவீதி புறப்பாடு கண்டருள்வர்.

29) அரங்கமடி சேவை

ஏழாம் திருநாள் காலையில் ஆண்டாளும், ரங்கமன்னாரும் தனித்தனியாக தோளுக்கினியானில் வலம் வருவார்கள். அன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் என்னுமிடத்தில் சயன சேவை நடைபெறும். இது வேறு எந்த ஆலயத்திலும் கிடையாது. ஆண்டாள் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அற்புதமான அலங்காரத்துடன் காட்சி தர, ஆண்டாளின் திருமடியில் ரங்கமன்னார் தலை சாய்த்து உறங்குவது போல காட்சியளிக்கும் சேவை மிகமிக அற்புதமானது. அரங்கமடி சேவை என்று இதற்கு பெயர். இக்காட்சியை தரிசிக்க கூட்டம் அலை அலையாய்திரளும். எட்டாம் நாள் இரவில் ஆண்டாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள, ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

30) ஆடித்தேர்

அப்போது, நடைபெறும் வையாளி சேவை மிக அற்புதமாக இருக்கும். ஒன்பதாம் நாள் ஆடிப்பூர திருவிழாவில் இன்னொரு உச்ச நிகழ்ச்சியாக தேர்த் திருவிழா நடைபெறும். இந்த தேர்த்திருவிழாவைக் காண்பதற்காகவும் பங்கு பெறுவதற்காகவும் லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருவார்கள். பத்தாம் நாள் சப்தாவரணம் நடக்கும். ஆண்டாள் முத்துகுறி என்பது இங்கே விசேஷம்.

அரையர் வாயால் இதைக் கேட்டு மகிழ்வார். இரவில் தங்க தோளுக்கினியானில் வீதிவலம் நடக்கும். அதற்கடுத்த நாள் நிறைவாக திருமுக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து விடையாற்றி உற்சவமும் புஷ்ப யாகமும் நடைபெறும். நிறைவாக ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையைப் பற்றியும், ஆண்டாளின் பெருமையைப் பற்றியும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் வியக்கத்தக்க உற்சவங்களின் சிறப்பைப் பற்றியும், தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதை அடுத்தடுத்த கட்டுரைகளில் நாம் அனுபவித்து மகிழலாம்.

எஸ். கோகுலாச்சாரி

Tags : Andal ,Aadipur ,
× RELATED பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்