ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் முழுமையான சாலை வசதி, மகளிர் சுகாதார வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இதில் கோவில்பட்டி ஊராட்சியில் குறிவியம்மாள்புரம். கரட்டுப்பட்டி, சொக்கனூர், க.விலக்கு, முத்தனம்பட்டி, கதிரியகவுண்டன்பட்டி, மாலைப்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்கள் அடங்கியுள்ளது. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 1800க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. இதில் கோவில்பட்டி கிராமத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். காலையில் விவசாய தோட்டத்திற்கும், கால்நடை மேய்ச்சலும் செல்லும் கிராம மக்கள் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இந்த நிலையில் கோவில்பட்டி கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வைகை அணை சாலையை இணைக்கும் தார் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதற்காக சாலை பணிகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் சாலை வசதிகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. ஆனால் அந்த சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சாலைகள் அமைப்பதற்கு கற்கள் கொட்டப்பட்டு, அதில் பாதியளவு தார்ச்சாலை அமைத்தும், மீதமுள்ள சாலை கற்களாகவும் காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களும் அந்தப் பகுதியில் நடந்து செல்வதற்கும், டூவீலர்களில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது.இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கழிப்பிடம் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் அந்த சுகாதார வளாகத்திற்கு அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளும், ஆசிரியர்களும் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த சுகாதார வளாகம் தற்போது பயன்பாடின்றி கிடப்பதால் பொதுமக்களும், பள்ளி மாணவிகளும், ஆசரியர்களும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும் இந்த சுகாதார வளாகம், அசுத்தமான நிலையில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இந்த சுகாதார வளாகம் அரசு பள்ளியை ஒட்டி அமைந்துள்ளது. அசுத்தமான நிலையில் இல்லாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவில்பட்டி கிராமத்திற்கு குன்னூர், அரப்படிதேவன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தேனி, அல்லிநகரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. அதற்காக பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்ற போது, கோவில்பட்டி பகுதிக்கு செல்லும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோவில்பட்டி மற்றும் சொக்கனூர், கரட்டுப்பட்டி, குறவியம்மாள்புரம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் மாற்று வழியாக வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினியோகிக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக முறையாக சப்ளை செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடக்காத, அரைகுறையாக நடந்த திட்டங்களை தற்போது மேம்படுத்தி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். இதுகுறித்து, கோவில்பட்டி பழனியம்மாள் கூறுகையில், கோவில்பட்டி கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். முழுமையான சாலை வசதிகள் இல்லாததால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலையில் அதிகளவு கற்கள் உள்ளதால், ஆட்டோக்கள் டூவீலர்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படாததால் போர் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். இதனால் தங்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கோவில்பட்டி கிராமத்திற்கு முழுமையான சாலை வசதி, மகளிர் சுகாதார வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவைகளை அமைத்து தர வேண்டும், என்றார்.இதுகுறித்து கோவில்பட்டி ஊரா ட்சி மன்றத் தலைவர் தங்கபாண்டியிடம் கேட்டபோது, கோவில்பட்டி கிராமத்தில் சாலை பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக நடைபெறாமல் உள்ளது. அந்த சாலை பணிகளை முழுமையாக அமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மகளிர் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி அமைத்து, புதர்மண்டி கிடப்பதை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவில்பட்டி ஊராட்சிக்கு 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் சப்ளை செய்து வருகிறோம், என்றார்….
The post அதிமுக ஆட்சியில் ‘எல்லாமே’ அரைகுறை… கோவில்பட்டிக்கு அடிப்படை வசதிகள் அவசியம்-எதிர்பார்ப்பில் பொதுமக்கள் appeared first on Dinakaran.