×

தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்

நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தீர்மானித்தார். வேள்வி செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச்சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், ‘‘பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது. மனித வடிவமும், மிருக வடிவமும் சேர்ந்தது அது. அது பார்வையில் படாது. அதைக் கண்ணால் கண்டவன், மிகுந்த புண்ணியசாலி! அதை அழைத்து வந்தால், ராஜசூய யாகம் நன்றாக நிறைவேறும்” என்றார். கண்ணனே சொன்ன பிறகு கேட்க வேண்டுமா? பீமன் உற்சாகத்தோடு புறப்பட்டான்.

புறப்பட்ட பீமன், எதிர்த்தவர்களை வென்று, குபேரனையும் வென்றான். ஏராளமான செல்வம் கிடைத்தது. அப்போது பீமனின் சிந்தனை அடுத்த கட்டத்திற்குத் தாவியது; ‘‘வேள்வியில் வேலை செய்ய வீரர்கள் பலர் வேண்டுமே! என்ன செய்யலாம்?” என்று எண்ணித் திரும்பிய பீமனின் பார்வையில், குபேரனின் பூங்கா வனமும், அதில் இருந்த புருஷா மிருகமும் தெரிந்தன. கண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், புருஷாமிருகத்தின் விசித்திரமான கம்பீரத் தோற்றத்தை கண்டு, பீமன் அஞ்சவே செய்தான். இருந்தாலும் கண்ணன் சொன்ன தைரியத்தில், மெள்ளப் புருஷா மிருகத்தை நெருங்கி, ‘‘எங்கள் ராஜசூய வேள்வி நன்கு நடைபெறத் தாங்கள், என்னுடன் இந்திரப் பிரஸ்தத்திற்கு வர வேண்டும்” என
வேண்டினான்.

புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. ஆனால், ஒரு நிபந்தனை விதித்தது. ‘‘பீமா! எனக்கு முன்னால் வழி காட்டியபடியே, என் வேகத்திற்கு இணையாக நீ ஓட வேண்டும். என் கையில் அகப்படக்கூடாது. அகப்பட்டால் கொன்றுவிடுவேன். எனக்கு இடையூறு இல்லாமல் ஓட வேண்டும். ஏனென்றால், எப்போதும் என் நோக்கிலும் வாக்கிலும் சிந்தையிலும், சிவம் இருக்கும். நீ சற்று தாமதித்தால், அது என் சிவத்தியானத்திற்கு இடையூறாகி விடும். எச்சரிக்கிறேன்” என்றது. பீமன் வியந்தான். இருந்தாலும், ஒப்புக்கொண்டான். பீமன் முன்னால் ஓட, பின்னால் புருஷா மிருகம் ஓட, ஓட்டப்பந்தயம் தொடங்கியது. பீமன் விரைவாக ஓடினான். எந்த நேரமும் புருஷாமிருகம் பிடித்து விடும் என்ற நிலை. பீமன் சிந்தித்தான், பளிச்சென்று ஒரு கல்லை எடுத்து, சிவமாகப் பாவித்து மந்திரம் சொல்லி, பின்னால் எறிந்தான்.

அது விழுந்த இடத்தில், ஒரு சிவாலயமும் தீர்த்தமும் உண்டானது. அதைப் பார்த்த புருஷாமிருகம், உடனே நீராடி சிவபூஜையைச் செய்து முடித்தது. பீமன் வெகுவேகமாக ஓடிக் கொண்டிருந்தான். மறுபடியும் புருஷாமிருகத்தின் கையில் சிக்கும் நிலை வந்ததும், மறுபடியும் முன்பு போல் மந்திரம் சொல்லிக் கல் எறிந்தான். அது விழுந்த இடத்தில் சிவாலயமும் தீர்த்தமும் உண்டாக, புருஷாமிருகம் பூஜை முடித்துத் தொடர்ந்தது.

இப்படியே மாறிமாறி நடந்து, பீமன் இந்திரப் பிரஸ்தத்தில் ஒரு காலை வைத்தான். மறு கால் வெளியே இருந்தது. வெளியே இருந்த அந்தக் காலை, பின்னால் ஓடி வந்த புருஷாமிருகம் பிடித்து விட்டது. பீமன் தன் பக்கம் நியாயம் பேச, புருஷாமிருகம் தன் பக்கம் நியாயம் பேசியது.

பிரச்னை தர்மரிடம் போனது. தர்மர் நியாயம் சொன்னார். உள்ளே இருந்த கால் பீமனுக்கும், வெளியே இருந்த கால் உடன் படிக்கையின்படி புருஷாமிருகத்திற்கும் உரியது என்றார் அவர். அதைக் கேட்ட புருஷாமிருகம் மகிழ்ந்தது. ‘‘தர்மா! உன் பேருக்குத் தகுந்தபடி நடந்தவன் நீ! உன் தர்மத்திற்கு நான் அஞ்சுகிறேன். பீமன் தன் காலை எனக்குத் தர வேண்டாம். இடையிடையே சிவபெருமானை வழிபட வகைசெய்தான் பீமன்.

சோதனைக்காகத் தான் நான் வாதம் செய்தேன்” என்ற புருஷாமிருகம், அங்கிருந்த கண்ணனை வணங்கியது. ஆரம்பித்த வேள்வி நிறைவுபெறும் வரை, புருஷா மி ருகம் செய்த உதவிக்கு அளவேயில்லை. வேள்வி நடந்து முடிந்ததும், புருஷாமிருகத்தைத் திருவாதவூரில் ஸ்தாபிக்க நினைத்த பகவான், வைம்பாயனர் - தௌமியர் - ரோமசர் - பிருகுச்சர் - கௌண்டின்யர் ஆகியோரிடம், ‘‘உங்கள் அபிப்ராயம் என்ன?” என்றார். ‘‘கண்ணா! உமது கருத்தேதான் எங்கள் கருத்தும்” என்றார்கள் அவர்கள். பகவான் புருஷாமிருகத்துடன் திருவாதவூருக்குச் சென்றார். முனிவர்கள் பின் தொடர்ந்தார்கள். திருவாதவூர் சென்றதும், அங்கே புருஷாமிருகத்தை இருக்கச்செய்தார் பகவான்.

பி.என்.பரசுராமன்

Tags : Purusha ,Thala Purana ,
× RELATED சச யோகம் என்ற ஜனவசிய யோகம்