×

பூமி, மனை பாக்கியம் தருவார் பூமீஸ்வரர்

பஞ்சபூதங்களில் அதிக பயனாவதும் மக்களைத் தாங்கி நிற்பதும் பூமியாகும். பூமி வடிவாக விளங்கும் சிவபெருமான் பாரபூதன் என்றழைக்கப்படுகிறார். அவருடைய தேவி தாரிகா. இவர்கள் அருளால் மண் மீது பலகோடி உயிர்கள் தோன்றி வாழ்ந்து மறைகின்றன. இவர்களுடைய மகள் பூமிதேவி எனப்படுகிறாள். அந்த பூமிதேவிதான் செழிக்கவும், கோடான கோடி உயிர்கள் நலம்பெற்று வாழவும் எப்பொழுதும் சிவபூசை செய்கின்றாள். அவளால், வழிபடப்பட்ட இறைவன் பூமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் பூமீஸ்வரர் எனும் பெயரில் சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

மரக்காணம் பூமீஸ்வரர்

சென்னை - பாண்டிச்சேரி கீழக்கு கடற்கரையோரச் சாலையில் சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் மரக்காணம் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களில் மணல்கானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில், சோழர்கள் காலத்திய கற்கோயிலாகும். பெருமான் பூமீஸ்வரர் மற்றும்  அம்பிகை கிரிஜாம்பிகை உள்ளனர். கடலோரத்து மணல் வெளியிடையே சிறு சோலை சூழ்ந்த வளமான நீர் ஊற்றுக்களுடன் கூடிய ஊரானது கானம் எனப்படும்.

இவ்விடம் அத்தகைய சோலை சூழ்ந்த இடமாக இருந்ததால் இவ்வூர் மணற்கானம் எனப்பட்டது. அதனிடையே சோழ மன்னனுக்குப் பெருமான் தோன்றிக் காட்சியளித்தார் என்றும், அவன் பெரிய கற்கோயிலை அவருக்கு அமைத்தான் என்றும் கூறுகின்றனர். இத்தலத்துக்கு வடக்கேயுள்ள திருவிடந்தை வராகப் பெருமானிடம் உபதேசம் பெற்று, பூமிதேவி இங்கு வந்து சிவபூசை செய்து பேறு பெற்றாள் என்பர்.

மணச்சநல்லூர் பூமீஸ்வரர்

திருச்சிக்கு அருகிலுள்ள தலம். இறைவர் பூமீஸ்வரர், யமனுக்கு அருள்புரிந்த திருப்பைஞ்ஞீலி அருகில் உள்ளது. பூமிதேவி தவம் செய்து அருள்பெற்ற தலம். யமன் இல்லாததால் பூமிக்கு பாரம் அதிகமானது. அதனால் யமனை உயிர்ப்பித்து அருளும்படி, பூமிதேவி தவம் செய்த தலம்.

கோனேரி ராஜபுரம்

கும்பகோணம் - காரைக்கால் பாதையில் உள்ள எஸ். புதூர் எனும் ஊரில் இறங்கிப்போனால் கோனேரிராஜபுரம் வரும். தேவாரத்துள் திருநல்லம் என்று குறிக்கப்படும் இத்தலம், இந்நாளில் கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படுகிறது. இறைவர் பூமீஸ்வரர், அம்பிகை பூமிதேவி வராகரிடம் உபதேசம் பெற்று அசுரரால் தீண்டப்பட்ட பாவம் நீங்க பூசித்த தலம். தீர்த்தம் பூமி தீர்த்தம். பூமிதேவி மகிழும் வண்ணம் பெருமான் நடனக் காட்சியளித்தார். அது பூமி தாண்டவம் எனப்படுகிறது. பெருமான் பூமி தேவிக்கு உமாமகேஸ்வரராகக் காட்சியளித்தார் என்று புராணம் கூறுகிறது.

வீரவநல்லூர்

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி சாலையில் வீரவநல்லூர் உள்ளது. இத்தலம் ஆதியில் புன்னை வனமாக இருந்தது. ஒரு சமயம் பூமியின் பாரம் அதிகரித்ததால் பூமிதேவி வருத்தமுற்றாள். அவள் சிவபெருமானைச் சரணடைந்து, பூபாரத்தைக் குறைக்க வேண்டுமென்று விண்ணப்பித்தாள். பெருமான் புன்னை வனம் சென்று வழிபடுமாறு கூறினார். அவள் வழிபட்டதால், பெருமான் பூமீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

மீண்டும் ஒருமுறை பூமிதேவி தன்னைக் கடலுக்கு அடியிலிருந்து மீட்டு வந்த வீரவராகப் பெருமானுடன் வழிபட்டாள். அவர் பெயரால் இத்தலம் வீரவராக நல்லூர் என்று அழைக்கப்பட்டு, இப்போது வீரவநல்லூர் என வழங்குகிறது. அம்பிகையின் பெயர் பூமியின்மீது பெரும் வளத்தைக் குறிக்கும் பச்சை வண்ணத்தோடு தொடர்புபடுத்தி மரகதவல்லி என வழங்குகிறது. தீர்த்தம் சிவகங்கை இது பூமியால் தோண்டப்பட்டு இறைவன் திருமுடியிலுள்ள கங்கையில் நிறைக்கப்பட்டது.

திருச்சுழி

அருப்புக்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சுழி அமைந்துள்ளது. ஒரு சமயம் பூமியை அழிக்கப் பொங்கி வந்த வெள்ளத்தைப் பெருமான் ஒரு பிலத்துள் செல்லுமாறு கூற, அது சுழித்து உட்சென்று அடங்கியதால் இத்தலம் திருச்சுழி என்றும், பெருமான் பிரளய விடங்கன் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு பூமிதேவி வழிபட்டுப் பெருமானின் மணக்கோலத்தைக் கண்டாள். பெருமான் பூமீஸ்வரர். சோமாஸ்கந்தர் பிரளய விடங்கர். அம்பிகை துணைமாலை நாயகி(சகாயவல்லி). தீர்த்தம் - பூமி தீர்த்தம், கௌவைக் கடல் என்பதாகும்.

பூலோகநாதர்

உலகம் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்று மூவகைப்படும். காயத்ரி மந்திரம் பூர், புவ, சுவ என்று இம்மூன்று உலகங்களையும் குறிக்கின்றது. பூவுலகத்தில் மட்டுமே சிவபூசை செய்து மேன்மை பெற முடியும். பூமண்டலத்தின் பெயரால் சிவபெருமான், பண்ருட்டி நெல்லிக்குப்பத்தில் பூலோகநாதர் என்ற பெயரில் வீற்றிருக்கின்றார்.

பூமிதேவி

உலகம் படைக்கப்பட்டபோது ஆதிசக்தி எல்லையில்லாத பெருவெளியான ஆகாயமாகத் தோன்றினாள். வேதம் உமையை ஆகாச வடிவானவள் என்று புகழ்கிறது. பிறகு காற்று, தீ, தண்ணீர் ஆகியன படைக்கப்பட்டன. அவற்றை தொழிற்படுத்த அக்னிதேவன், பவணதேவன் (வாயு), வருணன் ஆகியோர் படைக்கப்பட்டனர். பின்னர் பூமியும் உயிர்த் தொகுதிகளும் படைக்கப்பட்டன. பூமி எல்லாவற்றையும் தாங்கியிருப்பதுடன் பொறுமையுடன் வளர்க்க வேண்டியிருப்பதால் அதற்கு தேவதையாக பூமிதேவி என்னும் பெண் படைக்கப்பட்டாள்.  

அவள் மிகுந்த தபஸ்வினி. அவள் தன்னுடைய அம்சமாக அனேகரை உண்டு பண்ணினான். அவளிடமிருந்து பூதேவி தோன்றி திருமாலை அடைந்து அவளுக்குத் தேவியானாள். புஷ்கலா தோன்றி மகாசாத்தனை அடைந்தாள். இப்படி எண்ணிலாத சக்திகள் தோன்றி அனேக தேவர்களை அடைந்தனர். பூமிதேவி பூமாதேவி என்றும், தாய் என்றும் கொண்டாடப்படுகிறாள். புராணங்கள், பூமிதேவி கரும் பச்சை வண்ணத்துடன் முத்துமாலைகளைச் சூடி, கருநெய்தல் பூவினை ஏந்தியுள்ளாள் என்று கூறுகின்றன.

Tags : Bhoomiswarar ,earth ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...