×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

440. மஹாமகாய நமஹ: (Mahaa Makhaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை - திருமாலின் சிம்சுமார வடிவம்)[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

நர்மதா நதிக்கரையில் வேள்விசெய்து வந்த மகாபலியின் வேள்விச்சாலைக்குக் குள்ள வாமன வடிவில் எழுந்தருளிய திருமால், அவனிடம் மூவடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகாபலியும் அதைத் தாரைவார்த்துக் கொடுத்த அளவிலே, கிடுகிடு என ஓங்கி உலகங்களை எல்லாம் அளந்துவிட்டார் திருமால். ஓரடியால் மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்த திருமால், மூன்றாம் அடி மண்ணைத் தராமைக்குத் தண்டனையாக மகாபலியைப் பூமிக்கு அடியில் உள்ள சுதலலோகத்துக்கு அனுப்பிவைத்தார். அப்போது மகாபலி தனது தவறை உணர்ந்து கர்வம் எல்லாம் நீங்கியவனாகத் திருமாலின் ஆணைக்கு அடிபணிந்தான்.

ஓங்கி உலகளந்த உத்தமனை அடிபணிந்த மகாபலி, “இறைவா! நான் இங்கே ஒரு வேள்வி தொடங்கி நடத்திவந்தேன். ஆனால் இப்போது நீங்கள் இடையில் வந்து என்னைச் சுதல லோகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளீர்கள். ஒரு யாகத்தைத் தொடங்கி விட்டு அதைப் பாதியில் நிறுத்துவது பெரும் குற்றமாகுமே! பாதியில் நின்றுபோன இந்த யாகத்தை நிறைவு செய்யத் தாங்களே வழிகாட்டி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

அப்போது திருமால், “மகாபலி! நீ வருந்த வேண்டாம். உன்னைப் பிடித்திருந்த ஆணவத்தை அகற்றவே இந்த லீலையை நான் புரிந்தேன். உனது யாகத்தை எனது அடியார்கள் நிறைவு செய்துவைப்பார்கள்!” என்று விடையளித்தார். “எப்படி?” என்று கேட்டான் மகாபலி. அதற்குத் திருமால், “வருடந்தோறும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று எனது திருக்கோயில்களில் சொக்கப்பனை என்பது எனது அடியார்களால் கொளுத்தப்படும். அந்தச் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் வாயிலாக நீ தொடங்கிய இந்த வேள்வியை எனது அடியார்கள் நிறைவு செய்து வைப்பார்கள்!” என்று கூறினார்.

இவ்வரலாறு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு பகுதியான ஸ்ரீபிரச்ன சம்ஹிதையில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகைதீபத் திருநாளன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறுவதாக ஆகமம் கூறுகிறது. பாஞ்சராத்திர ஆகமத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்தவர்களுள் ஒருவரான சௌனக முனிவரிடம் சில சீடர்கள், “அதெப்படித் திருமாலின் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தினால் மகாபலியின் யாகம் நிறைவு பெற்றுவிடுமா?” என்று கேட்டார்கள்.

அதற்குச் சௌனக முனிவர், “நிச்சயமாக நிறைவு பெறும். ஏனெனில் வேள்விகள் அனைத்தாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். வேள்வியின் வடிவமாகவே திருமால் இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மிகச்சிறந்த வேள்வி திருமாலுக்குச் செய்யக்கூடிய திருவாராதனமே ஆகும். எனவே அத்தகைய திருமாலைக் குறித்து அவரது திருக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தினால், அதுவே மகாபலி தொடங்கி வைத்த வேள்வியை நிறைவு செய்தமைக்கு நிகராகும் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை!” என்றார்.

இப்படி வேள்விகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டவராகவும், அனைத்து வேள்விகளுக்கும் தலைவராகவும் தான் இருப்பதற்கு அடையாளமாகவே சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் திருமால் காட்சி அளிக்கிறார். அந்தச் சிம்சுமாரச் சக்கரத்தின் உடல்பகுதியாக யாகங்களே இருக்கின்றன. ‘மக’ (makha) என்றால் யாகம் என்று பொருள். யாகங்களைத் தனக்கு உடலாகக்கொண்டிருப்பதால் சிம்சுமார மூர்த்தியான திருமால் ‘மஹாமக:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 440-வது திருநாமம்.“மஹாமகாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அடியார்களுக்கு மிகச்சிறந்த வேள்விகளின் பலன்களைத் திருமால் அருள்வார்.

441. நக்ஷத்ர நேமயே நமஹ: (Nakshathra Nemaye namaha)
சுவாமி வேதாந்த தேசிகன் என்னும் மகான் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்த சமயம். காஞ்சிக்கு அருகில் உள்ளே திருப்புட்குழி என்னும் பகுதியில் வாழ்ந்த மக்கள் திடீரெனக் கொடிய விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பெருந்தொற்றாகப் பரவிவந்த அந்த விஷக் காய்ச்சல் பல உயிர்களைப் பலி வாங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுகூடிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருயிருந்த வேதாந்த தேசிகனின் திருவடிகளை அடிபணிந்து, “நீங்கள் மிக உயர்ந்த ஞானி என்று உங்களை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நீங்கள்தான் ஏதாவது செய்து இந்த விஷக்காய்ச்சலில் இருந்து எங்கள் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

அவர்களின் துன்பத்தைச் செவியுற்ற வேதாந்த தேசிகனின் மனம் உருகியது. “உங்கள் ஊருக்கு நல்ல காலம் ஏற்பட ஒரு வழி உள்ளது. காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் திருமால். சிம்சுமாரச்சக்கர வடிவில் இருந்துகொண்டு நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் திருமால் நடத்துகிறார். அதை நமக்கு உணர்த்தவே திருமால் திருக்கரத்தில் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியுள்ளார். ‘காலச் சக்கரத்தோடு வெண்சங்கம் கை ஏந்தினாய்’ என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தைக் காலச் சக்கரம் என்றே அழைத்திருக்கிறார் பாருங்கள். எனவே அந்தச் சக்கரத்தாழ்வாரைத் துதி செய்வோம். அவரது திருவருளாலே உங்கள் ஊருக்கு நிச்சயமாக நல்ல காலம் ஏற்படும்!” என்று அவர்களைத் தேற்றினார் தேசிகன்.

திருப்புட்குழிக்கு வந்தார் தேசிகன். “எனது குருவின் குருவான நடாதூர் அம்மாள் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும் விதமாக ஹேதிபுங்கவ ஸ்தவம் என்று துதியை இயற்றி, சக்கரத்தாழ்வாரைத் துதி செய்துள்ளார். அவர் காட்டிய வழியில் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும்படி ஒரு துதியைச் சக்கரத்தாழ்வாரைக் குறித்து இயற்றுகிறேன் என்று சொல்லி,

“ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஜனிபய ஸ்தான தாரண ஜகத் அவஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ஜய ஜய ஸ்ரீஸுதர்சன”

என்று தொடங்கி சுதர்சனாஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகங்களை இயற்றினார். ‘ஜகத் அவஸ்தான காரண’ - இந்தப் பிரபஞ்சம் நிலைபெற்று இருப்பதற்குக் காரணமானவர் என்று சக்கரத்தாழ்வாரை தேசிகன் இங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நட்சத்திர மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் திருமால் சுழற்றுவதற்கு அடையாளமாகவே அவரது கையில் சுழலும் சக்கரமாகச் சக்கரத்தாழ்வார் திகழ்வதால், உலகம் நிலைபெறக் காரணமானவர் என்று தேசிகன் அவரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எட்டு ஸ்லோகங்களுடன், சக்கரத்தாழ்வார் தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பதினாறு ஆயுதங்களைக் குறித்து ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற ஒரு துதியையும் இயற்றி அருளினார் தேசிகன். இந்த இரண்டு துதிகளையும் சொல்லிச் சக்கரத்தாழ்வாரைத் துதிக்குமாறு ஊர் மக்களிடம் சொன்னார் தேசிகன். ஊராரும் அவ்வாறு சக்கரத்தாழ்வாரைத் துதி செய்யவே, விஷக்காய்ச்சல் நீங்கி மக்கள் எல்லோரும் நலம்பெற்றார்கள்.

இதன்மூலம் காலத்தை நிர்வகிக்கும் காலச்சக்கரமாகச் சுதர்சனாழ்வார் இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே, சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார் திருமால்.‘நேமி:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். ‘நக்ஷத்ர நேமி:’ என்றால் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியை நிர்வகிப்பதால் திருமால் ‘நக்ஷத்ரநேமி:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 441-வது திருநாமம்.

“நக்ஷத்ர நேமயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில்
எந்நாளும் பொன் நாளாய் இருக்கும்படி
திருமால் அருள்புரிவார்.

442. நக்ஷத்ரிணே நமஹ: (Nakshathriney namaha)

சிம்சுமாரச் சக்கர வடிவில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடம் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியான தேவதைகள் வந்தார்கள். “முப்பூரம் என்றால் ஆகாது என்று சொல்லி எங்கள் மூன்று நட்சத்திரங்களையும் மக்கள் அமங்கலமாகக் கருதி வருகிறார்கள். நீங்கள்தான் எங்கள் மூவருக்கும் மங்கலத்தை அருள வேண்டும்!” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் திருமாலிடம் வந்து, “எனது கிழமையான செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைக்கும் வழக்கம் இருந்தாலும், அது அமங்கலமான கிழமையாகவே கருதப்படுகிறது. அந்தக் கிழமைக்கு மங்கலத்தை நீங்கள் தான் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.
தட்சிணாயன புண்ணிய காலத்துக்குரிய தேவதை திருமாலிடம் வந்து, “எனது ஆறு மாத தட்சிணாயன காலம் தொடங்கும் மாதமாகிய ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும் அமங்கலமான மாதங்கள் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அவைகளுக்கு நீங்களே மங்கலத் தன்மையை அருள வேண்டும்!” என்று
பிரார்த்தித்தார்.

தென்திசையின் தலைவனான யமன் திருமாலிடம் வந்து, “மற்ற எல்லாத் திசைகளை விடவும் எனது திசையான தென்திசையைத் தான் அமங்கலமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்குக் கொஞ்சம் மங்கலத் தன்மையை நீங்களே அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.அவர்களிடம் திருமால், “உங்கள் அனைவருக்கும் சேர்த்து எனது தேவியான பூமிப் பிராட்டி அருள்புரிவாள்!” என்று விடையளித்து அவர்களை அனுப்பி வைத்தார். பூமிதேவியிடம் இந்த விஷயத்தைத் திருமால் சொன்ன போது, மகிழ்ச்சியுடன், “அவர்கள் அத்தனை பேருக்கும் மங்கலத்தை அருள வேண்டியது என் பொறுப்பு!” என்று பதிலளித்தாள்.

காலங்கள் கடந்தன. கலியுகம் பூமியில் ஏற்பட்டபோது, மக்கள் இறைவனையும் அறநூல்களையும் பக்திநெறியையும் மறந்து மனம் போன போக்கில் வாழத் தொடங்கினார்கள். அவர்களைத் திருத்தி, இறைவனின் திருநாமங்களைப் பாடி, அவனுக்கு மாலைகளைச் சமர்ப்பித்து, அவனிடம் சரணடைந்து முக்தி அடையும் வழியை உபதேசிக்கப் பூமிதேவி அவதாரம் செய்தாள்.
முப்பூரம் எனப்படும்மூன்றுநட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரமான பூரநட்சத்திரத்தில் அவதாரம் செய்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.

செவ்வாய்க்கிழமையில் அவதாரம் செய்து அதற்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.ஆடி மாதத்தில் அவதாரம் செய்து, மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று அவ்விரண்டு மாதங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்து தெற்குத் திசைக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.இப்படிப் பூர நட்சத்திரம், செவ்வாய்க் கிழமை, ஆடி, மார்கழி மாதங்கள், தென் திசை ஆகிய அனைத்துக்கும் மங்கலம் தரும் விதமாக பூமிதேவி ஆண்டாளாக அவதரித்தபடியால், அவள் கோதா மங்கலத்தை அருள்பவள் என்று அழைக்கப்படுகிறாள். கோ என்றால் மங்கலம், தா என்றால் அருள்பவள்.

இவ்வாறு மங்கலம் பெற்று மகிழ்ந்த அந்த நட்சத்திரங்கள், கிழமை, மாதங்கள், தென்திசை அனைத்தும் திருமாலுக்கு நன்றி கூறின. “சிம்சுமார வடிவில் இருந்து எங்களைத் தாங்கி நிற்கும் நீயே, எங்களது அமங்கலத்தைப் போக்கி எங்களுக்கு மங்கலத்தையும் அருளி விட்டாய்!” என்று திருமாலின் கருணையைப் போற்றித் துதித்தனர்.

இப்படி நட்சத்திர மண்டலம் தொடக்கமாக மொத்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் சிம்சுமாரச் சக்கர வடிவில் தாங்கியிருப்பதால் திருமால் ‘நக்ஷத்ரீ’ என்று அழைக்கப்படுகிறார். ‘நக்ஷத்ரீ’ என்றால் சிம்சுமார வடிவிலான நட்சத்திர ரூபம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 442-வது திருநாமம்.
“நக்ஷத்ரிணே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு அனைத்து வித மங்கலங்களையும் திருமால் அருள்வார்.

443. க்ஷமாய நமஹ: (Kshamaaya namaha)

ராம லட்சமணர்களை அழைத்துக் கொண்டு ஜனகரின் வேள்விச் சாலைக்கு வந்தார் விச்வாமித்ரர். ராம லட்சமணர்களின் தோற்றத்தைக் கண்டு வியப்படைந்த ஜனகர், “இவ்விரு பிள்ளைகளும் யார்?” என்று விச்வாமித்ரரிடம் கேட்டார். “இவர்கள் தசரதனின் மகன்கள். உங்கள் வேள்வியையும் வில்லையும் காண வந்துள்ளார்கள்!” என்று விச்வாமித்ரர் விடையளித்தார். ஜனகர் தனது பணியாளர்களை அழைத்து சிவ தனுஸ்ஸைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அவர்களும் வில்லை எடுத்து வந்தார்கள்.

“உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவில் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடைத் தண்டில்
தாங்கினர்”
 - என்று இக்காட்சியைக் கம்பர் பாடுகிறார். யானைபோல் வலிமை மிக்கவர்களும், மலைபோன்ற தோள்களைக் கொண்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் வில்லை எடுத்து வந்தார்களாம். அந்த அறுபதாயிரம் வீரர்கள் தங்கள் தோள்களிலே பெரிய தண்டைத் தாங்கிக்கொண்டு, அந்தத் தண்டுக்கு மேலே தூண்களை நாட்டி, அந்தத் தூண்களுக்கு மேலே வில்லை வைத்துச் சுமந்துகொண்டு வந்தார்களாம்.

அப்போது மிதிலை மக்கள், “திருமாலைத் தவிர வேறு யாராலும் இந்த வில்லைக் கையால் எடுக்கக்கூட முடியாது!” என்று பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், “நம் ஜனக மகாராஜா எதற்காக இந்த வில்லைக்கொண்டு வந்து காட்டுகிறார்? ராமனைப் போல் ஒரு மாப்பிள்ளை கிடைக்கும் போது, அவரே வில் இருக்கிறதா என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லிப் பெண்ணை மணம் முடித்துத் தந்துவிடலாமே!” என்று பேசினார்கள்.

ஜனகரின் குருவான சதானந்தர், “விஸ்வாமித்ர முனிவரே! தட்சனின் வேள்வியைத் தாக்க வந்த சிவபெருமான் இந்த வில்லைக் கையில் ஏந்தியபடி வந்தார். அதைக் கண்டு தேவர்கள் அஞ்சியதால், கோபம் தணிந்த சிவபெருமான் இவ்வில்லை ஜனகரின் குல முன்னோரான தேவராதன் என்ற ராஜாவுக்கு அளித்தார். அதுதான் நம் ஜனக மன்னரிடம் இப்போது வந்துள்ளது! இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால், நம் அனைவருக்கும் நலம்!” என்றார்.

விஸ்வாமித்ரர் ராமனை ஒரு பார்வை பார்த்தவாறே, ஹோமத் தீயில் நெய்யை ஊற்றினால் அக்னி பொங்கி எழுவதுபோல் ராமன் எழுந்தான். சிங்கத்தைப்போல் கம்பீரமாகவும், காளையைப் போல் வேகமாகவும், மேரு மலை போல் பெருமையோடும், யானையைப் போல் அழகாகவும் வில்லை நோக்கி நடந்தான் ராமன்.

“ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதை எனும் பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலை இது என்ன எடுத்தான்”

- என்று பாடுகிறார் கம்பர். சீதையின் கழுத்தில் அணிவிக்கப்போகும் பூமாலையைத் தூக்குவதாக எண்ணி வில்லை அநாயாசமாகக் கையில் எடுத்து விட்டான் ராமன். “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்றபடி நாணேற்றி வில்லையும் முறித்துவிட்டான்.அறுபதாயிரம் பேர் கஷ்டப்பட்டு சுமந்து வந்த வில்லை எப்படி அநாயாசமாகத் தூக்கி நாண் ஏற்றினான் ராமன் என்று எல்லோரும் வியந்தார்கள். அப்போது சதானந்தர் ஜனகரிடம், “அரசே! வந்திருப்பவர் சாட்சாத் திருமால் என்பதை நிரூபித்துவிட்டார் பார்த்தீர்களா? இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் எந்தச் சிரமமும் இல்லாமல் விளையாட்டாகவே சுமந்து கொண்டிருப்பவர் திருமால். உலகையே அநாயாசமாகச் சுமக்கும் அவருக்கு இந்த ஒரு வில்லைத் தாங்கிப் பிடிப்பது அரிதான செயலில்லையே!” என்றார்.

மொத்தப் பிரபஞ்சத்தையும் அநாயாசமாகத் தான் சுமப்பதை உணர்த்தவே திருமால் விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு நட்சத்திர மண்டலத்தை நிலை
நிறுத்திவருகிறார். சிம்சுமார வடிவில் இருந்து உலகைத் தாங்க வல்லவராகத் திகழ்வதால் ‘க்ஷம:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘க்ஷம:’ என்றால் வல்லமை மிக்கவர், இங்கே பிரபஞ்சத்தைத் தாங்கும் வல்லமை மிக்கவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 443-வது திருநாமம்.“க்ஷமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் வல்லமை தந்தருள்வார்.

444. க்ஷாமாய நமஹ:
(Kshaamaaya namaha)
Matter can neither be created nor be destroyed என்கிற வாக்கியத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். உலகப் படைப்பை வேதம் விளக்கும் விதத்தை அடியொற்றியே இந்த வாக்கியமும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.ராமானுஜரிடம் ஒரு சீடர், “இறைவன் இவ்வுலகை எங்கிருந்து எதை மூலப்பொருளாகக் கொண்டு படைக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “ஜடப்பொருட்கள், ஜீவாத்மாக்கள், இறைவன் ஆகிய மூவகைத் தத்துவங்களும் எப்போதுமே இருந்து வருகிறார்கள். அறிவில்லாத ஜடப்பொருட்களும், அறிவுள்ள ஜீவாத்மாக்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறார்கள். ஊழிக் காலத்தில் உலகும் உயிர்களும் சூட்சும நிலையில், அதாவது நுண்ணிய நிலையில் இறைவனோடு ஒன்றி யிருப்பார்கள். படைப்புக் காலத்தில் அவற்றை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றிப் பெயர் உருவ வேறுபாடு உள்ளவையாக ஆக்குகிறார். இதையே படைப்பு என்று சொல்கிறோம்.

மீண்டும் ஊழிக்காலம் வருகையில் உலகையும் உயிர்களையும் சூட்சும நிலைக்கு மாற்றி விடுவார் இறைவன். படைப்புக் காலம் வருகையில் மீண்டும் ஸ்தூல நிலைக்கு மாற்றி விடுவார். இந்த மாறுதலைத்தான் நாம் படைப்பு அழிப்பு என்றெல்லாம் சொல்கிறோமே ஒழிய, எதையும் புதிதாக இறைவன் உருவாக்குவதுமில்லை, இருப்பதை அழிப்பதுமில்லை!” என்றார்.
“எங்களுக்குப் புரியும்படி சற்றே விளக்க முடியுமா?” என்று மற்ற சீடர்கள் பிரார்த்தித்தார்கள்.

அதற்கு ராமானுஜர், “ஒரு குயவர் பானை செய்கிறார் என்றால், புதிதாக ஒருபொருளை அவர் உருவாக்குகிறார் என்பதை விட இருக்கும் பொருளின் நிலையை மாற்றுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் களிமண் என்ற நிலையில் இருக்கும் பொருளைப் பானை என்னும் நிலைக்குக் குயவர் மாற்றித் தருகிறார். அதுபோலத்தான் சூட்சுமநிலையில் உள்ள உலகை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றுவதைப் படைப்பு என்கிறோம்.

பானை அழிந்தால் மொத்தமாக அழிந்து போவதில்லை. பானை என்னும் நிலை மாறித் தூள்களாக ஆகி விடுகிறது. அங்கேயும் நிலைமாற்றம் தான் ஏற்படுகிறது. அவ்வாறே ஊழிக் காலத்திலும் உலகம் அழிந்துவிடுவதில்லை, சூட்சும நிலைக்கு அனைத்தையும் இறைவன் மாற்றிவிடுகிறார்!” என்று விளக்கினார்.“உலகும் உயிர்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறது என்று சொல்லும் பட்சத்தில், இவைகளுக்கு ஏற்படும் நிலைமாற்றம் உள்ளிருக்கும் இறைவனைப் பாதிக்குமா?” என்று மற்றொரு சீடர் கேட்டார்.

அதற்கு ராமானுஜர்,
“ஆவிசேர் உயிரின் உள்ளால் யாதுமோர் பற்றிலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே”

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மேற்கோள் காட்டி, “உடலுக்கு வரும் மூப்பு வியாதி உள்ளிட்ட மாறுதல்கள் எப்படி ஜீவாத்மாவைப் பாதிப்பதில்லையோ, அதுபோலத் தான் பிரபஞ்சத்துக்கு ஏற்படும் மாறுதல்களால் உள்ளிருக்கும் இறைவன் பாதிப்படைவதில்லை. தோகையுடன் கூடிய மயிலை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்தூல நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகையை விரித்தாடும் மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். ஊழிக் காலத்தில் சூட்சும நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகை மூடிய மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். இரண்டு நிலைகளிலும் மயிலுக்கு எந்த மாற்றமும் இல்லை. தோகை தான் விரிந்த நிலையிலோ, அல்லது மூடிய நிலையிலோ உள்ளது. அதுபோல் ஊழிக் காலத்திலும் சரி, படைப்புக் காலத்திலும் சரி, இறைவன் மாறுவதே இல்லை. அவனுக்கு உடலாக இருக்கும் பிரபஞ்சம் மட்டுமே நிலைமாறுகிறது.

படைப்புக் காலத்தில் மொத்த நட்சத்திர மண்டலத்தையும் தாங்கியபடி சிம்சுமாரச் சக் கரம் திகழும். ஊழிக்காலத்தில், சிம்சுமாரச் சக்கரத்தில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் மட்டுமே அழியாது நிற்கும். சிம்சுமாரச் சக்கரம் தான் திருமால். படைப்புக் காலத்தில் தோகை விரித்த மயில் போல் அவர் தனது திருமேனியில் இருந்து பிரபஞ்சத்தை வெளியிடுவதை உணர்த்தவே படைப்புக் காலத்தில் பல நட்சத்திரங்களோடு சிம்சுமாரச் சக்கரம் விளங்குகிறது. ஊழிக் காலத்தில் தோகையை மூடும் மயில் போல் தனக்குள் பிரபஞ்சத்தை அவர் உள்வாங்கிக் கொள்வதை உணர்த்தவே ஊழிக்காலத்தில் சிம்சுமாரச் சக்கரமும் மெலிந்து நான்கு நட்சத்திரங்களோடு மட்டும் திகழ்கிறது.

இப்படிப் பிரபஞ்சத்தைச் சூட்சும நிலைக்கு மாற்றித் தனக்குள்ளே உள்வாங்கி வைத்துள்ளார் திருமால் என்பதை ஊழிக்காலத்தில் நான்கே நட்சத்திரங்களோடு மெலிந்திருக்கும் சிம்சுமாரச் சக்கரம் நமக்கு உணர்த்துகிறது. ஊழிக்காலத்தில் மெலிந்த வடிவுடைய சிம்சுமாரச் சக்கரமாகத் திருமால் காட்சி அளிப்பதால், அவர் ‘க்ஷாம:’ என்று அழைக்கப்படுகிறார். ‘க்ஷாம:’ என்றால் மெலிந்தவர் - நான்கே நட்சத்திரங்களோடு கூடிய மெலிந்த வடிவில் ஊழிக் காலத்தில் திகழ்பவர் என்று பொருள். அதுவே ஹஸ்ரநாமத்தின் 444-வது திருநாமம்.“க்ஷாமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் தேய்பிறை இல்லாத வளர்பிறை ஓங்கும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

படம் : மேப்ஸ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!