×

ஆடியில் அம்மன் தரிசனம் : மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்

மதுரை மக்களிடம் சிலிர்ப்புடன், பரவசம் நிறைக்கிற அம்மன் கோயில் வரிசையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் முன்வரிசை காட்டி நிற்கிறது. மதுரை மகால் கட்ட மண் தோண்டிய இடத்தை திருமலை மன்னர் தெப்பக்குளமாக்கியதில் இப்போதும் இந்த குளம் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே அழைக்கப்படுகிறது.  இந்த குளத்திற்குள் இருந்தே மீனாட்சி கோயிலில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தை மாதம் மீனாட்சி கோயில் தெப்ப உற்சவமும் இந்த குளத்தில் நடத்தப்படுவதும், இதன் அருகிலேயே மாரியம்மன் கோயில் இருப்பதும் இப்பகுதிக்கே சிறப்பு சேர்க்கிறது. பாண்டியர்கள், சேதுபதிகள், நாயக்கர்கள் என அத்தனை தரப்பு மன்னர்களாலும் மாரியம்மன் வணங்கப்பட்டிருக்கிறார்.

மதுரை மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் ஒருசாரார் மகிழ மரக்காடுகளாக இருந்த இவ்விடத்தை ஆக்கிரமித்து, இயற்கை வளங்களை அழித்தொழித்து, அப்பகுதி மக்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இதுகுறித்த புகாரில், மக்களைக் காப்பதற்கென அப்பகுதிக்கு ஒரு படையுடன் மன்னர் சென்றார். ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தார்.  இந்த வெற்றி நாளில்தான் வைகை ஆற்றில் கிடைத்த அம்மன் சிலையை ஆற்றின் தென்கரையில் வைத்து வழிபாடு துவக்கினராம். அன்று துவங்கியே அடுத்தடுத்த மன்னர்களும் மண்டியிட்டு வணங்கிச் செல்லும் இடமாகவே இப்பகுதி மாறிப்போனது. போருக்கு செல்லும் முன் இங்கிருந்து கிளம்பினால் அன்றைய மன்னர்களுக்கு  வெற்றி கிட்டிய வரலாறும் பேசப்படுகிறது. மன்னர்களை கடந்து மக்களிடமும் மாரியம்மன் பக்தியுணர்வில் வழிபாடு தெய்வமாகிப் போனார்.

  தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டி, தன் தாய் ரேணுகாதேவியின்  தலையைத் பரசுராமர் துண்டித்தார். மறுபடியும் தன் தாயை உயிர்ப்பித்துத் தரும்படி தந்தையைக் கேட்டதாகவும், அதன்படி உயிர்த்தெழுந்த ரேணுகாதேவியே இங்கு மாரியம்மனாகக் கோயில் கொண்டிருப்பதாகவும், பழமை ஆன்மிக வரலாறும் இங்கு பேசப்படுகிறது. வைகை ஆற்றின் வண்டியூர் மேல்மடைக்கு நேரில் இக்கோயில் அமைந்திருப்பதால் இந்த கோயிலை ‘வண்டியூர் மாரியம்மன் கோயில்’ என்றும் அழைக்கின்றனர். மகிஷனை வதம் செய்யும் நிலையில் அம்மனும் இங்கே காட்சி தருகிறார். அவ்வகையில் மாரியம்மனே மகிஷாசுரமர்த்தினியாகவும் திகழ்கிறார் என்பதும் தனிச்சிறப்பாகும்.

 அத்தோடு தனது இடக்காலின் மீது வலக்காலைப் போட்டபடி அம்பிகை அமர்ந்திருக்கும் திருக்கோலம் அபூர்வக் காட்சியாக இருக்கிறது. அன்றைக்கு போருக்குச் சென்று வென்று திரும்பிட மன்னர்கள் வழிபட்டதைப்போல், இன்று தேர்வு, விளையாட்டு என அத்தனை போட்டிகளிலும் வென்று வர பக்தர்கள் வழிபட்டு திரும்புகின்றனர். அம்மன் கோயிலில் அரசமர விநாயகருடன், பேச்சியம்மனும் காட்சி தருகின்றனர்.பால்குடம், தீச்சட்டி எடுப்பதும், கண்மலர், அம்மனின் உருவப் பொம்மை காணிக்கைகளும், பானை முழுவதும் மையினால் புள்ளிவைக்கப்பட்ட ஆயிரம் கண் பானை கொண்டு வருதலும், மாவிளக்கு நேர்த்திக்கடன்களும் என இந்த ஆடி நாட்களில் ஆலயம் மக்கள் கூட்டத்தில் நசுங்கிக் கிடக்கிறது.

தீர்த்தமே பிரசாதம்!
அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமே இங்கு பிரசாதமாகும். பித்தளை, செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பிரசாதமாக இது வழங்கப்படுகிறது. கண், தோல், அம்மை நோய்களுக்கும், நாள்பட்ட வியாதியஸ்தர்களுக்கும் இத்தீர்த்தம் பிணி போக்கும் அருமருந்தாக இருக்கிறது.

பூஜை, திருவிழாக்கள்
தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும், பங்குனியில் பூச்சொரிதல் உள்ளிட்ட பத்து தினங்கள் நடைபெறும் திருவிழாவும் சிறப்பாகும்.

நடை திறப்பு நேரம்
காலை 6 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

பயண வழி
*  மதுரை மாட்டுத்தாவணியில் இருந்தும், பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்தும் டவுன் பஸ் வசதிகள் உள்ளன. நகரின் எங்கிருந்தும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து போகலாம்.

Tags : Amman Darshan ,Audi ,Madurai ,Vandiyur ,Teppakulam Mariamman Temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...