×

ஆடியில் அம்மன் தரிசனம்

தொட்டியம் மதுரைகாளியம்மன்

சின்னான் என்பான் மதுரை காளிதேவியின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பறையினை அடிக்கத் தொடங்கினான். காளியின் நினைவில் உருகினான். பறையடியின் வேகம் கூடியது. பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டாள். உடனே ஈ வடிவெடுத்து சின்னானுடன் தொட்டியத்தை வந்தடைந்தாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள். ஒருநாள் அப் பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வேகமாக வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு புதரிலிருந்த புற்று சிதைந்தது. கோபமுற்ற அன்னை காளி உற்று நோக்கினாள். மன்னனின் சகோதரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். அதிர்ந்துபோன அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான். சகோதரனின் சித்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த சின்னானுக்கும், செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத்தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாற்றி வழிபடலாம். திருச்சியிலிருந்து முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.

கோவை தண்டு மாரியம்மன்

ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

திருஈங்கோய்மலை லலிதாம்பிகை

அகத்திய முனிவர், ஈசனை தேனீ வடிவில் சென்று வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை. திருஈங்கோய்மலையின் பாறை மீது அமைந்துள்ள லலிதா மஹிளாமந்திர், சக்தி பீடதலமாகத் திகழ்கிறது. முழுக்க முழுக்க வித்யா தீட்சை பெற்று துறவிகளாகவுள்ள யோகினியர்களும், தியாகினிகளும் பூஜைகளை செய்கின்றனர். கன்னிப் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. லலிதாம்பிகை வெள்ளைப் பளிங்கினாலான திருமேனியளாய்த் திகழ்கிறாள். அம்பிகையின் இடது கை கரும்பினை ஏந்த, வலது கையில் ஐந்து வகை பூக்களால் ஆன புஷ்பபாணம் இருக்கிறது. இடது கீழ் கையில் பாசமும், வலது கீழ் கையில் அங்குசமும் இருக்கின்றன. அம்பிகை எழுந்தருளியுள்ள பீடம் மேருபீடம் என போற்றப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் சாயாபீடம் எனப் போற்றப்படுகிறது. ஈசனின் மனைவியான தாட்சாயணி தேவியின் முக சாயை இந்த மலையில் விழுந்ததால் இது சாயாபுரம் என்றும் பெயர் உண்டு. திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உள்ள மணமேடு எனும் இடத்தில் இத்தலம் உள்ளது.

திருநல்லூர் அஷ்டபுஜகாளி

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள பிராகாரத்தில்தான் இந்த காளி வீற்றிருக்கிறாள். இவளை நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்பார்கள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதுபோல இத்தலத்திலும் காளி பேரழகாக வீற்றிருக்கிறாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக அமர்ந்திருக்கிறாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள். கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது.

மருதவனம் காளி

சண்டாசுரன் செய்யும் அட்டூழியங்களை பொறுக்க முடியாத தேவர்கள், பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இந்த இடமே இப்போது கண்டதேவி என்று அழைக்கப்படுகிறது. இந்த காளி தேவி எழுந்தருள வேண்டுமென தேவர்கள் கட்டிய கோட்டையே தேவகோட்டை ஆகும். தேவக் கோட்டையில் தங்கி காளி சண்டாசுரனை வதம் செய்தாள். அசுரனை வெற்றி கண்ட இடமே வெற்றியூராகும். தேவர்கள் காளியின் மீது பூத்தூவி வணங்கி வரவேற்ற தலமே பூங்குடி என்பதாகும். இப்படியாக ஒவ்வொரு தலத்திலும் தேவர்களால் வழிபடப்பட்டு, அசுரனை வதைத்த காளி மருதவனத்தில் சொர்ணகாளி எனும் திருப்பெயரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். மதுரையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி

அது திருமலை நாயக்கர்காலம். மதுரை முழுவதும் அம்மை நோய் தாக்கியிருந்தது. நிறைய மக்கள் இறந்தனர். அரசர் செய்வதறியாது திகைத்தார். அப்போதுதான் வெயிலுகந்த காளியம்மனுக்கு நாடகம் நடத்தி விழா கொண்டாடினால் நோய் தீரும் என்றார்கள். திருமலை நாயக்கர் வலையன் குளம், நல்லர் என்ற இரு கிராமங்களிலிருந்து அழைத்து வந்து கூத்து நடத்தினார். உடனேயே மதுரையில் அம்மை நோயின் தாக்கம் உடனடியாக குறைந்தது. இன்றும் இக்கோயிலில் அம்மை நோயிலிருந்து சகல பிரச்னைகளுக்கும் வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். பெண்கள் திருவிழாக்காலங்களில் காவடி எடுத்தல், தீச்சட்டி தூக்கி வருதல், மஞ்சள் ஆடை, வேப்பிலை தாங்கி ஈர உடையுடன் வந்து வணங்குகின்றனர். திருப்பரங்குன்றம் தென் கண்மாய் ஓரத்தில் ரயில் பாதைக்கும் சாலைப் போக்குவரத்துப் பாதைக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

உடையாளூர் செல்வமாகாளி

சோழ தேசத்தை காக்கும் பொருட்டு ராஜராஜசோழன் நிறுவிய எட்டு காளிகளில் இவளும் ஒருவள். ராஜராஜன் தஞ்சை தவிர பெரும்பாலும் வசித்ததே இந்த ஊரில்தான். உடை வாள் தயாரிக்கும் ஊராதலால் உடையாளூர் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். ஊரின் எல்லையிலேயே இவள் வீற்றிருக்கிறாள். எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி ஒரு சூலத்தால் அசுரனை குத்தும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பல நூறு குடும்பங்களின் குல தெய்வமே இவள்தான். அதனால் எப்போதும் யாரேனும் வந்து பொங்கலிட்டு வணங்கியபடி இருப்பார்கள். இந்த செல்வமாகாளியை வணங்கியோரும், உபாசித்தோரும் பெரும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இவளை தரிசிக்காமல் போவதில்லை. அவளின் திருப்பெயரிலேயே செல்வ எனும் சொல் உள்ளதால் ஏழ்மையை அகற்றி இன்னருள் புரிகிறாள். வறுமையின் கொடுமை அண்டாது காக்கும் காளியாக இவளைச் சொல்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து உடையாளூர் 10 கி.மீ. தொலைவிலுள்ளது.
 
கொல்லங்குடி வெட்டுடையக் காளி  

வேலுநாச்சியாரை பிடித்தே தீர வேண்டும் என்று கும்பனியர் அரியாக்குறிச்சி எனும் காட்டிற்கு அருகேயிருக்கும் ஐயனார் கோயிலுக்கு வந்தார்கள். அருகே உடையாள் எனும் கன்னிப் பெண்ணிடம் வேலுநாச்சியார் எந்தப் பக்கம் போனாள் என்று கேட்டார்கள். உடையாள் அவர்களை நோக்கி, ‘‘ராணி எந்தத் திசையில் சென்றார்கள் என்றும் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்’’ என்று உறுதியோடு கூறினாள். அவளை காலால் உதைத்து தலையை வெட்டி எறிந்தனர். உடையாள் வெட்டுப்பட்டுக் கிடந்ததால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள். அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. அந்த எழுத்துக்கள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கும் அங்கேயே கோயிலுக்குள் தனிச் சந்நதி நிறுவினர். வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து குறைகளை தீர்த்து வைக்கிறாள். அதிலும் அப்பாவியான எவரை ஏமாற்றினாலும் இவள் சும்மாயிருப்பதில்லை என்கிறார்கள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது.

திருக்களாச்சேரி பத்ரகாளி

பார்வையற்ற முதியவர் ஒருவர் பசி பொறுக்காது பிச்சை கேட்டார். எல்லோரும் அடுத்த வீடு சென்று கேளுங்கள் என்றனர். அவரும் அடுத்தடுத்த வீடுகளாக நகர்ந்தாரே தவிர அன்னம் போட யாருக்கும் மனம் வரவில்லை. அதுபோல காளியின் கோயிலை வீடு என நினைத்து கைகளை நீட்டினார். ஜகன் மாதாவான காளி நீட்டிய கைகளில் அன்னமிட்டாள். அங்கேயே படுத்துறங்கவும் செய்தார். மறுநாள் ஏன் இங்கேயேபடுத்து விட்டீர்கள் என்று ஊரார் கேட்க, ‘‘உள்ளேயிருந்து ஒரு அம்மா உணவளித்தாள். உண்ட மயக்கத்தில் இங்கேயே தூங்கி விட்டேன்’’ என்று கூறினார். ‘‘ஐயா... இது காளி கோயில். எப்படி இங்கு உணவு கிடைக்கும்‘‘ என்று பல்வேறு விதமாக ஏளனமாகப் பேசினார்கள். உடனே, அவர் வைத்திருந்த தட்டில் உணவு தோன்றியது. எல்லோருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. இந்த அற்புதத்தை உணர்த்தும் பொருட்டு இன்றும் உச்சிகால பூஜையின்போது அன்னப் படையல் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தலத்தில் காளியானவள் திருப்பேழையிலிருந்து அருள்பாலித்து வருகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூசையின்போது பத்ரகாளி அம்மனை பேழையிலிருந்து எழுந்தருளச் செய்வர். திருக்கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, உடலெங்கும் ஆபரணங்கள் அணிந்து மலர்களால் அலங்காரம் செய்விக்கின்றனர். அந்த இரண்டு நாட்கள் மட்டுமே உருவத்தோடு தரிசனம் செய்யமுடியும். இத்தலம் காரைக்காலுக்கு வடக்கேயுள்ள பொறையாரிலிருந்து
3 கி.மீ. தொலைவில் உள்ளது.

 சன்னாபுரம் காளி

ராஜராஜசோழன் தான் பழையாறையில் இருந்த காலம் வரை வடபத்ரகாளியம்மனை தரிசிக்காது எந்த செயலையும் தொடங்கியதில்லை. அவளின் ஆணையில்லாது சிறு அசைவும் செய்ததில்லை. மாமன்னன் தரிசித்த அந்த வடபத்ரகாளி, சன்னாபுரத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டுவதற்கு முன்பே இக்கோயிலை கட்டினார்கள் என்பார்கள். கோயிலின் கருவறைக்குச் சென்று வடபத்ரகாளியைப் பார்க்க, அத்தோற்றம் நம்மை மிரளவைக்கிறது. நாக்கை வெளியே துருத்திக் கொண்டும், நாற்புறங்களிலும் பரவிய பதினாறு கரங்களில் ஆயுதங்களோடும், தம் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அசுரனை சூலம் கொண்டு வதம் செய்யும் காளியின் முகத்தில் கருணை பொங்கி வழிகிறது. நாக்கை நீட்டி பெருஞ்சிரிப்பாய் இருக்கும் காளியின் உதட்டோரம் மறைந்திருக்கும் மெல்லிய புன்னகையைப் பார்க்க உள்ளம் உவகை கொள்ளும். எந்த விதமான தீய சக்திகளும் இங்கு நெருங்க முடியாது. சுற்றியுள்ள எண்ணற்ற கிராமங்களுக்கு இவளே தாய். மிகச் சிறந்த வழிகாட்டி. இக்கோயில் நாள்தோறும் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் பகல் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் கோயிலே திருவிழா கோலம் காணும். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சன்னாபுரம். கும்பகோணத்திலிருந்து மினி பேருந்துகளும், திருநாகேஸ்வரத்திலிருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன.

சிற்றரசூர் நீர்வாழ்பிடாரியம்மன்

அதென்ன நீர்வாழ் பிடாரியம்மன். ஆம், ஆழமான கிணற்றுக்குள்ளிருந்து அருள் பாலிக்கிறாள். விழுப்புரத்தில் மூன்று ஊர்களை மையமாக கொண்ட சிற்றரசூர் என்ற கிராமத்தில் ஊருக்கு வெளியே இருக்கிறது கிணறு. இவ்வூரில் விநாயகர், முருகன், சிவன் என பல்வேறு கடவுள்களுக்கும் தனியே கோயில்கள் இருக்கின்றன. ஆனால் நீர்வாழ் பிடாரியம்மன் தனிச் சிறப்புடையவளாக திகழ்கிறாள். இந்த அம்மனுக்கு திருவிழா நடத்தும் மூன்று கிராமத்தினரும் ஊர்வலமாக சிற்றரசூர் புறப்பட்டு செல்வார்கள். மிகுந்த பயபக்தியுடன் கிணற்றின் உள்ளே சிலர் மட்டும் குதித்து சாமி சிலையை தூக்கி வருவார்கள். தண்ணீரில் மூழ்கி பாசி படிந்து கிடக்கும் சூலம் வடிவமான அந்த உலோக சிலையை வெளியே எடுத்து எலுமிச்சை பழத்தால் தேய்த்து சுத்தப்படுத்துவார்கள். சூலத்தின் நடுப் பகுதியில் அம்மனின் உருவம் இருக்கும். ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தங்கள் கிராமங்களுக்கு எடுத்து சென்று 9 நாட்கள் திருவிழாவை நடத்துவார்கள். விழாவின்போது கர்ப்பிணிப் பெண்கள் தேரில் உலா வரும் சாமியை பார்க்கக் கூடாது. திருவிழா நடக்கும் 3 நாட்களும் கர்ப்பிணிப் பெண்கள் ஊரைவிட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்குகிறார்கள். நீர்வாழ் பிடாரியம்மன் கோயில் கொண்டிருக்கும் கிணற்றில் நீர் குறைந்து சூலத்தின் முனைப்பகுதி வெளியே தெரிந்தால், அன்றிரவே மழை பெய்து கிணறு நிரம்பி விடும் என்பது கிராம மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. விழுப்புரத்திற்கு அருகேயே இத்தலம் உள்ளது.

Tags : Amman darshan ,Audi ,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...