அன்னையின் அருள் மழை பொழியும் ஆடி மாதமும் உங்கள் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஜோதிடக் கலையில் “மாத்ரு காரகர்” எனப் போற்றிப் புகழப்படும் சந்திரனின் ஆட்சிவீடான கடக ராசியை, சூரிய பகவான் கடக்கும் சுமார் ஒரு மாத காலத்தையே நாம் “ஆடி மாதம்” எனவும், அம்பிகை மற்றும் தாயாரின் மாதம் என நாம் காலங்காலமாக பூஜித்து வருகிறோம். சந்திரன், புத்திக் கூர்மையையும், அறிவுத் திறனையும் கிரகிப்பு சக்தியையும் அளிக்கும் கிரகமாகவும், ஒவ்வொருவரின் ஜெனன கால ஜாதகத்திலும் சந்திரன் எந்த அளவிற்கு சுபபலம் பெற்றிருக்கிறாரோ அந்த அளவிற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுத் திறனும் இருக்கும்.

மேலும், பெற்ற தாயின் மீது ஏற்படும் மரியாதை, அன்பு, பாசம், பக்தி ஆகிய நற்பண்புகளையும் ஜாதகத்தில் சந்திரனின் நிலையைக் கணித்துப் பார்த்தே கூற முடியும்! படித்தவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை அளிப்பவரும் சந்திரனே! சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும் சாதுர்யத்தை அளிப்பதும் சந்திரனே!! சந்திரனின் ஆட்சிவீடு, கடகம்; உச்ச வீடு ரிஷபம்; நீச்ச வீடு விருச்சிகம்!!

அம்பிகை மாதம்!

ஆடி மாதத்திற்கு “அம்பிகை மாதம்” என்றொரு பெருமையும் உண்டு. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு, தெய்வீகத் தனிச் சிறப்புகள் உண்டு! பெண்மணிகள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்பிகை, ஸ்ரீமகாலட்சுமி, பராசக்தியை பூஜிப்பதால்,  அவர்களின் கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளும், சுமங்கலி பாக்கியமும் கிட்டும் என்பது காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கையாகும். திருமண வயதிலுள்ள பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உபவாசமிருந்து,  மாலையில் பசு நெய் தீபம் ஏற்றிவைத்து, அம்பிகையை பூஜித்து வந்தால், ஆழ்ந்த அன்பும், நீண்ட ஆயுளும் உடைய கணவர் அமைவார் என புராதன சூட்சும நூல்கள் கூறுகின்றன.

அம்பிகை பார்வதியே ஆடி மாதத்தில் உபவாசமிருந்து, இறைவனை மனத்திலிருத்தி, கடும் தவம் இயற்றியதால், பரமேஸ்வரனையே பதியாக அடைந்தாள். ஒவ்வொரு  ஆண்டும் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற சங்கரன் திருக்கோயிலில் கொண்டாடப்படும் “ஸ்ரீகோமதி அம்மனின் ஆடி தபசு” உற்சவம், உலகமனைத்தையும் படைத்து, ரட்சிக்கும் அன்னை பராசக்தியே ஈசனைக் குறித்து தவமிருக்கும் உயர்வை எடுத்துக்காட்டுகிறது. மேலும், உத்தராயண புண்ணிய காலம் முடிந்து, தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாவதும், இந்த ஆடி மாதப் பிறப்பன்றுதான்! தேவர்கள் உலகின் பகல் பொழுது முடிந்து, இரவுக் காலம் ஆரம்பிப்பதைத்தான் ஆடி மாதப் பிறப்பு நமக்கு உணர்த்துகிறது.

அம்பிகை பராசக்தி மாரியம்மனாக தரிசனம் அளிக்கும் திருத்தலங்களில் விசேஷமாக மக்களால் பூஜிக்கப்படுவதும் இந்த ஆடி மாதத்தில்தான்!! அம்மை, பிளேக், காலரா போன்ற கொடிய தொற்று நோய்கள் ஏற்படாமல்,  மக்களைத் தாயன்புடன் காப்பாற்றி அருள்புரியும் கண்கண்ட தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் பெண்கள் பொங்கல் வைத்துப் பூஜிப்பது இன்றும் தமிழ் மக்களிடையே வழக்கத்திலிருந்து வருவது அனைவரும் அறிந்ததே!!

இமவானின் புதல்வியான பார்வதி, விரதம் இருந்து, அதன் பலனாகவே திருக்கயிலைப் பிரானைப் பதியாக அடைந்ததை சிவபுராணம் விவரித்துள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்மணிகள் பகல் வேளையில் உண்ணாவிரதமிருந்து, ஸ்ரீ அம்பிகையையும் ஸ்ரீ மகாலட்சுமியையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் மாலையில் நெய்தீபம் ஏற்றிவைத்து பூஜித்தால், அஷ்ட ஐஸ்வர்யமும் தேடிவரும் என புராதன நூல்கள் உறுதியாகக் கூறுகின்றன.

இத்தகைய தெய்வீகப் பெருமைகளைக் கொண்ட இந்த ஆடி மாதம் “தினகரன்” வாசக அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை அளிக் கவுள்ளன என்பதை டிகிரி சுத்தமாக, ஷோடஸ ஸதவர்க்கம்” எனும் சூட்சும கணித முறை மூலம் கணித்து வழங்குவதில் மன நிறைவு பெறுகிறோம். அவசியமான ராசியினருக்கு எளிய பரிகாரங்களையும் எடுத்துக் கூறியுள்ளோம் கடைப்பிடிப்பதற்கு எளிமையானவை;  பலனோ அளவுகடந்தவை! நம்பிக்கை வைத்துச் செய்யுங்கள் எனப் பணிவன்புடன் வேண்டுகிறோம். பலன் கிட்டும் கைமேல்! இந்த ஆடி மாதத்தின் விசேஷ புண்ணிய நாட்களையும் இப்புத்தகத்தில் கொடுத்திருக்கின்றோம் - வாசக அன்பர்களின் நலன் கருதி!

இம்மாதத்தின் முக்கிய நன்னாட்கள்!

ஆடி 1 ஞாயிற்றுக்கிழமை (17-7-2022):

ஆடி மாதப் பிறப்பு. தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்.  தேவர்களின் உலகிற்கு இரவு நேரம் ஆரம்பமாகிறது. இன்று மறைந்த நமது மூதாதையர்களுக்கு (பித்ருக்கள்) பக்தியுடன் “தர்ப்பணம்” எனும் பித்ரு பூஜையைச் செய்ய வேண்டும். பாவங்கள் அகலும்; குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். இன்றிலிருந்து 3 நாட்கள் அனைத்து நதிதேவியருக்கும் “ரஜஸ் வலை”  தினங்களாகும். இந்த மூன்று நாட்களும், அடுத்துவரும் தினத்திலும் நதிகளில் நீராடக்கூடாது.

மாத்ரு காரகரான சந்திரனின் வீடாகிய கடக ராசியில் பித்ருகாரகரான சூரிய பகவான் பிரவேசிக்கும் காலமாகிய ஆடி மாதத்தில், 8ந் தேதி வளர்பிறையில் பரம பவித்ரமானதும்,  சர்வமங்களத்தையும் அருளுவதுமாகிய தேவசயனி ஏகாதசி! பகவான் மஹாவிஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் காலமே இந்நாள்!! மீண்டும் திருநேத்திரங்கள் திறக்கும் காலமே கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசி திதியன்றுதான்! நீதியும் நேர்மைத் திறனுடனும், தம் குடிமக்களை, தன் வயிற்றில் பிறக்காத குழந்தைகளாகவே பாவித்து, சிறப்புற ஆட்சி புரிந்துவந்தான் மன்னன் மாந்தாதா! மன்னர் எவ்வழி;  குடிகள் அவ்வழி என்பதற்கேற்ப, வானமும் மும்மாரிப் பெய்து, பயிர்கள் செழித்து, மக்களும் எவ்விதக் குறையுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தனர்.

ஒரு சமயம் வானம் பொய்த்தது; நீரின்றி கால் நடைகள் மாண்டன; மக்களும் செய்வதறியாது திகைத்தனர். மன்னரோ, “நாம் நீதி வழுவாமல் மக்களைப் பரிபாலனம் செய்கின்றோம்; வருண பகவான் தன் கடமையைச் செய்யத் தவறியதன் காரணம் என்ன?” என சிந்திக்கத் தொடங்கினான். எவ்வகையிலாயினும் இந்தப் பஞ்சத்தினின்று விடுபட்டு, மக்கள் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட என்ன செய்தால் தகுமென, முற்றும் துறந்த, நால்வேதங்களையும் கசடறக் கற்றுத் தேர்ந்து, கானகத்தினில், ஏகாந்தத்தில் திளைத்திருக்கும் முனிவர்களைச் சந்தித்து இதுபற்றி வினவினான்! முடிவில் ஆங்கிரஸ் முனிசிரோன்மணியைச் சந்தித்து, தன் துயரைக் களைந்திட யாது வழி? என கவலை தோய்ந்த முகத்துடன் வினவ, முனிவரோ, “ஒரு நாட்டில், மக்கள் செய்யும் பாவங்களனைத்தும் ஆட்சி புரியும் மன்னனையே வந்தடையும்; மக்களில் ஒருவர் பாபம் செய்திடினும்! தவறு செய்யும் அந்த ஒருவனைப் பிடித்து, சிரச்சேதம் செய்தாலே போதும்!” என்றும் அருதியிட்டுக் கூறினார் முனிவர்! மன்னனோ சோகத்தின் உச்சிக்கே சென்று, தான் நீதி வழுவாது ஆட்சிபுரிந்திடினும் யாரோ ஒருவர் செய்யும் பாபத்தினால் அனைத்து மக்களும் அல்லலுறுகின்றனரே அந்தப் பாபம் செய்பவரைக் கொல்லவும் வேண்டுமே என மனம் வருந்திய அவ்வரசன், ஒரு உயிரைக் கொல்லாமல் ஏதேனும் மாற்று வழி உள்ளதாவென வினவ, மன்னனின் ஜீவகாருண்ய மனத்தைப் புரிந்துகொண்டு சந்தோஷமடைந்த ஆங்கிரஸ முனிவர், “இந்த ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியன்று குடிமக்களனைவரும், நிர்ஜலமாக உணவேதும் உட்கொள்ளாமல் இருந்தால், மீண்டும் மக்கள் வசந்தத்தை அடையலாம்” எனக் கூறினார்.

ஊர் திரும்பிய மன்னர், அனைவரும் இந்த ஏகாதசியைக் கடைபிடிக்குமாறு உத்தரவிட்டு, தானும் கடைப்பிடித்து, அதன் பலனாக மாதம் மும்மாரி மழை பெய்து, பயிர்களனைத்தும் செழித்து வளர்ந்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததுமட்டுமல்லாது, தன் எதிர்காலச் சந்ததியினருக்கும் இந்நாளின் பெருமையை உணரச்செய்து அவர்களையும் கடைப்பிடித்து, மகிழுமாறு செய்தனர். ஏகாதசியானது மூன்று நாட்களைக் கொண்டது! முதல் நாள் தசமியன்று பகல் உணவை மட்டுமே அருந்திவிட்டு, இரவில் பாலோ பழமோ சாப்பிட்டுவிட்டு, மறுநாள் ஏகாதசியன்று, இறைவனின் அருகேயிருந்து, மலர்களாலும், துளசி இலையினாலும் அர்ச்சித்து, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து இருந்து, மறுதினம் வாசுதேவ துவாதசியன்று பாரணையை (உணவை உட்கொண்டு) முடித்தால், நம் மனக்கிலேசங்கள் நீங்கி,  அபிலாஷகைள் அனைத்தும் நாம் கேளாமலே அளித்தருள்வான் ஸ்ரீமந்நாராயணன்!!

வாசகர்கள் அனைவரும் இந்நன்னாளில் விரதமிருந்து, அனைத்து நலன்-வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடனும் மன-நிறைவுடனும் வாழ்ந்திட பிரார்த்திக்கின்றோம். முழுநாள் உபவாசம் இருக்க முடியாதவர்கள் - முதியோர், உடல்நலிவுற்றோர், சிறியோர், அரிசி சாப்பாட்டையும், தானிய வகையறாக்களையும் தவிர்த்து, காய் - கனிகளையும் உண்டு இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். பலனும் முழுமையாகக் கிடைக்கும்.

ஆடி 10ந் தேதி மாத சிவராத்திரி:
அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்த, வில்வ இலைகளால் அர்ச்சிப்பதும், கங்கை நீர், சந்தனம், பசுவின் பால், நல்ல தரமான தேன், கரும்புச் சாறு, இளநீர் போன்ற (உங்களால் முடிந்த) பொருட்களால் அபிஷேகம் செய்விப்பதும், லிங்காஷ்டகம் படிப்பதும், ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிப்பதும், இறைவனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், நம்முடைய துயரங்கள் அனைத்தும் விலகி, வாழ்வில் வசந்தம் வீசுவதை அனுபவத்தில் காணலாம். முக்கியமாக வீடுகளில் மகிழ்ச்சியும், மனநிறைவையும், சந்தோஷத்தையும், தேக ஆரோக்கியம் மேம்படுவதையும், கிரகதோஷங்களற்றுப் போவதையும், குடும்பத்தில் குதூகலம் நிலவுவதையும் நிதர்சனத்தில் அனுபவிக்கலாம்.

ஆடி 12 வியாழக்கிழமை (28-07-2022) ஆடி அமாவாசை புண்ணிய நதிகள், புஷ்கரணிகள் (புனித குளங்கள்), சமுத்திரம் ஆகியவற்றில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மூலம் எள், தீர்த்தம் அளித்து பூஜிப்பது, 12 தலைமுறைகளுக்கு நம் குடும்பத்தைக் காப்பாற்றும்; முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.

ஆடி 16 திங்கட்கிழமை (1-8-2022) திரு ஆடிப்பூரம் ஸ்ரீ ஆண்டாள் அவதாரப் புண்ணிய தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஸ்ரீ ரங்கமன்னாரையும், ஸ்ரீ ஆண்டாளையும் தரிசிப்பது விசேஷ புண்ணிய பலனை அளிக்கும். ஆழ்ந்த பக்தியினால் அரங்கனையே மணாளனாக அடைந்து, பக்தியின் சக்தியை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய அன்னை ஸ்ரீஆண்டாள், பூமாலை மட்டுமின்றி, பாமாலையும் தானும் சூடி, அரங்கனுக்கும்  சூட்டி மகிழ்ந்த உத்தமி ஸ்ரீஆண்டாள்.

ஆடி 17 செவ்வாய்க்கிழமை (2-8-2022) கருட பஞ்சமி நாக பஞ்சமி, ஸ்ரீமந் நாராயணனின் வாகனமாகிய கருடனையும், நாகங்களையும் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். கற்பனையான பயம், விஷ ஜந்துக்களால் ஆபத்து, அடிக்கடி பாம்பு கண்ணுக்குப் புலப்படுவது ஆகியவை நீங்கும்.

ஆடி 18 புதன் கிழமை (3-8-2022) ஆடி 18ம் பெருக்கு மகரிஷி அகத்தியரால் தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம் காவிரி நதி. “கங்கையினும் புனிதமாய காவிரி...!” என ஆழ்வார்களால் போற்றப்பட்ட பொன்னி நதியைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். பாவங்கள் பறந்தோடும். திருமணமாகாத பெண்களுக்கு வரன் அமையும்; கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். வறுமை நீங்கும்; புத்திர பாக்கியம் ஏற்படும்.

ஆடி 20 வெள்ளிக்கிழமை (5-8-2022) வரலட்சுமி விரதம் விரதமிருந்து, ஸ்ரீ மகாலட்சுமியை பூஜிக்கவேண்டிய மகா புண்ணிய தினம். வறுமை, கடன் தொல்லைகள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, ஆகிய துன்பங்கள் அடியோடு விலகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

ஆடி 26 வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11, 2022) ருக், யஜுர் உபாகர்மா சூரியன், மகரிஷிகள், வேதங்கள், உபநிஷத்துகள், ஸ்ரீ காயத்ரி தேவி, மறைந்த முன்னோர்கள் ஆகியோரைப் பூஜிக்க வேண்டிய பரம பவித்ரமான புண்ணிய தினம். அறிந்தோ, அறியாமலோ இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ செய்துள்ள பாவங்கள் அனைத்தும் விலகும்.

பித்ருக்களின் ஆசி நம்மைத் தேடி வரும். காயத்ரியை பூஜிப்பதால், முகத்தில் தேஜஸ் (ஒளி) அதிகரிக்கும். கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த புண்ணிய தினமும் இன்றுதான். குறிப்பாக, நமது மாணவ - மாணவியர் இன்று ஸ்ரீஹயக்ரீவர் ஸ்தோத்ரத்தைச் சொல்லி, அவரை தரிசித்து வருவது, கல்வி முன்னேற்றத்தை அளிக்கும். நினைவாற்றல் பெருகும். அனுபவத்தில் பார்க்கலாம்.

Related Stories: