×

அத்தியூத்து அம்மணி அம்மன்

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு உக்கிரன் கோட்டையை ஆண்டுவந்த பாண்டிய மன்னர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர் உத்தமராசா மகன் சோளவராஜா. இவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த அம்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லை. இதனால், மனம் வருந்தினார் சோளவராஜா. அப்போது தர்மம் கேட்டு வந்த ஒருவர், உமது குல தெய்வமான சங்கரன்கோயில் சங்கரநயினார், கோமதி அம்மாளை தம்பதியர் சகிதமாக சென்று தரிசித்து வாருங்கள். குழந்தை பாக்யத்தை ஆண்டவன் அருள்வார் என்று கூறினார். அதன்படி சோளவராஜா, தனது மனைவியுடன் சங்கரன்கோயிலுக்கு சென்றார். அங்கு பரிகாரங்கள் செய்து இறைவனை மனமுருக வேண்டி வந்தனர்.

மாதம் மூன்று முடிந்த பின் அம்மணி கர்ப்பமுற்றாள். அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு விரலப்பன், இரையப்பன் என பெயரிட்டு விரலக்குட்டி, இரையக்குட்டி என அழைத்து வந்தனர். அதே நேரம், சோளவராஜாவின் மெய் காப்பாளனின் மனைவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் வீரசூரன் என பெயரிட்டு வளர்த்துவந்தார். வீரசூரன், விரலக்குட்டி, இரையக்குட்டி மூவரும் ஒரே வயதுடையவர்கள் என்பதால் அவர்கள் வேற்றுமையின்றி வளர்ந்து வந்தனர்.

விரலக்குட்டியும், இரையக்குட்டியும் அரண்மனை ஆஸ்தான குருவிடம் வித்தைகளை முறையாக கற்று தேர்ந்தனர். மகன்கள் இருவரும் பருவ வயதை அடைந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து அம்மணியின் அண்ணன் சுந்தரபாண்டியன் விருந்தோம்பலுக்காக ஒருமுறை தங்கையின் வீட்டுக்கு வருகிறார். குதிரை வண்டியிலிருந்து இறங்கி வரும் மாமனிடம் மருமகன்கள் பேசிக்கொண்டே அரண்மனை வளாகத்திலிருந்து இல்லத்திற்கு வருகின்றனர். வரும் வழியில் மூத்தவன் விரலக்குட்டி அணிந்த தங்க நகையை அவனறியாமல் எடுத்துக்கொண்டான். பின்னர் அரண்மனைக்குள் சென்று விருந்து உபசரணைகள் முடிந்த பின் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மகன்களின் வீரதீரச் செயல்களை பற்றி மைத்துனரிடம் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார் சோளவராஜா. அப்போது குறுக்கிட்டு பேசிய அம்மணியின் அண்ணன், மைத்துனரே, வீரனாக இருந்தால் மட்டும் போதாது, விவேகம் கொண்டவனாகவும், தமது உடைமைகளை காப்பாற்ற தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் என்று கூறி விரலக்குட்டியை அழைத்து, அவனிடமிருந்து எடுத்த நகையை திருப்பி கொடுத்தார்.

மகன்கள் இருவரும் வாலிபப் பருவத்தை அடைந்ததால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார் சோளவராஜா. உடனே அம்மணி தனது கணவரிடம், எனது அண்ணன் மூன்று பெண் பிள்ளைகள் பெற்று வைத்திருக்கிறான். அவனிடத்தில் சென்று பெண் கேட்டு வருகிறேன். எனக் கூறிவிட்டு காஞ்சிபுரம் சென்றாள். அண்ணன் வீட்டுக்கு வந்தவள், வந்த காரணத்தை அண்ணனிடம் கூறினாள்.

உடனே, அம்மணி அண்ணன் உனது மகன்கள் வீரம் நிறைந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு நமது குல வழக்கப்படி, அடுத்த நாட்டுக்குச் சென்று செல்வத்தை அபகரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அது உனது மகன்களுக்கு தெரியாது. அப்படி தெரியாதவனுக்கு நான் எப்படி என் மகள்களை கட்டிக்கொடுக்க முடியும். என்று கூறியதும். மறு பேச்சு பேசாமல் அங்கிருந்து விரைந்தார் அம்மணி. இல்லம் வந்து அமர்ந்த இல்லாளை வினவினார் சோளவராஜா, ‘‘ஏன், என்னாச்சு சோர்ந்துபோய் வந்திருக்க,’’ என்று கேட்க, அம்மணி பேசினாள். ‘‘எங்க அண்ணன், நம்ம பிள்ளங்களை திருட சொல்றாங்க,’’ என்று கூறியவாறு தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் மேலும் விவரத்தை கூற, இதை மறைந்து நின்று கேட்டுக்கொண்டிருந்தனர் விரலக் குட்டியும், இரையக்குட்டியும். இருவரும் முடிவு எடுத்தனர்.

‘‘ஏலே தம்பி நாம இன்னைக்கே போறோம். நம்மளால அதையும் செய்ய முடியுமுன்னு காட்டுவோம் வா’’ என்றபடி புறப்பட்டு செல்கின்றனர். அன்றிரவே, அவர்கள் தாய்மாமா வீட்டிலேயே பொன்னும் பொருளை களவாடிவிட்டு ஒரே குதிரையில் வீடு திரும்புகின்றனர்.அடுத்ததாக, நெல்லை சீமைக்கு சென்று திருடுவதற்கு திட்டமிட்டு தனித்தனியாக இருவரும் குதிரைகளில் புறப்பட்டனர். நெல்லை மாட வீதியிலிருந்த அரண்மனைக்காரரின் பொக்கிஷ அறையிலிருந்த விலை உயர்ந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்துக்கொண்டு புறப்பட்டனர். வரும் வழியில் 2 தேவதாசிகளும் அவர்களோடு வந்த உதவியாளர் பெண்ணும், வண்டிக்காரன் என 4 பேர் தெப்பக்குளம் தெற்கு சாலையில் நின்று கொண்டிருந்தனர். மூத்தவன் விரலகுட்டி, குதிரையை நிறுத்தி காரணம் கேட்டான். நாட்டியம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் காளைகள் காலாற நின்றோம் என்றனர். சொல்லும் வார்த்தை பொய் நிறைந்திருப்பதை அவளின் விழியசைவில் கண்டு உணர்ந்தான் விரலகுட்டி. இருப்பினும் அர்த்த ராத்திரியில் அவள் அழகில் மோகம் கொண்டவன் சலனப்பட்டான். விளைவு அண்ணன் தம்பி இருவரும் ஆளுக்கொரு தேவதாசியருடன் அவர்கள் இல்லத்திற்கு புறப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, அவர்கள் வந்த வண்டியும் மெல்ல நடைபோட்டு சென்றது.

இரவு பொழுதை தேவதாசிகளோடு அண்ணன் தம்பிகளான விரலகுட்டியும், இரையக்குட்டியும் கழித்தனர். அதிகாலை பொழுதானதும் களவாடிய நகைகளை தேவதாசிகளுக்கு பரிசளித்து விட்டு வெறுங்கையுடன் தங்கள் இல்லம் சென்றனர்.இது நடந்த மறுவாரம் நெல்லை சீமையில் நாட்டியக் கச்சேரி நடந்தது. அப்போது, இரு தேவதாசிகளும் விரல
குட்டியும், இரையக்குட்டியும் பரிசளித்த நகைகளை அணிந்துகொண்டு அதில் பங்கேற்றனர். அந்த நகைகளை கண்ட மணியக்காரர்கள், அரண்
மனைக்கு தகவல் கொடுத்தனர். ``நம்ம பொக்கிஷ அறையில் காணாமல் போன நகைகள் தேவதாசிகள் அணிந்திருக்கின்றனர்’’ என்று கூறினர். உடனே, தேவதாசிகளை காவலாளிகள் அரண்மனைக்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைகள் வந்த காரணத்தை அறிந்த மகாராஜா, சோளவராஜாவிடம் நாம் பகைமை கொள்ளாமல், அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினார். அதன்படி வரும் பௌர்ணமி அன்று நீர்வளம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏழு ஊரு மகாராஜாக்களுக்கு ஓலை அனுப்பினார்.

ஏழு ஊரு மகாராஜாக்களும் வந்திருந்தனர். அதில், சில மகாராஜாக்கள் தங்களது வாரிசுகளை அனுப்பி வைத்திருந்தனர். சோளவராஜாவும் தனது வாரிசுகளான விரலக்குட்டியும், இரையக்குட்டியும் வந்திருந்தனர். அவர்களை ஓர் அறையில் மறைந்திருந்த தேவதாசிகள் காவலாளிகளிடம் அடையாளம் காட்டினர். கூட்டம் முடிந்த வேளை மற்றவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது புறப்பட முயன்ற இவர்களை தேவதாசிகள் வரவழைக்க, காரணம் கேட்க வந்தஇருவரையும் அரண்மனை காவலாளிகள் பிடித்துக்கொண்டனர். இவர்களுடன் வந்த சோளவராஜாவின் மெய்காப்பாளர் மகன் வீரசூரனிடம், விரலக்குட்டி, இரையக்குட்டி இருவரும் நகைகளை கொள்ளையடித்தாகவும்,  அதனால் இவர்கள் இருவரின் தலையையும் துண்டிக்கப்போகிறேன். அது தடுக்கப்பட வேண்டுமானால் இவர்களை பெற்ற சோளவராஜனிடம் சென்று சொல். இவர்களின் தலைக்கு ஈடாக, இரண்டு மகன்களின் தலையின் ரூபத்தை தங்கத்தால் செய்து, தாம்பூலம் ஏந்தி என் அரண்மனைக்கு இன்றிலிருந்து 3வது நாளுக்குள் கொண்டு வரவேண்டும். தவறினால் இவர்கள் தலை துண்டிக்கப்படும் என்று கூறி அனுப்பினார்.

வீரசூரன் தனது குதிரையில் வேகமாக விரைந்தான். சோளவராஜா, அம்மணி ஆகியோரிடம் நடந்தவற்றை கூறினான். சோளவராஜா வீறு கொண்டு எழுந்தார். அவரிடம் வீரத்தை காட்ட இது தருணம் அல்ல, நம் மைந்தர்களின் உயிர் எதிரியிடம். ஆகவே, விவேகத்துடன் செயல்படுங்கள். அவன் கேட்டதை கொடுக்க தயாராகுங்கள் என்றாள் அம்மணி. தகவலை சொல்லிய வீரசூரனை, உடனே நெல்லை சீமைக்கு சென்று என் மைந்தர்களுக்கு உதவியாக நில். என்று கூறி அனுப்பி வைத்தாள் அம்மணி.
மகாராஜாவின் உத்தரவிற்கிணங்க இரண்டு தங்கத்தால் ஆன தலை உருவத்தை தயார் செய்தனர் பொற்கொல்லர்கள். நெல்லை சீமை மகாராஜா கொடுத்த காலக்கெடுவான மூன்றாவது நாள், இரண்டு தங்க தலை உருவத்தை தாம்பூலத்தில் வைத்து இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சோளவராஜா, அம்மணி, மெய்காப்பாளர் என மூன்று பேரும் செல்ல அவர்களை பின் தொடர்ந்து இருபது வீரர்கள் குதிரைகளில் வந்து கொண்டிருந்தனர். நெல்லை செல்லும் சாலையில் அத்தியூத்து பகுதி அருகே வரும்போது, எதிரே வேகமாக குதிரையில் வந்த வீரசூரன் நில்லுங்கள் என்று குரல் கொடுத்து மகாராஜாவை நிறுத்தினான்.

பதற்றத்துடன் வண்டியிலிருந்து இறங்கிய அம்மணி, என்னாச்சு என் செல்வங்களுக்கு என்று வினா தொடுத்தாள். மண்ணில் விழுந்து அழுது புரண்ட வீரசூரன் சொன்னான்; மகாராணி எல்லாம் முடிந்து விட்டது என்றான். அந்த செய்தியை கேட்ட அம்மணி இரண்டு தங்கத் தலைகளோடு அருகே இருந்த கிணற்றில் விழுந்து மாண்டாள். தனது உடைவாளை மண்ணில் குத்தி நிற்க வைத்து அதில் விழுந்து உயிரை மாய்த்தார் மகாராஜா. உடன் வந்தவர்களும் அப்படியே உயிரை மாய்த்தனர்.

இந்த சம்பவம் நடந்தேறி சில காலங்கள் ஆன பின்பு, நெல்லை குறிச்சியிலிருந்த வணிக ரீதியாக வந்தவர்கள், இந்த அத்தியூத்து பகுதியில் மரத்தின் கீழ் அமர்ந்து உணவு உண்டனர். பின்னர் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போது, ஒருவர் திடீரென அருள் வந்து ஆட, காரணம் கேட்ட போது, நான் அம்மணி, எனக்கு எழுப்பி வழிபட்டால் உங்கள் வணிகத்தை மேம்படுத்துவேன் என்று கூற, அதன்படியே அவர்கள் கோயில் வழிபட்டு வந்தனர். இக்கட்டான சோதனையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அம்மணி அம்மன், தன்னை நாடி வருபவர்களுக்கு சோதனைகளை நீக்கி அருள்பாலிக்கிறாள். இந்த கோயில் நெல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவில் சங்கரன்கோயில் செல்லும் சாலையில் அத்தியூத்து என்னும் இடத்தில் உள்ளது. சோளவராஜா அம்மணி அம்மன் கோயில் மாவடிக்கால், வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களிலும் அமைந்துள்ளன.

Tags : Amani Amman ,
× RELATED காமதகனமூர்த்தி