×

கருவூர் சித்தருக்கு மோட்சம் தந்த காந்தீஸ்வரம்

சச்சிதானந்த சொரூபராகிய பரமசிவன் வீற்றிருக்கும் கைலயங்கிரியிலிருந்து, காந்தை முனிவர் என்பவர் பூவுலகிற்கு வந்தார். மேரு தீர்த்தம், கங்கை தீர்த்தம், பொதிகை தீர்த்தம் ஆகியவைகளில் நீராடி சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்து வருகிறார். தாமிரபரணி நதிக் கரையில், பசுமையான சோலைகளுக்கு நடுவே அமைந் திருக்கும் அழகிய இத்திருத்தலத்தைக்கண்டார்.

ஜோதி பிராகாசம் தோன்றவே, மிக்க மகிழ்ச்சிகொண்டு அன்புடன் வணங்கி வழிபட்டார். சிவலிங்க வடிவை கண்டு மெய்மறந்தார். பின்னர், பூஜைகள் பல செய்து இத்தலத்தில் தவச்சாலை அமைத்து தங்கிவந்தார். முனிவரின் அன்பிற்குட்பட்ட சிவபெருமான், நேரில் தோன்றிக் காட்சியளித்து, “அப்பனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

“எம்பெருமானே, இத்தலத்தில் எழுந் தருளியிருக்கும் உமக்கும், இத்தலத்திற்கும், இப்புண்ணிய தீர்த்தத்திற்கும் என பெயரே இட்டு அருள்வீராக” என்று வேண்டினார் காந்தை முனிவர். அவ்வாறே, இறைவனும் அருளினார். அன்று முதல், இத்தலம் “காந்தை நகர்” என அழைக்கப்பட்டது. பின்னாட்களில் மருவி காந்தீஸ்வரம் என அழைக்கப்படலாயிற்று.

கருவூர் சித்தர் பெருமான் இத்திருத்தலத்தில் தவச்சாலைகள் அமைத்து, இறைவனை வணங்கி வழிபட, இறைவன் சாந்த சொரூபராக காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.

திருச்செந்தூர் ராஜகோபுரத் திருப்பணி நடைபெற்றபோது, கூலிக்குப் பதில் இலை விபூதியைக் கொடுத்துத் திருப்பணியை முடித்த, திருவாவடுதுறை மடாலய, தம்பிரான் சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் திருச்செந்தூர் முருகனின் அருள்வாக்குப்படி, இத்தலத்திற்கு வந்து வழிபட்டு வணங்கி நின்றார்.  இறுதியில் இவ்வூரியே இறைவன் அடி மலர்ந்தார். அவரின் சித்தர் பீடம் அருகில் உள்ளது.

அஷ்ட சித்தர்களாகிய கவுண்சித்தர், மறைக்காட்டு சித்தர், மௌனகுருசாமி, மாயக்கூத்தர், சொக்கலிங்க அடிகள்  உள்பட பல சித்தர்கள் வழிபட்ட தனிச்சிறப்புடைய புனித தலமாகும்.

திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய மடாலயங்களின் திருமடங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன. கோயில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு என தனி சந்நதி உள்ளது.

ஆழ்வார்திருநகரியின் எதிர்புறம் கருவூர் சித்தர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவந்தார். கருவூர் சித்தர் இராஜ இராஜ சோழனின் ஆன்மிக குருவாக விளங்கியவர். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றபோது அஷ்டபந்தன கலவை சரியாக கூடாமல் இருந்தது. அப்போது, சில மூலிகைகளைக்கொண்டு இவர் அஷ்ட பந்தனத்தைக் கூட்டினர் (வெற்றிலையை மென்று எச்சிலை உமிழ்ந்ததாகவும் கர்ண பரம்பரை கூறுகிறது)  என்றும் சொல்லுவர்.

இவர் தாமிரபரணி கரையில் வந்து தங்கியிருந்தார். ஓருநாள் தியானம் செய்து கொண்டி ருந்தார். தாமிரபரணி நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது, அந்த வெள்ளத்தில் ஒரு நாய் அடித்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது, வெள்ளத்தில் சிக்கித் தவித்த அந்த நாயின் கபாலம் வெடித்தது. அதன் பின், அந்த நாய் உயிர்விட்டது. அப்போது, அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாயின் உயிர் அப்படியே சொர்க்கத்துக்கு சென்றது. அதைக் கண்ட கருவூரார் அதிர்ந்தார். அந்த நாய் நேராக சொர்க்கத்துக்கு செல்ல காரணம் என்ன என்று வியந்து தனது ஞானதிருஷ்டியால் பார்த்தார்.

அப்போது, அவருக்கு ஒரு உண்மை தெரிந்தது. அந்த நாய் தினமும் ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமான் கோயிலை சுற்றி உள்ளவர்கள் போடும் எச்சில் இலையை சாப்பிட கோயிலை சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த நாய் பகவானை மனதில் கூட நினைக்காமல், இந்த கோயிலை சுற்றி வந்தது. ஆனாலும், அதற்கு சொர்க்கம் கிடைத்தது. காரணம், இந்த தலத்தின் மகிமைதான். இங்கு பிறந்து, வாழ்ந்து, கோயிலை சுற்றி வந்தாலே சொர்க்கம்தான். இந்த மகிமையால், தாமிரபரணியில் உயிர் விட்ட நாய் சொர்க்கத்துக்கு சென்றது என்று அறிந்து கொண்டார். அந்த அளவுக்குச் சிறப்பான புண்ணிய பூமி காந்தீஸ்வரம், எதிர்கரையில் உள்ள ஆழ்வார்திருநகரி.

இவ்விடம் குறித்து  கருவூர் சித்தர்,
“வாய்க்கும் குரகைத்
திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய்
அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் பதம் அளித்தால்
பழுதோ? பெருமாள் மகுடம்
சாய்க்கும்படி கவிசொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!”
என்று பாடியதாக வரலாறு உண்டு.

இது கருவூர்ச் சித்தர் முக்தியடைந்த தலமாகும். அவரின் சீடர்கள் பலரும் இங்கேயே தங்கி சித்தியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவலிங்கபுரம் என 9 சிவாலயங்கள் அழைக்கப்படுகிறது. அவை வல்லநாடு, கொங்கராயக்குறிச்சி, தெற்கு காரசேரி, புதுக்குடி, வெள்ளுர், காந்தீஸ்வரம், மளவராய நத்தம், புறையூர், காயல்பட்டணம் ஆகிய ஊர்களில் ஐந்தாவது தலமாக காந்தீஸ்வரம் விளங்குகிறது.

நம்மாழ்வார் அவதரித்த அப்பன் கோயிலுக்கும், அவர் வாழ்ந்த ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலுக்கும் இடையில் அமர்ந்து இருப்பதால், இக்கோயில் மேலும் பெருமை அடைகிறது.

தாமிரபரணி ஆற்றில் அழகான படித்துறை, அதன் மேல் பிரமாண்ட கோபுரத்துடன் காண்போரை கவரும் வண்ணத்தில் காட்சியளிக்கிறது.

இந்த கோயிலில் சிவபெருமான் பெயர் ஏகாந்த லிங்க சுவாமி. தாயார் பெயர் அறம் வளர்த்த நாயகி.

 காசியிலும் சிறந்த தலம் காந்தீசுவரம் என்பது சித்தர்கள் வாக்கு. அதற்கேற்ப இத்திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் நோய். பிணிகள் நீங்கும். காரியங்கள் கைகூடும். திருமண தோஷம் அகலும் என்பது ஐதீகம். இவ்விடம் வந்து சென்றாலே மோட்சம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.இந்த கோயிலுக்கு நெல்லை -  திருச்செந்தூர் பேருந்துகள் அதிகமாக செல்கிறது. பேருந்தில், ஆழ்வார் திருநகரி என்னும் திவ்விய தேசத்தில் இறங்கி தாமிரபரணி ஆற்றைக் கடந்தால் ஆழ்வார் தோப்பு என்னும் ஊரில் காந்தீஸ்வரம் கோயிலை அடையலாம். ஆழ்வார் திருநகரியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு.

Tags : Gandhiswaram ,Moksha ,Karuur Siddha ,
× RELATED ராமம் ராகவம் கிளிம்ப்ஸ் வெளியானது