×

உறவாடியே கெடுத்த சகுனி

மகாபாரத நிகழ்வுகள் பலவற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோதனன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.அவர்கள் அஸ்தினாபுரம் திரும்பியபோது, காந்தாரியுடன் கூடவே வந்தவன் சகுனி.யார் என்ன வசை பாடினாலும், இகழ்ந்தாலும் அதைப்பொருட்படுத்தாத சகுனி, அந்த வசை மொழிகளையே இசை மொழியாக, அதாவது புகழ் மொழியாகக் கொள்பவன் சகுனி. சகுனியின் வேலைப்பாடுகள் எல்லாம், மகாபாரதத்தில் தர்மர் ராஜசூய யாகம் செய்த தகவல்களைச் சொல்லும் சபாபர்வம் எனும் பகுதியில், விரிவாகத் தொடங்குகின்றன.

தர்மரின் ராஜசூய யாகத்தை முன்னிட்டுக் கட்டப்பட்ட அற்புதமான மாளிகை, பாண்டவர்களின் செல்வக் குவியல்கள், மற்ற மன்னர்கள் எல்லாம் பாண்டவர்களுக்குச் செய்த மரியாதைகள் என அனைத்தையும் கண்ட துரியோதனன் ஆற்றாமையால், பொறாமையால் சகுனியிடம் புலம்பினான். “மாமா! அந்தப் பாண்டவர்களின் செல்வக் குவியல்களைப் பார்த்துப்பார்த்து, என்னால் தாங்க முடியவில்லை. மன்னர்கள் எல்லாம் பாண்டவர்களைப் புகழ்ந்ததை நினைக்கும் போது, இப்போது என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப் போல இருக்கிறது. ஊஹும்! இனிமேல் நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இறந்துபோகத் தீர்மானித்து விட்டேன்” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சகுனியிடம் சொன்னான் துரியோதனன்.

பொறாமையில் வெந்து கிடந்த துரியோதனனுக்கு, அறவுரை - அறிவுரை சொன்னான் சகுனி. ஆம்! சகுனி நல்ல வழிதான் சொன்னான்.  “துரியோதனா! நீ தர்மனைப் பற்றிப் பொறாமை படக்கூடாது. பாண்டவர்கள் எப்போதும் தங்களுக்கு உண்டான பாகங்களைத் தான் அனுபவிக்கிறார்கள். விதி பல வகைகளாக இருக்கிறது. அவர்களுக்கு விதியால் மேன்மை உண்டாகி இருக்கிறது.

 “துரியோதனா! இதற்கு முன்னால், நீ அவர்களை அழிக்க வேண்டும் என்று, பல வழிகளிலும் முயற்சி செய்தாய். எதுவும் பலிக்கவில்லையே! உத்தமர்களான பாண்டவர்கள் தெய்வத்தின் அருளாலேயே, ஆபத்தில் இருந்து விடுபட்டார்கள். முயற்சி உள்ள மனிதர்கள் ஒருபோதும், தங்கள் காரியங்களால் இகழ்ச்சி அடைய மாட்டார்கள்.

“அவர்களின் முயற்சியால், திரௌபதி கிடைத்தாள். துருபதனும் அவன் பிள்ளைகளும் பெரும் சக்தி படைத்த கண்ணனும் பாண்டவர்களுக்குத் துணையாக, உறவாகக்கிடைத்தார்கள். பாண்டவர்கள் அடுத்தவர்களைக் கெடுக்காமல், தங்கள் தந்தையின் பாகத்தை அடைந்தார்கள். அப்படி அடைந்ததை, தங்கள் சக்தியால் முயற்சியால் அபிவிருத்தி செய்தார்கள்.

“அதில் உனக்கென்ன நஷ்டம்? நீ ஏன் துயரப்படுகிறாய்? அர்ஜுனன், அக்கினி பகவானைத் திருப்திப் படுத்தி, காண்டீபம், பெரும் அம்பறாத் தூணிகள், தெய்வ அஸ்திரங்கள் எனப் பலவற்றையும் அடைந்தான். அந்த வில்லால், தன்கை வன்மையால் அர்ஜுனன், அரசர்களை எல்லாம் தன் வசப்படுத்தினான். இதற்காக நீ ஏன் வருத்தப்படுகிறாய்?
“அந்த அர்ஜுனன் மயன் எனும் அசுரனை அக்னியிலிருந்து விடுவித்தான். அந்த நன்றிக் கடனுக்காக மயன், ஓர் அற்புதமான சபையைக் கட்டிக் கொடுத்தான். அந்தச் சபையைக் கிங்கரர்கள் எனும் பயங்கரமான அசுரர்கள் பாதுகாக்கிறார்கள். இதில் உனக்கென்ன வருத்தம்?” என்றான் சகுனி.

இந்த அளவிற்கு அறம் உரைத்து நியாயம் சொன்ன சகுனி, அடுத்து துரியோதனனுக்குத் தைரியம் சொல்வதைப் போலப் பேச ஆரம்பித்தான். தைரியம் சொல்வதைப்போல் ஆரம்பித்த பேச்சு, மெள்ளமெள்ளப் போய்ச் சதியில் முடிந்தது. “துரியோதனா! உனக்கென்ன குறை? உன் தம்பிகள் அனைவரும் உனக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். சிறந்த வில்லாளியும் வீரருமான துரோணரும், அவர் பிள்ளை.

அஸ்வத்தாமாவும் உனக்கு உட்பட்டு இருக்கிறார்கள். ஈடு இணை சொல்ல முடியாத வில்லாளியும் மகாரதனும் ஆன கர்ணன், உன்னுடன் இருக்கிறான். அவன் ஒருவன் போதுமே, பாண்டவர்களை வெல்ல! இது மட்டுமா? “பீஷ்மர், கிருபர், ஜயத்ரதன், சோமதத்தன், நான் எனப்பலரும் உன்னுடன் இருக்கிறோம் அப்புறம் என்ன? மேலும், பாண்டவர்களைச் சுலபமாக வெல்லும் வழி எனக்குத் தெரியும். நீ தெரிந்து கொள் அதை!” என்றான் சகுனி.

உடனே துரியோதனன், “மாமா! பாண்டவர்களை எளிமையாக வெல்லும் அந்த வழியைச் சொல்லுங்கள்!” என வேண்டினான். சகுனி சொல்லத் தொடங்கினான்; அது பாண்டவருக்கு மட்டுமல்ல! துரியோதனன் உட்படப்பலருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திட்டமாக இருந்தது. அதுதான் சூதாட்டம். ‘‘துரியோதனா! தர்மனுக்குச் சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால், அவனுக்கு விளையாடத் தெரியாது. நான் அந்தச் சூதாட்டத்தில் கை தேர்ந்தவன். சூதாட்டத்தில் எனக்கு இணையானவன், மூன்று உலகங்களிலும் இல்லை. தருமனைச் சூதாட்டத்திற்கு அழை! நாம் அழைத்தால் அவன் வராமல் இருக்கமாட்டான் அவன் செல்வங்கள் அனைத்தையும் சூதாட்டத்தின் மூலம், உனக்காக வாங்கி விடுவேன் நான். இதில் சந்தேகமே இல்லை” என்றான் சகுனி.

அப்புறம் என்ன? அஸ்தினாபுரத்திற்குப் பாண்டவர்கள் வஞ்சனையாக வரவழைக்கப் பட்டார்கள். சூதாட்டம் என்ற பெயரில், அவர்களின் செல்வமெல்லாம் கவரப்பட்டு, அவர்களும் அடிமையாகி, திரௌபதியை மானபங்கப்படுத்த முயல்கையில், கண்ணன் அருளால் அவள் காப்பாற்றப் பட்டாள். ஆக மொத்தத்தில், “பாண்டவர் செல்வங்களைக் கண்டு நீ பொறாமைப்படாதே!” என்று நல்லவிதமாகப் பேச்சைத் தொடங்கிய சகுனி, பாண்டவர் களைக் காட்டிற்கு விரட்டி விட்டான். சகுனி ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? வியாச பாரதத்தில் வியாசர் சொல்லாத பல தகவல்களை, வில்லிப்புத்தூரார் சொல்கிறார் மாற்றியும் சொல்கிறார். அந்த வில்லிபாரதத்தில் இல்லாத பல தகவல்கள் நல்லாப்பிள்ளை பாரதத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த மூன்று நூல்களிலும் சகுனியின் வஞ்சகச் சூதாட்டத்திற்கான காரணம் சொல்லப்படவில்லை.

சகுனியின் அந்தச் செயலுக்கான காரணம், கர்ண பரம்பரைக் கதையாகச் சொல்லப்படுகிறது. அத்தகவல்: துரியோதன சகோதரர்களைப் போலவே, சகுனியும் அவன் சகோதரர்களும் `நூறு பேர்கள்’ அதாவது, துரியோதனக்கும்பலுக்கு நூறு தாய் மாமன்கள். அந்த நூறு பேர்களும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையில் இருந்தார்கள். சகுனி சகோதரர்கள், அங்கும் இங்குமாக அரண்மனையில் உலாவிவந்தார்கள். அந்தக் காலத்தில், தாய் மாமன் முதலான பெரியோர் வந்தால், எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். அந்த முறைப்படி, அங்குமிங்குமாக அரண்மனையில் சுற்றி வந்த சகுனிக்கும், அவன் சகோதரர்களுக்கும் துரியோதனன் முதலானோர் மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.

அலுத்துப் போய், உட்காருவான் துரியோதனன். அந்த நேரம் பார்த்து, ஒரு தாய் மாமன் வருவான். துரியோதனன் உடனே எழுந்துநிற்க வேண்டியதாக இருக்கும். அந்த மாமன் சென்றுவிட, துரியோதனன் உட்காரும்போது, அடுத்த மாமன் வருவான். மறுபடியும் எழுந்திருக்க வேண்டும். இதன் மூலம் துரியோதனன் பெரும் சலிப்பிற்கு உள்ளானான். வெறுப்பு வளர்ந்தது. விளைவு? சகுனி சகோதரர்கள் நூறு பேர்களையும், ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சிறையில் அடைத்து விட்டான். “அப்பாடா! இனிமேல் அடிக்கடி எழுந்து உட்கார வேண்டாம்!” என்ற நிம்மதி அவனுக்கு.

ஆனால், இந்த நிம்மதி நிலையாக இருக்க வேண்டுமே! அதனால், சகுனி சகோதரர்கள் அனைவரையும் தந்திரமாக வஞ்சகமாகக் கொல்லத் தீர்மானித்தான் துரியோதனன். சிறையில் இருக்கும் அந்த நூறு பேருக்கும், ஆளுக்கு ஒரு பருக்கை சாதமும், ஒரு நத்தைக் கூட்டில் தண்ணீரும், வேளாவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். அது எப்படிப் போதும்? உயிர் வாழ முடியுமா? அனைவரும் இறந்து விடுவார்கள் என்பது துரியோதனன் எண்ணம்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... விதிக்கும் தெய்வத்திற்கும் வேலை இல்லாமல் போய் விடுமல்லவா? துரியோதனனின் எண்ணம், சகுனி சகோதரர்களால் கலைந்து போனது. ஆம்! சகுனியின் சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து, “அண்ணா! நீ தலை சிறந்த அறிவாளி. எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது, உனக்குத் தெரியும். ஆதலால், எங்கள் அனைவருக்குமான உணவை நீ ஒருவன் மட்டும் உண்டு, உயிர் பிழைத்துக் கொள்! துரியோதனாதியர் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடு!” என்றார்கள்.

வேறு வழியற்ற நிலையில், பழிக்குப்பழி வாங்க வேண்டும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சகுனியும் அதற்கு உடன் பட்டான். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறக்க, சகுனி மட்டும் உயிர் பிழைத்தான். காலங்கள் கடந்தன. “எல்லோரும் இறந்திருப்பார்கள்!” என்ற எண்ணத்தில், துரியோதனன் சிறைச்சாலைக்குள் புகுந்து பா்த்தான். அவனைப் பார்த்ததும் சகுனிக்கு கோபம் பொங்கி எழுந்தது. இருந்தாலும், “இப்போது நாம் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று தீர்மானித்த சகுனி, உள்ளே வந்த துரியோதனனை ஓடிப்போய்க் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

துரியோதனன் திகைத்தான். ‘‘இவன் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான்?” என்று நினைத்தானே தவிர, நடந்ததை அவன் அறியவில்லை. அதை மேலும் வளரவிடாதபடி, சகுனி பேசத் தொடங்கினான். “மருமகனே! இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து, பட்டத்திற்கு உரியவனான என்னை ஒழிக்கத் திட்டம் போட்டார்கள். நல்ல வேளையாக இவர்களைச் சிறையிலடைத்து, தெய்வாதீனமாக நீ என்னைக் காப்பாற்றி விட்டாய்! காந்தார நாடு முழுவதும் எனக்கே உரிமையாக்கி விட்டாய்! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்று கண்ணீர்விட்டான் சகுனி.

அவன் பேச்சை அப்படியே நம்பிய துரியோதனன், “மாமா! என் மாமன்மார்களிலேயே அறிவாளியான நீங்களாவது தப்பினீர்களே! இனிமேல் எனக்குத் தலைசிறந்த அறிவாளியான நீங்கள்தான் கூட இருந்து வழிகாட்ட வேண்டும்!” என்றான். ஒற்றை ஆளான இந்தச் சகுனியால் தனக்குத் தீங்கு செய்ய முடியாது என்பது, துரியோதனன் எண்ணம். ஆனால், பழிக்குப்பழி வாங்கத் தீர்மானித்த சகுனியோ, மிகவும் பொறுமையாக இருந்து அவசரப்படாமல் காய்களை நகர்த்தினான். ஆம்! சூதாட்டத்தில் காய்களை நகர்த்தி, துரியோதனக் கும்பலை அழித்தான்.
இதே கதை, (வடக்கே) துரியோதனனுக்குப் பதிலாகப் பீஷ்மர் என்று சொல்லி, காந்தார மன்னர் சுபலனையும் அவர் பிள்ளைகளான சகுனி முதலானவர்களையும் பீஷ்மர், சிறையில் அடைத்தார். ஒருவருக்கு, நாள்தோறும் பிடி அரிசி தான் கொடுத்தார்.

சகுனியின் தந்தை சுபலனின் ஆலோசனைப்படி, அறிவாளியான சகுனிக்கு மற்ற சகோதரர்கள் எல்லாம் தங்கள் பங்கான உணவை அளிக்க, சகுனி மட்டும் பிழைத்தான். சகுனி சூதாட்டக் கலையில் வல்லவன். அவனிடம் இருந்த சூதாட்டக் காய்கள், அவன் தந்தையான சுபலனின் கை எலும்பால் ஆனது. அது சகுனியின் எண்ணப்படியே விழும். எதிராளி தோற்பான். தங்கள் அனைவரையும் சிறையில் அடைத்த கௌரவ வம்சத்தை, இதன் மூலம்தான் சகுனி பழிவாங்கினான், என்றும் ஒரு கதை உண்டு.

மூல நூல்களில் இல்லாத கரண பரம்பரையான இக்கதைகள், பிரசங்கம் செய்பவர்கள், சொற்பொழிவாளர்கள் வாயிலாகப் பரவின. எது எப்படியோ, சகுனி சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களின் செல்வங்கள் அனைத்தையும் துரியோதனனுக்கு உரிமையாக்கிவிட்டான். மேலும், பாண்டவர்களையும் திரௌபதியையும் மிகுந்த அவமானத்திற்கு உள்ளாக்கி, அவர்களைக் காட்டிற்கு விரட்டி விட்டான். அதன் பிறகுகூடச் சகுனியின் ஆட்டம் நிற்கவில்லை.

பாண்டவர்களும் திரௌபதியும் காட்டில் இருந்த காலத்தில்,ஒருநாள்... சகுனி துரியோதனனை நெருங்கி, “துரியோதனா! மருமகனே! ஒரு வழியாக உன் விருப்பப்படி, பாண்டவர்கள் காட்டிற்குப் போய் விட்டார்கள். தேவேந்திரனைப் போல, இந்தப் பூமி முழுவதும் நீ ஒருவனாகவே அனுபவி! “பாண்டவர்களிடம் இருந்த லட்சுமிதேவி, இப்போது உன்னிடம் வந்து விட்டாள். அதேபோல, அரசர்கள் எல்லாம் உன் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள். ஆகையால், உன் செல்வ வசதிகள் எல்லாம், நன்றாகப் பிரகாசிக்கும் படியாக நீ இப்போது, பாண்டவர்கள் இருக்கும் காட்டிற்குச் செல்! உன் செல்வ வசதிகளைப் பார்த்து, அவர்கள் வயிறு எரிந்து துயரப்படுவார்கள்.

“மேலும் நம் அரண்மனையில் உள்ள உன் மனைவி முதலான பெண்கள் எல்லாம், நல்ல விலை உயர்ந்த பளபளக்கும் ஆடை ஆபரணங் களோடு காட்டிற்குச் செல்லட்டும்.
அதைப் பார்த்ததும் காட்டில் மரவுரியும் மான் தோலும் உடுத்த திரௌபதி, தன் நிலையை எண்ணித் தாளாத துயரத்தை அடைவாள். அந்த வருத்தம், அவளைச் சபையில் துகில் உரிந்தோமே, அப்போது கூட உண்டாகியிருக்காது” என்று பலவாறாகச் சொல்லி, துரியோதனனைத் தூண்டினான் சகுனி. அந்தத் தூண்டுதலுக்கு உட்பட்ட துரியோதனன், தன் தம்பியர், அரண்மனைப் பெண்கள் எனப் பலருடனும் ஆடம்பரமாகப் போய், காட்டில் துயரத்தில் வசிக்கும் பாண்டவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.

ஆனால், அதே நேரத்தில் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சித்திரசேனன் எனும் கந்தர்வன் வந்து, துரியோதனன், கர்ணன், பெண்கள் என அனைவரையும் அடித்துக் கட்டி இழுத்துச் சென்றான். அவர்கள் அனைவரையும் தர்மரின் உத்தரவால் பீமனும் அர்ஜுனனும் விடுவித்தது தனிக்கதை. அவ்வாறு பாண்டவர்களால் விடுவிக்்கப்பட்ட துரியோதனன் மனம் வெதும்பினான். `யாரை அவமானப்படுத்த வேண்டும் என்று வந்தோமோ, அவர்களால் அல்லவா, இப்போது நான் உயிருடன் இருக்கிறேன். இந்த அவமானம் தேவையா? இதற்குமேல், நாம் உயிருடன் இருக்கக்கூடாது’ எனத் தீர்மானித்து, உயிர் துறக்க முடிவு செய்தான் துரியோதனன்.

அனைவரும் திடுக்கிட்டு, துரியோதனனுக்கு ஆறுதலும், தேறுதலும் சொன்னார்கள். தைரியம் ஊட்டினார்கள். அப்போது சகுனியும் துரியோதனனுக்கு உபதேசம் செய்தான். ஆம்! உபதேசம் தான்! “துரியோதனா! பாண்டவர்களிடம் இருந்து, அளவிலா செல்வத்தைப் பறித்து, நான் உனக்குக் கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட பெரும் செல்வத்தை அறிவு குழம்பிப்போய், நீ இழக்கலாமா? நீ உயிர் துறக்க நினைப்பது அறிவீனம்! அறிவு முதிர்ந்தவர்களுடன் நீ சேர வில்லை என்பதை, இப்போது தான் நான் அறிந்து கொண்டேன். “உன்னுடைய இந்தக்காரியம் விபரீதமாக இருக்கிறது. உயிரை இழக்காதே! சந்தோஷமாக இரு! அதற்கான வழியை நான் உனக்குச் சொல்கிறேன்.

பாண்டவர்களின் ராஜ்யத்தை, அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடு! உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும். தர்மமும் சேரும். பாண்டவர்களுடன் ஒற்றுமையாக இரு! அவர்களை நல்ல நிலைமையில் இருக்கும்படிச் செய்! அப்படிச் செய்தால் நீ சுகமாக இருப்பாய்!” என்று நல்வழி சொல்லி, துரியோதனனைத் தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்துத் திருப்பினான் சகுனி. என்ன செய்ய? எப்போதும் கெட்டதே செய்து கொண்டிருப்பவர்கள் நல்லதைச் செய்தால், அது எடுபடாது. அப்படித்தான் ஆயிற்று சகுனியின் வார்த்தைகளும்.

துரியோதனன் பாண்டவர்களின் பங்கை, பகவானே வந்து கேட்டும் கொடுக்கவில்லை. போர் மூண்டது. மூண்ட போரில், பதினெட்டாவது நாள், சகாதேவனால், சகுனி கொல்லப் பட்டான். ஒரு பெரிய அரச குடும்பம் அடியோடு அழியக் காரணமாக இருந்தவன் சகுனி...

பி.என். பரசுராமன்

Tags :
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?