×

அறிந்த தலம் அறியாத தகவல்கள் :சென்னை பாரிமுனை, கந்தக்கோட்டம்

1) அடிகள் ஒருவர் மயிலையில் இருந்தார்

ஞான நூல்களின் ஆழம் கண்டவர், கரை கண்டவர். அடியார்களின் வேண்டுகோளுக்காக அருந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதினார். ஒரு சமயம், நூலில் சந்தேகம் வந்தது. பலரிடம் கேட்டும் பலன் இல்லை. நேரே கந்தக்கோட்டம் வந்தவர், “கந்தசுவாமி! தமிழ்க் கடவுளே! என் குறை தீர் ஐயா!” என்று வேண்டி வீடு திரும்பினார். அன்றிரவு அடிகளின் கனவில் கந்தக்கோட்ட முருகன் காட்சி கொடுத்து, “கவலைப்படாதே! நீ தேடும் உரை, மயிலைக்கு அருகில் உள்ள மந்தைவெளியில் ஒரு பாட்டியிடம் உள்ளது. உடனே ஓடு! பெற்றுக்கொள்!” என்று கூறி, முகவரியையும் தந்து மறைந்தார். விழித்தெழுந்த அடிகள், நீராடி தன் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, கந்தக்கடவுள் தந்த முகவரிக்கு ஓடினார்.

அங்கே ஒரு குடிசையில் மூதாட்டி ஒருவர், வெந்நீர் அடுப்பில், புத்தகங்களில் இருந்து தாள்களைக் கிழித்துப்போட்டு, அடுப்பை எரிய வைத்துக் கொண்டிருந்தார்.
போன அடிகள் அதைப் பார்த்துப் பரபரப்படைந்தார். பாட்டியோ, “என்ன தம்பி பாக்கற? எல்லாம் பழைய புஸ்தகங்க. படிக்கவும் நாதியில்ல. அதான் வெந்நீர் அடுப்புக்கு உபயோகப் படுத்தறேன்” என்றார். அவர் கையில் இருந்த நூலைப் பிடுங்கிய அடிகள், அங்கே ஒரு கட்டு நூல்கள், எரிக்கப்படத் தயாராக இருந்ததையும் பார்த்தார். அனைத்து நூல்களையும் கட்டி எடுத்துக்கொண்ட அடிகள், பாட்டியிடம் ஐந்து ரூபாய் தந்து, நூல்களைத் தான் எடுத்துப் போவதாகக் கூறினார். பாட்டியோ, “அட! அர ரூவா கூடத் தேறாத புஸ்தகங்களுக்கு அஞ்சு ரூவா தர்றியே! நல்லாயிரு!” என்று வாழ்த்தினார். பாட்டியின் கையிலிருந்து பிடுங்கிய நூலில், அடிகளின் சந்தேகத்திற்கு விளக்கம் இருந்தது. கனவில் வந்து கந்தக்கோட்டத் தெய்வம், அருள் புரிந்ததை எண்ணிவியந்தார் அடிகள்.

புத்தகக் கட்டோடு, கந்தசாமி கோயிலுக்கு வந்து, கந்தக்கடவுள் முன் நூல்களை=ச் சமர்ப்பித்து, “கந்தக்கோட்டத் தெய்வமே! உன் கருணையை என்ன சொல்லித் துதிப்பேன்!” என்று வழிபட்டுத் திரும்பினார். கந்தக்கோட்ட முருகன் அருளால் ஏறத்தாழ இருநூறு நூல்கள் அற்புதமாக உரை எழுதினார். இருபதாம் நூற்றாண்டு வரலாறு இது. அந்த அடிகள் `குக ரசபதி அடிகள்’. இவர் எழுதிய விநாயகர் அகவல் உரை, கோளறு பதிகம் உரை, திருக்கைலாய ஞான உலா உரை, வள்ளலார் பாடல்களுக்கு உரை எனப் பலவும், மாபெரும் ஞானிகளாலேபாராட்டப் பெற்றவை.

2) கனகம் தந்த கந்தக்கோட்ட முருகன்

அடிகளுக்குத் திருமணம் நடந்தது. திருவல்லிக்கேணியில் இருந்தார். சொற்பொழிவில் வந்த வருமானம், குடும்ப நிர்வாகத்திற்குப் போதவில்லை. வழக்கப்படி நேரே கந்தக்கோட்டம் போய்விட்டார் அடிகள். “கந்தக்கோட்ட கந்தா! அடியேன் வறுமை தீர்த்து அருள் செய் ஐயா!” என்று மனம் உருகிப் பிரார்த்தித்து வீடு திரும்பினார். அன்று மாலை நேரமானது. அடிகளாரைத்தேடி, குதிரை வண்டியில் ஒருவர் வந்தார். வந்தவர், அடிகளை வணங்கி இருபது ரூபாய் தந்தார். “ஐயா! உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் கேட்டிருக்கிறேன். சென்னை ராயபுரத்தில் வந்து, என் வீட்டில் தங்கி, அங்கே அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் வாராவாரம், நீங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும். அதற்கு முன் பணம் தான் இந்த இருபது ரூபாய்” என்றார். (நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இருபது ரூபாயின் மதிப்புவேறு).
வந்த செல்வந்தர் கூடவே, இரண்டு பட்டு வேட்டிகள், ஒரு சால்வை, ஒரு பட்டுப்புடவை, பட்டு ரவிக்கை, வெள்ளி ஒரு ரூபாய்க் காசுகள் ஐந்து ஆகியவற்றை, ஒரு தட்டில் வைத்துத்தந்து அடிகளை வணங்கினார். அடிகள் மெய் சிலிர்த்து, “கந்தக்கோட்ட கந்தா! காலையில் முறையிட்டேன். மாலைக்குள்ளாக என் மனக்கவலை தீர்த்து விட்டாயே அப்பா!” என்றார். ராயபுரம் சென்ற அடிகள், அங்கே சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நிறைவு நாளன்று, அடிகளுக்கு பத்து சவரன் பதக்கத்தோடு கூடிய ருத்திராட்ச மாலையை அணிவித்து மகிழ்ந்தார் செல்வந்தர்.

3) உற்சவரின் கொடிமரம்

கந்தக்கோட்ட உற்சவர் மிகவும் விசேஷமானவர். வேத மயமான - ஜோதி மயமான வடிவம் கொண்டவர். மூலவருக்கு உள்ள சக்திகள் அனைத்தையும் (வழக்கப்படி செய்யும் ஆவாகனம் இல்லாமல்) தானாகவே கொண்ட அருள் வடிவம். அதன் ஆச்சரிய வரலாறு; கந்தக் கோட்டக் கந்தனுக்கு உற்சவ விக்கிரகம் செய்யத் தீர்மானித்து, சிற்பவேலையில் சிறந்த ஒருவரிடம் உற்சவ விக்கிரகம் வார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அவரும் பயபக்தியோடு நல்ல முறையில் உற்சவ விக்கிரகத்தை வார்ப்படத்தில் வார்த்து முடித்தார். வார்ப்படத்தைத் திறந்து விக்கிரகத்தை வெளியே எடுக்கும் நாள்! சிற்பி நீராடி, நியம, நிஷ்டைகளை முடித்து பக்தியோடு வார்ப்படத்தைத் திறந்தார். உற்சவ விக்கிரகம் `பளபள’ வென மிகுந்த ஔியோடு ஜொலித்தது. விக்கிரகத்தில் ஆங்காங்கே உலோகப் பிசிறுகள் நீட்டிக்கொண்டிருந்தன. அவற்றை நீக்கும் எண்ணத் தோடு ஒரு சிறுஉளியும் சுத்தியலும் கொண்டு, உற்சவரை நெருங்கினார் சிற்பி.

அதே விநாடியில், சிற்பி தூக்கி எறியப் பட்டு விழ, அவர் கைகளில் இருந்த உளியும் சுத்தியலும் சிதறின. சிற்பிக்கு ஒரு வழியாக மயக்கம் தெளிவித்ததும், “ஏதோ ஒரு பெரும் சக்தி என்னைத் தாக்கித்தள்ளியது. ஐயா! என்னை மன்னியுங்கள்! இந்த உற்சவ விக்கிரத்தின் மீது உளிபடக் கூடாது எனத்தெரிகிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆச்சரியகரமான அந்த உற்சவரைத் தனியாக வைத்து, நான்கு பக்கங்களிலும் திரையிட்டு, அந்தப் பக்கம் யாரும் செல்லாதபடித் தனிக் காவலும் வைத்தார்கள். நாட்கள் கழிந்தன. நான்கு வேதங்களிலும் வல்லவரான வேதியர் ஒருவர், காசியில் இருந்து வந்தவர், கந்தக்கோட்டம் வந்தார். இங்குள்ள உற்சவர் விவரம் அறிந்து பார்த்தார். பார்த்தவர் வியந்தார், “இந்த விக்கிரகத்தில் உளிபடக் கூடாது. வேத மந்திரங்களால் நானே, பிசிறுகள் இல்லாத வண்ணம் தூய்மை செய்து தருகிறேன்” என்று பொறுப்பாளர்களிடம் சொன்னார். அவர்கள் ஒப்புக்கொண்டு, வேத விற்பன்னர் கேட்டபடி ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள். நாற்புறங்களிலும் துணியால் ஆன திரைகளைத் தொங்கவிட்டு, அதன் உள்ளே உற்சவ விக்கிரகத்தின் முன் சில வழிபாடுகள் செய்து, நாள்தோறும் குறிப்பிட்ட கால அளவு, வேத மந்திரங்களை ஸ்வரசுத்தமாகச்சொன்னார். 48 நாட்கள் நடந்த இந்நிகழ்வால், வேத மந்திரங்களின் ஒலி அதிர்வால், உற்சவரின் மீதிருந்த பிசிறுகள் தாமாகவே உதிர்ந்தன. அதன்பின் வேத விற்பன்னர், “இந்த உற்சவர் மூலவரைப் போலவே, விசேஷமாகச் சக்தி பெற்றவர். மூலவருக்குள்ள சக்திகள் அனைத்தும் இவரிடமும் உள்ளன” என்று விரிவாகக் கூறிச்சென்றார். ஆகவே, இங்குள்ள உற்சவர் விசேஷ சக்தி பெற்றவர். அதன் காரணமாகவே இங்கே, உற்சவருக்கு முன்னால், விசேஷமாகத் தனி கொடிமரம் உள்ளது.

4) திருப்போரூர் - மயிலை
கந்தக் கோட்டம்

கணபதி பண்டாரம், மாரி செட்டியார் எனும் இருவர் திருப்போரூரில் இருந்து முருகப்பெருமான் உத்தரவுப்படி, கந்தப் பெருமான் விக்கிரகத்தைச் சுமந்தபடிப் புறப்பட்டார்கள். பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையைப் போன்ற வடிவம் கொண்ட கந்தக் கடவுள் திருவுருவை, நெஞ்சோடுநெஞ்சாக வைத்துக் கட்டிக்கொண்டு மாரி செட்டியார் நடக்க, உறுதுணையாகக் கணபதி பண்டாரமும் வந்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் திருப்போரூரில் இருந்து நடந்தவாறே புறப்பட்டவர்கள், வழியில் மழை முதலான பல இன்னல்களைச் சந்தித்தாலும், ஏறத்தாழ அதிகாலை மூன்று மணியளவில் மயிலாப்பூர் வந்து, குளத்தின் படிக்கட்டுகளில் சற்று ஓய்வெடுக்க உட்கார்ந்தார்கள்.
வழி நடந்த களைப்பும் உடல் அயர்ச்சியும் தாங்காது, சற்று கண்ணயர்ந்து விட்டார்கள். அதே வேளையில் மயிலை கபாலீசுவரர், சடைமுடி - நெற்றியில் திருநீறு, உடலில் பட்டுப் பீதாம்பரங்கள், கையில் பொற்பிரம்பு ஆகியவற்றுடன் அங்கே எழுந்தருளி, பொற்பிரம்பால் இருவரையும் தட்டி எழுப்பி, “என்ன உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? விடிவதற்குள் உங்கள் கையில் உள்ள விக்கிரகத்தைக் கொண்டுபோய், அங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும். ம்...புறப்படுங்கள்!” என்று கூறி மறைந்தார். அதன்படியே மாரி செட்டியாரும் கணபதி பண்டாரமும் உடனே புறப்பட்டுப் போய், கந்தப் பெருமானை, இன்று நாம் தரிசிக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். இதன் காரணமாக இங்கு வந்து தரிசித்தவர்கள் திருப்போரூர் முருகனையும் மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரரையும் வழிபட்ட பலன்களைப் பெறுவார்கள் என்பது குக ரசபதி அடிகளார் ஆகியோரின் வாக்கு.

5) வள்ளலாரும் கந்தக்கோட்டமும்

`வாடிய பயிரைக் கண்ட’ போதெல்லாம் தான் வாடிய வள்ளலாரின் வழிபடு தெய்வம் `கந்தக் கோட்ட’ தெய்வம். கந்தக் கோட்ட தெய்வ மணிமாலை, கந்தர் சரணப்பத்து எனும் பெயர்களில், வள்ளலார் பல பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றில் இருந்து, `வேண்டும் வேண்டும்’ எனும் வேண்டுதல் பாடலையும், `சரணம் சரணம்’ எனும் பாடலையும் நாள் தோறும் சொல்வோம்! நலன்கள் பெறுவோம்!
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை புகழ் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி  வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
  வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே!
தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வ மணியே
(தெய்வ மணி மாலை)
சென்னையைத் `தருமமிகு’ சென்னை என்று சொல்லி சென்னைக்குப் பெருமை சேர்த்தவர் வள்ளலார் மட்டுமே! கந்தர் சரணப் பத்து எனும் தலைப்பில் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார் வள்ளலார். ஒவ்வொரு பாடலிலும் சரணம் எனும் சொல் பல முறைகள் இடம்பெற்ற, அற்புதமான அமைப்புகொண்ட பாடல்கள். அவற்றில் இருந்து ஒருபாடல்!
அருளாரமுதே சரணம் சரணம்  
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணாலயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
(கந்தர் சரணப்பத்து)
நாள்தோறும் இந்த இரு பாடல்களை
மட்டும் சொன்னால் போதும்! பிரார்த்தனைகள் நிறைவேறும்!

6) வெல்லமும் வேலனும்
இத்திருத்தலம் நோய் நீக்கத் தலமாக இருப்பது கண்கூடு. பிரார்த்தனை செய்து நோய் நீக்கம் பெற்ற பலர், இன்றும் இந்த ஆலயத் திருக்
குளத்தில் வெல்லம் கரைப்பதைப் பார்க்கலாம். நோய் நீக்கம் தானே `இனிமை’.

7) வண்ணச் சரபமும் வள்ளி மணவாளனும்

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எனும் மகான், தமிழின் ஆழமும் அகலமும் கண்டவர். முருகனை நேருக்குநேராகத் தரிசித்தவர். அப்படிப்பட்ட அவர், இங்கே வந்து கந்தக்கோட்ட முருகப்பெருமானைத் துதித்து `பிள்ளைத்தமிழ்’ நூல் எழுதி, இங்கே அரங்கேற்றினார். அப்போது முருகனே ஒரு குழந்தையாக வந்து, விளையாடி அந்த நூலை அங்கீகரித்த அற்புதத்திருத்தலம் இது. இவர்கள் மட்டுமா? பாம்பன் சுவாமிகள் முதலான அருளாளர்கள் பலராலும் துதிக்கப்பெற்ற தெய்வம் இது. வழிபடுவோம்! வாட்டங்கள் தீரும்!    

Tags : Chennai Barimunai ,Kandakottam ,
× RELATED 207 மூத்த குடிமக்களுடன் அறுபடை வீடு...