×

குறளின் குரல்-திருக்குறளும் தலைமுடியும்...

தலைமுதல் கால்வரை அனைத்து விஷயங்களையும் பற்றிப் பேசும் திருக்குறள் தலைமுடி பற்றிப் பேசாதிருக்குமா? பேசுகிறது.இரண்டு குறட்பாக்களில் முடியை `மயிர்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. ஒன்றில் மானின் முடி பற்றியும் இன்னொன்றில் மனிதரின் தலைமுடி பற்றியும் சொல்கிறது. மூன்றாவதாக ஒரு குறட்பாவில் மனிதர்களின் முடியைப் பற்றிச் சொல்லாமல் சொல்கிறது.

`மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.’
(குறள் எண் 969)

கவரிமான் உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது. அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள்.
`தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை’
(குறள் எண்  964)

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, அவர் தலையிலிருந்து உதிர்ந்த முடிக்குச் சமமாகக் கருதப்படுவார்.
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.’
(குறள் எண்  280)

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் அதுவே போதும், தலைக்கு மொட்டை அடித்தலும் தலையில் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் தேவையில்லை.
திருக்குறளில் மட்டுமல்ல, நமது ஆன்மிக மரபிலும் இலக்கியங்களிலும் தலைமுடி பல இடங்களில் பலவிதமாகப் பேசப்படுகிறது.தன் மனைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா என்று சந்தேகம் கொண்டான் பாண்டிய மன்னன். தன் சந்தேகம் என்ன என உணர்ந்து அதைப் போக்குபவர்க்குப் பொற்கிழி பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்தான். சிவபெருமான் தன் பக்தனான தருமி என்னும் புலவனுக்கு மன்னனின் சந்தேகத்தைப் போக்கும் வகையிலான பாடலை எழுதியளித்தார்.  

பின்னர் நடந்த கதை அனைவரும் அறிந்ததுதான். சிவபெருமானுக்கும் அரசவைப் புலவரான நக்கீரருக்கும் நடைபெற்ற சொற்போரில் `உமையம்மை கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை' என நக்கீரன் சொல்ல, சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து தான் யாரெனக் காட்டியதும் `நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!' என நக்கீரன் முழங்கியதும் அதனால் விளைந்த விளைவுகளும் கதையில் சொல்லப்படுகின்றன.  

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்தான் இந்தக் கதைக்கான ஆதாரம். இறைவன் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் சங்கப் பாடல்களின் தொகுப்பான எட்டுத் தொகையில் குறுந்தொகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது:

`கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’

`தேன் தேடும் வாழ்வைக் கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் ஆசையால் சொல்லாதே. உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்மேல் அன்பு செலுத்துபவள். மயிலின் தோகை போன்ற கூந்தல் உடையவள். இவள் கூந்தலை விடவும் நறுமணம் வீசும் மலர்கள் இருக்கின்றனவா?' என்று தலைவன் தும்பியைக் கேட்பதாக
அமைந்துள்ள பாடல் இது.

பகீரதன் செய்த தவத்தின் மூலம் கங்கை ஆகாயத்திலிருந்து பூமியில் இறங்கினாள். பெரும் வேகத்தோடு வந்த அவளால் பூமி சேதமடையாமல் இருக்க வேண்டுமே? அவள்  வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் தன் ஜடை முடியில் அவளை வாங்கிக்கொண்டார்.அந்த ஜடைக்குள்ளிருந்து வெளிப்பட முடியாமல் தவித்த அவளைச் சிவனே வேகத்தைக் குறைத்து வெளிப்படுத்தினார். அப்படித்தான் கங்கைநதி பூமிக்குக் கிடைத்தாள் என்கிறது சிவ புராணம்.

`குடத்திலே கங்கை அடங்கும்' என்று ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னபோது காளமேகப் புலவர் இந்தப் புராணச் செய்தியை வைத்து வெண்பா பாடியுள்ளார்:

`விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கையடங் கும்.’

மகாகவி பாரதியார் `எங்கள் தாய்' என்ற பாடலில் பாரதத் தாய் கற்றைச் சடைமுடி வைத்த துறவியான சிவபெருமானைக் கைகூப்பித் தொழுவாள் எனப் பாடுகிறார்:
`கற்றைச் சடைமுடி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுலகாளும்
ஒருவனையும் தொழுவாள்!’

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் தலைமுடி பற்றிய பல செய்திகள் வருகின்றன. தசரதரிடம் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரம் கேட்பதற்கு முன்பாக, பின்னிய கூந்தலை அவிழ்த்துப் போட்டு தலைவிரி கோலமாகப்  படுத்திருந்தாள் கைகேயி என்கிறது ராமாயணம்.அவள் கூந்தலை அவிழ்த்துப் போட்டிருந்த அமங்கலக் கோலத்தைப் பார்த்தே தசரதன் பதறி அவள் கேட்டதற்கெல்லாம் இணங்கினான்.கானகம் சென்ற ராம லட்சுமணர்கள் ஆலமரப் பட்டையிலிருந்து எடுத்த ஆலம்பால் மூலம் தங்கள் முடியைச் சடையாகத் திரித்துக் கொண்டார்கள் என்கிறது ராமாயணம்.

சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அரிந்த தருணத்தில் சீதை லட்சுமணனைக் கடிந்துகொண்டதாகச் சொல்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.`சூர்ப்பணகை என்னைத் தூக்கிச் செல்ல முயன்றது உண்மைதான். ஆனால் தூக்கிச் செல்லவில்லையே? அதற்குள்தான் நீ தடுத்து விட்டாயே? அப்படியிருக்க சிறிய குற்றத்திற்கு அவள் மூக்கை அரிந்து பெரும் தண்டனை கொடுத்தது ஏன்? இனி மூக்கறுந்து மூளியான தன் முகத்தைப் பார்ப்போர் கேலி செய்யும் போதெல்லாம் நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று அவள் மனத்தில் உணர்வுகள் எழும். பெரும் விபரீதங்கள் அல்லவா அதனால் நிகழும்?

நீ மூக்கை அரிந்ததற்குப் பதிலாக அவள் கூந்தலை வெட்டியிருக்கலாம். மூக்கு மறுபடி வளராது. ஆனால் கூந்தல் மறுபடி வளர்ந்துவிடும். நீ ஒரு சாதாரணத் தவறுக்குப் பெரும் தண்டனை கொடுத்து நம் மூவரையும் சிக்கலில் ஆழ்த்திவிட்டாய் லட்சுமணா!' என்று சீதாதேவி லட்சுமணனிடம் சொன்னதாகச் சொல்கிறது அந்தக் கதை.சுந்தர காண்டத்தில் ஆஞ்சநேயரிடம் சீதை தன் கூந்தலிலிருந்த அணிகலனான சூடாமணியைத்தான் அடையாளப் பொருளாகக் கொடுத்தனுப்புகிறாள்.

மகாபாரதத்திலும் முடி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.`தன் கூந்தலைப் பிடித்துத் தன்னை அரசவைக்கு இழுத்துவந்த துச்சாதனனின் ரத்தத்தையும் அவனை அவ்விதம் செய்ய ஏவிய
வனும் தன்னைத் தொடைமேல் வந்து அமருமாறு கூறியவனுமான துரியோதனனின் ரத்தத்தையும் கலந்து தன் கூந்தலில் தடவிக் குளித்த பின்னரே கூந்தலை முடிவேன், அதற்குமுன் முடிய

மாட்டேன்' என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சபதம் செய்கிறாள் பாஞ்சாலி.பாரதியார் தாம் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் இறுதிப் பகுதியில் இந்தக் காட்சியை உணர்ச்சிமயமாகச் சித்திரிக்கிறார்.

`தேவி திரெளபதி சொல்வாள் - ஓம்
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த் துரியோதனன் யாக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்தே - குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - அது
செய்யு முன்னே முடியேன் என்றுரைத்தாள்!’

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி புலவர் நாதகுத்தனார் இயற்றிய பெளத்தம் சார்ந்த நூல். தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு பெளத்த சமயத்தைச் சேர்ந்து பிட்சுணி ஆகிறாள் கதைத் தலைவியான பத்தரை என்ற வணிகர் குலப் பெண்.பிட்சுணி ஆனதை ஒட்டி அவள் தலைமுடியை மழித்துக்கொண்டாலும் அது குண்டலம்போல் வளைவு வளைவாக மீண்டும் மீண்டும் வளர்கிறது. அதனால் அவள் குண்டலம் போன்ற கேசத்தை உடையவள் என்ற கண்ணோட்டத்தில் குண்டலகேசி என அழைக்கப்படுகிறாள். அவளின் காரணப் பெயரே காப்பியத்தின் பெயராகவும் மாறிவிட்டது.

அடர்த்தியான நீண்ட கூந்தல் இருப்பதே பெண்களுக்கு அழகு என்றொரு கண்ணோட்டம் இருக்கிறது. இதை முன்னர் எழுதப்பட்ட திரைப்பாடல்கள் பல உணர்த்துகின்றன.கே.வி. மகாதேவன் இசையமைப்பில் எல்.ஆர். ஈஸ்வரி வானம்பாடி படத்திற்காகப் பாடிய கண்ணதாசன் பாடல், பெண்ணின் ஆறடி நீளமுள்ள கூந்தலைப் புகழ்கிறது.

`யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்? உன்
காலடி மீது ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்?
ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே...

உடுமலை நாராயண கவியின் திரைப்பாடல் ஒன்று, `இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே' எனத் தொடங்குகிறது.  

`பூமுடிஞ்ச கூந்தல் இப்போ
பழைய நீளம் இருக்குதா? - இப்போ
பொம்பளைங்க எல்லாத்துக்கும்
புருவமிருக்குதா?’
என்று முடி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது அந்தப் பாடல்.

நம் ஆன்மிகத்தில் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. இந்த வழக்கம் எப்படித் தொடங்கியது என்பதற்கு ஆதாரமாக அமைவது சேக்கிழாரின் பெரிய புராணத்திலுள்ள ஒரு கதை.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஏயர்கோன் கலிக்காமர். இவர் சோழ தேசத்தின் தளபதி.அதே பகுதியில் மானக்கஞ்சாறர் என்ற பெயருடைய சிவபக்தரும் வாழ்ந்துவந்தார். ஏயர்கோன் கலிக்காமர் அவருடைய பெண்ணுக்குத் திருமணம் செய்ய விரும்பினார்.மணநாளன்று மணமகளின் தந்தையான மானக்கஞ்சாறர் இல்லத்திற்கு சிவனடியார் வேடத்தில் வந்தார் சிவபெருமான்.

மணமகள் சிவனடியார் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அந்தப் பெண்ணின் நீண்ட கூந்தலைக் கண்ட சிவனடியார் அதைத் தனக்குக் காணிக்கையாகத் தருமாறு கேட்டார். மானக்கஞ்சாறர் மணமகளின் சம்மதத்தோடு அவள் கூந்தலை உடனே அறுத்துக் கொடுத்துவிட்டார்.அந்த நேரம் அங்கு திருமணத்தின் பொருட்டு வந்துசேர்ந்தார் மணமகன். கூந்தலை இழந்து தலைகுனிந்து நின்ற மணப்பெண்ணைப் பார்த்தார். பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக நினைக்கும் கூந்தலையே தியாகம் செய்த இந்தப் பெண்ணே மிகச் சிறந்தவள் எனக் கூறி அவளையே மணந்தார்.
சிவனடியாராக வந்த சிவபெருமான் உமையம்மையோடு காட்சி தந்து அவர்களுக்கு அருள்புரிய மணமகளின் இழந்த கூந்தல் உடனே மீண்டும் வளர்ந்து பழைய நிலையை அடைந்தது என்கிறது பெரியபுராணம்.  

இச்சம்பவம் நடந்த பின்னர்தான் இறைவனுக்கு முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம் தோன்றியது என்கிறார்கள்.குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனபின் அவரவர் குடும்பக் குலதெய்வத்திற்குக் குழந்தையின் முடியைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் இருக்கிறது. குழந்தைக்கு முந்தைய பிறவியில் இருந்த பந்தங்களை அறுக்கவே முடி அகற்றப்படுகிறது என்ற கருத்து உண்டு.பத்துமாதம் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடலில் புகுந்திருக்கும் கழிவு நச்சுக்களையெல்லாம் மயிர்க்கால்கள் வழியாக அகற்றவே முடி அகற்றப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
அழகைத் தரும் தலைமுடி ஆணவத்தின் அடையாளம். அதை இழப்பதென்பது ஆணவத்தை விட்டொழிப்பதன் குறியீடு.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் பழனி முருகனுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மழித்து மொட்டை அடித்துக்கொண்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். மழிக்கப்பட்ட தலையில் புதிதாய் முடி முளைக்கும்போது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதாக அன்பர்கள் நினைக்கிறார்கள். பெண்களின் கூந்தலை மயில் தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடுவது மரபு. சூடாமணி, நெற்றிச் சுட்டி, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி, குஞ்சலம், திருகுப் பூ என்றிப்படி பெண்களின் கூந்தலை அலங்கரித்த அணிகலன்கள் பலப்பல. மூன்று கால் பின்னல், ஐந்து கால் பின்னல் என்றெல்லாம் பெண்கள் கூந்தலைப் பின்னி அலங்கரித்துக் கொள்ளும் முறைகளும் பல.  

நீளக் கூந்தல் இயற்கையிலேயே அமையப் பெறாதவர்கள் பொய்க்கூந்தலான சவுரியை வைத்துத் தங்களின் கூந்தல் நீளத்தை அதிகப் படுத்திக் கொண்டார்கள். தெருக்களில் சவுரி வாங்கலையோ சவுரி எனச் சவுரியை விற்கும் பெண்மணிகள் வருவதும் கூட அந்தக் காலத்தில் உண்டு.தன் மகளுக்கு இருப்பது பொய்க்கூந்தல் என்பதைத் தன் மாப்பிள்ளை தெரிந்துகொண்டு விடக் கூடாது எனக் கருதினாளாம் ஒரு தாய்.எனவே, பெண்ணைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது, `நீ எப்போதும் சவுரியமாக இரு. சவுரியமாக இருப்பதை ஒருபோதும் மறந்து விடாதே. சவுரியமாகப் போய்ச் சேர்ந்த விவரத்திற்கு உன் சவுரியம்போல் ஒரு கடுதாசி எழுது!’ என்று சூசகமாகச் சொல்லி அனுப்பினாளாம்!

(குறள் உரைக்கும்)

திருப்பூர்
கிருஷ்ணன்


Tags : Kural ,
× RELATED குறளின் குறல்: திருக்குறளில் ஆமை!