×

மயூரகிரி எனும் குன்றக்குடி

1) மயூரம் - மயிலே
மலை வடிவாக ஆனதால் `மயூரகிரி’ என இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.

2) மலையான மயில் வரலாறு

முருகப் பெருமானின் வாகனமான மயிலே, மலை வடிவாக ஆன திருத்தலம். முருகப் பெருமானுக்கு மயில் வாகனங்களே பல உண்டு. அவற்றில் எந்த மயில், எவ்வாறு இங்கு மலையானது என்பதை பார்ப்போம். முருகப் பெருமானுக்கு நான்கு விதமான மயில் வாகனங்கள் உண்டு. சூரபத்மன் மயில் வாகனமாகவும், கோழிக்கொடியாகவும் வந்தான். இதற்கு முன்னால் தேவேந்திரன் மயிலாக இருந்தான். அதற்கு முன், வேதமே மயிலாக இருந்தது. முதல் மயிலும் சேவலுமாக, சூரியபகவானும் அக்னி பகவானும் தங்கள் உடம்பில் இருந்து உருவாக்கி அளித்தார்கள். முருகப்பெருமானின் இடது கைப்புறமாக மயில் முகம் இருந்தால் அது தேவேந்திரன் மயில். முருகப் பெருமானுக்கு வலதுகைப்புறமாக மயில் முகம் இருந்தால் அது சூரபத்மன் மயில். முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகன முகம் நேருக்கு நேராக நம்மைப் பார்த்தும், அதன் தோகை முருகனுக்கு பின்னாலும் இருந்தால், அது வேதமயில். இதை `ஆனதனி மந்த்ர ரூப நிலை கொண்டதாடும் மயிலென்ப தறியேனே’ என அருணகிரிநாதரும், மயூராதி ரூடம் மகாவாக்ய கூடம் என ஆதிசங்கரரும் குறிப்பிடுகிறார்கள்.இதுவரை சொன்ன மூன்று மயில்களையும் கோயில்களில் தரிசிக்கலாம். ஆனால், சூரியன் கொடுத்த மயிலை எந்தத் தலத்திலும் தரிசிக்க இயலாது. அந்த மயில்தான் மலைவடிவாக `மயூரகிரி’ எனும் பெயரில் இங்கே உள்ளது.

3) மயில் மலையான காரணம்

சாகத்தீவு மன்னர் பிரபாகரன், சுகுமாரி தம்பதியரின் பிள்ளைகள் சூரன், பதுமன், தாரகன், சிம்மன் என்பவர்கள். நால்வரும் அகத்திய முனிவரிடம் இருந்து சாஸ்தா, அம்பாள், முருகப் பெருமான் ஆகியோரின் வாகனங்களைப்பற்றிய பெருமைகளை உணர்ந்தார்கள். அந்தப் பதவிகளைத் தாம் அடைய வேண்டும் என்பதற்காக அகத்தியரிடமும் திருணபிந்து முனிவரிடமும் மந்திர உபதேசம் பெற்றுத் தவம் செய்தார்கள். அவர்கள் தவம் செய்யும் காலத்தில் விஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன் முதலான அனைவரும் கயிலைக்குக் கயிலைநாதரை தரிசிக்க வந்தார்கள். முருகப் பெருமானும் வந்தார். அனைவரும் அவரவர் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்கள்.
 அப்போது கருடனும் அன்னமும், மயில்-சேவல் ஆகியவைகளிடம் சென்று, ‘‘உங்கள் பதவிகளை அடைவதற்காக, சூரன் முதலானோர் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று கூறின. உடனே மயிலும் சேவலுமாகப் போய், சூரன் முதலானவர்களின் தவத்தைக் கெடுத்து, அவர்களுக்கும் இன்னல்கள் விளைவித்தன. அவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் மயிலிடமும் சேவலிடமும், ‘‘உங்கள் இருவருக்கும் ஆற்றலே இல்லையாம். உங்களை விடத் தங்களுக்குத் தான் ஆற்றலும் அழகும் அதிகம் என்று, கருடனும் அன்னமும் உங்களை இழிவாகப் பேசின” என்று கூறினார்கள்.

அதைக்கேட்ட மயில், கடுங்கோபம் கொண்டு கருடனையும் அன்னத்தையும் கடுமையாகத் தாக்கி அழித்தது. அந்த நேரத்தில் கையிலை நாதரைத் தரிசித்து விட்டு, முருகன் முதலான அனைவரும் வந்தார்கள். வந்தவர்கள் விபரம் அறிந்தார்கள். அப்போது முருகப்பெருமான் அருளால் கருடனும் அன்னமும் மறுபடியும் உயிருடன் மீள, முருகப்பெருமான் மயிலுக்கு சாபம் கொடுத்தார்; ‘‘இரக்கமில்லாமல் கல் மனம் கொண்டு செயல்பட்ட நீ, கல் மலையாக ஆவாய்!” என மயிலை மலையாகச் சாபம் கொடுத்தார். மயில் தன் குறையைச்சொல்லி மனம் வருந்தி சாப விமோசனம் வேண்டியது. சாப விமோசனம் சொன்னார் முருகன்; ‘‘பாண்டிய நாட்டில் திருப்புத்தூருக்குக் கிழக்கே உள்ள அரச வனத்தில் (குன்றக்குடியில்)  மலையாக இரு! யாம் வந்து சாப விமோசனம் அளிப்போம்” என்றார். அதன்படி மயில் அரசவனம் (குன்றக்குடி) வந்து, கயிலையை நோக்கியதாக வடக்கு முகமும், தெற்கே தோகையுமாக உள்ள மலையாக ஆனது. (தவத்தை விட்டு அவமாகச் செயல்பட்ட சூரன் முதலான நால்வரும் அசுரர்களாக ஆகும்படி முருகனால் சபிக்கப்பட்டார்கள். அதன் விரிவைக் கந்தபுராணத்தில் காணலாம்).

சூர சம்காரம் முடிந்ததும் குன்றக்குடி வந்த முருகன், மயிலை இரு பாகமாக ஆக்கி, ஒன்று தெய்வத்தன்மை அடையும்படியாகவும், மற்றொரு பங்கு மலையாகவே இருக்குமாறும் அருள்புரிந்தார். அப்போது, மயில் ஆறுமுகப்பெருமானை வணங்கி, ‘‘மயில் வடிவில் அமைந்த இம்மலை மீது எழுந்தருளியிருந்து, இங்கு வந்து வழிபடும் அடியார்களுக்கு அனைத்து செல்வங்களையும் அருள வேண்டும்” என வேண்டியது. அதன்படியே, இம்மலை மீது எழுந்தருளி, அடியார்களுக்கு அருள்புரிந்து வருகிறார் ஆறுமுகன்.
4) அருள் பெற்றோர் வரலாறுகளைத் தல புராணம் சொல்கிறது
மகப்பேறு அருளும் மயூரகிரி, குழந்தை வரமருளும் குன்றக்குடி, உபமன்யு முனிவர் கூறியவாறு, கண்ணபிரான் தன் மனைவி சாம்பவதியுடன் இங்கு வந்து வழிபட்டு, சாம்பன் எனும் மகனைப் பெற்றார்.

5) பிள்ளைகளின் துயர் தீர்க்கும் சரவணன்

விஸ்வாமித்திர முனிவரின் சாபத்தால், வசிட்டரின் பிள்ளைகள் இழிநிலை அடைந்தார்கள். வசிட்ட முனிவர் இங்கு வந்து வழிபட்டு, தன் பிள்ளைகளின் இழிநிலை நீங்கப் பெற்றார்.

6) கெடுதல் செய்த பாவம் தீர்த்த குன்றக்குடி
 
வசிட்ட முனிவரின் பிள்ளைகளுக்குச் சாபம் அளித்துத் தீங்குசெய்த விஸ்வாமித்திர முனிவர், இங்கு வந்து வழிபட்டுத் தன் பாவம் நீங்கி, ஞானமும் பெற்றார்.

7) பகை நீக்கும் தலம்
தேவேந்திரன் இங்கு வந்து வழிபட்டு, மூசி எனும் அசுரனை வென்றார்.

8) பாண்டவ தீர்த்தம்
கண்ணபிரான் ஆணைப்படி பாண்டவர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்ற திருத்தலம். அப்போது பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம், மலையின் மேற்குப் பக்கத்தில் ஞானியார் மலையில் சுனையாக உள்ளது. பாண்டவர்கள் தம் வழிபாட்டிற்காக அமைத்ததால் இத்தீர்த்தம் `பாண்டவ தீர்த்தம்’ என அழைக்கப் படுகிறது.

9) தேனாறு
ஊருக்கு வெளியே வடகிழக்கே உள்ளது. அகத்தியர் தான் பிரதிட்டை செய்த சிவலிங்கத்திற்குத் தேனால் அபிஷேகம் செய்தார். அது ஆறாகப் பெருகி `தேனாறு’ எனப் பெயர் பெற்றது. `வானாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேனாறு’ என அருணகிரிநாதர், இதைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

10) நோய் நீக்கும் தலம்
விடுதலை வீரர்களான வரலாற்றுப் புகழ் மிக்க மருது பாண்டியரின் குலதெய்வம், இங்குள்ள முருகப்பெருமான். தீராத தன் நோயைத் தீர்த்து வைத்த இந்த முருகப் பெருமானுக்கு மருது பாண்டியர் செய்த திருப்பணிகள் பல. மலையின் தென் பக்கம் அமைந்துள்ள திருக்குளம் மருது பாண்டியர் கை வண்ணமே!

11) இரங்கி-இறங்கி வரும் தோற்றம்
வள்ளி தேவசேனா சமேதராக முருகப் பெருமான் இங்கே எழுந்தருளி இருந்தாலும், மற்ற தலங்களில் காண இயலாதவாறு வள்ளி ஒரு தனி மயிலிலும், தேவசேனா ஒரு தனி மயிலிலும் எழுந்தருளி இருக்க, நடுவில் முருகப்பெருமான் ஒரு தனி மயிலில் எழுந்தருளி இருக்கும் அற்புத ஆலயம். முருகப் பெருமானின் திருத்தோற்றம், இரங்கி - இறங்கி வரும் ஆயத்த நிலையில் தரிசனம் தரும் அழகுத்தோற்றம். இத்தலம் காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Tags : Mayuragiri ,
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா