தனுஷ் ஜோடியாகிறாரா லட்சுமிமேனன் : இயக்குனர் விளக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வட சென்னை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தில் ஆபாசமாக பேசும் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று ஒரு தரப்பில் குரல் எழுப்பப்பட்டது. அதை நீக்குவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்தையடுத்து தனுஷ் த்ரில் படமொன்றில் நடிக்கிறார். சமீபத்தில் விஷ்ணுவிஷால் நடித்து திரைக்கு வந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்க உள்ளார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து இயக்குனர் ராம்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில்,’ராட்சசனுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள்ளாகவே கதை நாயகி குறித்த தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாம்’ என கூறி உள்ளார்.

கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சபை, ஜிகர்தண்டா என பிஸியாக நடித்து வந்த லட்சுமி மேனனுக்கு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்தன. கடந்த ஆண்டு ஒரு படம் கூட அவர் நடிக்கவில்லை. உடல் எடை அதிகரித்திருந்ததால் எடையை குறைப்பதற்காக அவர் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார். உடல் எடை குறைந்த நிலையில் அவருக்கு தற்போதுதான் பிரபுதேவா நடிக்கும் யங் மங் சங் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்நிலையில் தனுஷ் படத்தில் லட்சுமிமேனன் நடிக்கவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

× RELATED வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்...